???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

யாருக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத விரும்புகிறீர்கள்?- அறம் பொருள் இன்பம்- சாரு பதில்கள் 26

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   13 , 2015  03:47:54 IST


Andhimazhai Image
கேள்வி: ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி தமிழ்நாட்டில் சாத்தியமாகும் காலம் வந்தே தீரவேண்டும் என்பது என் நினைப்பு. உங்கள் கருத்து?
செந்தண்மை, சென்னை 110.
 
பதில்: உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது.  திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆசையும்.  ஆனால் வரும் ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஏனென்றால், ஆம் ஆத்மி போன்ற வட இந்தியக் கட்சிகளுக்குத் தமிழர்கள் ஆதரவு தருவார்கள் என்று சொல்ல முடியாது.  தமிழக வரலாற்றில் காங்கிரஸுக்கு மட்டுமே அந்த சலுகையைக் கொடுத்தார்கள் தமிழர்கள்.  அதுவும் காந்தி, காமராஜ் போன்ற மகத்தான தலைவர்களால் நிகழ்ந்தது.  (மொகலாயர்கள் கூட தென்னிந்தியா பக்கம் வரவில்லை.  வந்திருந்தால் சோழர்களிடம் தோற்றுப் போய் இந்திய வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கும்.)  முதலில் ஆம் ஆத்மி என்ற வார்த்தைகளே இங்கே புரியாது.  மேலும், அவர்களின் தொப்பி வித்தியாசமாகத் தெரிகிறது.  தமிழர் கலாச்சாரத்தில் தொப்பி கிடையாது.  இதையெல்லாம் மீறி ஆம் ஆத்மிக்குத் தமிழ்நாட்டில் காமராஜ், கக்கன் போன்ற தலைவர்கள் இருந்தால் அந்தக் கட்சியை மக்கள் ஆதரிக்கக் கூடும்.  
 
கேள்வி: ஆம் ஆத்மியின் தில்லி வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன? 
கணேஷ் ராம், சென்னை.
 
பதில்:  “இதுவரை நடந்த தேர்தல்களில் மக்கள் எந்தக் கட்சியையும் இது வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதாகத் தோன்றவில்லை. இந்தக் கட்சி வேண்டாம் என்ற வெறுப்பில் ஆளுங்கட்சிக்கு எதிராகவே வாக்களிக்கிறார்கள். அந்த வெறுப்பு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது" என்று சென்ற வாரம் எழுதியிருந்தேன்.  ஆம் ஆத்மியின் தில்லி வெற்றி அதை மீண்டும் நிரூபித்துள்ளது.   தில்லி, ஜனதாக் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த காலம் ஒன்று உண்டு.  இந்தியா முழுவதும் இந்திரா அலை வீசிய போது கூட தில்லி மக்களின் விருப்பத்துக்குரிய கட்சி ஜனதாவாக இருந்தது.   பிறகு அது மாறி காங்கிரஸ் வந்தது.  அதன் பிறகு 2014-இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட தில்லியின் மொத்த தொகுதிகளான ஏழிலும் பாஜகவே வென்றது.   ஏழுக்கு ஏழு.  ஆனால் ஒரே ஆண்டில் - 2015-இல் - மொத்தம் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை மக்கள் ஆம் ஆத்மிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.  எழுபதுக்கு மூன்று தொகுதிகள் பாஜக.  ஏழுக்கு ஏழிலிருந்து அறுபதுக்கு மூன்று என்ற பாஜகவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?  அதுவும் ஒரே ஆண்டில்? ஆனால் இப்படி நடக்கும் என்று நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். பத்து ஆண்டுகளில் குஜராத்தை மிகத் திறமையான முறையில் மாற்றி அமைத்தவர் மோடி.  அதனால்தான் அங்கே அவருக்கு முஸ்லீம்களும் வாக்களித்தனர்.  பிறகு 2014-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மோடிக்கு அமோகமான ஆதரவை அளித்தார்கள்.  காரணம், காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மற்றும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்த வாழ்க்கைத் தரம்.  
 
