???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பேக்கு இருக்க முடியுமா? - அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 15

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   28 , 2014  01:01:39 IST


Andhimazhai Image

 

கேள்வி:குரஸவா இயக்கிய Ran படத்தில் Tsurumaru என்ற பெயருடைய அரசனின் கோட்டையையும் குடும்பத்தையும் அழித்து நிர்மூலமாக்கி அவன் கண்களையும் குருடாக்கிய பேரரசன் ஹிததோரா ஒரு பிச்சைக்காரனாக, பைத்தியக்காரனாக அலைந்து கொண்டிருக்கும் போது அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, ”பேரரசனே! உன்னை வெறுக்காமலிருக்க என் சகோதரியிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒரு பேரரசனுக்குரிய மரியாதையை இந்தப் பாழடைந்த குடிசையில் என்னால் உனக்குக் கொடுக்க முடியவில்லை.  அதிர்ஷ்டவசமாக என் சகோதரி என்னிடம் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்திருக்கிறாள்.  அதை நான் உனக்காக வாசிக்கிறேன்.  அது ஒன்றுதான் இப்போது நான் உனக்கு அளிக்கக் கூடிய சந்தோஷம்.  என் இதயத்திலிருந்து வரும் அன்பு அது…” சொல்லி விட்டுத் தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறான் Tsurumaru என்ற அந்தக் குருடன்.உங்கள் சாருஆன்லைனில் இப்படி எழுதியிருந்தீர்கள். இத்தகைய மனநிலையைப் பெறுவது எப்படி? பாக்கர், மதுரை. (பரிசுக்குரிய கேள்வி)
 
 
 
பதில்: நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  நான் யாரையும் வெறுப்பதில்லை.  காரணம், வெறுப்பு என்பது ஒரு நோய்.  அது எதிராளியை விட நம்மைத்தான் அதிகம் பாதிக்கும்.  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்.  எனவே, என்னுடைய சுயநலத்தை முன்னிட்டாவது நான் யாரையும் வெறுப்பதில்லை என்று வைத்திருக்கிறேன்.  ஆனால் சுருமாருவின் அன்பு இதையெல்லாம் விட மகத்தானது; அற்புதமானது. 
 
 
 
இதே போன்றதொரு தருணம் கூரத்தாழ்வாரின் வாழ்க்கையில் வருகிறது.  ஸ்ரீராமானுஜரின் காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இடையே பெரும் மோதல் இருந்தது.  அப்போது ஒரு சோழ மன்னன் ராமானுஜரை அரசவைக்கு அழைத்தான்.  அங்கே போனால் அவன் சொல்படி சிவனே உயர்ந்த தெய்வம் என்பதை ஏற்க வேண்டும்.  அதனால் ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார் தன் குருவை மாறுவேடத்தில் வேறு இடம் போகச் சொல்லி விட்டு காவி வஸ்திரத்தை அணிந்து கொண்டு ராமானுஜராக அரசன் முன் போய் நின்றார்.  (கூரத்தாழ்வாருக்கு மனைவியும் இரண்டு புத்திரர்களும் உண்டு.) அரசன் ஒரு ஓலையில் ”சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவனை விட மேலானது எதுவும் இல்லை) என்று எழுதிக் காட்டினான்.  உடனே அதில் கூரத்தாழ்வார் ”அஸ்தி த்ரோணம் அத: பரம்”  என்று எழுதினார்.  அதாவது, சிவனைக் காட்டிலும் துரோணம் மேலானது என்று பொருள்.  சிவ என்பதற்கு சமஸ்கிருதத்தில் மரக்கால் என்றும் ஒரு பொருள் உள்ளது.  அந்தக் காலத்தில் துரோணம் என்று ஒரு அளவை இருந்தது.  தமிழில் பதக்கு என்பார்கள்.  மரக்காலை விட துரோணம் பெரிது.  அதனால்தான் கூரத்தாழ்வார் சிலேடையாகவும் நக்கலாகவும் அப்படிச் சொன்னார்.  உடனே அவரது கண்கள் பிடுங்கப்பட்டன.  ராமானுஜர் வெள்ளை வஸ்திரம் அணிந்து சோழ ராஜ்யத்திலிருந்து தப்பி கர்னாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்குச் சென்று அங்கே சில காலம் வாழ்ந்தார்.  12 ஆண்டுகள் கழிந்து கூரத்தாழ்வாரும் ராமானுஜரும் சந்தித்துக் கொண்டனர்.  பிறகு இருவரும் காஞ்சீபுரம் சென்று வரதராஜப் பெருமாளை தரிசித்தனர்.  பெருமாள் கூரத்தாழ்வாரிடம், “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.  அதற்கு அவர், எனக்குக் கிடைக்கும் மோட்சத்தை நாலூரானும் பெற அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.  நாலூரான் தான் கூரத்தாழ்வாரை சோழ மன்னனிடம் காட்டிக் கொடுத்தவன். 
 
