???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எனக்குப் பிடித்த இசை மேதைகள் - அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 28

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   26 , 2015  23:18:07 IST


Andhimazhai Image

கேள்வி: யோகி, போகி என்ன வித்தியாசம்? எஸ். கருணா, மயிலாடுதுறை.

 

பதில்: போகி கடல் பயணி; யோகியின் சாகசம் ஆகாசத்தில்.

 

கேள்வி: சாரு, உங்களின் எழுத்துக்களை வாசிக்கத் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இன்னும் மலைப்பை ஏற்படுத்துகிறீர்கள். எத்தனையோ விஷயங்கள்  உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள இருக்கிறது. ஒரு முறை நீங்கள், "என்னிடம் ஒரு பெரிய இசை நூலகமே உள்ளது.  இப்போது உள்ள பெரிய இசையமைப்பாளர்களிடம் கூட இல்லாத அரிய சேகரிப்புகள் இருக்கிறது.  அதை எனக்குப் பிறகு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  பாதுகாப்பாக வைக்க வேண்டும்" என்று கூறியதாக ஞாபகம்.  உங்களுடைய இசை குறித்த links அனைத்தும் bookmarks! குறிப்பாக Wim Mertens என்ற மேதையை எனக்கு  அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. எனக்கும் இசை மீது சற்று ஆர்வம் உண்டு.  குறிப்பாக Beethoven, Brahms, Rachmaninoff  மீது ஒரு மோகம்.  இவர்களுடைய இசைக்கோர்வைகளில் தங்களுக்குப் பிடித்தமானவை எவை என்று தெரிந்து கொள்ள ஒரு சின்ன ஆசை.   அதேபோல country music-இல் உங்களுக்குப் பிடித்தவை? சபரிதாஸ்.

 

“Beethoven tells you what it's like to be Beethoven and Mozart tells you what it's like to be human. Bach tells you what it's like to be the universe” என்று Douglas Adams சொல்லியிருக்கிறார்.  உண்மைதான்.  இதை வேறுவிதமாக மாற்றியும் சொல்கிறார்கள். மொட்ஸார்ட் க்ளாஸிகல், பாக்ஹ் baroque, பீத்தோவன் ரொமாண்டிக்.  இசையில் பரோக் என்பது பிரம்மாண்டமான, பல நுட்பங்களையுடைய, சிக்கலான, தேவாலயம் சார்ந்த (liturgical) என்று பல விஷயங்களையும் உள்ளடக்கியது.  எல்லாவற்றையும் தாண்டி பீத்தோவன் இன்றைக்கும் பிரசித்தமாக இருப்பதற்குக் காரணம், அவரது இசை மிகவும் expressive-ஆக இருப்பதுதான். Romantics are always expressive.  உதாரணமாக, Saturday Night Fever-இல் பயன்படுத்தப்படும் பீத்தோவனின் 5th Symphony. 

 

https://www.youtube.com/watch?v=KSXC_lPWoyo

 

விண்வெளியில் பதினோரு பில்லியன் மைல்களுக்கு அப்பால் பயணம் செய்யும் வாயேஜர் என்ற விண்கலத்தில் பீத்தோவனின் இரண்டு இசைக் கோர்வைகளும் சென்றிருக்கின்றன,  மனிதர்கள் மட்டுமல்லாது பிரபஞ்ச ஜீவிகளும் கேட்கட்டும் என்று!

 

எனக்குப் பிடித்த சில இசை மேதைகளின் படைப்புகள்:

 

பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனி, மூன்லைட் ஸொனாட்டா. 

 

Goerges Bizet : Carmen.  சுமார் இரண்டரை மணி நேரம் செல்லக் கூடிய இசை நாடகம். 

Felix Mendelssohn-இன் கிறிஸ்துமஸ் ஆக்கங்கள், கோரஸ், Violin concerto in D.

Vivaldi : Four Seasons.

