செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஈர உள்ளம் கொண்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பழிவாங்குவதே ‘கடவார்’ திரைப்படம்.
பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஈர உள்ளம் கொண்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பழிவாங்குவதே ‘கடவார்’ திரைப்படம். தாய் தந்தை இல்லாத அருணும், அதுல்யாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதுல்யா கர்ப்பமாகிறார். ஏகப்பட்ட கனவுகளுடன் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப, அதுல்யாவின் தாலிக் கயிற்றைப் பறிக்கிறார்கள் செயின் திருடர்கள். நிலை தடுமாறி கீழே விழும் அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படுகிறார். தாயும் சேயும் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
‘திக்கற்றவர்களுக்கு தேவன் தான் துணை’என்பது போல், அதுல்யாவின் மரணத்தில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்படுகிறது. அதற்கு காரணம் தடயவியல் நிபுணரான அமலாபால். அதுல்யா இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரியவருகிறது. இந்த கொலை ஏன் நிகழ்ந்தது? யார் அதை செய்தார்கள் என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை. பெரும்பாலும் த்ரில்லர் படங்கள் பேயை மையமிட்டதாக இருக்கும். ஆனால், கடவார் ஒரு மெடிக்கல் த்ரில்லர். பிரேதப் பரிசோதனை பற்றி பொதுச்சமூகம் அறியாத பல நுட்பமான விஷயங்களைப் படம் பேசியிருக்கிறது. முன்னும் பின்னுமாகக் கதை நகர்வது சில இடங்கள் குழப்பமாக இருக்கிறது. சென்னையில் வரும் பத்திரிகையாளர்களும், மலைப்பிரதேசத்தில் வரும் பத்திரிகையாளர்களும் ஒருவராகவே இருக்கின்றனர். அருண் கைது செய்யப்படுவதற்கான காரணமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மையக் கதாபாத்திரம் அமலாபால் விபூதி பொட்டு, ஒட்ட வெட்டிய முடி என வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். மனசாட்சியுள்ள தடயவியலாளராக அமலாபால் வாழ்ந்திருக்கிறார். காவல் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமன் தன்னுடைய இறுக்கமான முகபாவனையால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். அதுல்யா ரவி, முனீஸ்காந்த், திரிகன், நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகரன், ஜெய ராவ், ரித்விகா என ஒவ்வொருவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு கைகொடுத்த அளவிற்கு, ரஞ்சின் ராஜ்ஜின் பின்னணி இசை கைகொடுக்கவில்லை. மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியையும், பிரேதப் பரிசோதனையில் இதுவரை அறியாத விஷயங்களைப் பேசியதற்காகவும் கடவார் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும்