???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 ஜெ. சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது டெல்லி எய்ம்ஸ் 0 தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் துவங்க நடவடிக்கை : ஆளுநர் பரிந்துரை 0 சென்னையை ஆக்கிரமிக்கும் புற்றுநோய்: உயர்நீதிமன்றம் வேதனை! 0 தாமதமாக வந்ததாக தண்டனை: பள்ளியில் மாணவன் பரிதாப பலி 0 டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம் 0 வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி பரிசு: நயினார் நாகேந்திரன் 0 பிப்.21-ல் புதுக்கட்சி: கமல் அறிவிப்பு 0 டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெ. இறந்துவிட்டார்: திவாகரன் கிளப்பிய சர்ச்சை! 0 எம்ஜிஆர் பிறந்த நாள்: மம்தா புகழாரம் 0 ஆங்கில அறிவை வளர்க்க பள்ளிகளில் நாளிதழ்:அமைச்சர் செங்கோட்டையன் 0 பணம் இருக்கும் வரை மட்டுமே தனிக்கட்சி: தினகரன் முடிவு பற்றி ஓ.பி.எஸ்.
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இதுவரை கிடைக்காத பாரதியாரின் அரிய படம்!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   16 , 2017  12:41:30 IST


Andhimazhai Image

 

மூன்று பாரதி ஆய்வாளர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?

இந்த கேள்விக்கான பதிலை இந்து பத்திரிகையின் இலக்கிய விழாவின் இறுதிநாளில்(16-01-2017) நடந்த பாரதி பற்றி தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்கள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. ஆ.இரா. வேங்கடாசலபதி, ய.மணிகண்டன், பழ. அதியமான் என மூன்று ஆய்வாளர்களும் மேடையில் இருந்தார்கள். அதியமான் ஒருங்கிணைக்க நிகழ்வு தொடங்கியது. மணிகண்டனுக்கு கனமாக குரல். அற்புதமான புதிய செய்திகளை பாரதி பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். பாரதி பற்றி பல்வேறு நூல்களை  எழுதியவரான வேங்கடாசலபதியும்  சுவாரசியமான தகவல்களை அடுக்கத் தவறவில்லை. நிகழ்வின் இறுதியில் மிக முக்கியமான தகவல் ஒன்றை மணிகண்டன் தரப்போகிறார் என்று நிகழ்வின் ஆரம்பத்திலேயே சலபதி கூறி அந்த எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டார்.

 

கதீட்ரல் சாலையில் முன்பு சோலா ஷெரட்டனும் இப்போது மை பார்ச்சூன் ஓட்டலும் இருக்கும் கட்டடம்தான் முன்பு சென்னைக்கு வந்தபோது காந்தி தங்கிய இல்லம். அது ஹிந்து ஆசிரியர் கஸ்தூரி அய்யங்காரின் இடம். ராஜாஜி அங்கே தங்கி இருந்தார், அங்குதான் காந்தி தங்குகிறார். அதுதான் ராஜாஜிக்கும் காந்திக்குமான முதல் சந்திப்பு. பாரதியார் காந்தியை சந்தித்ததும் அந்த கட்டடம்தான் என்று சொன்ன மணிகண்டன், அந்த சந்திப்பு நடந்த நாள் எது என்பதை தன் ஆய்வில் கண்டடைந்ததாகக் கூறினார். 1919 மார்ச் 21 ஆம் நாள் அது என்பதை தனக்குக் கிடைத்த பத்திரிகைச் சான்றின் மூலம் விளக்கினார் அவர்.

 

பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பேச்சைக் கேட்டு எழுதியவர் ஆங்கிலப் பத்திரிகையாளரான நெவின்சன் என்று குறிப்பிட்ட சலபதி, அந்த செய்தியில் சென்னையைச் சேர்ந்த ஒரு கவிஞர் கடற்கரைக் கூட்டத்தில் பேசினார் என்று குறிப்பிட்டு அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதியதாகக் கூறுகிறார். ஆனால் பாரதியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. நெவின்சன் டைரியிலாவது பாரதி பெயர் குறிப்பிடப்படிருக்கலாமே என்று அந்த டைரியை இங்கிலாந்தில் தேடி எடுத்துப்பார்க்கிறார் சலபதி. ஏமாற்றமே மிச்சம். அதில் செய்தித்தாளில் இருந்ததைவிட குறைவாகவே குறிப்பு இருக்கிறது.

