???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருமணம், அவசர மருத்துவம் தொடர்பாக மட்டுமே செல்ல அனுமதி 0 தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 6 பேர் பலி 0 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹ 500 கோடி ரிலையன்ஸ் நிதி 0 ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஒத்தி வைப்பு 0 உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு 0 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 37 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள்: மத்திய அரசு உத்தரவு 0 கொரோனா பாதிப்பு: ஜெர்மனி அமைச்சர் தற்கொலை 0 நிவாரணம் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை 0 சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து ஹோட்டலில் தங்கிய இளைஞர் கைது 0 வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 2 தனிக் குழுக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு! 0 இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள் 0 வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 96,000 பேர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

என்னை அறிந்தால் - என் வாழ்க்கை கதை : அறம் பொருள் இன்பம் - சாரு பதில்கள் -25

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   06 , 2015  05:41:55 IST


Andhimazhai Image

கேள்வி: என்னை அறிந்தால் பார்த்தீர்களா?  கௌதம் வாசுதேவ் மேனன் உங்கள் நண்பர் என்பதால் படத்துக்கு விமர்சனம் எதிர்பார்க்கலாமா?


எஸ். சுந்தர், கோயமுத்தூர்.

பதில்: வரும் ஆறு மாதங்களில் எத்தனை புத்தகங்கள் படிக்க முடியுமோ அத்தனை புத்தகங்களை முடிக்க வேண்டும் என்ற வெறியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  வெளியுலகத் தொடர்பே இல்லை.  தற்சமயம் படித்துக் கொண்டிருக்கும் நூல் சாமந்த் சுப்ரமணியன் எழுதிய Following Fish என்ற அருமையான புத்தகம்.  இந்த ஆசிரியரை அறிமுகப்படுத்தியவர் கிழக்கு பத்ரி சேஷாத்ரி.   இந்த நிலையில் புதன்கிழமை மதியம் ஃபோன் செய்த கணேஷ் அன்பு என்னை அறிந்தால் படம் முதல் காட்சி போகலாமா என்று கேட்டார்.  அப்போதுதான் அந்தப் படம் வெளியாகும் விஷயமே தெரியும்.  ஆஹா என்றேன்.  நண்பர் கௌதம் என்னை மன்னிக்க வேண்டும்.  கொஞ்சம் அவநம்பிக்கையோடுதான் சென்றேன்.  காரணம், நீ தானா என் பொன் வசந்தம் மற்றும் அஜித்.  சமீபத்தில் அஜித் நடித்து வெளிவந்த நல்ல படம் என்று எதுவும் என் ஞாபகத்தில் இல்லை.  வரலாறு தான் நான் பார்த்த கடைசியான நல்ல அஜித் படம்.
எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன்.  காரணம் என்னவென்றால், அவருடைய நடுநிசி நாய்கள், நீ தானே என் பொன் வசந்தம் என்ற படங்களைக் கடுமையாக நான் விமர்சித்து இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்னோடு பழகினார்.  இது இந்தக் காலத்தில் மிகவும் அரிதான விஷயம்.  ஏனென்றால், கருத்துச் சுதந்திரம் பற்றி சதா பேசும் எழுத்தாளர்களே விமர்சனத்தைத் தாங்காமல் என்னைத் தங்களின் ஜென்ம விரோதியாகப் பார்க்கும் போது சினிமா நண்பர்களைச் சொல்லி என்ன பயன்?  அப்படிப்பட்ட சூழலில் எந்த நிபந்தனையும் இல்லாமல் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவர் கௌதம்.  நான் வெளிப்படையாகப் பேசுபவன், மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வேறு ஒன்றைப் பேசாதவன், முகத்துக்கு நேராகவே விமர்சனத்தைச் சொல்லி விடுபவன் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.  அதனால் என்னை அறிந்தால் எப்படி இருந்தாலும் உள்ளபடியே எழுதுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்த எண்ணத்தோடுதான் படத்துக்குப் போனேன்.  முதல் சில நிமிடங்களிலேயே தெரிந்து விட்டது, இது ஒரு அட்டகாசமான ஜனரஞ்சகப் படம் என்று.  வேட்டையாடு விளையாடு, பச்சைக் கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா வரிசையில் வைக்கக் கூடிய படம் உன்னை அறிந்தால்.  ரசித்துப் பார்த்தேன்.  படத்தில் ஒருசில குறைகள் வெளிப்படையாகவே தெரிந்தன.  தன் காதலியைக் கொடூரமாகக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியை அவளுடைய ஆறு வயதுக் குழந்தையிடம் சொல்லும் போது அஜீத்தின் முகம் ஏதோ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் போல் தெரிகிறது.  இதை கௌதம் கவனித்திருக்க வேண்டும்.  மற்றபடி இது அஜீத்துக்குப் பெயர் சொல்லும் படம்.
அனுஷ்கா என்ற பெண் அநியாயத்துக்கு வெய்ட் போட்டு விட்டார்.  பெரும் உறுத்தலாகத் தெரிகிறது.  அருண் விஜயின் நடிப்பு வாழ்க்கையில் என்னை அறிந்தால் ஒரு திருப்பு முனை.  இனிமேல்தான் அவருடைய பொற்காலம் ஆரம்பம்.  கடைசியில் க்ளைமாக்ஸ் சண்டையை 15 நிமிடம் வெட்ட வேண்டும்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜனரஞ்சகமான படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.
இன்னொரு முக்கியமான விஷயம். படத்தில் வரும் ஆள் கடத்தல், அடிதடி போன்ற சம்பவங்களைத் தவிர்த்து விட்டால் என்னை அறிந்தால் என் வாழ்க்கையின் கதை.  என் வாழ்வில் நான் பேசிய வசனங்கள். (மெடிகல் ஷாப்புக்குத்தான் அடிக்கடி போக வேண்டியிருக்கும்.)  என் வாழ்க்கை இந்த அளவுக்கு கௌதமைப்  பாதித்திருப்பதை அறிந்து பரவசம் கொண்டேன்.  

