???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம் 0 ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு 0 தமிழகத்துக்கு ராணுவம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இதை விட மோசமாக அமிதாப் பச்சனை அவமதிக்க முடியாது!- அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 27

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   20 , 2015  04:01:44 IST


Andhimazhai Image
 
கேள்வி: ஷமிதாப் படம் எப்படி?
கேஷவ் குமார்.
 
எனக்கு பால்கியின் முதல் படமான சீனி கம் மிகவும் பிடித்தது.  ஏனென்றால், அதன் கதையோடு நம்மால் ஒன்றிக் கொள்ள முடிந்தது.  ஆனால் அவருடைய அடுத்த படமான “பா” ஒரு கேலிக் கூத்து (Gimmick).  இப்போதைய ஷமிதாப் பால்கியின் கேலிக் கூத்தின் உச்சம்.  இதை விட மோசமாக அமிதாப் பச்சனை அவமதிக்க முடியாது.  என் வருத்தமும் ஆச்சரியமும் என்னவென்றால், இந்தப் படத்துக்குக் கிடைத்த ஆரவாரமான வரவேற்பு.  மக்களிடையே மொண்ணையான ரசனை மேலோங்கி விட்டதையே இது காட்டுகிறது.  எல்லோரும் டிவி சீரியல் பார்த்துப் பார்த்து அதையே சினிமாவிலும் எதிர்பார்க்கிறார்கள்.  பொதுமக்களின் அசட்டு சீரியல் ரசனைக்கு பால்கியும் ஷமிதாப்-இல் நல்ல தீனி போட்டிருக்கிறார்.  இவ்வளவுக்கும் நான் அமிதாபின் தீவிர விசிறி.  இந்தியாவிலேயே அவர் அளவுக்கு நடிக்க ஆளே இல்லை என்று எழுதியிருக்கிறேன்.  ஆனால் தரமான சினிமா என்ற ஒன்று இருக்கிறதே?  ஷமிதாப்- டிவி சீரியலில் அமிதாபைப் பார்ப்பது போல் இருக்கிறது.  
 
தனுஷும் நானா படேகர், அதுல் குல்கர்னியைப் போன்ற ஒரு வலுவான நடிகர்.  இரண்டு பேரையுமே ஷமிதாப்-இல் கோமாளிகளைப் போல் ஆக்கி விட்டார் பால்கி.  அமிதாபின் உச்ச பட்ச நடிப்புக்கு The Last Lear பார்க்க வேண்டும்.  படம் என்றால் அது படம்.  
 
தென்னிந்தியாவில் ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்களுக்குக் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம், பியர் அபிஷேகம் செய்வது வழக்கம்.  ஷமிதாப் அதற்கு எந்த விதத்திலும் சளைத்ததாக இல்லை.  தமிழர்களின் சினிமா ரசனைக்கு ஏற்கனவே பாலிவுட்டில் ’நல்ல’ பெயர்.  ஷமிதாப் அதை இன்னும் வலுப்படுத்துகிறது.    அமிதாப், இளையராஜா ரசிகரான பால்கி இப்படியே தமிழ் சினிமா ரசனையிலிருந்து இம்மியளவு கூட வெளியே வராமால் ரசிக மனோபாவத்திலேயே இரண்டு பேரையும் ரவுண்டு கட்டி அடித்தால் அவரிடமிருந்து நல்ல படம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.  
 
தமிழ் சினிமாவிலிருந்து நடிகைகள் பாலிவுட் சென்றிருக்கிறார்கள்.  ஆனால் நடிகர்களால் முடியவில்லை.  கமல், ரஜினியாலும் கூட சாத்தியப்படவில்லை.  ஆனால் இசையிலும் இயக்கத்திலும் சாத்தியமாயிற்று.  இந்த நிலையில் தனுஷ் இந்தி சினிமாவில் நுழைவதை இந்தி மற்றும் தமிழ் சினிமா உலகமே சற்று ஆர்வத்துடன் தான் கவனித்தது.  ஆனால் அவருடைய முதல் இந்திப் படம் ராஞ்சனாவும் சரி, இப்போதைய ஷமிதாபும் சரி, அவரை இந்தியில் நிலைக்க வைப்பதற்கான படங்களாக இல்லை.   இது போல் இன்னும் இரண்டு படங்கள் பண்ணலாம்.  அவ்வளவுதான்.  
 
