???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரு தமிழனின் பெயராவது லத்தீன் அமெரிக்காவை அடைந்திருக்கிறதா? அறம் பொருள் இன்பம் - சாரு பதில்கள் 21

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   09 , 2015  01:31:24 IST


Andhimazhai Image
 
கேள்வி: இன்று வாசிப்பு என்பது சுத்தமாக அருகிப் போயிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தங்களது பெருமளவு நேரத்தை சமூக வலைத் தளங்களில் செலவிடும் இளைஞர்கள் தாங்கள் படிக்கும் ஒன்றிரண்டு கட்டுரைகளையோ, கதைகளையோகொண்டு தங்களையையும் எழுத்தாளர்களாக எண்ணி எதையாவது கிறுக்கித் தள்ளும் போக்கு இருக்கிறது.  இந்த மாதிரியான மனநிலைக்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்? இளைஞர்களை வாசிப்பின் பக்கம் மீட்டெடுக்க முடியும் என்று இன்னமும் நம்புகிறீர்களா?
 
புனைவன்,
தர்மபுரி.
 
பதில்: எல்லாவற்றையும் மேம்போக்காகவே செய்து விட வேண்டும் என்ற மனோபாவம் இன்று ஒரு மதத்தைப் போல் தமிழர்களிடையே பரவியிருக்கிறது.  மாணவர்களின் கல்வியில் பல புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தால் ஒழிய இந்த மேம்போக்குத்தனம் நம்மை விட்டு அகலாது.  
 
இப்போதைய கல்வித் திட்டத்தை வைத்துக் கொண்டு இளைஞர்களை வாசிப்பின் பக்கம் கொண்டு வர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.   
 
 
 
 
எழுத்தாளர்களே இல்லாத ஒரு நாடு எப்படி இருக்கும்?
V. Karun,
புதுதில்லி 22. 
 
பதில்: தாய்லாந்தைப் போல் இருக்கும்.  அங்கே எழுத்தாளர்களே கிடையாது.  தமிழ்நாட்டை விட வாசிப்புப் பழக்கம் குறைவாக – அநேகமாக வாசிப்புப் பழக்கமே இல்லாத நாடு அது.  ஆனால்
எழுத்தாளர்கள் பலர் இருந்தும் அவர்களை மதிக்காத நாடு என்றால் அது தமிழ்நாடுதான்.   
 
 
கேள்வி: கல்வி சமூக விடுதலையை ஏற்படுத்தும் என்ற வாதமெல்லாம் சரி தான்.  ஆனால் இன்றைய நிலையில் கல்வியை நடுத்தர வர்க்கம் உடல் உழைப்பை வெல்லும் சாவியாகத் தங்களது சந்ததியினருக்குப் புகட்டுவது, பெரும் சமூக ஏற்றத்தாழ்வை வரும் காலத்தில் தோற்றுவிக்கும் இல்லையா? இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?
-சதிஷ்குமார்
 
பதில்: உடல் உழைப்புக்கும் புத்தி உழைப்புக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் குறைந்தால் இந்தக் கேள்வி எழ வாய்ப்பு இல்லை.  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லோருக்கும் கல்வி கிடைத்திருக்கிறது.  அங்கேயும் தொழிலாளர்கள் அடுக்குமாடிக் கட்டிடத்தின் 40-ஆவது மாடிக்கு அந்தரத்தில் அமர்ந்து சுண்ணாம்பு அடிக்கிறார்கள்.  ஆனால் அந்தத் தொழிலாளி எக்காரணம் கொண்டு சாக மாட்டார்.  அவர் அந்த வேலையை ஒரு பாதுகாப்பான லிஃப்டில் அமர்ந்து செய்கிறார்.  ஆனால் இங்கே ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு கயிறு கட்டிய பலகையில் நின்று கொண்டு 20-ஆவது மாடிக்கு சுண்ணாம்பு அடிக்கிறார் பீகார் தொழிலாளி.  அவர் செத்தால் மறுநாள் பேப்பரில் செய்தி வரும்.  அத்தோடு சரி.  மீண்டும் ஒரு பீகார் தொழிலாளி செத்த தொழிலாளியின் இடத்துக்கு வந்து விடுவார்.  விளிம்பு நிலை மக்களின் உயிருக்கு உத்தரவாதமே இல்லாத ஒரு நாடு இந்தியா.  
 
இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வு போல் உலகில் எங்கேனும் இருக்குமா என்று தெரியவில்லை.  இந்த விஷயத்தில் என் ஆசான் ஆப்ரகாம் லிங்கன் தான்.  160 ஆண்டுகளுக்கு முன்பு லிங்கன் சொன்னார்:  மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது.  இப்போது சொல்லுங்கள், நம் வீட்டுப் பணிப்பெண்ணின் குழந்தையும் நம் குழந்தையும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்களா?  
 
