???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிலவு தேயாத தேசம் – 29 சாருநிவேதிதா எழுதும் தொடர்

Posted : சனிக்கிழமை,   மே   28 , 2016  01:54:10 IST

 
இடைவெளி விட்டதற்கு மன்னியுங்கள்.ஒவ்வொரு அத்தியாயத்திற்காகவும் பல நூறு பக்கங்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. 
உதாரணமாக, நாஸிம் ஹிக்மத் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் ஓரான் பாமுக்கின்  ‘என் பெயர் சிவப்பு’ 
என்ற உலகப் புகழ் பெற்ற நாவலுக்கு ஆதாரமே நாஸிம் ஹிக்மத்தின் வாழ்க்கைதான் என்று தெரிய வந்தது.
உடனே ‘என் பெயர் சிவப்பு’ நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். இப்படியாக இன்னும் ஐந்தாறு அத்தியாயங்கள் 
வரக் கூடிய இந்தத் தொடர் கொஞ்சம் இடைவெளிகளோடு வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  
***
இரண்டாம் உலகப் போர் முடிந்து எழுபது ஆண்டுகள் ஆகி விட்டன.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேரழிவிலிருந்து பாடம் 
கற்றுக் கொண்டு அந்த மனநிலையிலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டன.  இன்றைய தினம் தேசியவாதம், 
தேசப் பற்று போன்ற வார்த்தைகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மனித குலத்துக்கு விரோதமான கருத்துருவங்களாகக் கருதப்படுகின்றன; 
அவற்றை ஹிட்லரின் தேச பக்தி என்ற சித்தாந்தத்தோடு தவிர்க்க முடியாமல் சம்பந்தப்படுத்தி மனம்  நடுங்குகிறார்கள்.  ஆனால் 
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை அப்படி இல்லை.  சில உதாரணங்களைப் பார்ப்போம்.
 

யூகோஸ்லாவியா என்ற தேசத்தைப் பற்றி பூகோளத்தில் படித்திருக்கிறோம்.  அந்த நாடு இப்போது இல்லை.  ஸ்லொவேனியா, க்ரோஷியா, போஸ்னியா, மாண்ட்டனெக்ரோ, கொஸாவோ, ஸெர்பியா, மாசிடோனியா என்று தனித்தனி நாடுகளாகப் பிரிந்து விட்டன.  இவற்றில் ஸெர்பியாவும் மாண்ட்டனெக்ரோவும் ஒரே நாடாகச் சேர்ந்து கொண்டன.  போஸ்னியாவில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள்.  செர்பியா கிறிஸ்தவ நாடு.  போஸ்னியாவின் மக்கள் தொகை வெறும் 38 லட்சம்.  பரப்பளவு என்று பார்த்தால் போஸ்னியாவை விட தமிழ்நாடு இரண்டரை மடங்கு பெரிது.  1990களின் முற்பகுதியில் போஸ்னியாவுக்கும் செர்பியாவுக்கும் போர் மூண்டது.  போருக்குக் காரணம், மத வேறுபாடு.  செர்பிய ராணுவத்தினர் போஸ்னிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர்.  பெண்களை வன்கலவி செய்தனர். 

 

பல ஆயிரக் கணக்கான மக்களை வேறு இடங்களை நோக்கி விரட்டினர்.  இதையெல்லாம் பதிவு செய்த பத்திரிகையாளர்களில் ஒருவர் ஸ்லாவெங்கா த்ராகுலிச் Slavenka Drakulić என்ற பெண்.  இவர் தனக்குப் பார்க்கக் கிடைத்த ஒரு புத்தகம் பற்றிப் பேசுகிறார்.  ’என்னைக் கொன்று விடுங்கள் என்று மன்றாடினேன்’ என்பது அந்த நூலின் பெயர்.  செர்பிய ராணுவச் சிப்பாய்களால் வன்கலவி செய்யப்பட்ட நாற்பது பெண்களின் வாக்குமூலம் இந்த நூலில் உள்ளது.  மற்ற பெண்களைப் போல் அல்லாமல் இந்த நாற்பது பெண்களும் தங்கள் வாக்குமூலத்தை அவர்களே புத்தகமாகவும் எழுதிப் பதிப்பித்திருக்கிறார்கள். வன்கலவி என்றால் நாம் இதுகாறும் அறிந்த முறை அல்ல. 