வட இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஏன் தென்னிந்திய ஆண்கள் பிடிக்கவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  மீசை இருப்பதால் ராவணன் வாரிசாகப் பார்க்கிறார்களோ என்னவோ! அப்படிப் பார்த்தால் அது  இனவாதம்தான்.  
 
கேள்வி: பி.கே. படத்தில் ஆமிர்கான் பாத்திரத்தில் கமல் நடிக்கப் போகிறாராமே? சரியாக இருக்குமா?
கோவிந்த் ராஜ்.
 
பதில்: சரியாக இருக்கும்.  ஆனால் ஓடாது.  அந்த அளவுக்குப் படத்தில் வலுவான கதை இல்லை.  அதோடு, விஸ்வரூபத்துக்கு வந்தது போல் பி.கே.வுக்கு மதவாதிகளிடமிருந்து பிரச்சினை வரும். இந்த முறை இந்து மதவாதிகள்.  
 
ஆனால் ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது.  நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இலக்கியத்தின் வாசகனாகவும் பிறகு எழுத்தாளனாகவும் இருந்து வருகிறேன்.  அதேபோல் கமல்ஹாசனுக்கு சினிமா.  ஆனால் நான் பத்துப் பனிரண்டு சிறுகதைகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்தேன்.  மற்றபடி நான் எழுதிப் பிரசுரமாகியிருக்கும் 50 நூல்களும், தொகுக்கப்படக் கூடிய நிலையில் இருக்கும் 20 நூல்களுக்கான கட்டுரைகளும் நான் ஒரிஜினலாக எழுதியவை.  எதுவும் பிற மொழிகளிலிருந்து தழுவியது அல்ல.  ஆனால் சினிமாவையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் கமல் ஏன் இப்படித் தழுவல் கதைகளையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை.  அதிலும் தன் உருவ அமைப்புக்குப் பொருத்தமே இல்லாத படங்களைக் கூட தழுவல் செய்கிறார்.  த்ருஷ்யம் படத்தில் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டராக மோகன் லாலின் உருவம் கச்சிதமாகப் பொருந்தியது.  கமல்ஹாசனோ நல்ல ஆகிருதியான வடநாட்டு சேட்டைப் போல் இருக்கிறார்.  சராசரியான கேபிள் டிவி ஆபரேட்டர் வேடம் எப்படிப் பொருந்தும்?  
 
பிற மொழிப் படத்தைத் தழுவி நம் மொழியில் படம் எடுப்பதில் தவறில்லை.  ஆனால் அது மிகப் பெரிய சாதனை படைத்த படமாக இருக்க வேண்டும்.  உதாரணமாக, முலோ(ங்) ரூஜ்ஷ் (Mouline Rouge) என்ற படத்தின் கதை தமிழ்ச் சூழலுக்கு மிகவும் பொருந்தி வரக் கூடியது.  அது போன்ற படங்களைத் தமிழில் எடுக்கலாம்.  அல்லது, கல்கியின் பொன்னியின் செல்வன், ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி போன்ற நாவல்களை கமல் படமாக எடுக்கலாம்.  ஆனால் வந்தியத் தேவனாக கமல் நடிக்கக் கூடாது.  அதற்கான வயதை அவர் கடந்து விட்டார்.  
 
 
கேள்வி: Transgressive writing எழுத்தின் அடுத்த கட்டம் (அல்லது பரிணாம வளர்ச்சி) எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
 ஆர்.எஸ்.பிரபு, சென்னை- 90. 
 
