???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லிங்கா, PK ? - அறம் பொருள் இன்பம் - சாரு பதில்கள் - 19

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   25 , 2014  23:53:37 IST


Andhimazhai Image

கேள்வி: முதலில் ஃபங்க் முடி, நீட்ஷே மீசை, பிறகு மொட்டைத் தலை, இப்போது சால்ட் அண்ட் பெப்பர்… மாற்றத்துக்கு என்ன காரணம்? ஏன் டை அடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்?
டாக்டர் ஸ்ரீராம், சென்னை.பதில்: ஃபங்க் முடி ரொம்பவும் பிடிக்கும்.  ஆனால் அவந்திகாவுக்குப் பிடிக்காததால் அதை விட்டு விட நேர்ந்தது.  ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையோர் மொட்டைத் தலையோடு இருப்பதைப் பார்த்து அதில் ஒரு விருப்பம் வந்து விட்டது.  2001-இல் ஃப்ரான்ஸுக்கு முதல் முதலாகப் போவதற்கு முன்பு வரை மிஷல் ஃபூக்கோ மொட்டைத் தலையோடு இருப்பதைப் பார்த்து, அது ஃபூக்கோவின் தனிப்பட்ட ஸ்டைல் என்று நினைத்திருந்தேன்.  கடைசியில் பார்த்தால் அங்கெல்லாம் பெரும்பாலும் மொட்டைத் தலையோடுதான் இருக்கிறார்கள்.  முடி திருத்தும் நிலையங்களில் ஊழியர்கள் எல்லோரும் மும்முரமாக மொட்டை தான் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவந்திகாவுக்கு மொட்டைத் தலை பிடிக்கவில்லை என்பதால் சமரசம் செய்து கொண்டேன்.  டை அடிப்பதை நிறுத்தியதற்குக் காரணம், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.  ஒருத்தர் பாக்கியில்லாமல் எழுபது வயதுக்கு மேலும் கறுப்பு மசியைப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.  சகிக்க முடியவில்லை.  ரெண்டே ரெண்டு முடி இருப்பர்கள் கூட அந்த ரெண்டு முடிக்கு டை அடித்துக் கொண்டுதான் வெளியிலேயே தலை காட்டுகிறார்கள்.  ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்.  அறுபது வயது கமல்ஹாசனின் கை முடி, புருவம் எல்லாம் கூட கறுப்பாகவே இருக்கிறதே?  அவருக்கு இன்னும் நரைக்கவில்லையா?  அல்லது, கைக்கெல்லாம் கூட டை அடிப்பாரா?கேள்வி: PK?
தரணீஷ்வர், புதுதில்லி.பதில்:  நீங்கள் கேட்ட பிறகுதான் போய்ப் பார்த்தேன்.  அட்டகாசமான படம்.  வெளி கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் ஆமிர் கான்.  பூமிக்கு வந்த அடுத்த நிமிடம் அவருடைய ரிமோட் தொலைந்து விடுகிறது.  திரும்பவும் அவர் தன் கிரகத்துக்குப் போகிறாரா என்பதே கதை.  ரகளை செய்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.  ஏற்கனவே முன்னா பாய் எம்பிபிஎஸ், த்ரீ இடியட்ஸ் போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர்.  ஆமிர் கானின் நடிப்பும் பிரமாதம்.  முதல் பத்து நிமிடங்களில் அவர் நிர்வாணமாகவே நடித்திருக்கிறார்.  (அவருடைய கிரகத்தில் மனிதர்கள் ஆடை அணிவதில்லையாம்.)  அந்த தைரியம் இங்கே கமலைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.  இந்தியா முழுவதும் சக்கை போடு போடுகிறது பிகே.  வசனங்களில் தியேட்டரே குலுங்குகிறது.  அத்தனை கிண்டல், கேலி.  படத்தில் எனக்குத் தெரிந்த இரண்டே குறைகள், நீதி போதனையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்; இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.  இந்தப் படத்தைத் தமிழில் எடுத்துக் கெடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.    கேள்வி: பின்நவீனத்துவத்தில் வாசகரின் பங்கு பற்றி நீங்கள் நிறையவே எழுதியிருக்கிறீர்கள்.  ”இலக்கியம் என்றால் என்ன?” என்ற ஜான் பால் சார்த்தரின் நூலில் இது பற்றி அவர் என்ன கூறுகிறார்?
கே.சி. கட்டிமுத்து, சிவகாசி.பதில்: இந்த உலகத்தை நாம் உருவாக்கவில்லை; ஆனால் இதற்கான அர்த்தத்தை நாம் தான் உருவாக்குகிறோம்.  எப்படி என்றால் – இது சார்த்தர் கூறிய உதாரணம் – காட்டில் ஒரு மரம் வீழ்கிறது; அங்கே அதை கவனிக்க யாருமே இல்லை என்றால் அந்த மரம் வீழ்ந்ததில் எந்த அர்த்தமும் இல்லை.  ஒரு சத்தம் கேட்கும்.  அவ்வளவுதான்.  ஆனால் அந்த இடத்தில் அதை ஒரு மனிதன் பார்க்கிறான் என்றால் அந்த மரம் வீழ்ந்தது என்பதன் அர்த்தம் உருவாகிறது.  அதைப் போலவே தான் சார்த்தர் இரண்டு விதமான வாசகர்களைச் சொல்கிறார்.  ஒன்று, மாடு அசை போடுவதைப் போல (இது என்னுடைய உதாரணம்) வாசிப்பதை வாசிப்பதோடு மறந்து விடுவது.  அந்தப் புத்தகம் அந்த வாசகரிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.  இன்னொரு வித வாசகர், உங்களைப் போல.  அவர் தான் படித்ததைத் தன்னுடைய அனுபவத்தையும் ஆளுமையையும் கொண்டு மறு உருவாக்கம் செய்கிறார்.  இதுதான் சார்த்தரின் வாசகர்.ஆனால் பின் நவீனத்துவம் இதற்கும் மேலே செல்கிறது.  ”மறு உருவாக்கம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காதீர்கள் மிஸ்டர் சார்த்தர்; எழுதியதுமே எழுத்தாளன் இறந்து விடுகிறான்.  (Author is dead!) வாசகர் தான் அந்த எழுத்தைத் திரும்ப எழுதுகிறார்” என்றார் ரொலான் பார்த்.  வாசிப்பு என்பதற்கு நான் கொடுக்கும் விளக்கம்: பின் நவீனத்துவத்துக்கு முந்தைய வாசிப்பு ஃபாஸ்ட் பூட் சாப்பிடுவதைப் போல.  அதில் நமக்கு ஒன்றும் வேலை கிடையாது.  பின் நவீனத்துவம் முன் வைக்கும் வாசிப்பு, தூண்டிலை எடுத்துக் கொண்டு நதிக்கரைக்குப் போய் நாமே மீன் பிடித்து வந்து சமைத்து உண்பதைப் போல.  முதலாவதில், எந்த வித சாகசத்துக்கும் கற்பனைக்கும் இடம் இல்லை.  இரண்டாவது முழுக்க முழுக்க சாகசத்திற்கும் நம்முடைய கற்பனைக்கும் இடம் கொடுப்பது.  


