???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாலச்சந்திரன் படுகொலைக்காட்சி தலைவர்கள் கண்டனம்.

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   19 , 2013  05:11:05 IST

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, தமிழ் ஈழ தேசியத் தலைவர், தமிழ்க்குலத்தின் தவப்புதல்வன், மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய பாலச்சந்திரன், சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சேனல் 4 வெளியிட்டு உள்ளது. ஐந்து குண்டுகள் பாலச்சந்திரன் மார்பிலே பாய்ந்து உள்ளன. சண்டை நடந்தபோது, இருதரப்பிலும் குண்டுகள் பாய்ந்தபோது ஏற்பட்ட சம்பவம் அல்ல.

 

சின்னஞ்சிறு பிள்ளையான பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ள ஒரு நிலவறைக்கு உள்ளே உட்கார்ந்து இருக்கிறார். அரைக்கால் சட்டை அணிந்து இருக்கிறார். கருப்பு சட்டை இடுப்பில் சுற்றப்பட்டு உள்ளது. தோள்களில் ஒரு பழைய லுங்கி, அப்பிள்ளையின் பால்வடியும் முகம், சின்னஞ்சிறு மார்பு, ஒரு படத்தில் கையில் ஏதோ பிஸ்கட்டோ ஒன்றையோ வாயில் உதடுகளில் வைப்பதுபோல் தோற்றம். அடுத்தபடத்தில் அந்த ஒளி தரும் கண்கள் எதையோ உற்று நோக்கும் பார்வை. ஐயோ, அதைப் பார்க்கும் போதே இதயம் வெடிக்கிறதே!

 

அடுத்தபடம். உயிரற்ற சடலமாகக் கிடக்கிறான் பிள்ளை. ஐந்து குண்டுகள் மார்பில் பாய்ந்து உள்ள அடையாளம். இதுகுறித்து, ஆய்வு செய்த நிபுணர் கூறுகிறார்: மூன்று அடி இடைவெளியில் இருந்துதான் முதல் குண்டைச் சுட்டு இருக்க வேண்டும். அந்தத் துப்பாக்கியை நோக்கி பாலச்சந்திரன் கையை நீட்டித் தொட முயன்று இருக்கலாம். முதல் குண்டு பாய்ந்தவுடன் பின்புறமாக விழுந்துவிட்டான். அதன் பிறகு நான்கு ரவைகள் மார்பிலே பாய்ந்து உள்ளன. கிடைத்து இருக்கக்கூடிய வீடியோ ஆதாரங்களின்படி, சிங்கள இராணுவ அதிகாரிகள் அங்கே இருந்து உள்ளனர். அந்த இரணுவத்தினர் வசம் உள்ள வீடியோ ஆதாரத்தின்படி, பாலச்சந்திரன் சடலம் கிடந்த இடத்திற்குப் பக்கத்தில், வேறு ஐந்து பேரின் சடலங்களும் கிடக்கின்றன. அவர்கள் விடுதலைப்புலி போராளிகளாகத் தெரிகிறது. அவர்களது உடைகளைக் களைந்து அம்மணமாக்கி, கைகளையும், கண்களையும் கட்டி, உச்சந்தலையில் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். இது திட்டமிட்ட கோரப் படுகொலை ஆகும்.

 

தடவியல் துறையில் உலகப் புகழ்பெற்ற நிபுணர், பேராசிரியர் டெரிக் பவுண்டர், “இது நூற்றுக்கு நூறு உண்மையான தடயம்” என்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பாலச்சந்திரன் கண்முன்னாலேயே ஐந்து தமிழர்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் பாலச்சந்திரனையும் சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்தனர் என்பது, அணு அளவு ஐயத்துக்கும் இடம் இன்றி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று, சேனல் 4 தொலைக்காட்சியின் காணொளிக்காட்சிகள் சாட்சியம் தருகின்றன.

 

ஜெர்மானிய நாடுகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ்
இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?

 

அனைத்துலக மனித உரிமை வழக்கறிஞர் வில்லியம் சகபாஷ் இதுபற்றிக் கூறுகையில், கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அம்மணமாக்கப்பட்டு, சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு, இராணுவத்தின் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவர்களே பொறுப்பாளிகள் ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

 

எனவே, இந்தக் கோரமான கொலைகளுக்கு மகிந்த ராஜபக்சேவும், அவனது கொலைகார சகோதரர்களும் இராணுவத்தின் தலைமைத் தளபதிகளும் சிங்கள அரசுமே குற்றவாளிகள் ஆவார்கள். அதனால்தான், தமிழ் இனக்கொலை குறித்து சிங்கள் அரசு மீது, அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்கிறோம்.

 

ஜெனிவா மனித உரிமை கவுன்சில் அத்தகைய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உலகத்தின் மனசாட்சியின் கதவைத் தட்டுகிறோம். தாய்த் தமிழகத்து மக்களே, இளம் தலைமுறையினரே, இதயத்தில் குருதியைக் கொட்டும் இக்கொடுமைகளை எண்ணிக் கொதித்து எழுவோம். மிருகங்களைவிடக் கொடிய சிங்களனைக் கூண்டில் ஏற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பன்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

“ தமிழீழ மண்ணில் இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கொலைகாரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிற வகையில் தமிழ் நெஞ்சங்களை பதற வைக்கக்கூடிய இன்னொரு இனப்படுகொலை காட்சி அம்பலமாகியிருக்கிறது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன் 12 வயதே ஆன பாலகன் பாலச்சந்திரன், போரின் போதே கொல்லப்பட்டார் என்ற சிங்களக் கொலை வெறியன் ராஜபக்சேவின் கோயபல்ஸ் பிரச்சாரம் தற்போது சர்வதேச அரங்கத்தில் அம்பலமாகிவிட்டது.ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் கூட உள்ள நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளியாகக் கூடிய தி இண்டிபெண்டெட் நாளேடு, சேனல்4 தொலைக்காட்சி ஆகியவை பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட உண்மையான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.

