???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிங்கத்தின் வரலாற்றை வேட்டைக்காரன் தான் எழுதுகிறான்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   04 , 2018  05:33:25 IST


Andhimazhai Image
காலம் காலமாக ஆழமாக சாதியம்  ஊறிபோயுள்ள சமூகத்தில் சாதிய படுகொலைகள் நமக்கு புதிதல்ல! ஆனால், அதை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்வியுடன் தொடங்கியது தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் சிவகங்கை கச்சநத்தம் படுகொலையைக் கண்டித்து ஏற்பாடு செய்திருந்த கண்டன கூட்டம். 
 
 
வழக்கமாக சாதிய படுகொலையை கண்டித்துவிட்டு நகர்ந்து செல்வதாக இல்லாமல் தன்னிலையில் சாதியம் மற்றும் சாதி ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை நோக்கிய கருத்துக்கள் பதிவிடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்திலேயே கூட்டத்தை கூர்மைப்படுத்திவிட்டனர்.
 
 
சாதிக்கு எதிரான அரசியல் தளத்தில் புத்தர், பெரியார், அம்பேத்கருக்கு பிறகு தேக்கம் ஏற்பட்டுள்ளது என்ற வழக்கறிஞர் அருள்மொழி,“ஒருங்கிணைந்த சமூக வாழ்வியல்” கல்வியை பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்று  முன்மொழிந்தார். அதைதொடர்ந்து ஆண்ட சாதி, ஆதிக்க சாதி என்று இங்கு யாரும் இல்லை, அனைவருமே சூத்திர சாதியினர் தான் என்ற அவர், தன் பாதுகாப்புக்காக சாதியை நாடுபவர்கள், அது மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் . அறிவு தளத்தில் தெளிவாக உள்ள நாம், சமூக தளத்திலும் வீரியமாக இயங்க  வேண்டும். பூணூலோடு பிறந்தவன் அறிவாளி என்று கூறுவது எப்படி மூடத்தனமோ, அதேபோல் நாம் அரிவாளுடன் பிறந்தோம் என்று கூறுவதும் மூடத்தனம்,” என்றார் அவர்.
 
 
சாதிய சிந்தனைக்கான விடையை சேரியில் தேடவேண்டியதில்லை, ஊரில்தான் தேடவேண்டும். பட்டியல் சமூகத்தினர் ஒற்றுமையை விரும்புகின்றனர். அதனால் தான் ஒதுக்கப்படுகின்றனர் என்ற அம்பேத்கரின் கருத்துக்களுடன் தொடங்கினார் இயக்குநர் பா.ரஞ்சித். “ 80 சதவீத சாதிய அடையாளம் நமது திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் உள்ளது. நகரத்தில் வசிப்பவர்களிடமும் சாதியம் உள்ளது. அதற்கு காரணம்  அவர்களது வேர்கள் கிராமத்தில் உள்ளன. கிராமங்களை சாதியம் ஆக்கிரமித்துள்ளது. பெரியாரியமும் மார்க்சியமும் சாதிய முரண்களை உடைக்கவில்லை. எனவே மாற்றத்தை நாம் ஊரில் இருந்துதான் கொண்டுவரவேண்டும்,” என்று ஆணித்தரமாகப் பதிவு செய்தார் பா.ரஞ்சித்.
 
 
“ வழக்கமாக ஊர்களுக்கு கோவில்கள், கட்டடங்கள் போன்றவை அடையாளமாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக ஊர்களுக்கு சாதியப்படுகொலைகள் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கிராமங்களும் சாதியின் பிடியில் சிக்கி தனி அரசுகளாகச் செயல்படுகின்றன. சாதியை ஒழிக்க நம்மிடம் போதுமான திட்டங்கள் இல்லை. சாதியப் படுகொலைகளைச் செய்பவர்களிடம் அதைத் திசை திருப்ப போதுமான திட்டங்கள் உள்ளன. படுகொலை செய்யப்பட்டவர்களின் படத்தைப் பார்த்துவிட்டு நான் நடுநிலையாளன் என்று கூறி நகர்ந்து செல்பவர்களின் மனநிலை கொலை செய்பவர்களின் மனநிலையைக் காட்டிலும் ஆபத்தானது. சுயசாதி, சுயமத மறுப்பை முன்னெடுக்காத எல்லா படைப்பும் போலியானதே” என்று கூறினார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.
 
 
“சாதிப் பட்டியலில் 7331 சாதிகள் உள்ளன. அதில் உபசாதிகளாக 4.6 மில்லியன் இருக்கின்றன. இந்த சாதிப்பேர்களை மட்டும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வீதம் படிக்க ஆரம்பித்தால், படித்து முடிக்க 355 நாட்கள் ஆகும். வேற்றுக்கலாச்சாரத்தை சேர்ந்தவர்களை உங்கள் அண்டை வீட்டாராகச் சேர்த்துக்கொள்வீர்களா என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மாட்டோம் என்று பதிவு  செய்ததில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது,” என்று இக்கூட்டத்தில் பதிவு செய்தார் ஆதவன் தீட்சண்யா.
 
  “புல்லட் வாகன சத்தமும் ப்ளாஸ்டிக் பயன்பாடும் கிராமங்களில் நவீன தீண்டாமையின் அடையாளங்களாக மாறி உள்ளது. இந்த படுகொலைகளுக்குப் பின்னால் அரசின் மௌனம்தான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பார்ப்பனர் தோளில் சுமக்கும் பூணூலை இடை சாதியினர் புத்தியில் அணிந்துள்ளனர்,’’ என்றார் எழுத்தாளர் தமயந்தி.
 