 

ஒரு கிராமத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை பெண்களையும் - ஐந்து வயதிலிருந்து ஐம்பது வரை, வயது வித்தியாசம் ஏதும் இல்லாமல் எல்லா பெண்களையும் லாரிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் ஒரு இடத்தில் கொண்டு போய் அடைத்து வைப்பார்கள்.  தகரக் கொட்டகை போன்ற இடம்.  மாதக் கணக்கில் மாற்றிக் கொள்ளவும் உடுப்பு இன்றி அந்தக் கொட்டகையிலேயே அவர்கள் சிறை வைக்கப்படுவார்கள்.  சிலர் செத்தும் போவார்கள்.  தினந்தோறும் சிப்பாய்கள் வந்து சிலரை அழைத்துக் கொண்டு போய் வன்கலவி செய்வார்கள்.  அதிகம் பேரைத் தாங்க முடியாமல் பத்து வயதுச் சிறுமிகள் கதறிக் கதறி செத்துப் போகும் கதைகளை நான் புத்தகங்களாகப் படித்திருக்கிறேன்.  அந்தப் புத்தகங்கள் பின்னர் திரைப்படங்களாகவும் வந்துள்ளன.   ஏதோ டிக்கட் வாங்கப் போவது போல் வரிசையில் நின்று ஒவ்வொருவராகப் போய் வன்கலவி செய்வார்கள். 

 

இன ஒழிப்பு என்று சொல்லி எல்லோரையும் கர்ப்பமாக்குவார்கள்.  முஸ்லீம் பெண்களின் முதுகிலும் மார்பிலும் கத்தியால் சிலுவைக் குறி இடுவார்கள்.  இப்படி சிலுவைக் குறி தாங்கிய ஒரு பெண்ணை இஸ்தாம்பூல் பிராத்தலில் சந்தித்தேன்.  அவள் சொன்ன கதையையெல்லாம் தனியாக நாவலாகத்தான் எழுத வேண்டும்.  இப்போது நாம் ஹூசுன் என்ற மகத்தான துயரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். 

 

போஸ்னியா, செர்பியா எல்லாமே சொர்க்கலோகத்தை ஒத்த அழகான நாடுகள்.  கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.  இப்படங்களை எடுத்தவர் Zahariz. 

 

 

 

இன்னும் இது போன்ற படங்களை காணலாம்.

 

இவையெல்லாம் ஏதோ ஊட்டி, சிம்லா போல் கோடை வாசஸ்தலங்கள் அல்ல.  போஸ்னியா, செர்பியா, ஹெர்ஸகோவினாவின் எல்லா கிராமங்களுமே இப்படித்தான் இருக்கும். 

 

போஸ்னியாவின் தலைநகர் ஸராயீவோ நகர் பற்றிய ஒரு காணொளி கீழே.  (Sarajevo என்ற பெயரை ஸராயீவோ என்றே அழைக்க வேண்டும்.  பல ஐரோப்பிய மொழிகளில் ’j’ என்ற எழுத்து ’ய’ என்றே உச்சரிக்கப்படுகிறது.  ஸ்பானிஷில் ‘ஹ’ என்பார்கள்.  Jesus என்பதை நாம் யேசு என்று சொல்வது கூட 'j'வுக்கு ‘ய’ ஒலி கொடுப்பதால்தான்.)  காணொளியின் ஆரம்பத்தில் ஒற்றைக் கால் இழந்த ஒரு பெண்ணைப் பார்க்கலாம்.  ஐரோப்பிய நகரங்களில் இப்படி உடல் உறுப்பை இழந்த சிலர் இப்படி சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை சர்வசாதாரணமாகக் காணலாம். 

