???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சோ, ஷோபா சக்தி, கல்கி கோச்லின் ! - அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் -17

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   12 , 2014  00:44:44 IST


Andhimazhai Image

கேள்வி: MASOCHISM (ஸேடிஸத்தின் எதிர்ப்பதம்) பற்றி ‘சரசம் சல்லாபம் சாமியாரி‘ல் படித்ததும், “அது என்ன விதமான மனநிலை? அப்படி இருப்பது சாத்தியம்தானா? துளி எதிர்ப்பு காட்டாமல் இருக்க மனித உடல் ஒத்துழைக்குமா?” என்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. அது பற்றிக் கொஞ்சம் விளக்கம் தாருங்களேன். அப்படிப்பட்ட மனிதர்களை இன்றைய காலகட்டத்தில் காண முடியுமா? ஆர்.எஸ்.பிரபு, சென்னை- 90.

 


பதில்: மனித உடல் மட்டும் அல்ல; மனமும் ஒத்துழைக்கும்.  ஒத்துழைப்பது மட்டும் அல்ல.  தன் உடலும் மனமும் வதை படுவதை எத்தனையோ பேர் மிகவும் விரும்புகிறார்கள்.  மேற்கத்திய நாடுகளில் BDSM கிளப்புகள் மிகவும் பிரசித்தமானவை. ஆனால் அதில் உறுப்பினராவது அவ்வளவு சுலபம் இல்லை. Bondage, Discipline, Dominance, Submission, Sadism, Masochism என்ற செயல்பாடுகளைக் கொண்டவை இந்த கிளப்புகள்.  இந்த ஆறுமே பாலியலோடு சம்பந்தப்பட்டவை.  இந்த ஆறுமே இந்திய சமூகத்தில் உள்ளவைதான்.  ஆனால் இந்தியாவில் இதெல்லாம் மிகப் பெரும் வன்முறையாக எதிராளியின் மீது திணிக்கப்படுகிறது.  ஒரு பெண்ணைக் கட்டி வைத்து வன்கலவி செய்கிறார்கள் அல்லவா?  அது பாண்டேஜ்.  இது மேற்கத்திய நாடுகளில் உள்ள கிளப்புகளில் ஒருவருடைய சம்மதத்தின் பேரில் கூட அல்ல; அந்த நபரின் விருப்பத்தின் பேரில்  நடக்கிறது.  ஒரு பெண்ணைக் கட்டி வைத்து அவளுடைய பார்ட்னர் கலவி செய்வான்.  பிறகு அவனுக்குக் கை விலங்கிட்டு, அவன் வாயைத் துணியால் அடைத்து விட்டு அவள் இயங்குவாள்.  


டிஸிப்ளின்:  ஒருவர் மீது இன்னொருவர் சில கட்டுப்பாடுகளை விதித்து,  அதை அவர் மீறும் போது தண்டிப்பது.  பிரம்படி, சவுக்கடி போன்றவை இதில் சகஜமானவை.  (கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.  மேலே குறிப்பிட்ட கிளப்புகளில் இது ஒருவரின் விருப்பத்தின் பேரில் நடக்கிறது. நம் நாட்டிலோ அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் அடக்கி ஆளவும் தண்டிக்கவும்  இதைப் பிரயோகிக்கிறார்கள்.)


டாமினன்ஸ் அண்ட் சப்மிஷன்: பொதுவாக இது கிளப்புகளில் இல்லாமல் கம்யூனிட்டிகளில் காணக் கிடைக்கும் வாழ்க்கை முறை.  ஒருவரின் அதிகாரத்தின் கீழ் இன்னொருவர் அடிமையாக வாழ்தல்.  இதை இந்தியாவில் நீங்கள் அரசு அலுவலகங்களிலும் குடும்பங்களிலும் சர்வ சகஜமாகப் பார்க்கலாம்.  