மொட்ஸார்ட், பாக்ஹ், வாக்னர், ட்சைக்காவ்ஸ்கி, Prokofiev போன்றவர்களின் எல்லா ஆக்கங்களையும் பிடிக்கும்.  நீங்கள் குறிப்பிட்டுள்ள Rachmaninoff அதிகம் கேட்டதில்லை.   

 

நவீன காலத்து இசையில் அநேகம் பிடிக்கும்.  எனக்கு மிகவும் பிடித்த Caruso என்ற புகழ்பெற்ற இத்தாலியப் பாடலை நான்கு பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்: அதன் இணைப்புகள் கீழே:

 

Celine Dion & Florent Pagny

https://www.youtube.com/watch?v=e_lB33XWisM

 

Luciano Pavarotti:

https://www.youtube.com/watch?v=L7g_8i57gu8

 

லாரா ஃபாபியான்:  https://www.youtube.com/watch?v=zYZWbzEmWY0

 

லாரா ஃபாபியான் இந்தப் பாடலைப் பாடும் போது இவர் தான் இன்றைய உலகின் ஆகச் சிறந்த பாடகி என்று தோன்றுகிறது. என்ன ஒரு passion! அந்த அற்புதமான பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு:

 

http://lyricstranslate.com/en/node/72205

 

எனக்கு கண்ட்ரி ம்யூசிக் அறவே பிடிக்காது.  கேட்டாலே ஓடி விடுவேன்.  காரணம், லத்தீன் அமெரிக்க இசையும் ஆஃப்ரிக்க இசையும் பிடிக்கும் என்பதுதான்.  அதனால் அமெரிக்க கண்ட்ரி ம்யூசிக் மீது ஆர்வம் இல்லை.  லத்தீன் அமெரிக்க, ஆஃப்ரிக்க இசை பற்றி பெரிய புத்தகமே எழுதலாம்.  அதேபோல் எனக்குப் பிடித்தது அரபி இசை.  மேற்கு ஆஃப்ரிக்கத் தீவான Cape Verde பாடகர்களைக் கேட்டுப் பாருங்கள். Gabriela Mendes, Lura, Suzanna Lubrano போன்ற பல பாடகிகள் அங்கே கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஐரோப்பாவிலும் அவர்கள் பிரசித்தம்.  இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் லூரா.

இவர்கள் தவிர இப்போது நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் குழு: Skillet.

கேள்வி: அவரும் ஓய்வில் சென்று விட்டார்.  நீங்களும் ஓய்வில் இருக்கிறீர்கள்.  என்ன ஒரு ஒற்றுமை! வி. பாலசுப்ரமணியன்.

 

பதில்: நம் நாட்டில் பிச்சைக்காரன், ஞானி,  கிரிமினல் மூவரும் ஒரே மொழியில் பேசுகிறார்கள்.  என்ன செய்வது?

 

கேள்வி: என் நண்பனுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறேன்.  இப்போது அவன் நல்ல நிலையில் இருக்கிறான்.  நான் ஏதாவது உதவி கேட்டு விடுவேனோ என்று நினைத்தோ என்னவோ என்னிடம் பேசுவதைக் கூடத் தவிர்க்கிறான்.  மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது.  நான் என்ன செய்ய வேண்டும்? கே.  சம்பந்த மூர்த்தி, வேலூர்.

 

