???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாகிஸ்தானில் வன்னி; ஆப்கானிஸ்தானில் பூம்புகார்!- பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நேர்காணல்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2013  04:16:22 IST


Andhimazhai Image

சுமார் ஒன்பது  ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாள் இரவு. சிந்துசமவெளி நாகரீகம் கண்-டெடுக்கப்-பட்ட பகுதியான, தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்-தான், கிழக்கு ஈரான் என்று அறியப்படும் பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்-கொண்டிருந்தார் ஆர்.பாலகிருஷ்ணன். ஒரிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி. இடப்பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பவர். அவர் முதலில் தேடிய பெயர் கொற்கை. ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும்  கொற்கை என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. பாலகிருஷ்ணன் அதை ஒரு விபத்து என்றே கருதினார். அடுத்து வஞ்சி என்ற ஊர்ப்பெயரைத்  தேடினார். அதுவும் அங்கே இருந்தது. அவருக்குள் சுவாரசியம் பெருகிற்று. தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி, - தமிழிலக்கிய மாணவரான அவர் பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக்கொண்டே இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதைக் கணினி காட்டிக்-கொண்டே இருந்தது. 4000 ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரீகம் 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரீகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரீகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த நாகரீகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப்பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.

 

சென்னை பெருங்குடியில் பாலகிருஷ்ணனை அவரது இல்லத்-தில் சந்தித்தேன். தனது ஆய்வு-களை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு இரண்டு ஆண்டுகள் விடு-முறைசொல்லிவிட்டு வந்திருக்கிறார். வீடு முழுக்க அவரது துணைவியார் வரைந்த அழகான ஓவியங்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களின் சந்தையை விளக்கும் ஓர் எண்ணெய் வண்ண ஓவியம் முன்னறையை அலங்கரிக்-கிறது.

 

“எண்பதுகளில் ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப்பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் தமிழி. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப்பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.  மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப்பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது அவன் நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடிபெயரும்போது பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப்பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்ற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும் சுமந்து சென்ற ஊர்ப்பெயர்களும் சொல்வது மனிதகுலத்தின் வரலாறு” கனவில் பேசுவது போல் பேசுகிறார் பாலகிருஷ்ணன்.

 

ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியன் கோயிலைச்சுற்றியுள்ள ஊர்களைக் கொண்டு சுவாரசியமான ஒரு தகவலை வெளிக் கொணர்ந்தீர்கள் அல்லவா?

“ஆமாம். ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில்  உள்ள ஏராளமான ஊர்ப்பெயர்கள் அப்படியே கொனார்க்கைச் சுற்றி இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.அப்புறம் மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் தமிழ்நாடு கேரள எல்லையிலுள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற இடங்கள் இருப்பதைக் கண்டேன். இன்னொரு ஆச்சரியமான விஷயம் ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்தான் என்று இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது இந்த இடப்பெயராய்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.''

 

பாலகிருஷ்ணன் சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள்  முன்னிலையில் சமர்ப்பித்தார். சிந்துவெளி நாகரீக மக்கள் என்ன பேசினார்கள் எழுதினார்கள் என்று அங்கு கிடைத்த எழுத்துக்களை வைத்துப் புரிந்துகொள்ள அறிஞர்கள் எல்லாம் மண்டையை பிய்த்துக்  கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரிவினர் அங்கு ஆரியர்கள் வாழ்ந்தனர் என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அங்கு இருந்தது திராவிட நாகரிகம் என்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஒரு இடத்தில் பிராகுயி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடியினர் வாழ்கிறார்கள். ஆயினும்கூட அவர்களின் பழங்குடி வாழ்க்கை, மிக முன்னேறிய நகர வாழ்க்கை நாகரிகமான ஹரப்பா, மொகஞ்சதாராவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தடை செய்கிறது.

 

“ சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் சங்கத்தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு  அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கிமு 800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப்புதிரை அவிழ்த்துவிடலாம். பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே நான் கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல;  சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.''

 

அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம் பெயர்ந்து வந்திருக்க முடியுமா? பெருந்தொலைவு ஆயிற்றே?

"இடப்பெயர்வு நடந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின் மிச்சம் இருந்தவர்கள் பின் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களை இழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம்.  அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடிகொண்ட இடத்தில் பழைய  நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.  சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்துப் பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை  தமிழ்ச்சங்கங்களில் ஆவணங்-களாக முறைப்படுத்தப் பட்டவை. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல அவை.  அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.''

 

உதாரணங்களைச் சொல்லமுடியுமா?

“சங்க இலக்கியத்தில் ‘வான் தோய் இமயத்து கவரி’ என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம்  சொல்கிறது.  இன்று இந்த யாக் விலங்கின் பால் ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும் அதை யாக் தேநீர் என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள். எங்கோ குளிர்பிரதேசத்தில் இருக்கும் யாக் பற்றி சங்கக் கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார் உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும் எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர் ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்லவேண்டுமென இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல் மாரியால் மூடியதால் சோழர் கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள்  சொல்கின்றன. மணல் மழை பாலைவனத்தில்தான் சாத்தியம்.''

 

வள்ளுவர் மயிர் நீப்பின் உயிர்வாழா கவரி மான் என்றிருக்கிறாரே?

கவரி மான் என்று சொல்லவில்லை கவரிமா என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி 535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பலபகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி “வால்முடியைக் காப்பாற்றிக்கொள்-வதற்காக தனது உயிரையே விடத்தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார். இன்னொரு உதாரணம் சொல்கிறேன். "பொன்படு கொன்கானம்’ என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரீகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.''

 

ஆகவே சிந்துவெளி நாகரீகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக்கூடும்?

“ஆமாம். தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும் சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகின்ற அறிவு பூர்வமான ஆய்வுகள் இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.'' விடைகொடுக்கிறார் பாலகிருஷ்ணன்.

 

(நேர்காணல்: மதிமலர். அந்திமழை மார்ச் 2013 இதழில் வெளியானது)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...