சாடோமஸாக்கிஸம்:  ஒருவர் சாடிஸ்ட், இன்னொருவர் மஸாக்கிஸ்ட்.   சாடிஸ்ட் என்பவர் தன்னுடைய பார்ட்னரை வதைப்பதன் மூலம் இன்பம் பெறுகிறார்.  மஸாக்கிஸ்ட் அப்படி வதை படுவதன் மூலம் இன்பம் அடைகிறார்.  இந்த வேடத்தை அவ்வப்போது அவர்கள் மாற்றிக் கொள்வதும் உண்டு.  இந்தியாவில் வாழும் பெண்களில் 90 சதவிகிதம் பேர் மஸாக்கிஸ்டுகள் என்பது என் கருத்து.  குஷ்டரோகியான தன் கணவன் தேவடியாள் வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட, அவனை ஒரு கூடையில் வைத்து அவன் ஆசைப்பட்ட இடத்துக்குத் தூக்கிச் சென்ற நளாயினி மஸாக்கிஸ்டுக்கு ஒரு சிறந்த உதாரணம்.   எவ்வளவு தான் பெண் சுதந்திரம் வந்த பிறகும் கட்டிலைப் பொறுத்தவரை மேற்கு நாடுகளிலும் பெண்கள்தான் மஸாக்கிஸ்டுகளாக இருக்கிறார்கள்.  முடிந்தால் ஃப்ரெஞ்ச் பெண் இயக்குனர் Catherine Breillat இயக்கிய ரொமான்ஸ் என்ற படத்தைப் பாருங்கள்.  நான் சொல்வது புரியும்.  


சரி, நன்றாக யோசித்துப் பாருங்கள்.  உங்கள் வாழ்க்கையில் எத்தனை தருணங்களில் நீங்கள் மஸாக்கிஸ்டாக இருந்திருக்கிறீர்கள்?  தான் காதலித்த பெண் தன்னைக் காதலிக்கவில்லையே என தன் கையை பிளேடால் கிழித்துக் கொள்வதும், குடிகாரனாக மாறுவதும், தாடி வளர்ப்பதும் கூட மஸாக்கிஸம்தான்.  நடுத்தர வர்க்கங்களில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னே மஸாக்கிஸ்டுகளாகவே வாழப் பழகிக் கொண்டு விட்டனர்.  முன்பெல்லாம் பெற்றோர் சேடிஸ்டாக இருந்தார்கள்.  இப்போது நேர் எதிர்.  முன்பு தகப்பானார் பிள்ளையை அடித்தார்.  இப்போது பிள்ளை தகப்பனாரை அடிக்கிறான்.  நம் குடும்பங்களில் நமக்காக சமைத்துப் போட்டு, நம் குழந்தைகளுக்கு வேலைக்காரிகளாக வாழும் பெண்மணிகள் அத்தனை பேருமே மஸாக்கிஸ்டுகள்தான்.  
சரி, எனக்கு ஒரு சந்தேகம்.  சில கோவில்களில் நான் பார்த்திருக்கிறேன்.  வரிசையாக பெண்கள் படுத்துக் கிடக்க காலில் ஆணிகள் செருகிய மிதியடியை அணிந்து கொண்டு அந்தப் பெண்கள் மீது நடந்து வருவார் பூசாரி.  இது இந்தியப் பாணி BDSM!

 
கேள்வி: அறிவுஜீவிகள் சமகாலத்தால் புறக்கணிக்கப்படுவது பொதுநியதி ஆகிவிட்டது. போலியான வெகுஜன அங்கீகாரம் பெற்ற இன்றைய எழுத்தாளர்களை எதிர்கால இலக்கியம் புறந்தள்ளுவது இயற்கையென்றால் இன்றைய அப்பட்டியல் எது? ராஜேஸ் ஆரோக்கியசாமி.பதில்: பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால் நான் அந்தப் பட்டியலைப் போட்டிருப்பேன்.  இப்போது முடியாது.  இந்தப் பூவுலகில் வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.  எது போலி, எது நிஜம் என்பதைச் சொல்ல நான் யார் என்ற மனப் பக்குவம் வந்து விட்டது.  எதிர்காலம் வெறும் போலிகளை மட்டும் புறம் தள்ளவில்லை.  வரலாறு பற்றிய எந்த அக்கறையும் இல்லாத தமிழர்கள் நிஜத்தையும் கூடப் புறம் தள்ளுவதில் வல்லவர்கள்.  இல்லாவிட்டால் அகத்தியர் எழுதிய ஒரு தமிழ் நூல் கூடக் கிடைக்காமல் போகுமா?  (அவர் எழுதிய சம்ஸ்கிருத நூல் கிடைக்கிறது.)  ஆனால் உண்மையான அறிவுஜீவிகளுக்குக் காலத்தால் அழிவில்லை என்றே உலக சரித்திரம் சொல்லுகிறது.  கேள்வி: லத்தின் அமெரிக்க இலக்கியத்தை அதிகமாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அதிலும் கற்பனையின் உச்சத்தில் எழுதுபவர்களையும் மரியோ பர்கஸ் யோசா போன்ற அதீத கதைசொல்லிகளையும் கண்டு வியந்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது ஜோஸே சரமாகோ போன்று தனித்துவம் வாய்ந்த மொழிநடை கொண்டவரைப் பற்றி அதிகம் கூறாததற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா ? கிருஷ்ணமூர்த்தி, சேலம்.


