![]() |
பிபின் ராவத்: 2015இல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தப்பியவர்!Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 09 , 2021 13:03:36 IST
![]() இந்திய முப்படைகளுக்கும் தலைமை தளபதி என்ற பதவி முதன்முறையாக உருவாக்கப்பட்டு அதன் தலைவராக பிபின் லட்சுமண் சிங் ராவத் 2020 ஜனவரி ஆரம்பத்தில் பதவி ஏற்றார். இரண்டாவது லெப்டினெண்டாக ராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பணியில் இருந்தவர் இவர். அவர் இந்திய ராணுவ அகாடமியில் படித்தபோது தங்கள் வகுப்பில் முதல்மாணவராக தேர்வானவர். கௌரவ வாள் பரிசு பெற்றவர். எல்லா நிலைகளிலும் மிகச்சிறப்பாக பணிபுரிந்தவர். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் ராணுவ அதிகாரியாக பல நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தவர். இவரது தலைமையில் டோக்லாமில் சீன ராணுவத்தை இந்திய வீரர்கள் 2017-இல் வெற்றிகரமாக எதிர்கொண்டார்கள். இரண்டரை மாதம் நீடித்த இந்த பிரச்னையில் ராணுவ தளபதியாக ராவத், திறமையுடன் செயல்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் படைகள் மேற்கொண்ட தாக்குதல், மியான்மர் எல்லையில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிரான பதிலடித் தாக்குதல் போன்றவற்றை நடத்தியவர். பிபின் ராவத் எப்போதும் வெளிப்படையாக மனதில் உள்ளதைப் பேசிவிடுவார் என்று அவருடன் பழகியவர்கள் தெரிவிக்கின்றனர். பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் ராவத். தந்தை பணிபுரிந்த கூர்கா படைபிரிவிலேயே இவரும் பணியில் இணைந்தவர். விபத்தில் உயிரிழந்த இவரது மனைவி மதுலிகா மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவது இது முதல் முறை அல்ல. 2015-இல் வடகிழக்கு கட்டளைத் தளபதியாக அவர் இருந்தபோது அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் அவர் உயிர் பிழைத்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே வேறொரு ஹெலிகாப்டரைக் கொண்டுவரச்சொல்லி அதில் ஏறி பயணத்தைத் தொடர்ந்த துணிச்சல்காரர்! இந்திய ராணுவம் தன் படைப்பிரிவில் மிகுந்த துணிச்சலும் ஏராளமான செயல்திறன்களையும் கொண்ட வீரத் தளபதியை இழந்துள்ளது.
|
|