பதில்: பலவகையான எழுத்துப் பாணிகள் (Genre) உள்ளன என்பதை நாம் அறிவோம்.  அவற்றில் முக்கியமானது எதார்த்தவாதம்.  ராபின்ஸன் க்ரூஸோ என்ற புகழ்பெற்ற வரலாற்று நாவலை எழுதிய Daniel Defoe-வின் மற்றொரு நாவலான A Journal of the Plague Year என்ற நாவல் எதார்த்த பாணி நாவலின் உச்சம் என்று சொல்லலாம்.  1665-66 ஆகிய இரண்டு ஆண்டுகளில் லண்டனில் ஒரு லட்சம் பேர் ப்ளேக் நோயினால் இறந்தனர்.  அப்போதைய லண்டன் மக்கள் தொகை ஏழு லட்சம்.  அது பற்றிய நேர்முக வர்ணனையைப் போன்ற நாவல் அது.    
எதார்த்த வகை எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொருவர் பல்ஸாக்.  எழுபதுகளில் இவருடைய எழுத்தைத் தேடி மிகவும் அலைந்திருக்கிறேன்.  பழுப்புக் காகிதத்தில், தொட்டாலே பொடிந்து விடக் கூடிய பழைய புத்தகமாகக் கூட பல்ஸாக்கைப் படித்திருக்கிறேன்.  1799-இல் பிறந்து 1850-இல் மறைந்த பல்ஸாக்கின் எழுத்து இப்போது இணையத்திலேயே படிக்கக் கிடைக்கிறது. 
தற்போது எழுத வரும் இளைஞர்களில் பலரும் போதிய பயிற்சி இல்லாமலேயே எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் நான் சிபாரிசு செய்வது டேனியல் டீஃபோவின் மேலே குறிப்பிட்ட நாவலும், பல்ஸாக்கின் சிறுகதைகளும் தான்.  எமிலி ஸோலா, தஸ்தயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களிடமும் பல்ஸாக்கின் சாயல்களைப் பார்க்கலாம்.  
ரொமாண்டிசிஸப் பாணிக்கு உதாரணம் அலெக்ஸாந்தர் துய்மா.  (தமிழில் கல்கி).  இவை தவிர நேச்சுரலிஸம், மேஜிகல் ரியலிஸம், baroque என்று பலவிதமான பாணிகள் உண்டு.  நேச்சுரலிஸம் என்பது எதார்த்தவாதத்தின் அடுத்த கட்டம்.  ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிப்பதில் அவர் வாழும் சமூகச் சூழலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்பது நேச்சுரலிஸம்.  இப்படி இலக்கியத்தில் இருக்கும் பலவிதமான பாணிகளில் ஒன்று transgressive writing என்று நாம் நினைத்து விடக் கூடாது. ஏனென்றால், சமூகம் எதையெல்லாம் பாவம் என்றும் குற்றம் என்றும் ஒதுக்கி வைக்கிறதோ, விவாதிப்பதற்குக் கூட அஞ்சுகிறதோ அதையெல்லாம் எழுதுவதே ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்து.  ஒரு சமூகத்தின் ஒழுக்க வரையறைகளே ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தின் போக்கைத் தீர்மானிக்கிறது என்பதால் அதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை.  மேலும், எந்த எழுத்தாளரும் தான் எழுதும் இலக்கியப் பாணியைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.   ஆனால் ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தை யார் வேண்டுமானாலும் எழுதி விட முடியாது.  மார்க்கி தெ ஸாத் தன் எழுத்தில் குரூரம் மற்றும் சித்ரவதையின் அழகியலை உருவாக்கினார்.  அதன் பொருட்டு அவருடைய 74 ஆண்டு வாழ்க்கையில் 32 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.  அந்த 32-இல் 13 ஆண்டுகள் மனநோய் விடுதியில் அடைக்கப்பட்டார்.  ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்து ஏன் ஒரு இலக்கியப் பாணி அல்ல என்பதற்கு மார்க்கி தெ ஸாத்-இன் எழுத்தும் வாழ்க்கையும் ஒரு உதாரணம். 