பதில்: உண்டு.  ஹோசே சரமாகோ லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர் அல்ல என்பதுதான் காரணம்.  அவர் போர்த்துகலைச் சேர்ந்தவர்.  ஐரோப்பியர்களைப் பற்றி – அதுவும் நோபல் பரிசு வாங்கிய ஒருவரைப் பற்றி – ஒரு மூன்றாம் உலக நாட்டில் – அதுவும் எந்தவித இலக்கியப் பிரக்ஞையும் இல்லாத ஒரு பிரதேசத்தில் வாழும் நான் எழுதுவது பைத்தியக்காரத்தனம்.  லத்தீன் அமெரிக்காவிலேயே எல்லோராலும் அறியப்பட்ட காப்ரியா மார்க்கேஸ் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை.  யாராலும் பேசப் படாத – ஆனால் மார்க்கேஸை விட முக்கியமான எழுத்தாளர்களான கார்லோஸ் ஃபுவந்தெஸ், அலெஹோ கார்ப்பெந்த்தியர் போன்றவர்களைப் பற்றியே அதிகம் எழுதினேன்.  ஐரோப்பாவிலும் யாரும் அறியாத பல எழுத்தாளர்கள் உள்ளனர்.  செர்பிய எழுத்தாளரான மிலோராத் பாவிச் அப்படிப்பட்டவர்.  


இன்னொரு காரணமும் உண்டு.  கடந்த 15 ஆண்டுகளாக நான் லத்தீன் அமெரிக்க இலக்கியம் படிப்பதை நிறுத்தி விட்டு அரபி இலக்கியத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஐரோப்பிய மொழிகளான ஸ்பானிஷ், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகளின் இலக்கியத்தை விட பல மடங்கு உச்சத்தில் இருக்கிறது சமகால அரபி இலக்கியம். அதைப் பற்றிப் பேச உலகில் ஒரு நாதி இல்லை.  லெபனானிய எழுத்தாளர் Ghada Samman எழுதிய Beirut Nightmares ஒரு அற்புதமான நாவல்.  நமக்கெல்லாம் சவூதி அரேபியா என்றால் அங்கே பெட்ரோ டாலர்களில் திளைக்கும் ஷேக்குகளின் ஞாபகமே வரும்.  ஆனால் அதே சவூதி அரேபியாவில் வாழ்ந்தவர் தான் அப்துல் ரஹ்மான் முனிஃப்.  அவர் எழுதிய City of Salt ஒரு க்ளாஸிக்.  எந்த ஒரு ஐரோப்பிய எழுத்தாளரை விடவும் சிறந்த எழுத்தாளர் என்று அவரைச் சொல்ல முடியும்.   இப்படி அரபி மொழியில் ஒரு நூறு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரையும் நான் படித்திருக்கிறேன்.


இறுதியாக, மரியோ பர்கஸ் யோசாவை நான் அதீத கதைசொல்லி என்று சொல்ல மாட்டேன்.  அதீதம் என்ற வார்த்தை அவருக்குப் பொருந்தாது.  அவர் ஒரு நல்ல கதைசொல்லி.  நாம் ஏகப்பட்ட வார்த்தைகளை அநாவசியமாகப் பயன்படுத்துகிறோம்.  அதீத கதைசொல்லி என்றால் அது மார்க்கேஸ் தான்.  


கேள்வி: உங்களுக்கும் ஷோபா சக்திக்கும் இடையிலான உறவு, நெருக்கம் பற்றிச் சொல்லுங்களேன்.
பா. அன்னோஜன்.


