???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எழுத்தாளர் கோணங்கியின் தவம்! அறம் பொருள் இன்பம் - சாரு பதில்கள் -23

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   23 , 2015  00:48:22 IST


Andhimazhai Image
கேள்வி: விக்கிபீடியாவில் எழுத்தாளர் கோணங்கி பற்றிய கட்டுரையில், சர்வதேச அளவில் இவரை ஒத்த எழுத்தாளர்கள் என Thomas Pynchon-ஐயும் ஜேம்ஸ் ஜாய்ஸையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  தாமஸ் பிஞ்ச்சனைப் பற்றி நீங்கள் அறம் பொருள் இன்பம்-3இல் இவ்வாறுசொல்லியிருக்கிறீர்கள்: “மிகுந்த வாசிப்பு அனுபவம் உள்ள ஒருவருக்கே Georges Perec, Ronald Sukenik, Thomas Pynchon போன்றவர்களை வாசிப்பது பெரும் சிரமமாக இருக்கும்”.
 
கோணங்கியின் படைப்புகள் பற்றி?
 
சு. அருண்பிரசாத்
திண்டுக்கல்.
 
ஜாய்ஸின் யுலிஸஸ் 1918-இலிருந்து மூன்று ஆண்டுக் காலம் ஒரு அமெரிக்கப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.  இருபதாம் நூற்றாண்டின் நூறு முக்கியமான ஆங்கில நாவல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.  உலகம் முழுவதும் உள்ள ஜாய்ஸின் ரசிகர்கள் ஜூன் 16-ஐ ப்ளூம்ஸ் டே என்று கொண்டாடுகிறார்கள்.  ஏனென்றால், 1904-ஆம் ஆண்டு ஜூன் 16 என்ற ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள்தான் யுலிஸஸ்.  ஆனால் 2,65,000 வார்த்தைகள் கொண்டது அந்த நாவல்.  ஏகப்பட்ட சிலேடைகளும், கேலி கிண்டல்களும், உப பிரதிச் சரடுகளும் கொண்டது.  உதாரணமாக, கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மஹாகவி ஹோமரின் காவியமான ஒடிஸியின் நாயகன் ஒடீஸியஸ் என்ற பெயரிலிருந்தே யுலிஸஸ் பிறக்கிறது.   யுலிஸஸ் நாயகன் லெபோல்ட் ப்ளூமுக்கும் ஒடீஸியஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அதேபோல் நாயகி மோலி ப்ளூம் ஒடீஸியஸின் மனைவி பெனலோப்பின் மற்றொரு வடிவம்.  
 
உங்கள் கேள்வியைப் படித்த பிறகு யுலிஸஸில் சுமார் 25,000 வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டாவது அத்தியாயத்தைப் படித்துப் பார்த்தேன்.  பெனலோப்பின் ஞாபகங்களாக நனவோடை உத்தியில் அமைந்த பகுதி இது.  இவ்வளவு நீண்ட பகுதியில் நிறுத்தற்குறிகளே கிடையாது.  
 
இப்படியெல்லாம் இருந்தாலும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு 18 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள யுலிஸஸின் கதையை ஒரு ரீடரை வைத்துக் கொண்டு மிக எளிதில் பின் தொடர்ந்து வாசித்து விட முடியும்.  ரீடர் என்பது விளக்க நூல்.  யுலிஸஸ் கடினமான நாவலே தவிர வாசகருக்கு எல்லையில்லாத வாசிப்பு இன்பத்தைத் தரக் கூடியது.  சுவாரசியமானது.  இல்லாவிட்டால் உலகம் முழுவதும் ஆங்கில வாசகர்கள் ஜாய்ஸை இப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். 
 
