![]() |
கோட்டாபய தெளிவுபடுத்த இலங்கை பார் அமைப்பு வேண்டுகோள்Posted : சனிக்கிழமை, ஜுலை 09 , 2022 15:42:23 IST
இலங்கையில் நிலவும் மிக அசாதாரணமான சூழலில், அரசுத்தலைவராகத் தொடர்வது பற்றி கோத்தாபய இராஜபக்சே தெளிவாக அறிவிக்க வேண்டும் என அந்நாட்டின் வழக்குரைஞர் சங்கம் கூறியுள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று பல மாகாணங்களிலிருந்தும் மக்கள் தலைநகர் போராட்டத்துக்கு குவிந்தனர். முன்னதாக, நேற்று வெள்ளியன்று இதைத் தடுக்கும்படியாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனால் அதைத் தளர்த்துமாறு வழக்குரைஞர்கள், அரசியல் தலைவர்கள் எதிர்த்ததை அடுத்து இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. உடனே பல மாவட்டங்களிலிருந்தும் தொடர்வண்டிகளில் அரசு அதிபருக்கு எதிராகக் கொடிகளையும் வாசகத் தட்டிகளையும் கட்டியபடி போராட்டக்காரர்கள் கொழும்புவுக்கு வந்தனர்.
உச்சகட்டமாக இன்று மதியம் அரசுத்தலைவர் மாளிகைக்கு உள்ளேயும் அரசுத் தலைவரின் செயலகத்துக்கு உள்ளேயும் மக்கள் புகுந்தனர். இரண்டு இடங்களும் இப்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு புகுந்த இளைஞர்கள் அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளியல் போட்டும் அங்கிருக்கும் சொகுசு இருக்கைகளில் உட்கார்ந்தபடியும் இருக்கும் படங்களும் காணொலிகளும் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமையில், இலங்கை வழக்குரைஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் அமைதியாகவும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமலும் குறிப்பாக பழமையான அரசுத்தலைவர் மாளிகையின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்தும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் அரசியல் நிலைப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சங்கத்தின் செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
காவல்துறையும் இராணுவமும் போராடும் மக்களுக்கு ஊறு தராதபடி நடந்துகொள்ள வேண்டும் என்றும் இலங்கை வழக்குரைஞர் சங்கம் கோரியுள்ளது. English Summary
BASL questions Gotabaya on presidentialship 09-07-2022
|
|