வில்லியம் பர்ரோஸ் ஒரு drug addict-ஆக வாழ்ந்து அந்த அனுபவங்களை எழுதியவர்.  கேத்தி ஆக்கர் தன் உடல் மற்றும் வாழ்க்கை இரண்டையும் பெரும் பாலியல் ஆட்ட வெளியாக மாற்றி, அந்த அனுபவங்களை எழுதினார்.  ட்ரான்ஸ்க்ரெஸிவ் எழுத்தில் மற்றொரு மிக முக்கியமான பெயர் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962).  இவர் காலத்தில் வாழ்ந்த சக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையெல்லாம் விட ஏராளமாக எழுதினார் என்றாலும் உயிரோடு இருந்த போது யாரும் இவரை அங்கீகரிக்கவில்லை; சரியாக விவாதிக்கவும் இல்லை.  இவ்வளவுக்கும் உலகிலேயே அதிக அளவில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் ஃப்ரான்ஸ்.  ஒரு பாப் பாடகரைப் போல் உலகம் முழுவதும் அறியப்பட்ட எக்ஸிஸ்டென்ஷியலிச சூப்பர் ஸ்டாரான ஜான் பால் சார்த்தர் கூட ஜார்ஜ் பத்தாயை மட்டமாகவும் கிண்டலாகவும்தான் குறிப்பிட்டார்.  ”பத்தாய் ஒரு தத்துவவாதி அல்ல; அவர் ஒரு mystic.  இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்”  என்பது சார்த்தரின் நிலைப்பாடு.  இது கிட்டத்தட்ட மார்க்சீயவாதிகளின் நிலையை ஒத்தது.  ஆனால் பத்தாய் இதை ஸ்தாபன ரீதியான சித்தாந்தம் (Status quo) என்று ஒதுக்கித் தள்ளினார்.   சார்த்தருக்கும் பத்தாய்க்கும் நடந்த விவாதங்கள் Excremental Vs Existential என்று பேசப்பட்டது.  எக்ஸ்க்ரமெண்ட் என்றால் உடலின் கழிவு.  அதாவது, மலம்.  என்னுடைய நாவலை சுஜாதா மலம் என்று வர்ணித்ததை இங்கே நினைவு கூரவும்.  அவர் ஒருவர் மட்டும் அல்ல.  ஜெயமோகனின் அத்யந்த நண்பர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் ”ஜெயமோகனின் எழுத்து ஒரு வீட்டின் பூஜை அறையைப் போன்றது; உங்கள் எழுத்து கக்கூஸ்.  இரண்டுமே ஒரு வீட்டுக்குத் தேவைதான்” என்றார்.  இணைய தளத்தில் தாதாவாக உலா வரும் ஒருவரும் இதே வார்த்தைகளில் என் எழுத்தை வர்ணித்திருக்கிறார்.  இதையெல்லாம் படிக்கும் போது எனக்குக் கோபம் வருவதில்லை.  ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயையே ஜான் பால் சார்த்தர் இப்படித்தான் சொல்லியிருக்கிறார். 
ஆனால் காலத்தின் விசித்திரம் என்னவென்றால், சார்த்தரின் தத்துவ, அரசியல் கோட்பாடுகள் யாவும் அவர் காலத்திலேயே காலாவதி ஆகி விட்டன.  அதே சமயம் மலம் என்று வர்ணிக்கப்பட்ட ஜார்ஜ் பத்தாய் அவரது மரணத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார்.  ”கொண்டாடப்பட்டார்” என்ற வார்த்தை கூட தவறு.  இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா போன்றவர்களின் தத்துவத்துக்கு அடித்தளமாக அமைந்தவர் ஜார்ஜ் பத்தாய்.  ஃபூக்கோ, தெரிதா (Jacques Derrida) மட்டும் அல்லாமல் ரொலான் பார்த், ஜான் பொத்ரியார் (Jean Baudrillard), ஜாக் லக்கான் (Jacques Lacan), ஜூலியா கிறிஸ்தவா போன்ற பல அமைப்பியல்வாதிகளின்  சிந்தனையில் அதிக தாக்கம் செலுத்தியவரும் அவரே.  
ஜார்ஜ் பத்தாய் அவருடைய காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவருடைய சிந்தனை, எழுத்து எல்லாமே அப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. உதாரணமாகச் சொன்னால், அவர் பச்சையான போர்னோ மொழியில் கதைகளை எழுதினார்.  அதற்கு அப்போது போர்னோ எழுத்து என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கொடுக்கப்படவில்லை.  1928-இல் அவருடைய ”கண்ணின் கதை” என்ற நாவல் Lord Auch என்ற பெயரில் வெளிவந்தது.  பல ஆண்டுகளுக்கு அந்தப் பெயரில் எழுதியது யார் என்றே தெரியாமல் இருந்தது.  Auch என்ற வார்த்தை aux chiottes  என்ற பேச்சு வழக்கின் சுருக்கம்.  கிட்டத்தட்ட அதன் பொருள், நீ கக்கூஸுக்குத்தான் லாயக்கு.  ஆக, Lord Auch என்பதை கக்கூஸ் நாயகன் என்று மொழிபெயர்க்கலாம்.  போர்னோ மொழியில் எழுதப்பட்ட ”கண்ணின் கதை” ஒரு போர்னோ நாவலாகவே கருதப்பட்ட நிலையில் அந்த நாவலைப் பற்றி 1962-இல் ரொலான் பார்த் Metaphor of the Eye என்ற கட்டுரையை பத்தாயின் பத்திரிகையான Critique-இலேயே எழுதினார்.  அந்தக் கட்டுரைதான் முதல் முதலாக ”கண்ணின் கதை” என்பது போர்னோ நாவல் அல்ல; தத்துவார்த்தமாக விரியும் பல அர்த்தத் தளங்களைக் கொண்ட நாவல் என்பதை நிலைநாட்டியது.  