???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை 0 போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது 0 வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு 0 தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் – 20, சாரு நிவேதிதா எழுதும் தொடர்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   10 , 2016  04:48:21 IST

நிகழ்கால வரலாற்றிலிருந்து கொஞ்சம் பின்னே போகலாம்.  பின்னே என்றால் நியோலித்திக் காலம்.  நியோலித்திக் காலம்தான் கற்காலத்தின் கடைசிப் பகுதி.  இது கி.மு. 10000-இலிருந்து தொடங்கி கி.மு.4000-இல் முடிகிறது.  இந்த நியோலித்திக் காலம் முடியும் தறுவாயில் – அதாவது, 6000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய துருக்கியில் எஃபேசஸ் என்று அழைக்கப்படும் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்த ஒரு மனிதக் கூட்டம் அங்குள்ள மலைப்பகுதிகளிலும் குன்றுகளிலும் கற்களை அடுக்கி வீடு கட்டி வாழ ஆரம்பித்தது.    பின்னர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் வாழ்ந்த மக்களை விரட்டி விட்டு எஃபேசஸ் என்ற மாபெரும் நகரத்தை நிர்மாணித்தான் ஏதென்ஸ் நகரத்து இளவரசனான ஆந்த்ரக்ளாஸ். 

 

மேலே காண்பது எஃபேசஸ் நகரத்தின் வரைபடம்.  இந்நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்று இதன் நூலகம். கீழே உள்ள புகைப்படத்தில் தெரிவது அந்த நூலகம்.   

 

 

நூலகத்தின் இன்னொரு தோற்றம் கீழே:

 

 

 

 

 

 

மேலே: 60,000 பேர் வாழ்ந்த பிரம்மாண்டமான நகரமான எஃபெசஸில் ஒரு வீதி.   ரோமானியப் பேரரசின் ஆசியா மைனர் பகுதியில் எஃபேசஸ் தான் மூன்றாவது பெருநகராக இருந்திருக்கிறது.

 

மேலே மனிதர்கள் இல்லாமல் தெரியும் வீதி நான் சென்றிருந்த போது ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

மேலே உள்ள புகைப்படம்:  தூரத்திலிருந்து நூலகம்.  கீழே : நகரத்தின் இன்னொரு பகுதி.  தூரத்தில் நூலகம் தெரிகிறது.

 

 

 

 

 

 

 

மேலே: ஒரு சீரான வீதி. பூமியிலிருந்து இன்னும் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

நூலகத்திற்கு அடுத்தபடியாக எஃபேசஸ் நகரின் சிறப்பு, அங்குள்ள நாடக அரங்கம் (amphitheatre). 

 

 

 

 

 

இந்தப் புகைப்படங்களில் ஒரு பெண் கருப்புக் குடை பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.  காரணம், எஃபெசஸில் மே மாதம் வெயில் கொளுத்தியது.  கடும் பாலையில் நிற்பது போல் உடலெல்லாம் காந்தியது.  (ஆனால் இரவில் குளிராக இருந்தது.)  வெள்ளைக்காரர்களின் தோலெல்லாம் தீய்ந்து போனதைக் காண முடிந்தது.  சிலருடைய தோல் பட்டை பட்டையாகக் கருப்பாகவும் ரத்த நிறமாகவும் மாறிக் கொண்டிருந்தது.  

 

 

 

 

 

 

 

 

 

 

அனடோலியா (Anatolia) என்று அழைக்கப்படும் ஆசியா மைனர் அல்லது துருக்கியின் ஆசியப் பகுதியில் உள்ள மிகப் பெரிய ஆம்ப்பிதியேட்டர் இதுதான்.  கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரங்கில்  25000 பேர் அமரலாம்.  66 வரிசைகள்.  வரிசைகளுக்கு நடுவில் இரண்டு பகுதிகளில் நடைபாதைகள்.  இருக்கைகளில் மூன்று வகுப்புகள் காணப்படுகின்றன.  அரங்க மேடைக்கு அருகில் உள்ளது அரசனும் மந்திரிகளும் அமரக் கூடியதாக பளிங்கில் அமைக்கப்பட்டுள்ளது.  மற்றபடி பார்வையாளர்கள் அரங்கின் மேல் பகுதியிலிருந்து வந்தார்கள்.  மேடை 43 அடி உயரம்.  ஆர்க்கெஸ்ட்ரா பகுதி உள்ள இடத்திற்குச் செல்ல ஐந்து கதவுகள் இருக்கின்றன.  அரங்கத்தில் நாடகத்தைத் தவிர அரசியல் கூட்டங்களும், விவாதங்களும், மிருகங்களுக்கு இடையிலான சண்டைகளும், க்ளாடியேட்டரும் நடந்தன.   இன்னொரு பெரிய ஆச்சரியம், கீழே உள்ள மேடையிலிருந்து பேசினால் அது மேலே 63-ஆவது வரிசையில் உள்ளவர்களுக்கும் கேட்பது போன்ற ஒலி அமைப்பையும் கணக்கில் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது அந்தத் திறந்த வெளி அரங்கம். 