கேள்வி: தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரான்ஸும் காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்டுள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் எந்த முரண்பாடு? போலவே சிறந்த இலக்கியமும் சினிமாவும் உருவாக்கப்படும் லத்தின்அமெரிக்க நாடுகளிலும் குற்றம் அதிக அளவில் நடை பெறுகிறது. சிறந்த இலக்கியங்களால் நல்ல சமுகத்தை உருவாக்க முடியும் என்ற வாதத்தை மேற்கண்டவை சந்தேகிக்கவைக்கின்றனவே?   
-சக்தி கணபதி.
 
பதில்: உங்கள் கேள்வியை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்.  இதே கேள்வி எனக்குள் பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருந்தது.  இன்னமும் முழுமையாக விடை காண முடியாமல் இருக்கிறது.  ஃப்ரான்ஸ் காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்டது.  ஆனால் அவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.  இன்று பாரிஸ் நகரில் ஒரு காலத்தில் ஃப்ரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்.  அல்ஜீரியர்கள் மட்டும் அல்ல; பல ஆஃப்ரிக்க நாட்டு மக்களுக்கும் ஃப்ரான்ஸ் புகலிடம் தந்துள்ளது.  இந்தியாவில் இலங்கை அகதிகள் மாட்டுக் கொட்டடியைப் போன்ற இடங்களில் அடைக்கப்பட்டார்கள்.  ஆனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எல்லா நாட்டு அகதிகளும் நல்ல வசதியோடு வாழ்கிறார்கள்.  
 
ஆனால் உங்களுடைய இரண்டாவது கேள்வி இன்னமும் என்னை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான்.  கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியில்தான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ், ஆண்டன் செகாவ் போன்ற மேதைகள் வாழ்ந்தனர்.  கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் எல்லோருக்கும் ரொட்டித் துண்டும் வோட்காவும் கிடைத்தது.  ஆனால் இலக்கியம் வெளியேறி விட்டது.  
 
லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவும் அதி பயங்கரமான வறுமைதான் அங்கே நடக்கும் குற்றச் செயல்களுக்குக் காரணம்.  அதை இலக்கியமும் சினிமாவும் பதிவு செய்து கொண்டிருக்கிறது.  அவ்வளவுதான்.  ஆனால் இலக்கிய வாசிப்பு உடைய லத்தீன் அமெரிக்க சமூகத்திற்கும் இலக்கியமே அறியாத தமிழ் சமூகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அங்கே உள்ள இலக்கியம், சினிமா வாயிலாக நமக்கு எல் சால்வதோர், டொமினிகன் ரிபப்ளிக், பெரூ, மெக்ஸிகோ, பொலிவியா என்று அந்த நாடுகளின் கலாச்சாரமும், அரசியலும், அரசியல் போராட்டங்களும் நமக்குத் தெரிய வருகின்றன.  
 
ஆனால் – இந்த ஆனால் மிக முக்கியமானது – நம்முடைய அண்டை நாடான ஸ்ரீலங்காவில் நடந்த தமிழர் போராட்டம் உலகில் எங்கேயும் தெரியாமல் போனது.  சே குவேராவின் படம் இங்கே சீமானின் டி ஷர்ட்டில் இருக்கிறது.  திருமாவளவனின் கட்சிப் பதாகைகளிலும் பேச்சிலும் இருக்கிறது.  ஆனால் ஒரு தமிழனின் படம் - படத்தை விடுங்கள், பெயராவது லத்தீன் அமெரிக்கனை அடைந்திருக்கிறதா?   சே குவேராவின் பெயர் நமக்குத் தெரிகிறது.  அவர் எழுதிய புத்தகங்கள், கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன.  ஆனால் தமிழின் விடுதலைப் போராளிகளின் பெயர் அங்கே போய்ச் சேராததற்குக் காரணம் என்ன? நம்முடைய தலைவர்களிடம் வரலாறு, மனித குல விடுதலை போன்றவை குறித்த தரிசனம் இல்லை.  இவர்களில் பெரும்பாலோர் வெறும் போர் வீரர்களாக மட்டுமே தேங்கி விட்டார்கள்.  இதற்குக் காரணம், இங்கே வாசிப்புப் பழக்கம் இல்லை.  
 
கூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நண்பர் கார்ஸியா மார்க்கேஸ்.  இங்கே கருணாநிதியின் நண்பர் வைரமுத்து.  வித்தியாசம் தெரிகிறதா?  லத்தீன் அமெரிக்க நாடுகள் வறுமையில் இருந்தாலும், குற்றங்கள் அதிகம் என்றாலும் பாப்லோ நெரூதா அங்கே ஒரு கவிதை வாசித்தால் அவரைக் கேட்க மூவாயிரம் பேர் திரண்டார்கள்.  இங்கே ஒரு சினிமா நடிகனுக்குத்தான் அவ்வளவு கூட்டம் கூடுகிறது.  
 