 

நெவின்சன் பெயர்குறிப்பிடாமல் எழுதியபோதும் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் இந்தியாவின் நான்கு முக்கிய கவிஞர்கள் என்று தாகூர், சரோஜினி நாயுடு, அரவிந்தர், சுப்ரமணியபாரதி என்று பெயர்க்குறிப்பிட்டு எழுதி உள்ளார் என்ற தகவலைப் பகிர்ந்தார் மணிகண்டன்.

 

பாரதிதாசனுக்கும் பாரதிக்குமான உறவு பற்றி தராசு என்கிற சுதேசமித்திரன் பத்திரிகையில் பாரதி எழுதியது பற்றி குறிப்பிட்ட சலபதி, அது எந்த ஆண்டு வெளியானது என்பது  பற்றிக் கூறினார். பாரதியின் இறப்புக்குப் பின்னும் பாரதிதாசன் அவரது குடும்பத்தின் மீது மரியாதை வைத்திருந்ததை மணிகண்டன் ஒரு சம்பவம் சொல்லி விளக்கினார். பாரதிதாசனுக்கு 1955-ல் மணிவிழா. திருச்சியில் நடந்தபோது திருலோக சீதாராம் அவரைச் சென்று பார்த்து, பாரதியாரின் மனைவி செல்லம்மாள்  திருச்சியில்தான் இருக்கிறார் என்கிறார்.’ அப்படியா, அய்யர் சம்சாரமா/’  என்றபடி பாரதிதாசனும் திருலோகத்துடன் கிளம்பி அவரைக் காணச் செல்கிறார். செல்லம்மாளைக் கண்டதும் அப்படியே சாஷ்டாங்கமாக பாரதிதாசன் அவர் காலில் விழுகிறார். யார் காலிலும் விழாத பாரதிதாசன் குருபக்தியின் மிகுதியால் தன் வயதையே ஒட்டிய வயதாகி இருக்கும் செல்லம்மாள் பாரதியின் காலில் விழுகிறார்.

செல்லம்மாள் பாரதி அவர்கள் இறக்கும்போது பாரதியின் பாடல்களைப் பாடக்கேட்கிறார். கடைசியாக அவர் துன்பம் நேர்கையில் யாழெடுத்து என்கிற பாரதிதாசன் பாடலைத்தான் பாடச்சொல்லி கேட்கிறார்.

இப்படி பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. கடைசியில்  மணிகண்டன் அந்த தகவலை வெளியிட்டார். அது பாரதியின் இதுவரை வெளிவராத புகைப்படம். அவரது படங்கள் இதுவரை ஐந்தே ஐந்துதான் வெளியாகி இருக்கின்றன. இது ஆறாவது படம்.

நித்திய வாழ்வு என்ற பொருளில் விக்டோரியா ஹாலில் பாரதியார் உரையாற்றினார். இதற்கு அறிவிப்பு வெளியிட பிராட்வேயில் உள்ள ரத்னா ஸ்டூடியோவில் பாரதி படம் எடுத்துக்கொள்கிறார். அந்த படம் அன்னிபெசண்ட் நடத்திய நியூ இந்தியா பத்திரிகையில் அறிவிப்புடன் 1919 மார்ச் 1 ஆம் தேதி வெளியாகிறது. பாரதியார் காந்தியை இதேசமயத்தில்தான் சந்திக்கிறார். அப்போது பாரதி பித்த சந்நியாசியைப் போல் காட்சி அளித்ததாக ராஜாஜி எழுதி இருக்கிறார். இந்த படம் இது வரை கிடைக்காமல் இருந்தது. அந்த படம் இது என்று அதை வெளியிட்டார் மணிகண்டன்.

 

‘’ இந்த படத்தை நீங்கள் கண்டு பிடித்தது மிகப்பெரும் உணர்வெழுச்சியை ஏற்படுத்துகிறது’’ என்று அறிவித்தார் சலபதி. ‘’ பாரதி தன்  26 வயதில் எடுத்த படம் பற்றி ஒரு குறிப்பு கிடைத்திருக்கிறது’’ என்றும் மணிகண்டன் அடுத்ததாகக் கூறி பார்வையாளர்களின் ஆர்வத்தைக் கிளப்பியதுடன் இந்த நிகழ்வு முடிவுக்கு வந்தது.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...