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த இந்த ஒரு ஆண்டுக் காலத்தில் மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சியா, பாஜக ஆட்சியா என்றே தெரியாத அளவுக்கு மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை.  ஒரே ஆண்டில் என்ன செய்து விட முடியும் என்று மோடியின் ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.  ஆனால் ஏதாவது மாற்றம் நிகழும் என்பதற்கான ஒரு சிறிய ஒளிக்கீற்று கூட தென்படவில்லையே?  இந்த இடத்தில்தான் ராமச்சந்திர குஹாவின் கருத்தை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.  குஹா சொல்வது இதுதான்: ”மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசை விட மாநில அரசுக்குத்தான் வாய்ப்பு அதிகம்.  எனவே இந்தியாவுக்குத் தேவை சிறப்பான மாநில அரசுகளே.”  
 
குடியரசு தினத்தன்று மோடி மூன்று முறை ஆடை மாற்றியதையெல்லாம் மக்கள் ரசிக்கவில்லை.  ஏனென்றால், வாழ்க்கைத் தரம் ஒரு இம்மி அளவு கூட உயரவில்லை.  உயரும் என்பதற்கான அறிகுறியும் இல்லை.  அதே ஊழல்; அதே லஞ்சம்; அதே சாக்கடை; அதே பண வீக்கம்.  
 
எழுபதுக்கு மூன்று என்பது மோடிக்கு இந்தியர்கள் அனைவருமே விடுத்திருக்கும் எச்சரிக்கை மணி.  தில்லித் தேர்தல் தானே என்றெல்லாம் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஒட்டு மொத்த இந்தியர்களின் மனக் குமுறலின் குறியீடுதான் பாஜகவின் இந்த பயங்கரமான தோல்வி.  ஏனென்றால், இதற்கு முன்பு நடந்த தில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற பின்னர் 49 தினங்களில் லோக்பால் மசோதா விஷயத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மக்களின் தீர்ப்பை அவமதித்தைக் கூட மக்கள் இந்தத் தேர்தலில் மன்னித்து விட்டார்கள் என்றால் பாஜக ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்.  நமக்குப் புரிகிறது.  ஆனால் பாஜகவுக்குப் புரியாது.  ஏனென்றால், அதிகாரம் கண்களை மறைத்து விடும்.  
 
மொத்தத்தில், மோடி இந்த தில்லித் தேர்தலில் நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வராவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளே ஒவ்வொரு மாநிலத்திலும் வெல்லும்.  மத்தியில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது.  மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் மத்தியில் அமையும்.  காங்கிரஸ் போட்டியிலேயே இருக்காது.   
 