மற்றபடி நான் முன்பு குறிப்பிட்ட தாமஸ் பிஞ்ச்சன், ஜார்ஜ் பெரக், ரொனால்ட் சுகேனிக் ஆகியோர் திரும்பத் திரும்ப வாசிக்கக் கோரும் எழுத்தைப் படைத்தவர்களே தவிர முற்றிலும் புரியாத பிரதிகளை உருவாக்கியவர்கள் அல்லர்.  ஆனால் கோணங்கியின் பிற்காலத்திய நாவல்கள் இலக்கியப் பிரதிகளாக உருவானவை அல்ல.  யாருக்குமே புரியாத சங்கேத வார்த்தைகளால் புனையப்பட்ட மாந்த்ரீக நூல்கள் மற்றும் பல சித்த வைத்தியக் குறிப்புகளைப் போன்றவை அவை.  ஆனால் ஜாய்ஸின் எழுத்து அப்படி அல்ல.  ஒரு உதாரணம்.  நாயகன் ப்ளூமுக்கு என்னென்ன வகை உணவு பிடிக்கும் என்று இந்த வாக்கியத்தில் எழுதுகிறார் ஜாய்ஸ்.  Hencod என்பது ஒருவகை மீன். அதன் ஓவரியில் இருக்கும் முட்டைகளை விரும்பி உண்பானாம் ப்ளூம். மட்டும் அல்லாமல் அவனுக்கு ஆகப் பிடித்தது ஆட்டின் கிட்னி.  அதில் உள்ள லேசான மூத்திர நாற்றம் அவனுடைய வாய்க்குப் பிடித்திருந்தது என்று சொல்வதில் உள்ள கிண்டலைப் பாருங்கள். இப்படியெல்லாம் கோணங்கியிடம் என்னால் ஒரு வாக்கியத்தைப் பார்க்க முடியவில்லை.  
 
Mr Leopold Bloom ate with relish the inner organs of beasts and fowls. He liked thick giblet soup, nutty gizzards, a stuffed roast heart, liver slices fried with crust crumbs, fried hencods' roes. Most of all he liked grilled mutton kidneys which gave to his palate a fine tang of faintly scented urine.
 
கமல்ஹாசனின் ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் அல்லவா?  உலகம் என்பது என்ன?  தமிழ்நாடு தானே?  விநாயகர் தன் பெற்றோரைச் சுற்றி வந்து உலகத்தைச் சுற்றி வந்து விட்டேன், மேங்கோவை எனக்குக் கொடு என்று கேட்டு வாங்கிக் கொள்ளவில்லையா?  அதேபோல் கமல் ரசிகர்களும் தமிழ்நாட்டையே உலகம் என்று நம்புகிறார்கள்.   இப்படி சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கும் உரிமையை எழுத்தாளர்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு?  அதனால்தான் கோணங்கியின் ரசிகர்கள் விக்கிபீடியாவில் அப்படி எழுதியிருக்கிறார்கள்.  அதில் தவறே இல்லை.  
 
எனவே, இப்படியெல்லாம் கேள்வி கேட்டு கோணங்கியின் தவத்தைக் கெடுக்காதீர்கள். 
 
கேள்வி: உன்னதம் என்று எதைச் சொல்வீர்கள்?
ஆர்.எஸ். பிரபு, சென்னை 90. 
 
பதில்: ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய கிராமம்.  பத்து வீடுகளே இருக்கும்.  அதுவும் குடிசைகள்.  அங்கே ஒரு வீட்டில் ஒரு குடியானவர் இருக்கிறார்.  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலில் கலப்பை பிடித்து வேலை செய்து கொண்டிருப்பார். ஆனாலும் அவரை யாரும் விவசாயி என்று சொல்வதில்லை.  வைத்தியர் என்றுதான் அழைக்கிறார்கள்.  ஏனென்றால், வயல் வேலைக்குக் கிளம்பும் வரையும் பிறகு மாலையிலும் அவரை நாடி வரும் நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் செய்கிறார்.  பரம்பரையாக அவரது பாட்டன், முப்பாட்டன் செய்து வந்த வைத்தியம்.  என்ன விசேஷம் என்றால், இவரைப் பற்றி பத்திரிகையில் எழுதுவதை விரும்ப மாட்டார்.  எழுதவே கூடாது என்பது இவரது கட்டளை.  ஏன் ஐயா, எல்லோருக்கும் உங்கள் மருத்துவம் கிடைக்கக் கூடாதா என்று கேட்டேன்.  ”அதை அப்படிப் பார்க்காதீர்கள்.  எல்லோருக்கும் வைத்தியம் செய்தால் எனக்குக் கோடி கோடியாகப் பணம் வரும்.  பணம் வந்தால் என் புத்தி மாறும்.  புத்தி மாறினால் மருந்து வேலை செய்யாது.  அப்போது என் மருந்தினால் யாருக்குமே பலன் இல்லாமல் போய் விடும்.  அதை விட இந்தச் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உங்களைப் போல் என்னைப் பற்றித் தெரிந்து வருபவர்களுக்கும் வைத்தியம் பார்த்தால் போதும்” என்றார்.  
 
