???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது 0 இந்தியர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்! 0 காவலர் தேர்வுக்கு இடைக்கால உயர்நீதிமன்றம் தடை 0 மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல் நிகழ்ச்சிகள் ரத்து 0 நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வேதனை 0 எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ 0 மயிரிழையில் உயிர் தப்பினேன்: கமல்ஹாசன் 0 20 பேர் உயிரிழந்த திருப்பூர் விபத்து: பிரதமர் இரங்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய தீங்கு எது? அறம் பொருள் இன்பம் - சாரு பதில்கள் -24

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   30 , 2015  00:31:31 IST

கேள்வி:  
அதிகார வர்க்கத்தில் பிராமணர்களின் எண்ணிக்கை குறைந்ததால்தான் தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டது என்று கருதுகிறீர்களா? ஜே.ஜே. குமார், தோஹா, கத்தர்.   
 
 
பதில்: இதே போன்ற ஒரு கருத்தை சென்ற ஆண்டு ஒரு வங்காள புத்திஜீவி சொன்னதால் அரசாங்கமே அவர் மீது வழக்குத் தொடுத்து விட்டது.  பாதிக்கப்பட்டவர்கள் என் வீட்டு வாசலில் வந்து கோஷம் போட்டால் வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி பண்ணச் சொல்லுவார்.  நாலு அடி நீளமும் எட்டு அடி உயரமும் உள்ள ஸோரோவை அழைத்துக் கொண்டு நான் எங்கே செல்ல முடியும்?  ஸோரோ நான் வளர்க்கும் க்ரேட் டேன் நாய்.  ஸோரோவின் காலத்துக்குப் பிறகு கேளுங்கள்.  சுதந்திரமாக பதில் சொல்கிறேன்.  
 
கேள்வி: எக்ஸைல் நாவலைப் படிக்க பலர் ஆர்வமாக இருந்தனர். முன்பதிவு செய்திருந்த எக்ஸைல் வீட்டுக்கு வந்ததும், அதன் கவரைப் பிரிப்பது, முதலிரவில் மனைவியின் ஆடையைக்  களைவதைப் போல் த்ரில்லாக இருந்ததாக வாசகர்ஒருவர் எழுதியிருந்தார்.
இதைக் கண்டித்து விகடனில் பிரியா தம்பி எழுதியிருப்பது குறித்து உங்கள் கருத்து? அப்படி எழுதுவது பெண்களை இழிவு செய்வதாக அவர் சொல்கிறாரே? தன் மனைவியுடன் உறவு கொள்வது அவ்வளவு பெரிய தப்பா?
பிச்சைக்காரன் , சென்னை.
 
பதில்:  உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பாக என்னைப் பற்றி நாலு வார்த்தை.  நான் ஆணுருவில் வாழும் பெண்.  ஒரு பெண் என்னென்ன செய்வாளோ அத்தனையும் செய்து வாழ்கிறேன்.  ஏழு ஆண்டுகள் குழந்தையும் வளர்த்தேன்.  இன்னமும் சமையல் வேலை செய்யாமல் ஒரு வேளை கூட நான் உணவு உண்டதில்லை.  எந்தப் பெண்ணையும் இதுவரை நான் வேலை வாங்கியதில்லை.  
 
அந்த வாசகர் சொன்னதில் எனக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை.  புத்தகத்தின் கவரைப் பிரிப்பது தன் காதலியின்/மனைவியின் ஆடையை அவிழ்ப்பது போல் இருப்பதாகச் சொன்னால் என்ன?  ஏன், முதலிரவில் பெண்களே முன்வந்து ஆண்களின் ஆடைகளை அவிழ்க்குமாறு செய்ய பெண்களுக்குக் கற்பிக்கலாமே?  யார் பெண்களைத் தடுத்தது?  
 
முதலில் நாம் எதார்த்தத்தைக் காண வேண்டும்.  உலகம் பூராவும் பெண்களைக் கொண்ட விபச்சார விடுதிகள் தான் உள்ளன.  ஆண் விபச்சார விடுதிகள் கிடையாது.  ஏன் என்றால், பெண்களின் மன/உடல் அமைப்பில் ஆண்களைப் போல் எதிர் இனத்தைப் பார்த்தவுடன் காமம் எழுவதில்லை.  அவர்களுக்கு மனதளவிலும் ஒருவனைப் பிடிக்க வேண்டும்.  ஆண்கள் அப்படி இல்லை.  பல ஆண்கள் கழிப்பறைக்குப் போவது போல் உறவு கொண்டு விட்டு வந்து விடுகிறார்கள்; மனைவியிடமே கூட.  இப்படி ஆண் பெண் தேக சம்பந்தத்தில் எத்தனையோ நுணுக்கமான சமாச்சாரங்கள் உள்ளன.  
 
மோட்டார் சைக்கிளில் இன்னமும் ஆண்கள்தானே பெண்களுக்கு டிரைவராக இருக்கிறார்கள்?  அதை மாற்ற வேண்டியதுதானே?  மேலும், ஒரு பெண் ஒரு ஆணை அழைக்கலாம்.  ஆனால் எந்த ஆணாலும் அப்படி அழைக்க முடியாது.  பலாத்காரம் செய்யும் கிரிமினல்களை இங்கே நான் சேர்க்கவில்லை.  ஆண்கள் பட்டினி கிடந்து செத்து இருக்கிறார்கள்.  பெண்களின் பட்டினி ரொம்பக் கம்மி.  பல நூறு, பல ஆயிரம் ஆண்கள் அறுபது வயது வரை காமம் அறியாமல் அழிந்திருக்கிறார்கள்.  அப்படி ஒரு பெண்ணைக் கூட சொல்ல முடியாது.  இப்படி ஆண்களின் பிரச்சினை என்று எத்தனையோ உள்ளது.
 
ஆனால், இன்னமும் இந்தியாவில் எந்தப் பெண்ணும் இரவில் தனியாக நடமாட முடியாது என்ற கொடூரமான நிலை நிலவுவதால் ஆண்களின் பிரச்சினை பற்றி யாருமே பேச அஞ்சுகிறார்கள்.  பிரியா தம்பியின் தொடர் எனக்குப் பிடித்திருந்தது.  அவரைப் போன்றவர்கள்தான் ஆண்களின் பிரச்சினைகளையும் சேர்த்துப் பேச வேண்டும்.  
 
கேள்வி: தான் மட்டும் பேசிக் கொண்டு மற்றவர்களைப் பேச விடாமல் செய்வதுதான் கருத்துச் சுதந்திரம் என்று நினைப்பவர்களைப் பற்றி? 
வெ.பூபதி
கோவை
 
பதில்: அவர்களின் பெயர் கம்யூனிஸ்டு.
 
1)ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
 
பதில்: இப்படியெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு நாவல் பற்றியும் கருத்து சொல்லும் நிலையை ஜெயமோகன் கடந்து எத்தனையோ காலம் ஆகி விட்டது.  ஜெ. இன்று ஒரு ஆளுமை.  தமிழகக் கலாச்சார சூழலை பாதிக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு குரல் அவருடையது.  ஆனால் அவர் செய்து கொள்ளும் சில சமரசங்கள் எனக்கு உவப்பானது அல்ல.   அவர் தன்னுடைய சக எழுத்தாளர்களை விமர்சிக்கிறார்.  சமூக அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கிறார்.  சமீபத்தில் கூட கோட்ஸேவைக் கொண்டாடும் இந்து அமைப்புகளைப் பற்றிக் கடுமையான வார்த்தைகளில் எழுதியிருந்தார்.  எழுத்தில் தீப்பொறி பறந்தது.  விகடனைப் பற்றி அது தேவர் பத்திரிகை என்று எழுதினார்.  இந்து நாளிதழ் சீனக் கம்யூனிஸ்டுகளுக்காக நடத்தப்படுவது; தமிழர்களுக்காக அல்ல என்றார்.  அவர் துணிவு என்னை மிரட்டுகிறது.  ஆனால் தமிழ்நாட்டையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் சினிமா பற்றி வாயையே திறக்க மாட்டேன் என்கிறார்.  ஏன் இந்தப் பாரபட்சம்?  அப்படித் திறக்காவிட்டால் கோணங்கியைப் போல் எதைப் பற்றியும் கருத்து சொல்லாமல் அமைதி காக்க வேண்டும்.  அதுவும் இல்லை.  அவரிடம் மாட்டாத ஒரு ஆள் இல்லை; ஒரு பத்திரிகை இல்லை.  ஆனால் சினிமா மட்டும் செல்லப்பிள்ளை!  காரணம், அவர் அதன் உள்ளே இருக்கிறார்!  
 
எதையுமே பொருட்படுத்தாதவனைத்தான் நான் கலைஞன் என்று சொல்வேன்.  சமீபத்தில் ஒரு தலித் கூட்டத்தில் ஒரு விமர்சகர் வெள்ளை யானையைப் போன்ற ஒரு தலித் நாவல் தமிழில் இல்லை என்று சொல்லிக் கண்ணீர் வடித்துப் பேசினார்.  எனக்குமே கண்ணீர் தான் வந்தது.  
 
ஆனால் எழுத்தாளனின் வேலை அவ்வளவுதானா?  ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் செவ்வனே எழுதுவது மட்டும்தானா?  அக்னி எல்லாவற்றையும் சுட வேண்டும்; சினிமா என்றால் மட்டும் தென்றலாகி விடுமா?  
 
என்னைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்பவன் அக்னி.  வெறும் தொழில்நுட்ப வல்லுனன் அல்ல.
 
2.தமிழ் இலக்கியத்திற்கு நோபல் பரிசு சாத்தியமா?
 
வங்காளம் அல்லது மலையாளத்துக்குக் கிடைக்கலாம்.  ஆனால் முதலிடத்தில் இருப்பது இந்திய ஆங்கில இலக்கியம்.  ஜும்ப்பா லஹரி வாங்கினாலும் ஆச்சரியம் இல்லை.  தமிழுக்குக் கிடைக்க சாத்தியமே இல்லை.  தகுதியான படைப்புகள் இல்லாமல் இல்லை. நோபல் பரிசுக் கமிட்டியில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாது.  அவ்வளவுதான்.  
 
3.தமிழ்நாட்டில் அவனவன் வாழ்வதற்கு நாயாக அலைகிறான்; அவனிடம் போய் இந்த இலக்கியவாதிகள் ஏன்டா இலக்கியம் படிக்கவில்லை என்று கேட்பது நியாயமா?
 
பதில்: யாரும் ஒரு ஆட்டோ ஓட்டுனரையோ, துப்புரவுத் தொழிலாளியையோ, மளிகைக்கடையில் நாள் பூராவும் பொட்டலம் கட்டிக் கொண்டிருக்கும் இளைஞனையோ, பஸ் டிரைவரையோ, வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்களையோ, கட்டிட வேலை செய்யும் தினக்கூலிகளையோ பார்த்து எந்த எழுத்தாளனும் என் புத்தகத்தைப் படியுங்கள் என்று கேட்கவில்லை.  மாதம் ரெண்டு மூணு லட்சம் சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்கள், தினமும் முப்பாதாயிரம் சம்பாதிக்கும் மருத்துவர்கள், வக்கீல்கள்,  கோடிகளில் சம்பாதிக்கும் தொழில் அதிபர்கள், சினிமாக்காரர்கள்,  மற்றும் பத்திரிகைகளில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான புத்திஜீவிகள், எஞ்சினியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் என்று இவர்களைப் பார்த்துத்தான் ஏன் இலக்கியம் படிக்க மாட்டேன் என்கிறீர்கள் தெய்வங்களே என்று கேட்கிறான் தமிழ் எழுத்தாளன். இவர்கள் எல்லாம் படித்தாலே ஒரு எழுத்தாளனின் நாவல் தமிழில் ஒரு லட்சம் பிரதி போகும்.  
 
 
4.சமீபத்தில் ஈர்த்த சம்பவம் அல்லது சந்திப்பு?
-விஜயகுமரன்.(மேற்சொன்ன நான்கு கேள்விகளும்)
 
புத்தக விழாவின் கடைசி நாள் அன்று என் நீண்ட நாள் நண்பனைப் பார்த்தேன்.   வெளிநாட்டில் வாழ்கிறான்.  பார்த்துச் சில ஆண்டுகள் ஆகிறது.  உயிர்மை அரங்கிலிருந்து என்னை அழைத்தான்.  சென்றேன்.  முன்னிரவு எட்டு மணி.  கடும் போதையில் இருந்தான்.  அன்று காலைதான் சென்னை வந்து இறங்கியிருக்கிறான்.  இறங்கியதிலிருந்தே குடி.  குடிப்பது அவரவர் இஷ்டம்.  ஆனால் நிற்கக் கூட முடியாமல் ஒரு பொது இடத்துக்கு வரலாமா?  சரி, அதுவும் அவன் இஷ்டம்.  வந்தவன் என்னை அன்று இரவு இலக்கியம் பேசுவதற்கு அழைத்தான்.   எப்படிப் போவது?  அவன் இருக்கும் நிலை வேறு; என் நிலை வேறு.  என்னவென்று பேசுவது?  
நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றேன்.  வா; சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்றான்.  கட்டாயப்படுத்தினான்.  எனக்கோ தர்மசங்கடமாக இருந்தது.  அவனைப் பார்க்கவும் பேசவும் எத்தனையோ ஆர்வமாக இருந்தேன்.  ஆனால் அவனோ நான் சொல்லும் எதையுமே புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான்.   பத்து நிமிடம் வந்து விட்டுப் போவதில் உனக்கு என்ன ஆகி விடும் என்று பயங்கர அன்புடன் திட்டினான்.  பத்து நிமிடம் பத்து மணி நேரம் ஆகி விடும் என்று எனக்குத் தெரியும்.  நானோ அன்று இரவு அந்திமழைக்கு பதில்கள் எழுதி அனுப்ப வேண்டும்.  இன்னொரு பத்திரிகைக்கும் எழுத வேண்டும்.  இப்படி திடீரென்று வந்து அழைத்தால் எப்படி?  
 
என் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட  முன்கூட்டியே தெரிவிக்காமல் அனுமதி கேட்காமல் யாரையும் சந்தித்தது இல்லை.  ஒருமுறை கூட அப்படி நடந்ததில்லை.  
 
எப்படித் தப்பிக்கலாம் என்று பார்த்தாலும் “என்ன, ஓடிடலாம்னு பார்க்கிறியா, விட மாட்டேன்” என்று ஓங்கி நின்றான் நண்பன்.   அரை மணி நேரம் ஆகியது.  பிறகு கடுமையான குரலில் வர முடியாது என்று சொல்லி விட்டு வந்தேன்.  வருத்தமாக இருந்தது.  
 
சந்திக்காதது அல்ல; அவன் எழுதிய கேள்வி பதில் ஒன்றில் அவன் என்னுடைய முதல் நாவல் தவிர வேறு எதுவும் இலக்கியமாகத் தேறாது எனவும் இன்று தமிழிலேயே கூர்மையாக எழுதுபவர் ஜெயமோகன் ஒருவர் தான் என்றும் எழுதியிருந்தான்.  மிகவும் நல்லது.  ஆனால் சரக்கு அடித்தால் மட்டும் ஏன் இந்த நண்பர்களுக்கு என் நினைவு வந்து தொலைக்கிறது என்பதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது.  
 
 
கேள்வி: தங்களின் முகநூல் பற்றிய பதிவை வலைத்தளத்தில் கண்டேன். 
நிஜமாலுமே சமூகம் சினிமாவால் சீரழிகிறது. தங்கள் கூற்று உண்மைதான். ஆனாலும் இந்த டிஜிட்டல் கால கட்டத்தில் முகநூலை முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருப்பதாக உணர்கிறேன். மேலும் தங்களது பெயரைத் தாங்கிய ஒரு குழுவை முகநூலில் கண்டேன்.  இணையலாமா ? 
ரதி, துபாய்.
 
பதில்:  முகநூலால் எந்தப் பயனும் இல்லை என்று நான் சொல்லவில்லை.  முகநூலில் நாலு வரி எழுதிவிட்டு நான் எழுத்தாளன் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு அலையும் சிறார்கள் பற்றியே கவலை கொண்டு எழுதினேன்.  என்னைக் கண்டபடி அசிங்கமாகத் திட்டிக் கொண்டு ஒரு முகநூல் குழு இருப்பதாகக் கேள்விப் பட்டேன்.  அந்தக் குழுவைப் பற்றியா கேட்கிறீர்கள்?  அதில் இணைந்தால் நிறைய கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொள்ளலாம் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.  உங்களுக்கு அந்த ஆசை இருந்தால் அதில் இணையலாம்; தப்பில்லை.  
 
 
 
கேள்வி: ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய தீங்கு என்று எதைச் சொல்வீர்கள்? ராம், டிஜே, 
சவூதி அரேபியா. 
 
பதில்: I love you. 
 
 
கேள்வி: உமா சங்கர் ஐ.ஏ.எஸ்.?
 
வில்லியம்ஸ், 
தாம்பரம்.
 
பதில்:  அரசு ஊழியர் விதிகளில் ஒருவர் அரசு ஊழியராக இருந்து கொண்டே மதப் பிரச்சாரம் செய்யலாம் என்று இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.  பத்திரிகைகளில் எழுதுவதற்கே அரசாங்கத்திடம் அனுமதி கேட்க வேண்டும்.  ஒன்றுமில்லை.  நீங்கள் அரசு ஊழியராக இருந்தால் 5000 ரூபாய்க்கு ஏதாவது வாங்கினால் அதை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  சரி, அப்படியே பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தால் ஒருவர் ஆறு மணிக்கு மேல் நக்ஸலைட்டுகளின் சார்பாகவும் பிரச்சாரம் செய்யலாமா?   ஆறு மணி வரை தான் நான் ஐஏஎஸ்; அதற்கு மேல் ஐஎஸ் ஐஎஸ் என்று சொல்லிக் கொண்டு ஆள் சேர்க்கலாமா?  
 
ஒருவர் எந்த மதமாக இருந்தாலும் அவர் அதிகாரத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த மத அடையாளத்தை அவர் வெளிப்படுத்திக் கொள்வது சரியல்ல. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் போதிக்க வேண்டிய பொறுப்பில் ஒரு பேராசிரியர் மத அடையாளத்தை அணிந்திருந்தால் அதுவும் சரியானது அல்ல.  பிரதம மந்திரியும் அப்படித்தான் இருக்க வேண்டும்.  நரேந்திர மோடி ஜப்பானியப் பிரதமரிடம் கீதையை அன்பளிப்பாகக் கொடுத்தது தவறு.  கீதை இந்தியர்களின் பொது நூல் அல்ல.  அதில் வெங்காயமும் பூண்டும் மாமிசமும் உண்பவன் கீழானவன், ஈனப் பிறவி என்ற கருத்து ஆணித் தரமாக பல இடங்களில் வருகிறது. 16,17-ஆவது அத்தியாயங்கள் முழுக்கவும் அதுதான்.  16-ஆவது அத்தியாயத்தில் எட்டாவது சூத்திரம் மிகவும் சுவாரசியமானது.  உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை; காமஹைதுகத்தினாலேயே உண்டானது;  அதாவது ஆண் பெண் காமத்திலிருந்தே உண்டானது என்பவர்கள் அசுரர்கள் என்கிறது அந்த சூத்திரம். இப்படிப்பட்ட நூல் எப்படி இந்தியர்களின் பொது நூலாக இருக்க முடியும்?   எனக்குத் தெரிந்து திருக்குறளில் மட்டும்தான் மத வேறுபாடுகள் இல்லை.  ஆனால் அதிலும் ஆணை விட பெண் கீழானவள் என்ற கருத்து பல இடங்களில் வருகிறது.  எனவே இக்காலத்துக்கேற்ற பொது நூல் என்றெல்லாம் எதையும் சொல்ல முடியாது.     
 
 
கேள்வி: காலம், வெளி இவை இரண்டையும் எப்படி உணர்கிறீர்கள் / புரிந்து கொள்கிறீர்கள்?
 
சிவசங்கர்,
சேலம்.
பதில்:  உறக்கத்தில் காலம் வெளி இரண்டையும் மறக்க முடிகிறது; தியானத்திலும் கலவியிலும் இரண்டையும் கடக்க முடிகிறது. பிற வேளைகளில் மனம் வெளி; உடல் காலம்.  
(பரிசுக்குரிய கேள்வி: பிச்சைக்காரன்)  
 
 
(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...