பதில்: கேள்விக் குறி என்ற சிறிய நூலில் எஸ். ராமகிருஷ்ணன் இது போன்ற பல லௌகீக வாழ்க்கை தொடர்பான கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் சொல்லியிருக்கிறார்.   நீங்கள் கேட்டு விட்டதால் நான் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.  அரசியலில் பெரிய இடத்தில் இருக்கும் ஒருவரின் புதல்வர் – பெயர் ஜெயகாந்தன் என்று வைத்துக் கொள்வோம் - அந்த இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்தார்.  இயக்குனருக்கு என்னையும் எனக்கு அந்த இயக்குனரையும் பிடிக்கும் என்பதால் இரண்டாவது சந்திப்பிலேயே அவர் படத்துக்கு என்னை எழுத அழைத்தார்.  டிசம்பர் 2013 முதல் மார்ச் 2014 வரை தினமும் காலை பத்தரை மணிக்கு ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சந்திப்போம்.  வாரத்தில் ஒரு நாள் விடுமுறை.  சந்திப்பு மாலை மூன்றரை வரை நடக்கும்.  மதிய உணவு மிகவும் எளிமையாக இருக்கும்.  இயக்குனர் அதிகம் சாப்பிட மாட்டார்.   நான் நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிடுவேன்.  இந்தச் சந்திப்பில் ஜெயகாந்தனும் அநேக தினங்களில் கலந்து கொள்வார்.  கதை விவாதம்.  தினமும் போக்குவரத்துச் செலவாக என் கையிலிருந்து நான்கு மாதத்தில் ரூ. 25000 ஆனது.    செலவு செய்த நேரம் தினமும் ஐந்து மணி நேரம் என நான்கு மாதம்.  படம் எடுக்கப்படவில்லை.  சில மாதங்களில் அடுத்த படம்.  அடுத்த படத்தில் நான் அழைக்கப்படவில்லை.   இயக்குனருக்கு நான் அறிமுகப்படுத்திய ஜானி என்ற நண்பர் இரண்டு காட்சிகளுக்கு எழுதிக் கொடுத்தார் என்று அறிந்தேன். 

 

இயக்குனர் தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்தார்.  சந்தேகங்கள் கேட்பார்.  சொல்வேன்.  தினமும் சந்தித்துக் கொண்டிருந்த நான்கு மாத காலத்தில் அவர் என்னிடம் ஒரு டஜன் கதைகளும் நான் ஒரு அரை டஜன் கதைகளும் சொல்லியிருப்போம்.  நான் சொல்லிய கதைகளில் ஒன்று, ஸீரோ டிகிரியில் வரும் தந்தை மகள் கதை.  அது என் சொந்த வாழ்க்கை என்பதும் இயக்குனருக்குத் தெரியும்.  இயக்குனரின் அடுத்த படத்தைப் பார்த்தேன்.  என் கதையோடு கொஞ்சம் கடத்தல், அடிதடி, வெட்டுக் குத்து எல்லாம் சேர்ந்து இருந்தன.  என் வாழ்க்கையின் கதை என்பதாலும் இப்போதெல்லாம் ஜனரஞ்சகப் படங்களே ரொம்ப மொக்கையாக இருப்பதாலும் இயக்குனரின் படம் எனக்குப் பிடித்துப் போயிற்று.   ஒருமுறை பார்க்கக் கூடிய ஜனரஞ்சகப் படம்.   பார்த்தேன்; ஒரு வரி பாராட்டி எழுதினேன்.  அதோடு சுத்தமாக மறந்தும் போனேன்.  சென்ற வாரம் கூட என்னோடு பேசிய இயக்குனர், ஒரு முக்கியமான சந்தேகம் கேட்டார்.  சொன்னேன். 

 