 
 “நான் பிறப்பால் வளர்ப்பால் இஸ்லாமியன். சாதியைப் பொறுத்தவரை நான் மூன்றாம் நபராகவே அதைப் பார்த்துள்ளேன். சாதிய அடையாளத்துடன் இன்னொரு மனிதரை அணுகுவதை விட தமிழன் என்ற அடையாளத்துடன் அணுகுவது எனக்கு வசதியாக உள்ளது,” என்கிற ரீதியில் பேசினார் இயக்குநர் அமீர்.
 
 
 
“ சாக்கடையின் பக்கத்தில் இருப்பவர்கள் கொசுக்கடிக்குத் தப்பவே முடியாது. அதைப்போலவே இந்துக்களுக்குப் பக்கத்தில் இருக்கும் எல்லா சமூகத்தினரும் சாதிய பாதிப்பில் இருந்து தப்பவே முடியாது. நாம் தேசிய இனமாக சேர்ந்த பின் சாதியை ஒழிக்க முடியும் என்பது தவறானது. சாதியம் தேய்ந்தால்தான் நாம் தேசிய இனமாக உருவாக முடியும். அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கர் அதில் முதல்வரியாக வீ தி பீப்பிள் ஆஃப் இந்தியா என்கிறார். அதாவது இனிமேல் தான் நாம் தேசிய இனமாக மாறவேண்டும் என்பதை அது உணர்த்துகிறது. சாதியவாதம் தேச விரோதம் என்கிறார் அம்பேத்கர். பார்ப்பனியர்கள் நிலத்தை இடைசாதியினரிடம் அளித்துவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அப்போது கைமாறியது நிலம் மட்டுமல்ல பார்ப்பனியமும்தான். இந்திய விடுதலைக்காக போராடியபோதே பெண்விடுதலை சாதிய விடுதலைப் போராட்டங்களும் நடந்தன. அதுபோல சாதி ஒழிப்பு என்ற போராட்டத்தில் சாதியப் படுகொலைகளுக்கான எதிர்வினைகளையும் நாம் ஆற்றவேண்டியுள்ளது. சிங்கத்தின் வரலாறை வேட்டைக்காரன் தான் எழுதுகிறான். சிங்கம் எழுதுவதில்லை. சிங்கம் எழுதினால் வேட்டைக்காரன் நிலை கேள்விக்குறியாக இருக்கும். சாதியை ஒழிக்கவேண்டும் என்பதை தந்தை பெரியார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசவில்லை. பாதிப்பை ஏற்படுத்துகின்றவர்கள் மத்தியில் பேசினார். சாதியப்படுகொலையைச் செய்யும் இனத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தாங்கள் இதற்கு எதிரானவர்கள் என்பதைப் பொதுவெளியில் முன் வைக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பு என்பது தற்செயலானதுதான்; அது குற்றமல்ல. அதற்காகக் கொல்லப்படுவதை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று உரையாற்றினார் கொளத்தூர் மணி.
 
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ மேலவளவு, திண்ணியம், பரமக்குடி துப்பாக்கிச் சூடு, மாஞ்சோலை படுகொலைகள் போன்ற நிகழ்வுகள் நடந்தபோது பெரியாரியர்கள், மார்க்சியவாதிகள் ஓரளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மற்ற ஜனநாயக சக்திகள் பெரிதாக இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த கச்சநத்தம் படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் சடலத்தை பாரதிராஜா, சீமான் போன்ற பொதுத்தளத்தைச் சேர்ந்தவர்கள் பெற்று இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டது வரவேற்கத்தக்கது. இது சாதியப்படுகொலைகளுக்கு பொதுநீரோட்டத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருப்பது புதிய திருப்பம்,” என்றார். மேலும் “ 2009-10  சமயத்தில் ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் தமிழர்களாக  ஒருங்கிணைந்தபோது சில நாட்களில் தர்மபுரி கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் தலித்துகளாக நம்மை அடையாளப்படுத்திப் போராட வைத்ததில் சாதியம் வெற்றி பெற்றுள்ளது. 
 
 
சாதியப்பிரச்சனைகளைப் பேசித் தீர்க்காமல் தமிழ் தேசிய இனமாக ஒருங்கிணைவதற்கு வழி இல்லை. நாடுவளர்வதற்கான வழிகளாக 'சாதி ஒழித்தல் ஒன்று, நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று- என்று பாவேந்தர் பாரதிதாசன் வலியுறுத்துகிறார். சாதிமத முரண்பாடுகள் சகோதரர்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடே. இதை விவாதித்து தீர்வுகாணவேண்டும். சாதிய ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல்- ஆகிய மூன்று நிலைகளை எதிர்ப்பதுதான் சாதிக்கு எதிரான போராட்டம். ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கிற பாஜகவின் சித்தாந்தம் ஒரே மதம், ஒரே மொழி என்கிற நிலைக்குச் சென்று மொழிவழி தேசியத்துக்கு எதிராகவே நிற்கும்,” என்றார் அவர்.
 
 
வன்னி அரசு, இயக்குநர் வெற்றிமாறன், மீரா கதிரவன், வழக்கறிஞர் ராஜகுரு, மருத்துவர் ஷாலினி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கிரேஸ்பானு, யாழன் ஆதி உள்ளிட்ட மேலும் பலர் நிகழ்வில் பேசினர்.
 
சிவகங்கை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்கவேண்டும். இந்த படுகொலையைத் தவிர்க்க தவறிய காவல்துறைக்குக் கண்டனம், தமிழக அரசு காவல்துறைக்குள் உள்ள சாதியத்தைக் களையவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
-ம.லோகேஷ்
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...