 

துருக்கியில் அப்படி இல்லை.  இப்படிக் கை கால் இழந்தவர்கள் போரினால்தான் இப்படி ஆகிறார்கள்.  படத்தில் சாலைகளை கவனித்தால் பளிங்கு போல் சுத்தமாக இருப்பதைப் பார்க்கலாம்.  கற்பனை செய்து பாருங்கள்.  துருக்கி ஒரு பெரிய நாடு.  அங்கே மேற்கிலிருந்து கிழக்கு வரை சுற்றினேன்.  ஒரு குப்பையைக் கூட பார்க்க முடியவில்லை.  ஒரு பஸ் டிக்கட், ஒரு சாக்லெட் பேப்பர், தீக்குச்சி, சிகரெட் துண்டு, தண்ணீர் பாட்டில், ஐஸ் க்ரீம் டப்பா, கிழிந்த காகிதம் எதையுமே தரையில் பார்க்க முடியவில்லை.  ஒரு தேசம் முழுவதுமே கழுவித் துடைத்தது போல் இருந்தது.   

 

போஸ்னியாவின் தலைநகர் ஸராயீவோ நகரில் ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம் குடும்பம்.  அம்மா, அப்பா, இரண்டு பெண் குழந்தைகள்.  மூத்த பெண் ஸமீரா ஆசிரியைப் பயிற்சி முடித்திருக்கிறாள்.  ஒரு கிராமத்தில் அவளுக்கு வேலை கிடைத்திருக்கிறது.  வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள்.  உலகம் பூராவும் கிராமங்கள் எல்லாமே ஒன்றே போல்தான் இருக்கும் போலிருக்கிறது.  ஒரு கிழவன் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் தூக்கக் கலக்கத்தில் அவள் தோள் மீது சாய்ந்து தூங்கி விடுகிறான்.  கிராமத்துச் சிறார்கள் பஸ் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்து அதில் உள்ளவர்களுக்கு டாட்டா காண்பிக்கிறார்கள். 

 

நாம் மேலே புகைப்படத்தில் பார்த்த கிராமத்தை அச்சு அசலாக ஒத்திருக்கிறது ஸமீரா பணி செய்ய வரும் கிராமமும்.  ஆனால் அவள் அங்கே வந்து சேர்ந்த முதல் நாளே அங்கே ஒரு செர்பிய போராளி குழு வருகிறது.   போராளிகள் அனைவருடைய கையிலும் துப்பாக்கி.  கிராமத்தில் உள்ள எல்லா பெண்களையும் (ஸமீராவையும் சேர்த்து) லாரியில் ஏற்றி ஏதோ ஒரு பெயரில்லாத இடத்துக்குக் கொண்டு  போகிறார்கள். (ஆண்கள் அனைவரையும் சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.)  பெண்கள் அனைவரும் ஒரு கொட்டகையில் அடைக்கப்படுகிறார்கள்.  நாய்க்கு விட்டெறிவது போல் ரொட்டித் துண்டை விட்டெறிகிறான் ஒரு போராளி.  அந்தச் சிறிய கொட்டகையிலேயே ஒருவர் மீது ஒருவர் கிடந்து உறங்குகிறார்கள் பெண்கள்.

 

 

பெண்கள் அனைவரும் கொட்டகையில் இருக்கும் காட்சி

 

காலையில் ஒரு போராளி வந்து எல்லோரையும் வெளியே அழைக்கிறான்.  அது ஒரு திறந்த வெளி.  ஒரு பாலைவனத்தைப் போல் கிடக்கிறது அந்த வெளி.  எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து மலஜலம் கழியுங்கள் என்று உத்தரவிடுகிறான். 

 

ஒரு கணம் திகைத்து விழிக்கும் அத்தனை பெண்களும் வேறு வழியில்லாமல் தங்கள் ஸ்கர்ட்டை உயர்த்தியபடி குத்திட்டு அமர்கிறார்கள்.  அப்போது அவர்கள் கண்களில் தெரியும் பீதியும் அவலமும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.  கேமரா அடுத்த காட்சிக்குத் தாவுகிறது. 

 

 

ஸமீரா எல்லா பெண்களுடனும் கொட்டகையில் அமர்ந்திருக்கிறாள்.

 

 

ஒரு போராளி ஸமீராவை கேப்டனிடம் அழைத்துச் செல்லும் காட்சி.

 

 

 

 

 

 

ஸமீராவை மேஜையின் மீது குப்புறக் கிடத்தி ஒருவர் மாற்றி ஒருவராக வந்து புணரும் காட்சிகள்.

 

 

 

கிட்டத்தட்ட தனக்குக் கிடைத்த ஒரு செக்ஸ் பொம்மையைப் போலவே ஸமீராவை நடத்துகிறான் செர்பிய கேப்டன். 

 

 

எல்லா பெண்களும் சிறை வைக்கப்பட்டிருக்கும் கொட்டகை.

 

 

பத்தே வயதான சிறுமியை போராளிக் குழுவில் உள்ள அத்தனை பேரும் மாற்றி மாற்றி வன்கலவி செய்து - பல நாட்கள் - கடைசியில் அவள் இறந்து விடுகிறாள்.  படத்தில் அந்தச் சிறுமி...

 

படத்தில் ஸமீரா மட்டும் மற்றவர்களைப் போல் ஸமீரா மன உளைச்சலுக்கு ஆட்படுவதில்லை.  காரணம், அவள் அந்த இடத்தில் உள்ள செர்பியன் போராளிகளின் ஆட்ட விதிகளைப் புரிந்து கொண்டிருந்தாள்.  அந்த கிராமத்தின் அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்.  தங்களிடம் அந்த செர்பியப் போராளிகளுக்குத் தேவையான ஒரு ‘பொத்தல்’ இருப்பதாலாயே தங்களை அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.  பத்து வயது குழந்தையைக் கூட வன்கலவி செய்தே கொன்று விட்டார்கள்.  வன்கலவி மட்டும் அல்ல; அடித்துக் கடித்துத் துவைத்துப் போடுகிறார்கள்.  அவர்களுடைய மிருக வெறிக்கு வடிகாலாகப் பயன்படும் பெண் உடல் நாம்; அவ்வளவுதான்.  இங்கிருந்து உயிரோடு தப்பிக்க வேண்டுமானால் அவர்களின் ஆட்டவிதிகளையே ஆடுவோம்.  ஒழுக்கம், நீதி, நேர்மை, கற்பு, மற்ற பெண்கள், கௌரவம், கடந்த காலம், எதிர்காலம் என்று எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது.  யோசித்தால் செத்தோம்.  இதுதான் அவள் அவர்களுக்கு எதிராக நகர்த்தும் காய்.  இந்த ஆட்டத்தில் அவளுக்குத் தடங்கலாக இருக்கும் விஷயம் என்னவென்றால், அவள் மற்றவர்களை விட மிகவும் அழகாக இருக்கிறாள். 

 

ஏனென்றால், அவள் அவர்களைப் போல் கிராமத்துப் பெண் அல்ல; ஸராயீவோ நகரைச் சேர்ந்தவள்.  எல்லா ஆண்களும் அவளையே அழைக்கிறார்கள்.  மறுத்தால் அடியும் உதையும் பட்டு மேலும் கிழியும் உடம்பு.  எனவே அவர்களோடு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறாள்.  தன் அழகான மேனியை  ஒப்பனைகளின் மூலம் மேலும் அழகாக்கிக் கொள்கிறாள்.  இப்படியும் ஒரு போஸ்னியப் பெண்ணா என்று கேள்விப்பட்டு அவளை அழைத்து வரச் செய்கிறான் கேப்டன்.  எந்தப் பிரச்சினையும் பண்ணாமல் உடனே கிளம்பிப் போகிறாள்.  அவளை வேசி என்கிறார்கள் மற்ற பெண்கள்.  ஸமீரா அது பற்றிக் கவலைப்படவில்லை.  அவள் உயிரோடு இங்கிருந்து திரும்ப வேண்டும்.  அது ஒன்றுதான் அவளுடைய கவலை.

 

 

 

 

போஸ்னிய சிறுமியைப் பல செர்பிய ஆண்கள் வன்கலவி செய்த பிறகு அவளுடைய முதுகில் கத்தியால் சிலுவைக் குறி போட்டு அனுப்புகிறார்கள்.  சிறுமி செத்து விடுகிறாள்.  போஸ்னியா முஸ்லீம்களின் நாடு; செர்பியா கிறிஸ்தவர்கள் வாழும் நாடு என்பதை இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 

 

 

தொடரும்...

 

(சாருநிவேதிதா எழுதும் இந்த தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும்) 

 
 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...