அந்தக் கட்டுரையை ரொலான் பார்த் எழுதிய போது ஜார்ஜ் பத்தாய் உயிரோடு இல்லை என்ற முக்கியமான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல; பத்தாயின் மற்றொரு நாவலான My Mother  அவரது மரணத்துக்குப் பிறகே பிரசுரமாயிற்று.  ஈடிபஸ் காம்ப்ளக்ஸை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட நாவல் அது.  பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று.  இந்த நாவல் எப்படி இருக்கும் என்பதை இங்கே நான் விவரிப்பது கூட சாத்தியம் இல்லை.  ஆனால் பத்தாய் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுவது எப்படியென்றால், 1935-இல் அவர் எழுதியதெல்லாம் 1939-இலிருந்து ஐரோப்பிய நகரங்களில் நிகழத் துவங்கியது.  பாலியலும் மரணமும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொள்ளும் தத்துவார்த்த முரண் பற்றிய நாவல் அது. 
1936-இல் பத்தாய் Acephale என்ற ரகசிய வாசகர் வட்டத்தைத் துவக்கினார்.  வட்டத்தின் சார்பில் அதே பெயரில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது.  ஆஸிஃபால் என்ற கிரேக்க வார்த்தைக்கு  ”தலையற்ற” என்று பொருள்.   இதன் உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வட்டம் பற்றிய செய்திகளை வெளியே சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதி.  ஆஸிஃபால் வாசகர் வட்டம் இரண்டாம் உலகப் போர் (1939)  துவங்கிய போது முடிவுக்கு வந்தது.  1936-39 நான்கு ஆண்டுகளில் ஐந்து இதழ்கள் வெளிவந்தன.  முதல் இதழ் எட்டு பக்கங்களைக் கொண்டிருந்தது.  இந்த வட்டத்தில் பல ரகசியமான விதிகள் கடைப்பிடிக்கப் பட்டன. உதாரணமாக, வட்ட உறுப்பினர்கள் யூத எதிர்ப்பாளர்களோடு பழகக் கூடாது; சந்தித்தால் கூட கை குலுக்கக் கூடாது.  தலையை வெட்டி தண்டனை கொடுப்பது சரியே.  ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது 16-ஆம் லூயியின் தலை வெட்டப்பட்டதை வட்டம் ஆதரித்தது.  அதேபோல் வட்டத்தில் தியான வகுப்புகளும் மற்ற தாந்த்ரீக செயல்முறைகளும் நடத்தப்பட்டன.  
ஆக, எப்படிப் பார்த்தாலும் ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்து என்பதை ஒரு இலக்கியப் பாணியாக மட்டுமே யாராலும் எழுதிவிட முடியாது.  என்னுடைய எழுத்தை ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்து என்று ஆங்கில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.  எனக்கும் அப்படியே தோன்றுகிறது.  தமிழ் இலக்கிய உலகில் நான் ஒரு தீண்டத்தகாதவனாகக் கருதப்படுவதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.  உதாரணமாக, என்னுடைய ”காமரூப கதைகள்” என்ற நாவலைப் பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ எதுவும் வந்ததில்லை.  காரணம், பேசுவதற்கே அஞ்சக் கூடிய விஷயத்தை அதில் எழுதியிருக்கிறேன்.  
எது எப்படி இருந்தாலும் பத்தாய் உயிரோடு இருந்த போது அவர் ஒரு legend ஆக வாழ்ந்தார் என்பதை மறுக்க முடியாது.  பத்தாயின் முதல் மனைவி ஸில்வியா ஒரு பிரபலமான நடிகை.  பத்தாயோடு விவாக ரத்து ஆனதும், ஸில்வியா மணந்து கொண்டது ஜாக் லக்கானை!   ஜார்ஜ் பத்தாய் பற்றி எக்கச்சக்கமான கிசுகிசுக்களும் அப்போது உலவிக் கொண்டிருந்தன.  அதில் ரொம்பவும் சுவாரசியமானது:  பதினாறாம் லூயியின் தலையை வெட்டியது நியாயமே என்று சொன்னதால் பத்தாயின் ஆஸிஃபால் உறுப்பினர்கள் தங்களின் தலையை வெட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று பரவிய கிசுகிசு! 
 
 
(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 

 

 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...