 
 
இத்தகைய மனதைப் பெற முதல் படி, பணத்தாசையை விடுவது.  அதை விட்டு விட்டால் ஒவ்வொரு ஆசையாகப் போய் விடும் சாத்தியம் இருக்கிறது.   அதன் பிறகு மற்றவர் மீதான வெறுப்பும் தானாகவே அகன்று விடும்.  எப்படி என்றால், எனக்கு ஒருவர் தீங்கு செய்தால் அதை எனக்குக் கிடைத்த அனுபவம் என்றே எடுத்துக் கொள்கிறேன்.  அதனாலேயே அந்தத் தீமையைச் செய்தவர் மீது எனக்கு வெறுப்பு தோன்றுவதில்லை.  கடவுள் அந்த நபர் மூலம் எனக்கு அந்த அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.  குறளே இருக்கிறது.  இன்னா செய்தாரை ஒறுத்தல்…
 
 
 
கேள்வி: இசையின் இருப்பிடம் எது? எங்கிருந்து உருவாகிறது? மௌனத்தை வெல்ல எந்த இசையாலும் இயலவில்லையே, ஏன்?  சின்னப்பயல்.(பரிசுக்குரிய கேள்வி)
 
 
 
பதில்: The music is not in the notes, but in the silence between என்று மொஸார்ட் கூறியிருக்கிறார்.  (மேற்கத்திய சங்கீதத்தில்) இரண்டு சலனங்களுக்கு இடையே வரும் இறுக்கமான மௌனமும் ஒரு இசையே.  மௌனத்தையே இசையாக மாற்றிய ஜான் கேஜ் (John Cage) பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை.  ஜான் கேஜின் புகழ் பெற்ற படைப்பான 4’33”-இல் ஒரு சப்தம் கூட இருக்காது.  ஒரு பியானிஸ்ட் பார்வையாளர்களின் முன்னால் தோன்றி 4 நிமிடம், 33 நொடிகளுக்கு எந்த சப்தமும் இல்லாமல் இருப்பார். 
 
 
 
https://www.youtube.com/watch?v=zY7UK-6aaNA
 
 
 
இது ஒருவகை தியானம்.  இசை என்று சொல்லும் போது நம் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறதோ, நாம் இதுவரை எதை இசை என்று ரசித்துக் கொண்டிருந்தோமோ அது எல்லாவற்றையும் மாற்றக் கூடியது ஜான் கேஜின் இசை.  ஆனால் ஆச்சரியகரமாக ஜான் கேஜின் இசைக்கு அடிப்படையாக அமைந்தது இந்தியத் தத்துவமும் ஜென் பௌத்தமும்தான்.  மிக முக்கியமாக, ஆனந்த குமாரசுவாமி மற்றும் I Ching என்ற சீன நூல்.  சீனர்களின் மிகப் பழமையான நூல் இதுவே. 
 
 
 
Schoenberg என்ற கம்போஸரிடம் இரண்டு ஆண்டுகள் இசை கற்றார் கேஜ்.  இரண்டு ஆண்டுகள் சென்று உனக்கு இசையே வராது என்றார் ஷோன்பெர்க்.  ”ஏன்?” ”நீ ஒரு சுவரின் முன்னே நின்று கொண்டிருக்கிறாய்.  அதன் ஊடாக உன்னால் போக முடியாது.” “அப்படியானால் என் வாழ்நாள் வரை அந்தச் சுவரை என் தலையால் முட்டிக் கொண்டே இருப்பேன்.”
 
 
 
ஜேன் கேஜ் ஒரு மாபெரும் கலைஞனாக இருந்ததால் அவர் சுவரை முட்டியதெல்லாம் வியக்கத்தக்க கலா சிருஷ்டிகளாக மாறின.  என்னைப் பொறுத்தவரை மௌனத்தை இசையால் வென்ற கலைஞன் ஜான் கேஜ் என்று சொல்வேன். முடிந்தால் இதைக் கேட்டுப் பாருங்கள்.  
 