இவரைப் பற்றி எழுதினால் இவருக்கு நோபல் பரிசு கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.  ஏனென்றால், வெண் குஷ்டம் என்று சொல்லப்படும் நோய் இவரது மருந்தினால் முற்றிலும் போய் விடுகிறது.  இது ஒரு உலக அதிசயம்.  இருந்தாலும் கோடி வேண்டாம்; கலப்பை போதும் என்கிறார்.  என்னைப் பொறுத்தவரை இத்தகைய மனமே உன்னதம்.             
 
 
கேள்வி: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவுசெய்தபடி, கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்கட்சித் தலைவர் வி.எஸ்அச்சுதானந்தனும் சமீபத்தில் ஒன்றாகச் சென்று பிரதமர் மோதியிடம் தமது மாநிலத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைத்தனர். (தற்போதைய) தமிழக அரசியலில் இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளதா?
மேலும், தமிழகத்தில் மக்களாட்சி என்ற பெயரில் பல ஆண்டுகளாகமன்னராட்சி நடந்து வருவதற்கு மக்களாகிய நம்முடைய பங்கு என்ன?
சின்ன தாதா
அபு தாபி.
பதில்: சாதாரணமாக நான் போய் கை குலுக்கினாலே கையை உதறி விட்டு வேறு பக்கம் சென்று விடுகிறார்கள் பிரபலங்கள். பிரபலங்கள் மட்டும் அல்ல; அவர்கள் புத்திஜீவிகள்.  நான் என்ன அவர்களிடம் கடனா கேட்டு விடப் போகிறேன்?  இப்படி பொது இடங்களிலேயே வெறுப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் புத்திஜீவிகள் வாழும் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் புத்திஜீவிகள் வாழும் தேசத்தில் அரசியல்வாதிகள் எப்படி இருப்பார்கள்?  அரசியல்வாதிகள் தான் ரொம்ப ரொம்பத் தேவலாம் என்ற பிரிவில் இருப்பவர்கள்.  மற்றவர்கள் செய்யும் அராஜகம் அதைவிடப் பல மடங்கு பெரிது.  துரதிர்ஷ்டவசமாக நமக்கு அரசியல்வாதிகள் தான் கண்களுக்குத் தெரிகிறார்கள்.  ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஒரு மொக்கைப் படத்தை எல்லோரும் விமர்சித்ததற்காக அவர்களை ராதா ரவி ஒரு பொது நிகழ்ச்சியில் எப்படியெல்லாம் திட்டினார் என்பதை யூட்யூபில் பார்த்தீர்கள் தானே? 
போகட்டும்.  மக்களாட்சி, மன்னராட்சி என்ற விஷயத்துக்கு வருவோம்.  இங்கே நடக்கும் மன்னராட்சிக்கு நாம் தான் காரணம்.  ஏனென்றால், நமக்கு அதிகாரம் கிடைத்தால் நாம் அந்த மன்னர்களை விட மோசமாக நடந்து கொள்கிறோம்.  ஒரு உதாரணம் தருகிறேன்.  அது ஒரு ஐஏஎஸ் பயிற்சி மையம்.  அதில் பயின்று தேர்வு எழுதினால் அநேகமாக ஐஏஎஸ் ஆகி விடலாம்.  எனவே அங்கு படிக்கும் பெரும்பாலோர் வருங்கால ஆட்சியாளர்கள்; கலெக்டர்கள்.  அங்கே படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை பெரிய போலீஸ் அதிகாரி.  வகுப்பு காலையில் ஒன்பது மணிக்குத் துவங்கும்.  மாலை மூன்று மணிக்கு முடியும்.  காலையில் அந்த இளைஞரைப் பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்து வரும் போலீஸ் துறையைச் சேர்ந்த கார் மாலை மூன்று மணி வரை அங்கேயே இருந்து அவரைத் திரும்ப வீட்டுக்கு அழைத்துச் செல்லும்.  அரசாங்கச் செலவில் கார்; அரசாங்கச் செலவில் ஓட்டுநர்.  ஏன், ஒரு 22 வயதுப் பையன் தன்னுடைய வாகனத்தில் பயிற்சிக் கல்லூரிக்கு வர முடியாதா?   