ஆனால் இரண்டு பேர் அந்த நான்கு மாதங்களை மறக்கவில்லை என்பதை சமீபத்தில் அறிந்து திடுக்கிட்டேன்.  ஒருநாள் காலையில் நடைப் பயிற்சிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை மடக்கிய என் மனைவி அவந்திகா, ”என்ன சாரு? படத்தில் ஜானிக்கு நன்றி என்று போட்டிருக்கிறதாம்; உன் பெயரையே காணோமாம்” என்றாள்.  ஆஹா, நான் சொல்லாமல் மறைத்து விட்ட விஷயத்தை இவளிடம் போட்டுக் கொடுத்தது யார்?  அதுவும் அதிகாலை வேளையில்? “யார் சொன்னது?” “கார்த்திக் சொன்னான்.” கார்த்திக் என் புதல்வன்.  ஆஹா, முடிந்தது கதை.  ”ஆறு மாத காலம் ஏதோ ஸ்கூலுக்குப் போவது போல் ஒன்பதரை மணிக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தாய்.  உன் பெயரைப் போடாமல் அந்த ஜானி பெயரைப் போட்டிருக்கிறாரே உன் நண்பர்?  என்ன நியாயம் இது?”  “ஆறு மாசம் இல்லை செல்லம்… நாலு மாசம் தான்.”  “இல்லை, ஆறு மாசம்… எனக்கு நன்றாகத் தெரியும்.”  சரி, நாலா ஆறா என்று அதில் போய் ஏன் முட்டிக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட்டேன்.  இன்னும் நிறைய பேசினாள். 

 

சரி, பிறகு பேசுவோம் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.  வந்ததும், ”லௌகீக விஷயங்களில், சொத்து சுகங்களில் நாட்டம் இல்லாத ஒரு ஆன்மீகவாதியான நீ இப்படி நாஸ்திகவாதி போல் பேசலாமா?” என்று கேட்டேன்.  பிறகு நான் சொன்னது: ”உங்களுக்கெல்லாம் இறைவன் என்பவன் வழிபாட்டுக்கு உரியவன்.  ஆனால் நானோ இறைவனை தந்தையாகக் கருதுபவன்.  ஒரு அப்பனுக்குத் தெரியாதா தன் குழந்தைக்கு என்ன தேவை,  என்ன கொடுக்கலாம் என்று?” 

 

இதுதான் என் கொள்கை.  எனக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும்.  அதற்காக ஒரு மூலையில் விழுந்து கிடக்க மாட்டேன்.  என் பணி எழுத்தும் படிப்பும்.  அது ஒன்றே என் சித்தம்.  அது ஒன்றே என் வாழ்க்கை.   மற்ற எதுவும் எனக்கு முக்கியம் அல்ல.  நன்றி என்று போடா விட்டால் எனக்கு என்ன நட்டம்?  ஒருவேளை அந்த நன்றிப் பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருந்தால் அதன் மூலம் எனக்கு ஏதேனும் ஒரு தீவினை நேரலாம்.   

 

அவந்திகாவின் கேள்வியையும் என் பதிலையும் கூட அந்தக் கணமே மறந்து போனேன். 

 

சென்ற வாரம் ஒருநாள் காலை நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து வீட்டுக்குத் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கார் என்னை நெருங்கியது.  கண்ணாடியும் திறந்தது.  யாரோ வழி கேட்கிறார்கள் போலும் என்று பார்த்தால் ஜெயகாந்தன்.  அவரும் அந்த நன்றி விஷயத்தையே பேசினார்.  ”ஸ்கூலுக்குப் போற மாதிரி போனோமே, ஏழெட்டு மாசம்?  எனக்கு நன்றி போட வேண்டாம்.  உங்களுக்காவது போட்டிருக்கலாம்.  சரி, அது கூட வேண்டாம்.  அது என்ன, நீங்கள் அறிமுகப்படுத்திய ஜானிக்கு நன்றி?  என்ன உலகம் இது?” என்று துவங்கி என்னென்னவோ பேசினார்.  ”ஏழெட்டு மாசம் இல்லீங்க, நாலு மாசம் தான்”  என்றேன்.  “அதெல்லாம் பேசாதீங்க.  என் கிட்ட கணக்கு இருக்கு…”

 

இதோடு விட்டிருந்தால் கூட இது பற்றி எழுதியிருக்க மாட்டேன்.  “சாரு, இது பற்றி எதுவும் எழுதிடாதீங்க…  அப்புறம் அந்த இயக்குனரைத் திட்டிட்டாரு, திட்டிட்டாருன்னு உங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க” என்றார் ஜெயகாந்தன்.  அதன் காரணமாகவே இதை எழுதத் தோன்றியது.  நான் யாரையும் திட்டுவதில்லை.  புண்படுத்தவும் விரும்புவதில்லை.  எனக்கு நடந்ததை எழுதுகிறேன்.  அவ்வளவுதான்.  

