அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.
இதனையடுத்து, வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஸ்ரீராம் ஆகியோர் வாதிட்டனர். அப்போது கட்சியின் நிரந்தர பொதுசெயலாளராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.
மேலும் புதிய விதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய விதிகளின் படி 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகிகளாக இருப்பவர் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்றால் கட்சியின் அடிப்படை தொண்டர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இது எம்.ஜி.ஆர் கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும் வாதிடப்பட்டது. மேலும் 1.5 கோடி தொண்டர்கள் உள்ளனர், ஆனால் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்ற வாதமும் வைக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும் எதிர் தரப்பிற்கு பதிலளிக்க உத்தரவிட வேண்டும் எனவும், இல்லையென்றால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, அவரையே ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து விடுவார்கள் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.