இப்படிப் பழகிய ஒரு மாணவன் வருங்காலத்தில் கலெக்டராக வந்தால் இந்த நாடு எப்படி இருக்கும்?  அவனும் தன்னை ஒரு குறுநில மன்னனாகத்தானே நினைத்துக் கொள்வான்?  பிரச்சினை என்னவென்றால், அந்தப் போலீஸ் அதிகாரி வேறு யாரும் அல்ல; நாம் தான்.  பத்தாயிரத்தில் ஒருவர் தான் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்கிறார்கள்.  எனவே நமக்கு இப்படிப்பட்ட மன்னராட்சி தான் லாயக்கு.   அதற்கு மேல் நமக்குத் தகுதி இல்லை. 
கேள்வி: புத்தகக் காட்சி பற்றி?
சி. செல்வம், மதுராந்தகம்.
பதில்: இதுவரை நான் எந்தப் புத்தகத் திருவிழாவுக்கும் இவ்வளவு ஆர்வமாகச் சென்றதில்லை.  தினந்தோறும் சென்றேன்.  வாசகர்களுக்காகக் கையெழுத்திட்டேன்.  எனக்குத் தெரியாத பல பகுதிகளிலிருந்து என் எழுத்தை வாசிக்கிறார்கள் என்பதை முதல் முறையாகத் தெரிந்து கொண்டேன்.  சிலரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தேன்.  எக்கச்சக்கமாக உடம்பு ஏறியிருந்ததை கவலையோடு கவனித்தேன்.  
ஆனால் வழக்கம் போல் கழிப்பறை கொடுமையாக இருந்தது.  சர்க்கஸில் பார் விளையாடுபவர்கள் கீழே போட்டிருக்கும் வலையில் விழுந்து எம்பி எம்பிக் குதிப்பார்கள் இல்லையா?  அதுபோல புத்தகக் காட்சியில் நடக்கும் போது எம்பி எம்பிக் குதித்துக் கொண்டே நடந்தேன்.  ஏனென்றால், தரையில் உள்ள மேடு பள்ளத்தை நிரவ கார்ட் போர்ட் அட்டையோ லேசான பலகையோ வைத்திருந்தார்கள்.  அதுதான் அந்த effect-ஐக் கொடுத்தது.  
பத்திரிகைகள், பதிப்பாளர்கள் எல்லோரும் படு குஷியில் இருந்தார்கள்.  11 லட்சம் வாசகர்கள் வந்தார்கள், 30 லட்சம் புத்தகங்கள் விற்றன, 15 கோடி ரூபாய்க்கு விற்பனை என்கிறது புள்ளி விபரம்.  இதைக் கேட்டு எனக்கு ஆயாசம்தான் மிஞ்சியது.  எவ்வளவு புள்ளி விபரத்தை நீட்டினாலும் என்னிடம் ஒரு புள்ளி விபரம் உள்ளது.  பக்கத்தில் உள்ள கர்னாடகாவில் இலக்கியவாதிகளின் புத்தகம்  ஐந்து லட்சம் விற்பனை ஆகிறது.  கேரளத்திலும் இதே நிலைதான்.  இங்கே தமிழ்நாட்டில் 5000 விற்கவே ஐந்து வருடம் ஆகிறது.  அதிலும் முதல் வரிசையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு.  
நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.  அதற்குள் கொண்டாட்டமா?
பரிசுக்குரிய கேள்வி: அருண் பிரசாத்
 
(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 

 

 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...