 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் புதல்வன் பாலகன் பாலச்சந்திரன் உயிரோடு சிங்களக் காடையர்களால் கைது செய்யப்பட்டு அவர்களது ராணுவ முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்ட காட்சி இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. உயிரோடு கைது செய்யப்பட்ட பாலகன் பாலச்சந்திரனை தங்களது முகாம்களில் வைத்தே அப்பட்டமாக படுகொலை செய்திருக்கிறது என்ற புகைப்படக் காட்சிகள் தமிழர் நெஞ்சங்களை சொல்லொண்ணாத் துயரில் ஆழ்த்துகிறது.

 

இத்தகைய கொடூரப் படுகொலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் இலங்கை சிங்கள கொலைகார அரசை நேச சக்தியாகவே இந்திய அரசு இன்னமும் கருதுகிறது எனில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவை ‘எதிரி’ நாடாகத்தானே கருத வேண்டியிருக்கும். இதன் பின்னராவது இலங்கையுடனான பொருளாதார உறவுகளை இந்திய அரசே துண்டித்துக்கொள்! இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்ற குரலைக் கொடு இந்திய அரசே! மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் சிங்கள காடையரின் ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்காதே!

 

இலங்கயின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். தமிழீழ பகுதிகளில் பன்னாட்டுப் படைகளை நிறுத்தி சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசு முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப்படையினரிடம் சிக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டிபெண்டண்ட் நாளிதழும், சேனல் - 4 தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.

 

அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள 4 புகைப்படங்களில் முதல் இரு படங்களில், இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பதுங்கு குழியில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறுவன் பாலச்சந்திரன் கவலை தோய்ந்த முகத்துடன் ரொட்டி போன்ற ஒன்றை தின்று கொண்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அடுத்த இரண்டு படங்களில் உடல் முழுவதும் குண்டு பாய்ந்த காயங்களுடன் அச்சிறுவன் இறந்து கிடக்கும் காட்சிகள் உள்ளன. பால் மனம் மாறாத பச்சைக் குழந்தையை சிங்கள இனவெறியர்கள் எவ்வளவு கொடூரமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்கள் விளக்குகின்றன. சிங்களப்படையினரின் இந்த மிருகத்தனமான செயல் கடுமையாக கண்டிக்கத் தக்கது.

 

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் படங்களை சேனல்-4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதற்கு சர்வதேச அரங்கில் கடும் கண்டனம் எழுந்த போது விடுதலைப் புலிகளுக்கும் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் சிக்கி பாலச்சந்திரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு காரணம் கூறியது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் டெரிக் பவுண்டர், இந்த புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும், பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டு சாய்த்துவிட்டு, அச்சிறுவன் பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்து பார்க்கும்போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது.

 

ஐ.நா தூதர்களிடமும், இந்திய அரசிடமும் தகவல் தெரிவித்து விட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உள்ளிட்டோர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது, மருத்துவ உதவி கூட வழங்காமல் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொன்றது, போரின் இறுதிக் கட்டத்தில் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களை சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்றுவரை கொடுமைப்படுத்தியும், கொலை செய்தும் வருவது என சிங்களப் படையினரின் போர்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து வருகின்றன.

 

இலங்கை அரசின் இத்தகைய போர்க்குற்றங்களுக்கு இதுவரை எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; போர்க்குற்றங்களை எத்தனையோ சர்வதேச அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால், இலங்கை அரசு இதுவரை திருந்தவில்லை. இதற்குக் காரணம் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையை எச்சரிக்காமல், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வரும்போதெல்லாம் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருப்பது தான்.இப்போது வெளியாகியுள்ள கொடூரமான ஆதாரங்களுக்குப் பிறகாவது இலங்கை மீது கடுமையான அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ். கூறியுள்ளார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் :

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பும், பின்பும் எடுக்க புகைப்படங்களை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொடூரமான கொலையே உதாரணமாகும். நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகக் கொடூரமான செயலை இலங்கை ராணுவம் நிறைவேற்றியுள்ளது.

 

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களும், அதற்கு துணைபோனவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்துள்ளது. ஆனாலும் விசாரணைக்கு இலங்கை அரசு தயாராக இல்லை.

 

இப்பிரச்னையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு கடுமையான நிர்பந்தம் கொடுக்கும் வகையில் இந்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்றார்.

 

கவிஞர் கலாப்ரியாவின் வரிகள் :

சின்னக் குழந்தையைக் 
கொன்று போட்டதற்காக
சேனல் 4
ஆராய்ச்சி மணி அடிக்கிறது
இந்நாட்டு மன்னர்களே
என்ன செய்யப் போகிறோம்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...