லத்தீன் அமெரிக்காவின் வறுமை பொருளாதார வறுமை.  ஆனால் தமிழகத்தின் வறுமை கலாச்சார வறுமை. (பொருளாதார வறுமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.) 
ஆனால் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைந்துள்ள ஸ்காண்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழ்ந்தால் என்னால் இலக்கியம் படைக்க முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது.  
 
உங்கள் கேள்வியைப் பற்றி இன்னமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.  
 
 
கேள்வி: இதை என் சொந்தப் பிரச்சினையாகக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். சினிமாவை ரசிக்கும் போது எளிதில் குவியும் கவனம் புத்தகம் படிக்கும்போது மட்டும் குவிய மறுப்பதன் உளவியல் என்ன? புத்தகங்கள் மீது சிறு வயதிலிருந்தே நமக்கு ஏற்படுத்தப்பட்ட செயற்கையான ஒவ்வாமையின் நீட்சியா இது?
 
புனைவன்,
தர்மபுரி.
 
பதில்:   நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்.  எல்லாவற்றுக்கும் பழக்கம்தான் காரணம்.  எனக்கு புத்தகங்களை விட சினிமா பார்க்கும் போதுதான் கவனம் குவிய மறுக்கிறது.  அதிலும் தமிழ் சினிமா என்றால் கவனமே காணாமல் போய் விடுகிறது.  
 
 
கேள்வி: பணம் என்பது வாழ்க்கைக்கு, நமது லட்சியங்களை அடைவதற்குத் தேவை என்ற நிலைமாறி பணத்தை அடைவதே பெரும் லட்சியம் என்ற மனநிலைக்குப் பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். இதற்குக் காரணம் என்ன? இந்த நிலை மாறுமா?
 
வெ.பூபதி,
கோவை.
 
பதில்: சினிமா, தொலைக்காட்சி, கல்வி முறை, இலக்கியம்/நல்ல சினிமா/ நல்ல இசை ஆகியவை பற்றி அறியாத கலாச்சார வறுமை மிகுந்துள்ள ஒரு நாடு தன் ஆன்மாவை இழந்து விட்டது என்றே பொருள்.  அந்த வகையில் இந்தியா தன் ஆன்மாவை எப்போதோ இழந்து விட்டது.  இப்போதெல்லாம் கோவில்களில் கூட்டம் அதிகரித்து இருப்பதற்குக் காரணம் கூட மக்களின் பணத்தாசை தான்.  இந்த நிலை மாற வேண்டுமானால் கல்விக் கூடங்களிலிருந்து துவங்க வேண்டும்.  
 
 
 
கேள்வி: 1.அடுத்தது ஏன் Parasite? ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் இல்லை? யூதாஸ் எப்பொழுது?
2.) தருண் தேஜ்பால் ஏன் புதிய எக்ஸைல் பற்றி வெளியீட்டு விழாவில் பேசவில்லை?
ஸ்ரீராம், சென்னை.
 
பதில்: Parasite இல்லை; என் உரையில் நான் குறிப்பிட்டது Parricide.  இதன் பொருள் தன் தாய் தந்தையரையும், சகோதர சகோதரிகளையும் கொலை செய்யும் செயல்.  அப்படிப்பட்ட ஒருவனைப் பற்றிய நாவல் தான் என்னுடைய அடுத்த நாவலாக இருக்கலாம்.  அதுவும் ஒரு யோசனைதான்.  இன்னும் ஆறு மாதங்கள் படிக்க மட்டுமே செய்வேன்.  அதற்குள் அடுத்த நாவல் எதைப் பற்றியது என்பது உறுதியாகி விடும்.  
 
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்து ஆரம்பிக்காததற்குக் காரணம்: ஏற்கனவே குடியை நிறுத்தி விட்டேன்.  புதிய எக்ஸைல் முக்கால்வாசியும் மரமும் செடி கொடியும் பிராணிகளும்தான்.  முன்பெல்லாம் எனக்கு வரும் பெண்களின் கடிதங்களைப் பிரசுரித்துக் கொண்டிருப்பேன்.  இப்போது ஜெயமோகன் கடிதம்.  இதனால் என் பெயர் கொஞ்சம் கெட்டுப் போய் கிடக்கிறது.  அதை நேர் செய்து விட்டுத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர்.  ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கான களப்பணிகள் யாவும் முடிந்து விட்டன.  
 
யூதாஸை நிச்சயம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முன்பு முடித்து விடுவேன்.  
 