பதில்: நான் சந்தித்த அற்புதமான மனிதர்களில் ஒருவன் ஷோபா சக்தி.  எழுத்திலும் வாழ்விலும் எவ்வித சமரசத்துக்கும் உட்படாதவன்.  என் அருமையான நண்பன்.  ஆனால் என்னிடம் அவனுக்கும் அவனிடம் எனக்கும் பிடிக்காத பல சமாச்சாரங்கள் உண்டு.  தீவிர இடதுசாரியான அவனுக்கு வலதுசாரியாகி விட்ட என்னுடைய அரசியல் கருத்துக்கள் வெறுப்பை அளிக்கக் கூடியவை.  ஷோபா சக்தியின் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்பது என் கருத்து.  அவனுடைய கதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  எம்ஜியார் கொலை வழக்கு என்ற சிறுகதைத் தொகுதி கிண்டில் புத்தகமாகக் கிடைக்கிறது.  

 

http://www.amazon.com/The-MGR-Murder-Trail-Shobasakthi-ebook/dp/B00P2H8Q20

 

கேள்வி: ஜனவரி 5-இல் நடக்கப் போகும் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும் பாலிவுட் நடிகை யார்?  ஏன் பெயரைச் சொல்லவில்லை?  இதில் என்ன ரகசியம்? அருண்.பதில்: எந்த ரகசியமும் இல்லை. பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த ஃப்ரெஞ்சுப் பெண்ணான கல்கி கோச்லின் ஒரு சிறந்த வாசகி.  ஐரோப்பிய இலக்கியம் தெரிந்தவர்.  என்னுடைய ஸீரோ டிகிரியை (ஆங்கிலம்) பாலிவுட்டில் பணி புரியும் என் நண்பரிடம் கேட்டிருக்கிறார்.  நான் கையெழுத்திட்டு அனுப்பினேன்.  விழாவுக்கு வர அவருடைய ஒப்புதல் கிடைத்த பிறகு அது பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன்.  இப்போது சொல்லலாம்.  அவருடைய தேதி கிடைக்காததால் அவர் வரவில்லை.  தருண் தேஜ்பாலும், நெல்சன் சேவியரும், அடியேனும் பேசுவோம்.    கேள்வி: சிலர் தனக்கு உதவி செய்தவங்களுக்கே கெடுதல் செய்யும் அளவுக்கு ‘நல்லெண்ணம்’ படைத்தவர்களாக இருக்கிறார்கள்.  அந்த மாதிரி ஆட்களையும் வெறுக்காத குணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்? வெ.பூபதி, கோவை.


 பதில்: நல்ல இலக்கியமும் நல்ல சினிமாவும் நல்ல இசையும் ஒருவரை அந்த நிலைக்கு உயர்த்தும்.  இல்லாவிட்டாலும் வேறொரு வழி இருக்கிறது.  நமக்குக் கிடைக்கும் எல்லா நன்மை, தீமைகளையும் அனுபவம் என்று எடுத்துக் கொண்டால் நம்மால் யாரையுமே வெறுக்க முடியாது.  ஒருவர் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்தைச் செய்தார்.  நான் அது பற்றிக் கவலைப்படவில்லை.  கடவுள் எனக்குக் கொடுத்த அனுபவமாக மட்டுமே அதை நான் எடுத்துக் கொண்டேன்.  


கேள்வி: நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றிப் பலமுறை எழுதி இருப்பதால் கேட்கிறேன்.  இப்போதெல்லாம் பள்ளிகளிலேயே மாணவர்கள் பேட்டைரவுடிகளைப் போல கொலை, அடிதடி, திருட்டு என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.  இது முன்பும் இருந்தது என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.  இப்போது அங்கிங்கெனாதபடி பரவியுள்ளது.  இனியும் இந்தச் சமூகத்ததை நல்லதொரு மாற்றத்தை நோக்கித் திருப்ப இயலும் என்று நம்புகிறீர்களா?  Viki

