???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'அடித்தட்டு உழைக்கும் மக்களிடம் பெண் விடுதலை என்பது இயல்பான ஒன்றுதான் ’: நூல் வெளியீட்டு விழாவில் திருமா

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  04:04:55 IST


Andhimazhai Image

'நீ கவிதை எழுதினால் நான் கதவை அடைத்து அமைதி காக்க வேண்டும். ஆனால் நான் கவிதை எழுதினால் கதவை அடைக்க உன்னிடம்  அனுமதி கேட்க வேண்டும்’

 

 புத்தக வெளியீட்டு விழாவின்போது வழக்கறிஞர் அருள் மொழி பெண்ணின் நிலையை விளக்க எடுத்துக்காட்டாய் கூறியது.

 

 முனைவர் நளினி தேவி அவர்களின் ’அகவிடுதலையே பெண் விடுதலை’ நூல் வெளியீடு விழா சிஐடி காலனி, மைலாப்பூரில் உள்ள கவிக்கோமன்றத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது. முனைவர் சி. ஆர் மஞ்சுளா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்துரை வழங்கினார்.

 

இந்த விழாவில் எழுத்தாளர்  லதா சரவணன், கவிஞர் நர்மதா  செல்வகுமார், கவிஞர் லதா, ஜானு இந்து, மகாலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தித்திக்குதே பட இயக்குநர் பிருந்தாசாரதி, முனைவர் ராம குருநாதன், ஆதிரா முல்லை, கவிஞர் மானா. பாஸ்கர், வழக்கறிஞர் அருள் மொழி, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, கவிஞர் கு. கா பாவலன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

 

திருமதி துர்கா நாகநாதன் வரவேற்புரை ஆற்றினார். நக்கீரன் கோபால் வாழ்த்துரை வழங்கினார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய தித்திக்குதே பட இயக்குநர் பிருந்தாசாரதி ‘ வயது என்பது ஒரு  விஷயம் இல்லை என்பதை நளினி தேவி நிரூபித்துள்ளார். 80 வயதில் ஒருவர் காலையில் 4 மணிக்கே எழுந்து படிக்கிறார். இதுவரை 16 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால். நாம் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்ற கேள்வி எழுகிறது. செவித்திறன் இழந்த நிலையில் தொடர்ந்து போராடி முக்கிய படைப்புகளை படைத்துள்ளார்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் அருள்மொழி ‘பெண்ணின் விடுதலைப் பற்றி சிலர் பேசுவதேயில்லை. அப்படி மற்றவர்கள் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்கருத்து இருக்கிறது என்பதற்காக அவர்கள் எதிர்க்கவில்லை. எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம். ஒரு பெண் எல்லா வேலைகளையும் திறம்பட செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான். என்னிடம் பலர் கேட்பார்கள் ’நீங்கள் எப்படி வழக்கறிஞராகவும் வேலை செய்து குடும்பத்தை சரியாக கவனித்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்பார்கள். யார் சொன்னது நான் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிறேன் என்று. எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்வதுதான் பெண்களின் பண்பு என்று சொல்வதே தவறு.

 

 மேலும் உடை சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் அதற்காக குறைவான ஆடைகளை அணிவது பெண்ணியம் அல்ல. ஆண்களைபோல் பெண்களும்  கெளரவமான உடை அணிய வேண்டும் என்றே பெரியார் சொன்னார். உடலின் வடிவத்தை அப்பட்டமாக  வெளிக்காட்டும்படி உடை அணிய வேண்டும் என்று நினைப்பதே ஆண் ஆதிக்கத்தின் ஒரு பகுதி. மேலும் கவர்ச்சியாக பெண் தங்களை காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை   உருவாக்குவதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மேலும் பெண்கள் பொருளாதார ரீதியாக ஒரு நிலையை எட்டிய பின்புதான் ஒரு துணையை தேடிக்கொள்வது சரியாக இருக்கும் ’என்றார்.

 

 இந்த சமயத்தில் அவரது பேச்சில் குறுக்கிட்ட மாணவி ஒருவர்’ பெண்கள் தன் தேவைக்காக ஓர் ஆணைத் தேடிக்கொள்வதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? அது அவர்கள் உரிமை. அதனால் என்ன விளைவு ஏற்படும்?’ என்று கேட்டார்.

 

 இதற்கு பதிலளித்த அருள்மொழி’ குறிப்பிட்ட வயதுக்கு முன்பு ஏற்படும் உணர்வை ஈர்ப்பு என்றுதான் சொல்ல முடியும். அந்த ஈர்ப்பால் அவர்கள் தேர்வு செய்யும் ஆண்கள் முற்போக்குவாதியாக இருப்பதில்லை. அவன் பெண்ணை பண்டமாகத்தான் பார்க்கிறான். இதனால் பாதிக்கப்படுவது பெண்கள்தான்’ என்றார்.

 

 நிகழ்வில் பேசிய திருமாவளவன் ‘’ பெண் விடுதலை என்பது நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்று. முனைவர் நளினிதேவி குறிப்பிட்டதுபோல் பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்த மானுட விடுதலையோடு தொடர்புடையது. ஆண்களிடம் இருந்து பிரிந்து போய் அல்லது ஆண்களை எதிராக நினைப்பது பெண் விடுதலை அல்ல. தனிநபர் அடிப்படையில் ஆண்களை பகையாகப்பார்ப்பது பெண்ணியம் அல்ல. பெண்ணுக்கு எதிராக சமூகத்தில் நிலவியிருக்கும் கோட்பாட்டை புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது. அந்த சிக்கலைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

பெண் உடையைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். உழைக்கும் அடித்தட்டு மக்கள் இடத்தில் இந்த கவர்ச்சி என்ற வார்த்தையே கிடையாது. விவசாயம் செய்யும்போது பெண்களின் உடை விலகி இருப்பதை எந்த ஆணும் தவறாக பார்ப்பதுகிடையாது. சுரண்டப்படும் மக்களிடத்தில் வரதட்சணை என்பதும் இல்லை. நான் சென்னைக்கு வந்த பிறகுதான் அந்த வார்த்தையை கேள்விப்படுகிறேன்.

 

 

பெண் பார்க்க செல்வது என்பதெல்லாம் ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கும். எங்கள் ஊரில் பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பட்டு சேலைக் கட்டி, நகைகள் அணிவித்து அலங்கார பொம்மைபோல் அந்த பெண் காட்சி அளிக்கமாட்டார். சாதாரண உடையில் கரும்பு கடித்துக்கொண்டுதான் இருப்பார். அடிதட்டு உழைக்கும் மக்களிடம் பெண் விடுதலை என்பது இயல்பான ஒன்றுதான்’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய நூல் ஆசிரியர் நளினிதேவி சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...