புதிய எக்ஸைல் பற்றி ஜனவரி 5 அன்று மதியம் அமேதிஸ்டில் தருணும் நானும் அராத்துவும் உணவருந்திக் கொண்டிருந்த போது நிறைய பேசினார்.  கூட்டத்தில் அவர் பேசியது எல்லாமே எக்ஸைல் பற்றியதுதான்.  அவர் பேசியது அனைத்துமே எக்ஸைலின் சுருக்கம்தான்.  இந்தியத் தலைநகர் தில்லியில் மூன்று வயதுக் குழந்தைகள் கூட தெருக்களில் பிச்சை எடுப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.  இதுதான் இந்தியாவின் எதார்த்தம்.  இந்த நிலைமையை மாற்றாமல் சந்திரயான், மங்கள்யான் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்.  ஏனென்றால், அமெரிக்காவின் தேவையும் இந்தியாவின் தேவையும் வேறு வேறானவை.  இந்த எதார்த்தத்தைத்தான் இந்திய எழுத்தாளன் எதிர்கொள்ள வேண்டும்.  இதை இந்திய ஆங்கில எழுத்தாளர் யாருமே செய்யவில்லை.  அதனால்தான் நான் பிராந்திய மொழி எழுத்தாளர்களைத் தேடிப் படித்தேன்.  அப்படித்தான் சாரு நிவேதிதாவைக் கண்டு பிடித்தேன்.  Jan Michalski என்ற சர்வதேசப் பரிசுக்கு சாருவின் நாவலை பரிந்துரை செய்தேன்.  
 
தருண் இவ்வளவு சொல்லியும், அவர் என்னைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்று சொல்லிக் கொண்டு திரியும் சில முகநூல் அன்பர்களைப் பற்றி என்ன சொல்ல?  தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளராலும் தருண் தேஜ்பால் அளவுக்கு உயரத்தை அடைந்த ஒரு ஆங்கில எழுத்தாளரை (பத்திரிகையாளரை அல்ல) தன் புத்தக வெளியீட்டுக்கு அழைத்து வர முடியுமா?  தருண் தன்னுடைய செலவில் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்து போனார்.  தங்கியதும் அவர் செலவில்தான்.  இதுதான் அவர் என் எழுத்துக்குக் கொடுக்கும் மரியாதை.  அமேதிஸ்டில் வைத்து அவர் என்னிடம் சொன்ன வார்த்தை இது:  நீ என்ன செய்வாயோ சாரு, மிக விரைவில் எக்ஸைலின் ஆங்கில மொழிபெயர்ப்பை என்னிடம் கொடு.  It’s a wonderful stuff. 
 
கேள்வி: சென்னையில் உங்களுக்குப் பிடித்த உணவகம் எது?
திருமூர்த்தி, சென்னை.
 
பதில்: பல உண்டு.  அதில் முதன்மையானது ஒயிட்ஸ் சாலையில் உள்ள அமேதிஸ்ட்.   அந்த உணவகத்தின் சூழல் எனக்கு மிகவும் பிடித்தமானது.  காலையில் போனால் இரவு 11.30 வரை மடிக் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கலாம்.  படித்துக் கொண்டிருக்கலாம்.  நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கலாம்.  அவ்வப்போது பக்கத்து இருக்கைகளில் தேவலோகத்து ரம்பை, ஊர்வசிகள் வந்து போவார்கள்.  சுற்றி வர மரங்கள்.  ஐரோப்பிய பாணி உணவு.  ஆனால் ஒரே ஒரு குறை.  குடிக்கத் தண்ணீர் கேட்டால் தர மாட்டார்கள்.  50 ரூ, 100 ரூ என்று காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.  இதை மாற்றி அமையுங்கள்; குடிநீர் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று சிப்பந்தியிடம் சொன்னேன்.  அவர் கண்டு கொள்ளவில்லை.  இது சட்டப்படி குற்றம்; பத்திரிகையில் எழுதுவேன் என்றேன்.  எழுதுங்கள் சார் என்று சொல்லி விட்டார்.  
 
சினிமா தியேட்டர்களிலும், உணவகங்களிலும் இப்படி குடிநீர் கொடுக்கவில்லை என்றால் அது சட்ட மீறல்.  எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள எஸ்கேப் சினிமா அரங்குகளில் கூட முன்பெல்லாம் குடிநீர் கிடையாது.  பிறகு எஸ். ராமகிருஷ்ணன் பத்திரிகைகளில் எழுதிய பிறகுதான் அங்கே குடிநீர் வைத்திருக்கிறார்கள்.  (யாருக்கும் தெரியாத ஒரு மறைவிடம் அது; நான் கண்டு பிடித்து விட்டேன்!)   
 
பரிசுக்குரிய கேள்வி: சக்தி கணபதி.
 
 
(சாரு பதில்கள் பகுதி ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும். வாசகர்கள் தங்கள்  கேள்விகளை q2charu@andhimazhai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்) 
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...