![]() |
எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி!Posted : திங்கட்கிழமை, மார்ச் 08 , 2021 15:43:19 IST
எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருச்சி சிவா, "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணமும் உயரும். இதனால் மக்கள் இரண்டு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர். பலமுனை தாக்குதலில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரி தான் இதற்குக் காரணம். குறிப்பாக மத்திய அரசு கொஞ்சமும் கருணை இல்லாமல் வரியை உயர்த்திக் கொண்டிருக்கிறது. விறகு அடுப்பிலிருந்து சிலிண்டருக்கு மாறுங்கள் என்று கூறும் மத்திய அரசு, சமையல் எரிவாயு பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்குத் தரவேண்டும். அத்தியாவசிய பொருட்களைக் கட்டுப்படியான விலையில் மக்களுக்குத் தரவேண்டும், அது தான் நிர்வாகத்திறனின் வெளிப்பாடு. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை” என்றவர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
|
|