 

எனவே, மூர்த்தி, எது நடந்தாலும் அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள்.  

 

கேள்வி: தங்களை இந்த சமூகத்திற்கு அந்நியனாகக் காட்டிக் கொள்வதில் அல்லது வாழ்வதனால் கண்ட பலன் என்ன? அருண்.ஜெ.க. மதுரை.

 

பதில்: உங்கள் கேள்வியில் இரண்டு கேள்விகள் உள்ளன.  முதல் கேள்விக்கு பதில்.  நான் என்னை அந்நியனாகக் காட்டிக் கொள்ளவில்லை.  நான் சொல்லும் கருத்துக்கள் இங்கே உள்ள சமூகத்துக்கு ஒவ்வாததாக இருப்பதால் என்னை இந்த சமூகம் அந்நியனாகக் கருதுகிறது.  நானும் இந்த சமூகத்தை அந்நியமாகவே கருதுகிறேன்.  ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் குடியேறி விடலாம் என்றால், அதற்குப் பல தடைகள் கண் முன்னால் நிற்கின்றன.  முதல் தடை, குடும்பம்.  அவந்திகாவுக்கு சென்னை மட்டுமே பிடிக்கும்.  வெளியே வர விருப்பம் இல்லை.  அடுத்து, ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்லவே பணம் இல்லாத நான் அங்கே போய் குடியேறுவது சாத்தியமே இல்லை.  அப்படியே சாத்தியமானாலும் அந்த சமூகத்தில் நம்மை எப்படிப் பொருத்திக் கொள்வது என்ற தீராத சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.  நான் சிந்திக்கின்ற, எழுதுகின்ற மொழி எதுவோ அந்த மொழி உபயோகத்தில் உள்ள பூமியில் வாழ்வது தான் நடைமுறை சாத்தியமுள்ளது எனத் தோன்றுகிறது (அதுதான் டெல்லியில் இருந்து வந்துவிட்டீர்களா? ஆசிரியர் அந்திமழை ) .  இது குறித்த வாழ்க்கையையும் மனோநிலையையும் The Lowland நாவலில் பிரமாதமாக பதிவு செய்திருக்கிறார் ஜும்ப்பா லஹரி.  அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியனைப் பற்றிய நாவல் அது. 

 

உங்கள் கேள்வியின் அடுத்த பகுதி.  அந்நியனாக வாழ்வதால் கண்ட பலன்?  எல்லாவற்றுக்கும் ஒரு பலன் இருக்க வேண்டுமா என்ன?  சூசகமான, சூட்சுமமான எல்லா விஷயங்களையும் நாம் பகுத்துப் போட்டு, பிரித்துப் போட்டு எண்ண விரும்புவதன் விளைவே இது போன்ற கேள்விகள்.  ரமண மகரிஷி நம்மைப் போலவா வாழ்ந்தார்?  நம் சமூக வாழ்வுக்கு அவர் ஒரு அந்நியர் தானே?  குடும்பத்தைத் துறந்தாலே ஒருவன் இந்த சமூகத்திலிருந்து அந்நியமாகி விடுகிறான்.  குடிகாரன், பிச்சைக்காரன், கிரிமினல், ஞானி, பைத்தியம் எல்லோருமே அந்நியர்கள்தாம்.  சில அந்நியர்களால் சமூகத்துக்குப் பலன் உண்டு.  சிலரால் வேதனை உண்டு.  (இந்தப் பட்டியலில் எழுத்தாளன் எங்கே என்று கேட்கிறீர்களா?  உங்களுக்குப் பிடித்தபடி ஏதாவது ஒரு பிரிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...