 
 
String quartet in Four Parts:   https://www.youtube.com/watch?v=sCYyChtOvww
 
 
 
பிறகு கேஜ் ஒரு திரைப்பட இயக்குனரை சந்திக்கிறார்.  அவர் ஒருமுறை கேஜிடம் சொல்கிறார்: ”இந்த உலகில் உள்ள எல்லா பொருட்களிடம் ஒரு சக்தி இருக்கிறது.  அது தன்னை அதிர்வுகளின் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறது.”  இந்தக் கருத்து கேஜிடம் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. 
 
 
 
பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறார் கேஜ்.  அதேபோல் நாகார்ஜுனா, விட்ஜென்ஸ்டைன் ஆகியோரின் தத்துவத்தைப் படிக்கிறார்.  நாகார்ஜுனா இந்தியப் பாரம்பரியத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் வருபவர்.  தத்துவம் (சூன்ய வாதம்), விஞ்ஞானம் (ரசவாதம்), மருத்துவம் (ஆயுர்வேதம்) போன்ற துறைகளில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர்.  நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்தார். 
 
 
 
குறிப்பாக உங்கள் கேள்வி இசை பற்றியதாகத் தெரிந்தாலும் அதற்கான பதில் தத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் வான சாஸ்திரத்திலும்தான் இருக்கிறது.  வெற்றிடத்தில் இசையைக் கேட்க முடியாது.  கேட்க முடிந்தால் சூரியன் மற்றும் இன்னொரன்ன நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சப்தப் பிரளயத்தில் பிரபஞ்ச வெளியே கிழிந்து போய் விடும்.  சூரியன் ஒரு விநாடியில் 70 கோடி டன் ஹைட்ரஜனை 69.5 கோடி ஹீலியமாகவும் மீதி 50 லட்சத்தை காமா கதிர்களாகவும் வெளியேற்றுகிறது.  இவ்வளவும் நடப்பது ஒரு விநாடியில்.  இதை எழுதும் போது “மனிதப் பதரே” என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது.  தோன்றினால் அது தத்துவத்தின் பக்கம் கொண்டு போய் விடும்.  வேண்டாம்.  நாம் சூரியனையே ஆராய்வோம்.  இவ்வளவும் ஒரு நொடியில் வெளியாகிறது என்றால் அதன் சப்தம் எப்படி இருக்கும்?  அமைதிதான்.  சூன்யம்தான்.  ஏனென்றால், விண்வெளியில் காற்று இல்லை.  காற்று இருந்தால் பிரபஞ்சப் பிரளயம்.  ஆக, இசை என்பதெல்லாம் இந்த மனிதப் பதர்களின் செவிகளில் வந்து விழும் சப்தம்தான்.  மீதியுள்ள பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பது மௌனம்.  சூன்யம். அந்த மௌனத்தை எப்படி உணர்வது?  எப்படிக் கடப்பது?  அந்தக் கேள்வி நம்மை ஆன்மீகத்தில் கொண்டு போய் விடும். 
 
 
 
கேள்வி: செம்மையான, ஜிவ்வென்று நட்டுக் கொண்டு நிற்கும் அளவிற்கு ஒரு காதல் நாவல் படிக்க ஆசை. இது போன்று எந்த நாவல் உள்ளது? இருந்தால் பரிந்துரையுங்கள்.  அருண் கிறிஸ்டோஃபர். 
 
 
 
பதில்: அடப்பாவிகளா! இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பேக்கு இருக்க முடியுமா?  இண்டர்நெட்டில் மில்லியன் கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன போர்னோ கதைகள்.  அது கூடவா உங்களுக்குத் தெரியாது?  மட்டுமல்லாமல் இன்னமும் கதை படித்துத்தான் ஜிவ்வென்று நிற்க வேண்டுமா?  வயது உங்களுக்கு எத்தனை?  உங்கள் அப்பா, அம்மாவின் ஃபோன் நம்பர் கொடுங்கள்.  ”தம்பிக்குக் கல்யாண ஆசை வந்து விட்டது.  காலாகாலத்தில் கால் கட்டுப் போடுங்கள்” என்று சொல்ல வேண்டும்.
 
 
 
கேள்வி: உங்களுக்கும் பாடகர் ஹரிஹரனுக்கும் உள்ள உருவ ஒற்றுமை அண்ணன்-தம்பி போல உள்ளது. அவர் உங்களை எங்காவது சந்தித்திருக்கிறாரா? வெ.பூபதி, கோவை.
 