 

அரங்கத்தில் மூன்று வகுப்புகள் இருந்தது போல் எஃபேசஸ் நகர மக்களே பல்வேறு படிநிலைகளில் (வர்க்கம்) இருந்தனர்.  அரசனும் அவனைச் சார்ந்த அதிகார வர்க்கமும் மேல்நிலை.  அடுத்து வருவது, வணிகர்கள்/படித்தவர்கள், போர் வீரர்கள், கீழ்நிலை உழைப்பாளிகள். இப்படியாக அங்கே நான்கு வர்க்கங்கள் இருந்தன.  தீண்டத்தகாதவர்கள் என்று இந்தியாவில் இருந்ததைப் போல் அங்கே அடிமைகள் இருந்தனர்.  எனவே சாதிப் படிநிலை, தீண்டாமை போன்ற இழிவுகள் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானதல்ல என்று எஃபேசஸ் நகரக் கட்டுமானத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் தெரிகிறது.  அடித்தட்டு உழைப்பாளிகளின் இருப்பிடங்கள் வசதியற்றதாகவும் பொந்து போன்ற வீடுகளாகவும் காணப்படுகின்றன.  2300 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மக்களின் வர்க்க வேறுபாடு எஃபேசஸ் நகரின் இடிபாடுகளிடையே தூலமாகத் தெரிகிறது.  அடித்தட்டு மக்கள் வாழ்ந்த குடில்கள்:

 

 

 

 

எஃபேசஸின் இன்னொரு அற்புதம், இங்கே இருந்த ஆர்த்தமிஸ் கோவில்.   ஆனால் இன்று அந்தக் கோவிலின் ஓரிரு தூண்கள் மட்டுமே நமக்குக் காணக் கிடைக்கின்றன.  கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வந்த வெள்ளம் இந்தக் கோவிலை அழித்து விட்டது.  பின்னர், கி.மு. 550-ஆம் ஆண்டு இது மீண்டும் கட்டப்பட்டது.  அந்தக் காலத்தில் ஆர்த்தமிஸ் கோவில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.  கோவிலின் தோற்றம் இப்படியாக இருந்திருக்கலாம் என்று அனுமானித்து இஸ்தாம்பூலில் இப்போது ஒரு மாதிரி வடிவத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.  அதன் புகைப்படம்:

 

 

 

 

 

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்ட்டிபேட்டர் சொல்கிறார்: ”நான் பாபிலானைப் பார்த்திருக்கிறேன்; சீயஸ் கோவிலையும் பிரமிடுகளையும் பார்த்திருக்கிறேன்.  ஆனால் ஆர்த்தமிஸ் கோவிலுக்கு நிகராக எதுவுமே வர முடியாது.

 

கி.மு. 356-ஆம் ஆண்டு Herostratus என்பவன் இந்தக் கோவிலுக்குத் தீவைத்து விட்டான்.  ”இந்தக் காரியத்தின் மூலம் வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறேன்” என்பதுதான் கோவிலை அழித்ததற்கு அவன் கூறிய காரணம்.  ஹிரோஸ்ட்ரேடஸுக்கு மரண தண்டனை வழங்கிய எஃபேசஸ் நியாயமன்றம் இனிமேல் யாரும் அவன் பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று சட்டம் போட்டது.  மக்களும் அவன் பெயரையே உச்சரிக்காமல் இருந்தனர். கோவில் அழிந்த அதே நாளில்தான் அலெக்ஸாந்தர் பிறந்தார்.  இதுபற்றி ப்ளூடார்க் கூறினார்:  ”ஆர்த்தமிஸ் தேவி அலெக்ஸாந்தரின் பிறப்பில் மும்முரமாக இருந்ததால் தன் கோவிலின் அழிவைப் பற்றி கவனிக்க முடியாமல் போய் விட்டது.”