 பதில்: நம்முடைய ஒட்டு மொத்த சமூகச் சூழலே மாசு பட்டுக் கிடக்கிறது.  என் வீட்டுக்கு சமையலில் உதவி செய்ய ஒரு பணிப்பெண் வந்தார்.  கூடவே தன்னுடைய மூன்று வயதுப் பையனையும் அழைத்து வந்தார்.  பையன் டை எல்லாம் கட்டியிருந்தான்.  எல்கேஜி படிப்பதாக சொன்னான்.  30 வயதான என் மகன் கார்த்திக்கைப் பார்த்து, “டேய், நீ என்னா பண்றே?” என்று கேட்டான்.  அதை அவனுடைய அம்மா கவனிக்கவில்லை.  பிறகு என்னை ஏய் என்று அழைத்தான்.  உடனே அவன் அம்மா, “அப்படியெல்லாம்  சொல்லக் கூடாது அங்கிள் என்று அழைக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார்.  பிறகு, அவன் அம்மா அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது, நீ நெருப்புப் பற்றி செத்துப் போய் விடுவாய் என்றான்.  உடனேயே அந்தப் பெண்ணை வேலையிலிருந்து நிறுத்தி விட்டேன்.  மூன்று வயதுச் சிறுவன் இப்படி இருப்பதற்குக் காரணம், அவனுடைய பெற்றோர்தான்.  எப்போதுமே டிவி சீரியல்தான் பார்த்துக் கொண்டிருப்பானாம்.  இப்படிப்பட்ட குழந்தை பின்னாளில் எப்படி வரும், வளரும்? சூழல் கெட்டுப் போக நம்முடைய தொலைக்காட்சியும் சினிமாவும் முக்கியமான காரணங்கள்.   பொழுதை நல்ல முறையில் போக்குவது எப்படி என்று தமிழர்களுக்குத் தெரியாது.   அவர்களுக்கு நல்ல சினிமா, நல்ல எழுத்து, நல்ல இசை போன்றவற்றில் பரிச்சயம் இல்லை.  கல்வி முறையும் படு மோசமாக இருக்கிறது.  இதெல்லாம் போக, திரும்பின இடமெல்லாம் கிடைக்கும் டாஸ்மாக்.  போதாதா?  மிக அடிப்படையான கலாச்சார மாற்றம் நிகழ்ந்தால் ஒழிய நீங்கள் குறிப்பிடுவது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்க முடியாது.    கேள்வி: துக்ளக் இதழ் படிப்பீர்களா? அதன் ஆசிரியர் சோ பற்றி? உங்கள் இருவரின் சமூக அரசியல் கருத்துகளும் ஒத்துப் போவது போல் உள்ளதே? சரவணன். வி, பாபநாசம்

 


பதில்:  சில ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் ஆறு மாத காலம் ஒரு பத்தி எழுதினேன்.  துக்ளக்கில் எழுதிய ஒரே எழுத்தாளர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.  அப்போது சோ அவர்களை சில முறை அவரது அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன்.  ஒரு பிரபலமான நபர் இவ்வளவு எளிமையாக இருக்க முடியும் என்பதற்கு அவரைப் போன்ற உதாரணம் வேறு யாரும் இருக்க முடியாது.  அவர் இந்தக் காலத்து மனிதரே அல்ல.  இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அற்புதமான மனிதர்களைப் போன்றவர் அவர்.  சோவைப் போன்ற ஒரு மனிதரை இந்தக் கால கட்டத்தில் யாராலும் பார்க்க முடியாது.  அசட்டுத் தனம், வீண் டம்பம், ஆடம்பரம், அகந்தை, ஈகோ போன்ற எந்தக் குணங்களும் இல்லாதவர்.  எளிமை, உண்மை, நேர்மை போன்ற நற்குணங்களின் உறைவிடம் அவர்.  அவருடைய இன்னொரு சிறப்பு, பகடி.  முகமது பின் துக்ளக்கில் பின்னி எடுத்திருப்பார்.


ஆனால் சமீபத்தில் ஜெயலலிதா தீர்ப்பு விஷயத்தில் அவர் எழுதியிருந்ததைப் படித்து அதிர்ந்து விட்டேன்.  தீவிர அதிமுக ஆதரவாளரைப் போல் எழுதியிருந்தார்.  முகமது பின் துக்ளக்கில் பார்த்த சோ எங்கே என்று வியந்தேன்.

 

(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 

 


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...