 
 
பதில்: நான் நீண்ட முடி வைத்திருந்த போது கறுப்பு முடியில் இருந்தேன்.  எனவே அப்போதும் ஹரிஹரன் போல் இருந்திருக்க வாய்ப்பில்லை.  இப்போது வெள்ளைக்கு மாறிய பிறகு ஹரிஹரனோடு ஒப்பிடவே முடியவில்லை.  ஏனென்றால், அவர் ஒரு ஆண் அழகன்.   பலரும் என்னை மணி ரத்னத்தோடுதான் ஆச்சரியத்துடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு ஆட்டோக்காரர், “கார் என்ன சார் ஆச்சு?” என்றார். நான் அவர் என்ன கேட்கிறார் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்தேன்.  பிறகு அவர், “அடுத்த படம் எப்போ சார்?” என்று கேட்ட போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மணி ரத்னத்தை அடிக்கடி “பாஷா”வில் பார்த்திருக்கிறேன்.  பேசியதில்லை.  இப்போது நான் அந்தப் பக்கம் போவதில்லை.   
 
 
 
கேள்வி: ‘அலைக்கழிப்புகளுக்கு ஆட்படுதல்‘ என்பது அனைத்துத்  துறையினருக்கும், அவரவர் பணி சார்ந்த வாழ்வனுபவத்தில் விளைவதுதானே? பின் ஏன் அதை எழுத்தாளர்கள் மட்டும் பெரிதுபடுத்தி பிரச்னையாய் முன் நிறுத்துகிறார்கள்?  ஆர்.எஸ்.பிரபு,சென்னை- 90.
 
 
 
பதில்: ஒரு நடிகர் 20 கோடி சம்பளம் வாங்குகிறார்.  அவர் தொலைக்காட்சியில் இலவசமாகத் தோன்றலாம்.  ஒரு எழுத்தாளனின் சம்பளம் ஆயிரங்களில்.  பல பத்திரிகைகளில் நூறுகளில்.  அவனும் இலவசமாகவே தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும் என்றால் நியாயமா?  ஒரு ஷூட்டிங் போனால் ஒரு இரவு பூராவும் வீணாகி விடுகிறது.  அதனால் புகழ் கிடைக்கிறது.  சரி, அந்தப் புகழால் நான் அரிசி பருப்பு வாங்க முடியுமா?  இல்லையே?  அதனால்தான் அங்கலாய்க்கிறோம். 
 
 
 
கேள்வி: நீண்ட நாள் வாசகி என்பதால் என் அறிமுகம் உங்களுக்குத் தேவையில்லை. உடலைப் பேண நாங்கள் உங்களிடமிருந்துதான் கற்றோம்.  எனவே, உங்களுக்கு எங்களின் பிரார்த்தனைகளும், அன்பும்.  பின் வருபவை எனது கேள்விகள்.1:
புத்தகம், பயணம்  இரண்டும் ஒரு மனிதனின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன? இரண்டில் ஒன்றைத்தான் ஒரு மனிதன் தேர்வு செய்ய வேண்டுமெனில், நீங்கள் எதைப் பரிந்துரைப்பீர்கள்? ஏன்? 
 
 
 
பதில்: இது மிகவும் கடினமான கேள்வி.  இருந்தாலும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.  புத்தகம் இல்லாவிடில் பாரதி சொல்லும் வேடிக்கை மனிதரைப் போலவே இருந்திருப்பேன். புத்தகங்களே என்னை உருவாக்கியது.  ஆனால் பயணம் செல்லும் போது கிடைக்கும் அனுபவங்களை எவ்வளவு புத்தகம் படித்தாலும் நாம் பெற முடியும் என்று தோன்றவில்லை.  உதாரணமாக, சுதந்திரம் என்பது பற்றி நாம் எவ்வளவோ படித்திருக்கிறோம்.  ஆனாலும் ஃப்ரான்ஸ் சென்றிருந்த போதுதான் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நான் அறிந்து கொண்டேன்.  இருப்பினும் இரண்டில் ஒன்று என்றால், புத்தகம்தான்.  
 
 
2:ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் பத்திரிகைகளிலும், இணையத்திலும் பெண்களைப் பற்றி வரும் நகைச்சுவைகள் ஒரு விதமான பொதுத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இதற்கு அடிப்படை என்னவாக இருக்கும்?  நீங்கள்என்ன நினைக்கிறீர்கள்?  தேவகி ராஜு, புது தில்லி.
 
 
 
பதில்: முடிந்தவரை ஜனரஞ்சகப் பத்திரிகைகளைப் படிப்பதை நிறுத்துங்கள்.  அறிவார்த்தமாகவும் அதே  சமயம் சுவாரசியமாகவும் பல பத்திரிகைகள், பல இணைய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.  தேடிப் படியுங்கள்.  அச்சு ஊடகத்தை விடப் பல மடங்கு சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கிறது இணையம். 
 