கேள்வி: ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போயிருப்பீர்கள். இந்த முறை அங்கே எந்தக் கட்சிக்கு ரங்கநாதர் அருள் பாலிப்பார்?
ஷங்கர். ஜி.

பதில்: ரங்கநாதரை விட்டு விடுங்கள், பாவம்.  ஓ.பி.எஸ். முதல்வர் ஆனதிலிருந்து தமிழ்நாடு கோமாவில் இருக்கிறது.  இருந்தாலும் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெல்வதே மரபு.  அந்த மரபுப்படி அதிமுகவே வெல்லலாம்.  ஆனால் பொதுத் தேர்தலில் மக்கள் ஆட்சியை திமுகவிடம் கொடுத்து விடுவார்களோ என்று தோன்றுகிறது.  இதுவரை நடந்த பொதுத் தேர்தல்களில் மக்கள் எந்தக் கட்சியையும் இது வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதாகத் தோன்றவில்லை.  இந்தக் கட்சி வேண்டாம் என்ற வெறுப்பில் ஆளுங்கட்சிக்கு எதிராகவே வாக்களிக்கிறார்கள்.  அந்த வெறுப்பு எதிர்க்கட்சிக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.  இப்போது அதிமுக மந்திரிகளும் முதல் மந்திரியும் அடுத்த முறை திமுக பதவியில் வருவதற்காகக் கடுமையான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.  திமுக எதுவுமே செய்ய வேண்டாம்.  அவர்களை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு அதிமுகவினுடையது.  
   
 
கேள்வி: நிறைய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனையைக் கூறுங்கள்.
பரமேஸ்வரன்,
சிங்கப்பூர்.

 
பதில்: இதற்கெல்லாம் வழிமுறைகள், ஆலோசனைகள் எதுவும் கிடையாது பரமேஸ்வரன்.  நட்பு என்பது நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்.  சுரண்டல் இல்லாததாக இருக்க வேண்டும்.  நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், சலித்து சாப்பிடலாம் என்பதாக இருக்கக் கூடாது.  பரஸ்பர நம்பிக்கை வேண்டும்.  நம் கருத்தை நண்பர் மேல் திணிக்கக் கூடாது.  இப்படியெல்லாம் இருந்தால் நட்பு நம்மைத் தேடி வரும்.  ஆனால் கூடா நட்பு கூடாது.  எது கூடா நட்பு என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?  அனுபவம்தான் பாடம்.
 