 

கோவிலைத் திரும்பக் கட்டுவதற்கு ஆகும் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்ன அலெக்ஸாந்தரின் வேண்டுகோளை எஃபேசஸ் மக்கள் ஏற்கவில்லை.  கடவுளின் கோவிலை இன்னொரு கடவுள் கட்டுவதா என்று தந்திரமாகச் சொல்லி அவனை ஏமாற்றி விட்டு,  அவனுடைய மரணத்துக்குப் பிறகு கி.மு. 323-இல் அவர்களே அந்தக் கோவிலைத் திரும்பக் கட்டத் தொடங்கினார்கள். 450 அடி நீளமும் 225 அடி அகலமும் 60 அடி உயரமும் 127 தூண்களையும் கொண்டிருந்தது கோவில்.

 

 

ஆர்த்தமிஸ் கோவிலின் ஒரு வளைவு:

 

 

 

 

எஃபேசஸ் நகரத்தின் கட்டிடங்களில் பிரமிப்பை ஏற்படுத்திய மற்றொரு அம்சம், அங்கே இருந்த மொஸைக் தரைகள்:

 

 

 

 

 

 

 

ஒரு காலத்தில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்த ஆர்த்தமிஸ் கோவிலில் இப்போது எஞ்சியிருப்பது இந்தத் தூணும் மேலே கண்ட அந்த அலங்கார வளைவும்தான்.  சிவப்பு நிறப் பூக்களை ஒரு பெண் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதன் காரணம், அது கஞ்சா செடி.  துருக்கியின் கிராமப்புறங்களெங்கும் கஞ்சா செடிகள் மானாவாரியாக முளைத்துக் கிடக்கின்றன. 

 

வெயில் கடுமையாக இருந்ததால் ஒரு மரத்தின் நிழலில் தனியாக நின்று கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு தமிழ்த் தம்பதி (பார்த்ததுமே தெரிந்து விடுகிறதே!) என்னை நெருங்கியது.  அவருக்கு 60 வயது இருக்கும்.  தமிழா என்று தமிழில் கேட்டார்.  ஆமாம் என்றேன் மகிழ்ச்சியுடன்.  அவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  நியூஜெர்ஸியில் வசிக்கிறார்.  எந்த ஊர் என்று கேட்டார்.  மெட்ராஸ் என்றேன். 

 

மெட்ராஸில் எங்கே? 

 

மைலாப்பூர். 

 

ஓ, மைலாப்பூரா?  ப்ராமினா?

 

ஆமாம்.

 

இன்று வரை ஏன் ப்ராமின் என்று தவறான பதிலைச் சொன்னேன் என்று புரியவில்லை.  எனக்கு ஒரு பழக்கம் உண்டு.  பொதுவாக அந்நியர்களின் கேள்விகளுக்கு எதிர்மறையான பதில் கொடுக்க மாட்டேன்.  உதாரணமாக, ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நாகூரில் நான் வசித்த சேரித்தெருவுக்குச் சென்றிருந்தேன்.  என் அம்மாவின் தோழி ஒருவர் என்னை நலம் விசாரித்து, அம்மா எப்டி இருக்காங்க என்றார்.  நான் நல்லா இருக்காங்க என்றேன்.  பிறகு அந்தப் பக்கம் அவந்திகா வந்தாள்.  எப்படிம்மா இருக்கே என்றார்கள் அந்த அம்மா அவந்திகாவைப் பார்த்து.  நல்லா இருக்கேம்மா, சாருவோட அம்மாதான் இறந்து போய்ட்டாங்க என்றாள் அவந்திகா.  இந்தப் புள்ள அம்மா நல்லா இருக்காங்கன்னு சொல்லிச்சே என்றார் அந்த அம்மாள்.  நான் ஏதோ சொல்லி சமாளித்தேன்.  அந்த ரீதியில்தான் அந்த அமெரிக்கத் தமிழரிடமும் ப்ராமினா என்று கேட்டதற்கு ஆமாம் சாமி போட்டேனோ என்னவோ!  