ஆனால் மோடிக்கு இந்தியர்களின் நிலைமை புரிகிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.  காரணம், அரசு ஊழியர்கள் காலை ஒன்பதே காலுக்கு வர வேண்டும்; மாலை ஐந்தே முக்கால் வரை இருக்க வேண்டும் என்பது அவருடைய கடுமையான உத்தரவு.  நல்லது.  ஜப்பானில் அப்படித்தான் நடக்கிறது.  தாமதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.  ஆனால் இந்தியாவில் போக்குவரத்துத் துறை என்பதே கற்காலத்தை நினைவுபடுத்துவது போல் இருந்தால் யார் நேரத்துக்கு அலுவலகம் வர முடியும்?  வளர்ச்சி அடைந்த நாடுகளில் பஸ் ஒரு பஸ் நிறுத்தத்துக்கு காலை 8.13க்கு வரும் என்றால் ஒரு நொடி கூடத் தாமதம் இல்லாமல் வரும்.  தாமதம் ஆனால் நகரின் ஒட்டு மொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து விடும்.  ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் வந்து கொண்டே இருக்கும்.  மெத்ரோ ரயில்களும் அப்படியே.  ஒரு நொடி கூடத் தாமதம் கிடையாது.  யாரும் காரில் செல்லவே பிரியப்படுவதில்லை.  மோட்டார் சைக்கிள் எல்லாம் இளைஞர்கள் ஜாலியாகப் பயன்படுத்தும் வாகனம்.  ஆனால் இந்தியாவில் ஒரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலே இரண்டு மணியிலிருந்து ஐந்து மணி நேரம் தாமதமாக வருகிறது.   ஒரு மணி நேரத் தாமதம் என்பதெல்லாம் இங்கே வெகு சகஜம்.  நகரப் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் பஸ் பயணம் என்பது நரகத்தின் மொத்த வடிவம்.  மின்சார ரயிலும் அப்படியே.  மாநகரப் பேருந்துகளைப் பார்க்கும் போது ஹிட்லரின் நாஜி ராணுவத்தினர் யூதர்களை சித்ரவதை முகாம்களுக்கு ஏற்றிச் செல்லும் ரயில் பெட்டிகள்தான் ஞாபகம் வருகின்றன.  50 பேர் செல்லக் கூடிய பெட்டியில் 500 உயிருள்ள உடல்கள் திணிக்கப்படும்.  சரி, ஆட்டோவில் செல்லலாம் என்றால் சாலைகள் இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அசோக சக்ரவர்த்தியும் அதற்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்களும் போட்ட சாலைகள்தான் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றன.  இதிலெல்லாம் ஒரு மாற்றம் கொண்டு வராமல் ஒரு குமாஸ்தாவை, ”நீ ஒன்பதே காலுக்கு வராவிட்டால் ஒரு நாள் சம்பளத்தைப் பிடிப்பேன்” என்று மிரட்டினால் என்ன ஆகும்?  இதை அந்த குமாஸ்தாவிடம் சொல்பவர் யார் தெரியுமா?  அரசாங்கக் காரில் அரசாங்க டிரைவர் வைத்துக் கொண்டு அலுவலகம் செல்லும் அதிகாரி! 
 
நாட்டின் அடிப்படையான பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளாமல் மிக மேலோட்டமாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.  இந்தியா என்ற ஒட்டு மொத்த தேசத்தை நிர்வகிப்பது ஒரு மாநிலத்தை நிர்வகிப்பது போல் அல்ல என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.    
 
தமிழ் தவிர வேறு ஏதேனும் மொழிகள் அறிவீர்களா?
ஆர்.எஸ்.பிரபு, சென்னை- 90.
 
அறிவேன்.  ஓரளவுக்கு ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடிகிறது.  ஆனாலும் பாருங்கள், ஒரு நண்பருடன் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த போது காற்றுக்கு ”யேர்” என்றேன். அவருக்குப் புரியவில்லை.  ஸ்பெல் பண்ண முடியுமா என்றார்.  ஏ, ஐ, ஆர் என்றேன்.  ஓ, அது யேர் இல்லை, ஏர் என்றார்.  ஏனென்றால், தமிழில் யே, ஏ (யேசு, ஏசு) என்ற இரண்டு எழுத்துக்கும் அதிக வித்தியாசம்  இல்லை.  மூன்றாந்தரமான பள்ளிகளில் படித்ததால் ஆங்கிலம் இன்னமும் சரியாகப் பேசவோ எழுதவோ வர மாட்டேன் என்கிறது.   
சம்ஸ்கிருதம் ஓரளவு படிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.   இந்தி பேசவும் படிக்கவும் தெரியும்.  எஸ்பந்யோல், ஃப்ரெஞ்ச் ஓரளவுக்குப் படிக்க மட்டும்.  தெலுங்கும் மலையாளமும் பேசினால் நம்மை இவர்கள் திட்டவில்லை, வேறு ஏதோ சொல்கிறார்கள் என்ற அளவுக்குப் புரியும்.  சமீபத்தில் ஒரு தெலுங்கு நண்பர் வீட்டில் தங்கியிருந்த போது நாள் பூராவும் சுந்தரத் தெலுங்கைக் கேட்க முடிந்தது.  பச்சைத் தமிழச்சியான என் அம்மா செய்த சதியால் என் நைனாவின் தாய் மொழியான தெலுங்கைக் கற்றுக் கொள்ள முடியாமல் போனது.   
சில ஆண்டுகளுக்கு முன்பு அரபியை எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொண்டேன்.  இப்போது சுத்தமாக மறந்து விட்டது.  பொதுவாக, என் மூளையில் மொழியைக் கற்றுக் கொள்ளும் ஒரு நுண்ணிய பகுதி வேலை செய்ய மறுக்கிறது.  என் நண்பர்களில் சிலர் பத்து மொழிகளில் எழுதவும் பேசவும் செய்கிறார்கள்.  பயமாக இருக்கிறது.  ஆனாலும் என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஒரு ஆத்மா கிடைக்கவில்லை.  அதுதான் சோகம்.  
 