கேள்வி: எழுத்தாளருக்கு பயணம் என்பது எவ்வளவு முக்கியமானது? உங்களின் பயண  அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.
வெ. பூபதி
கோவை.


பதில்: எழுத்தாளர்களுக்கு மட்டும் அல்ல; மனிதராகப் பிறந்த அனைவருக்குமே பயணம்தான் மிக முக்கியமான அடிப்படை நுண்ணுணர்வையும் ஞானத்தையும் அளிக்க வல்லது.  புத்தகங்களால் அறிந்து கொள்ள முடியாதவற்றையும் பயணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.  என்னுடைய ராஸ லீலா, புதிய எக்ஸைல் இரண்டையும் படியுங்கள், புரியும்.

கேள்வி: இந்திய வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள என்னென்ன புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்கள்?
ஆர். சீனிவாசன், அண்ணா நகர், சென்னை.

பதில்: முக்கியமான வரலாற்று ஆசிரியர்கள்: Irfan Habib,  ரணஜீத் குஹா தொகுத்த Subaltern Studies
தொகுதிகள் அனைத்தும்.  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ராமச்சந்திர குஹா, வில்லியம் டால்ரிம்பிள்.


கேள்வி: பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21 என்பது அரசின் கொள்கை.  உங்கள் கருத்து என்ன?
செ. திருஞானசம்பந்தம், தஞ்சாவூர்.

பதில்: இப்போதெல்லாம் பெண்களுக்கு 28 வயதுக்கு மேல்தான் திருமணம் ஆகிறது.  ஆண்களுக்கு 34-க்கு மேல்.  என்னுடைய ஒரே கவலை எல்லாம் அதுவரை இவர்களின் செக்ஸ் தேவைக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான்.  இதில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வேறு எக்கச்சக்கமான வித்தியாசம் இருக்கிறது.  என்னைக் கேட்டால், பெண்களின் திருமண வயது 17 என்றும், ஆண்களுக்கு 20 என்றும் குறைக்கலாம்.


கேள்வி: இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இருக்கும் எழுத்தாளர்களின் நிலைமை எப்படி இருக்கும்?


எஸ். சொர்ணவல்லி, திருவல்லிக்கேணி.

பதில்: சி.சு. செல்லப்பா, ஜி. நாகராஜன், புதுமைப்பித்தன், தருமு சிவராமு போன்றவர்களை விட இப்போதைய எழுத்தாளர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.  எனவே 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் நல்ல நிலையில் இருப்பார்கள்.  ஆனால் ஒரே ஒரு  சந்தேகம் எழுகிறது. முன்பு இருந்த தார்மீகம், அறம் சார்ந்த நம்பிக்கைகள் இருக்குமா?  லோக்கல் அதிகாரி மிரட்டியதுமே ”ஐயோ, நான் எழுத்தாளனே அல்ல; ஆளை விடுங்கள்” என்று பதறி ஓடும் எழுத்தாளர்களை அல்லவா நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்?
 
கேள்வி: பிரபல எழுத்தாளர்களில் பலர் சினிமாவில் எழுதி வளம் அடைகிறார்கள்.  நீங்கள் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லையே, ஏன்?
கே. கார்த்திக், மதுரை.