 
கேள்வி: ஹாரிபாட்டர், ஹாபிட், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பேண்டஸி படங்கள் பார்க்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா?
கே.சுரேஷ், சென்னை.பதில்: ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்கப் படங்கள் நன்கு பரிச்சயம் என்றாலும் ஹாலிவுட் படங்கள் அதிகம் பார்த்ததில்லை.  ஜுமாஞ்ஜி, மாஸ்க், லயன் கிங் போன்ற படங்கள் பிடித்தன.  நீங்கள் குறிப்பிட்ட பிரபலமான படங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.  இன்னும் நேரம் வாய்க்கவில்லை.   
 

கேள்வி: மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்களை/மருந்துகளை இந்தியாவில் சுதந்திரமாக விற்பனைசெய்வதாக செய்தியில் படிக்கிறோமே. அப்படியென்றால் இந்தியாவையே அவர்கள் ஒரு பெரிய குப்பை நாடாக நினைக்கறார்கள்தானே? இங்குள்ள முதலாளிகள் மக்களின் மேல் அக்கறை இல்லாமல் இதற்கு உடந்தையாகஇருக்கிறார்கள்தானே? இதற்கு என்னதான் தீர்வு?
வெ.பூபதி,கோவை.பதில்: முதலில் நம்மை நாமே மதிக்கா விட்டால் வெளிநாட்டுக்காரன் எப்படி மதிப்பான்?  இங்கே சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை ஒருமுறை வந்து பாருங்கள்.  ஒரு பிரம்மாண்டமான குப்பைக் கூள மணல்வெளியையே காணலாம்.  உலகில் வேறு எங்குமே ஒரு அழகான கடற்கரையை இப்படிக் குப்பைத்தொட்டியாக மாற்றி வைத்திருக்க மாட்டார்கள்.  உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பாருங்கள்.  உங்கள் தெரு முழுக்கவும் எவ்வளவு குப்பை என்று உங்களுக்குத் தெரியும்.  சிங்கப்பூரில் தெருவில் குப்பை போட்டால் அபராதம் கட்ட வேண்டும்.  சிகரெட் துண்டு, பஸ் டிக்கட், சாக்லெட் சாப்பிட்ட காகிதம், மற்றும் இன்னோரன்ன குப்பைகள் எதைப் போட்டாலும் அபராதம்தான்.  ஆனால் அங்கே லிட்டில் இந்தியா என்று ஒரு இடம் இருக்கிறது.  இந்தியர்கள் வாழும் பகுதி.  அது அச்சு அசலாக நம் இந்தியா மாதிரியே குப்பைத் தொட்டியாக இருக்கும்.  தூய்மை என்ற விஷயத்தில் இந்தியர்களின் மனோபாவம் மாறாத வரை வெளிநாட்டுக்காரனும் நம் நாட்டை குப்பைத் தொட்டியாகத்தான் பார்ப்பான்.  சுற்றுப்புறத் தூய்மை என்பதை நம் குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே குடும்பத்திலும் பள்ளிக்கூடங்களிலும் கற்பித்தால் ஒழிய இதற்கு வேறு வழியே இல்லை.  மோடியைப் போல் சாலையைப் பெருக்கி போஸ் கொடுப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.   புற்றுநோய்க்கு ஷாம்பூ தேய்த்துக் குளிப்பது மருந்து அல்ல. மேலும், இது வெறும் குப்பை போடும் விஷயம் மட்டும் அல்ல.  இது ஒரு சமூகவியல் பிரச்சினை.  ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டிலும் இருக்காது.  இதை முதலில் ஒழிக்க வேண்டும்.  அதற்கு எல்லோருக்கும் சமமான கல்வியும் சுகாதார உதவியும் கிடைக்கச் செய்ய வேண்டும்.  ஒரு ஆட்டோக்காரரின் குழந்தைக்கும் முதல் மந்திரியின் குழந்தைக்கும் ஒரே விதமான கல்வி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.    


 
கேள்வி: லிங்கா படம் பாத்தாச்சா?
முருகசாமி, கேகே நகர், சென்னை.பதில்: நான் வணங்கும் மகா அவ்தார் பாபாதான் என்னை அந்த ஆபத்திலிருந்து கடைசி நிமிடத்தில் காப்பாற்றினார்.  படம் வெளியான மறுநாள் என் நண்பர் கணேஷ் அன்பு, “டிக்கட் இருக்கிறது; வருகிறீர்களா?” என்று கேட்டார்.  நானும் சரி என்றேன்.  பிறகு தான் கடைசி நிமிடத்தில் முகநூலில் வந்திருந்த விமர்சனங்களைப் படித்து விட்டு அந்த ராஜ பிளவையிலிருந்து தப்பினேன்.  


(இந்த வாரம் கட்டிமுத்துவின் கேள்வி பரிசுக்குரியது)

 

(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 
 

 


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...