 
கேள்வி: நீங்கள் அஞ்சலிக் கட்டுரை எழுத விரும்பும் நபர் யார்?
குமார் ஜி, குவைத்.
 
பதில்: ராஸ லீலா, புதிய எக்ஸைல் போன்ற மகத்தான நாவல்களை எழுதியவர். 
 
கேள்வி: நடைப் பயிற்சி சென்று வந்த நான் கொஞ்ச நாளாக ஓட ஆரம்பித்தேன். கால் முட்டி வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஓட்டப் பயிற்சி  மேற்கொள்வதா? நிறுத்தி விடுவதா?
 
சிவராம், சென்னை.
 
பதில்: என்னை மருத்துவர் என்று நினைத்து விட்டீர்களா என்ன?  இருந்தாலும் பாட்டி வைத்தியமாக ஒன்று சொல்கிறேன்.  தற்சமயத்துக்கு ஓட்டத்தை நிறுத்தி விட்டு நடைப் பயிற்சி மட்டும் மேற்கொள்ளுங்கள்.  மொடக்கத்தான் கீரையை வெந்நீரில் கொதிக்க விட்டு தினமும் குடியுங்கள்.  அதை தோசையிலும் கலந்து உண்ணலாம்.  மொடக்கத்தானைத் தொடர்ந்து உட்கொண்டால் மூட்டு வலி சரியாகும்.  மேலும், மூட்டு வலி வராமல் தடுப்பதற்கு சில எளிய வழிகள் உள்ளன.  உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.  எடை அதிகம் இருந்தாலும் மூட்டு வலி வரும்.  உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.  வாரம் இரண்டு முறை, முடியாவிட்டால் ஒரு முறை எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள்.  ஆண்கள் - புதன் கிழமை, சனிக்கிழமை, பெண்கள் -  செவ்வாய், வெள்ளிகளில் எண்ணெய்க் குளி செய்வது நலம்.   செக்கில் ஆட்டிய நல்லண்ணெய்தான் சிறந்தது. எண்ணெயில் இரண்டு வெந்தயம், இரண்டு மிளகு, ஒரு வெற்றிலையைச் சேர்த்து சூடு பண்ணி, பிறகு ஆற வைத்து,  வெதுவெதுப்பான நிலையை அடைந்ததும் உச்சந்தலையிலிருந்து துவங்கி உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறியதும் வெந்நீரில் சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.  எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு பகலில் தூங்கக் கூடாது. கரமைதுனம், உடலுறவு, மது ஆகியவை கூடாது.  
 
பணமும் நேரமும் இருந்தால் ஆயுர்வேத சிகிச்சை மையங்களுக்குச் சென்று அப்யங்கம் செய்து கொள்ளுங்கள்.  மாதம் இரண்டு முறை செய்யலாம்.  ஆயுர்வேதத்தில் ஜானுதாரா என்ற ஒரு சிகிச்சை முறை உள்ளது.  அது மூட்டுவலிக்கு நல்லது.  ஆயுர்வேத நிலையங்களில் கிடைக்கும் மூட்டு வலித் தைலங்களும் நலம் பயக்கும்.  
 
பரிசுக்குரிய கேள்வி: குமார், குவைத்.  
 
 
(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 
 
 
 
 
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...