பதில்:  இந்தக் கேள்வியைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன்.  தமிழ்நாடு எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில்லை என்று பல காலமாக புலம்பிக் கொண்டிருக்கிறேன்.  அதன் விளைவுதான் எழுத்தாளர்கள் சினிமாவில் எழுதுவது.  ஒரு எழுத்தாளன் என்றால் எப்படி இருக்க வேண்டும்?  இப்போது புதிய எக்ஸைல் என்ற நாவலை எழுதி முடித்தேனா?  இன்னும் இரண்டு வருட காலத்துக்கு என் முகவரியே யாருக்கும் தெரியக் கூடாது.  பப்ளிஷரும் மனைவியும் மட்டுமே விதி விலக்கு.  நான் பாட்டுக்கு தென்னமெரிக்க நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்.  அதற்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு ஒரு வருகை.  சில பரபரப்பான பேட்டிகள்.  பிறகு கிரீஸுக்குப் பக்கத்தில் உள்ள க்ரீட் தீவுக்குப் போய் இரண்டு ஆண்டுகள் நாவல் எழுதி அதைப் பதிப்பகத்திடம் கொடுத்து விட்டு ஓய்வாக தமிழ்நாடு திரும்பலாம்.  கொஞ்ச நாள் இப்படிக் கேள்வி பதில் எழுதலாம்.
இப்படித்தான் உலகில் உள்ள ஒவ்வொரு எழுத்தாளரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஓரான் பாமுக்கோ, பாவ்லோ கொய்லோவோ எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? ஆனால் தமிழ்நாட்டில் பிரபலமான எழுத்தாளரின் புத்தகமே ரெண்டாயிரமும் மூவாயிரமும் தான் விற்பதால் கிடைக்கும் ராயல்டி தொகை மொபைல் ஃபோனை மாதாமாதம் ரீசார்ஜ் செய்து கொள்ளத்தான் உதவுகிறது.
சமீபத்தில் நான் சென்னை புத்தக விழாவில் பத்து ஐம்பது புத்தகங்கள் வாங்கினேன்.  நண்பர்கள் வாங்கிக் கொடுத்தார்கள்.  நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை.  ஆனால் என் வீட்டில் புதிய புத்தகங்களை வைக்க ஒரு இஞ்ச் கூட இடம் இல்லை.  என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவு செய்தேன்.  என்னிடம் உள்ள பழைய புத்தகங்களை என் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு கொடுத்து விட்டேன்.
எத்தனையோ விலை மதிக்க முடியாத புத்தகங்கள்.  லூ ஷுன் என்ற மிகப் புகழ் பெற்ற சீன எழுத்தாளர்.  அவருடைய கதைத் தொகுதிகள் நான்கு.  1980-இல் 800 ரூபாய்க்கு வாங்கினேன்.  அப்போதைய என் மாத ஊதியம் 600 ரூ.  கடன் வாங்கித்தான் வாங்கினேன்.  அந்த நான்கு தொகுதிகளும் இன்று எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.
அதேபோல் சா. கந்தசாமி எழுதி க்ரியா பதிப்பித்த தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு.  1974-இல் வாங்கினேன்.  விலை எட்டு ரூபாய்.  அதை 40 ஆண்டுகளாக சுமந்து திரிகிறேன்.  இப்போது இந்த நூல் சா. கந்தசாமியிடமும் க்ரியா ராமகிருஷ்ணனிடமுமே இருக்குமா என்று தெரியவில்லை.  ஏன் ”சுமந்து” என்று சொல்கிறேன் என்றால், இது போல் ஆயிரக் கணக்கான புத்தகங்கள்.  இந்த 40 ஆண்டுகளில் 20 வீடுகளும் மூன்று ஊர்களும் (மூன்று மாநிலங்களில்) மாறி விட்டேன்.  அத்தனை இடங்களுக்கும் இந்த ஆயிரக் கணக்கான புத்தகங்களைச் சுமந்தேன்.  இப்போது நண்பர்களிடம் கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஒரு எழுத்தாளன் என்றால் அவனுடைய நூலகம் வைப்பதற்கு என்று தனியாக ஆயிரம் ரெண்டாயிரம் சதுர அடியில் தனி இடம் தேவை.  இங்கே அந்த வசதியெல்லாம் சினிமாத் துறையினருக்கு மட்டுமே கிடைக்கிறது.  எழுத்தாளன் பிச்சைக்காரன்.  இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் சினிமாவில் எழுத வேண்டும்.  சினிமாவில் எழுதுவது அந்திமழையில் கேள்வி பதில் எழுதுவது போல் அல்ல.  பாலாவின் நான் கடவுளுக்கு நான் வசனம் எழுதியிருந்தால் பரதேசி படத்துக்கு நான் எழுதிய விமர்சனத்தை எழுதியிருக்க முடியுமா?  எந்திரனுக்கு வசனம் எழுதியிருந்தால் ஐ ஒரு குப்பை என்று எழுத முடியுமா?  வசனம் எழுதுவது என்பது என்னை விற்பதற்குச் சமம்.  என் சுதந்திரம் சில பல லட்சங்களுக்காக அடகு வைக்கக் கூடியதல்ல.  என் பிராணனே எழுத்து தான் என்கிற போது பணம் வெறும் தூசு.

பரிசுக்குரிய கேள்வி கார்த்திக்.
    
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...