 

’சந்திரமுகி’ படத்தில் வரும் ’கொஞ்ச நேரம்’ பாடலில் எஃபேசஸ் நகரம் வருகிறது. 

 

 

பைபிளில் ஒரு இடத்தில் எஃபேசஸ் பற்றிய குறிப்பு வருகிறது.  அப்போஸ்தலர் 19:

 

பவுல் சில காலம் ஆசியாவிலே தங்கினார்.  அப்போது அந்த மார்க்கத்தைக் குறித்து ஒரு பெரிய கலகம் உண்டாயிற்று.  எப்படியென்றால் தெமெத்திரியஸ் என்ற பெயர் கொண்ட தட்டான் ஆர்த்தேமியஸ் கோவிலைப் போல் வெள்ளியில் செய்து தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் செய்து கொண்டிருந்தான்.  ஒருநாள் அவன் அந்தத் தொழிலாளிகளையும் அப்படிப்பட்ட தொழில் செய்கிற மற்ற வேலையாட்களையும் அழைத்து, “நண்பர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல வருமானம் வருகிறது.  இப்படியிருக்க, பவுல் என்பவன் மனிதனின் கரங்களால் செய்யப்பட்ட கடவுள்கள்  கடவுள்கள் அல்ல என்று சொல்லி எஃபெசூஸில் மட்டுமல்ல, ஆசியா முழுவதிலும் அநேக ஜனங்களுக்குப் போதித்து அவர்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறான்.  இதனால் நம்முடைய தொழில் அற்றுப் போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல் மகாதேவியாகிய ஆர்த்தமிஸ் கோவிலும் தன் மகிமையிழந்து போகிறதற்கும், ஆசியா முழுமையும் உலகம் முழுமையும் சேவிக்கின்ற அவளுடைய மகத்துவம் அழிந்து போகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். அவர்கள் அதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து, எஃபேசியர்களின் ஆர்த்தமிஸே பெரியவள் என்று கோஷமிட்டார்கள்.  பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது.  பவுலுக்கு வழித்துணையாக வந்த மக்கெதோனியராகிய காயஸையும் அரிஸ்தர்க்குஸையும் இழுத்துக் கொண்டு அவர்கள் நாடக அரங்கத்திற்கு ஓடினார்கள்.  பவுல் அந்தக் கூட்டத்துக்குள்ளே போக சித்தமாகயிருந்தபோது சீடர்கள் அவரைப் போகவிடவில்லை.  அந்தப் பகுதியில் அதிகாரிகளாகயிருந்த பவுலின் சிநேகிதர் சிலரும் அவரிடத்தில் ஆள் அனுப்பி நாடக அரங்கத்துக்குப் போக வேண்டாம் என எச்சரித்தார்கள்.

 

 கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது யூதர்கள் அலெக்சாந்தர் என்பவனை முன்னிற்குத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான். அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எஃபேசியருடைய ஆர்த்தமிஸே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எஃபேசியரே, எஃபேசியருடைய பட்டணம் மகாதேவியாகிய ஆர்த்தமிஸுக்கும் சொர்க்கத்திலிருந்து விழுந்த மகாதேவியின் சிலைக்கும் கோவிற் பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவர் இந்த உலகிலே எவரும் உண்டோ? இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமர்ந்திருக்க வேண்டும். இந்த மனுஷரை இங்கே கொண்டு வந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல. தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவு சொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, கலகத்தை உண்டாக்கியவர்கள் என்ற குற்றத்திற்கு ஏதுவாகி விடுவோம் என்று சொல்லி, பின்பு கூட்டத்தைக் கலைந்து போகச் சொன்னான்.” 

 

அந்தக் காலத்திலேயே தாம் வழிபடும் தெய்வம் சார்ந்த விஷயத்தில் மக்கள் எவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைந்தார்கள் என்பதற்கு பைபிளில் வரும் இந்தப் பகுதி ஒரு உதாரணம்.

 

எஃபெசூஸில் ஒரு மதக் கலவரமே நடக்க இருந்ததற்குக் காரணமாக இருந்த ஆர்த்தமிஸ் யார்?

 

பல முலைகளைக் கொண்ட ஒரு மகாதேவி அவள்…  

 

(சாருநிவேதிதா எழுதும் இத்தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...