 
 
மற்றபடி, ஆண்களின் பொதுப் புத்தியிலேயே பெண்களைப் பற்றி ஒரு பொதுவான பிம்பம்தான் படிந்திருக்கிறது.  அதுதான் இதற்கெல்லாம் காரணம்.  இப்படிச் சொல்வதால் எல்லா எழுத்தாளர்களையும் புத்திஜீவிகளையும் போல் நான் பெண்களின் பக்கம் பேசுபவன் என்று நினைக்க வேண்டாம்.  இன்று பெண்களைப் போலவே ஆண்களும் பெண்களால் கொடுமைக்கு ஆளாகிறார்கள்.  என் நண்பர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டால் ரத்தக் கண்ணீர் வருகிறது.  ஒரு நண்பரும் நானும் இன்னொரு நண்பரின் வீட்டில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம்.  நண்பருக்கு மனைவியிடமிருந்து ஃபோன்.  இதோ வந்துட்டேம்மா என்று துள்ளிக் குதித்து எழுந்து எங்களிடம் கூட சொல்லாமல் ஓடி விட்டார். பரிதாபமாக இருந்தது.  இது போல் பல சம்பவங்கள்.  மத்தியதர வர்க்கத்தில் ஒன்று, ஆண் அடிமையாக இருக்கிறான்; அல்லது பெண் அடிமையாக இருக்கிறாள்.  சம உறவு கொண்ட ஒரே ஒரு குடும்பத்தைக் கூட இதுவரை நான் பார்த்ததில்லை. 
 
 
 
இது என் கணவரின் கேள்வி:
 
ஒரு எழுத்தாளர் ஒரு புதிய துறையை ஆராய்ந்து அதை எழுதுவதும், அத்துறையில் இயற்கையான ஈடுபாடும் உயர்ந்த ஞானமும் கொண்ட ஆனால் அடிப்படை மொழியறிவு மட்டுமே உடைய ஒருவர் அத்துறையைப் பற்றி எழுதுவதும் எவ்வாறு இருக்கும்? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? 
அழகேசன், புது தில்லி.
 
 
 
பதில்: உங்கள் கேள்வி இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும்.  மற்ற எல்லா நாடுகளிலும் துறை சார்ந்த அறிவாளிகளுக்கும் இலக்கியப் பரிச்சயம் நிச்சயம் இருக்கும்.  இல்லாவிட்டால் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief History of Time உலகம் பூராவும் கோடிக் கணக்கில் விற்றிருக்காது.  அதே போல் பிரபலமான இன்னொரு புத்தகம்: "Surely You're Joking, Mr. Feynman!"  இதேபோல் பறவையியலாளர்கள், சுற்றுப்புறச் சூழலியலாளர்கள், தத்துவவாதிகள் என்று பலருடைய புத்தகங்களும் மிகப் பெரும் வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை.  சமீபத்தில் அப்படி நான் படித்த, துறை சார்ந்த நிபுணர் ஒருவரின் புத்தகம்: திருடன் மணியன் பிள்ளை.  திருடனாக இருந்து அந்தத் துறை சார்ந்த தன் அனுபவங்களை மலையாளத்தில் எழுதியிருக்கிறார் மணியன் பிள்ளை.  தமிழில் மொழிபெயர்ப்பு வந்துள்ளது.  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், ஒரு திருடரின் அனுபவம் ஒரு பிரமாதமான நூலாக வந்திருக்கும் போது ஒரு நிபுணரின் அனுபவம் மட்டும் ஏன் சராசரியாக இருந்தது என்பதுதான்.  முன்னாள் ஜனாதிபதி ஒருவர் எழுதிப் பிரபலமான புத்தகத்தைச் சொல்கிறேன்.   மணியன் பிள்ளைக்கு இலக்கியம் தெரியாது.  அப்படியானால் இலக்கியம் தெரிந்தால்தான் நல்ல புத்தகம் எழுதலாம் என்ற என் தர்க்கம் அடிபட்டுப் போகிறது.  அப்படியிருக்க மணியன் பிள்ளையின் நூல் ஏன் இலக்கிய அனுபவத்தைத் தருகிறது என்றால், மணியன் தன் அனுபவத்தை பாவனைகள் இல்லாமல் மிக வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்.   
 
 
 
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மானுடவியல் ஆய்வு நூல் மாபெரும் இலக்கியப் படைப்பாகக் கொண்டாடப்பட்டது.  ஆஸ்கார் லூயிஸ் எழுதிய La Vida.   
 

 

(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...