அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சொக்கலால் பீடியும் குதிரை படம் போட்ட பிராந்தியும்! - பாக்கியம் சங்கர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  15:23:06 IST


Andhimazhai Image

ஞாயிறுகளில் அப்பா அப்படியொரு அழகாக பேட்டையில் காட்சியளித்துக் கொண்டிருப்பார். வெளுத்த வேட்டியும் சட்டையும் கசங்காமல் உடுத்திக் கொள்வார். உள்ளங்கையளவு தேங்காய் எண்ணெயை தலைக்கும், கைகளுக்கும், கால்களுக்கும் தடவிக் கொள்வார். தலையைப் படிய வாரி, மீசையையும் ஒரு மாதிரி வாரிக்கொள்வார். ஒருதடவை அம்மையைப் பார்த்துக்கொள்வார். கறி எடுப்பதற்கு தூக்குவாளியை எடுத்துக் கொண்டு என்னையும் கடைத்தெருவிற்கு அழைத்துச் செல்வார்.

இள ஆட்டுகறியாகப் பார்த்துப் பதமாக வாங்குவதில் அப்பா கெட்டிகாரர் என்று சொல்லியே அப்பாவைக் கறிவாங்க அனுப்புவதில் அம்மா கெட்டிக்காரராக இருந்தார் என்று, இப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆனால், அப்பாவிற்கு அப்போது அது புரிந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. என்னை சேமியா ஐஸ் கடையில் உட்கார வைத்து, ‘‘ஏல... ஒரு சேமியாத்தான் திங்கணும்... அப்பா அந்தாள போயிட்டு வந்துருவேன்...'' என்று அவர் எதிர்திசையில் நடக்கும்போதே தெரிந்துவிடும்; குதிரை படம் போட்ட பிராந்தி புட்டியும், சொக்கலால் பீடிக் கட்டு புகையும். அப்பாவின் அந்த எதற்கென்றே தெரியாத சிரிப்பும், வீட்டைக் கொண்டாட்டமாக வைக்கப்போகிற நாளொன்று.

தீபாவளியன்றுதான் பரணையிலிருந்து இறங்கும் இட்லி சட்டியும், பணியாரச் சட்டியும், வருடத்திற்கொருமுறை அல்லாது எங்கள் ஐவரின் பிறந்தநாளன்று செய்யப்படும் கேசரி என்கிற அளவில் எங்கள் வாழ்க்கைப் பாடு இருந்தாலும், ஒருபோதும் அம்மை விசனப்பட்டு நான் பார்த்ததில்லை. ராதா பேக்கரி பூந்தியும் பக்கோடாவும் வாரத்திற்கொருமுறை அப்பா எப்பேர்பட்டாவது வாங்கி வந்துவிடுவார். ‘‘எல அடிச்சிகிடாம திங்கணும்...'' என்று எங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டு அக்காவிற்கு மட்டும் தனது நிஜாரில் பதுக்கிவைத்திருந்த பால்கோவாவை எங்களுக்குத் தெரியாமல் கொடுத்துவிடுவார். ஆனாலும் அக்கா எங்களுக்குக் கொஞ்சமாக தந்துவிட்டு முழுவதையும் வைத்து வைத்து சாப்பிட்டு வெறுப்பேத்துவாள். ‘‘அந்த பீடிய விட்டுத்தொலச்சாத்தான் என்ன... கொமட்டிக்கிட்டு வருது...'' என்னும் அம்மையைப் பார்த்து ‘‘என்ன சொல்லுத... திரும்பவும் பிள்ள கிள்ள உண்டாயிடுச்சுன்னு சொல்லிடாதம்மா...கெதி இல்ல பாக்கியம்...'' என்று அம்மையைப் பார்த்து எதற்கென்றே தெரியாமல் சிரித்து வைப்பார் அப்பா. ‘‘அறுக்க மாட்டாதவன் இடுப்புல... அம்பத்தெட்டு கருக்கருவான்னு... சும்மாவா சொன்னான்... ஆளையும்  ஆசையையும் பாரு... ஆங்...'' என்று யாருக்குமே தெரியாத ஒரு சிறு புன்னகையை அப்பாவிற்கு மட்டுமே தந்துவிட்டுப் போவார் அம்மை.



நாளை மற்றுமொரு நாளாக அவரால் வாழ முடிந்தது. அடுத்த கட்டத்திற்கான எந்தப் பிரயத்தனத்திற்கும் அவர் போகவில்லை. அன்றிலிருந்தே அவர் வாழ பழகி கொண்டார். எதை பற்றியும் யாரை பற்றியும் அப்பாவிற்கு புகார் இருந்ததில்லை. எவர் பற்றியும் அவர் குறை பாடவில்லை. மாறாக, ‘‘கெடக்கான் விடு...'' என்று கடந்துவிடுவார்.

 



அக்கா பெரியவளானாள். மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவதற்கு அப்பாவிடம் காசு இல்லை.‘இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொன்னன்... ஏதாவது சீட்டு கீட்டு போட்டு வைக்கணும்னு... பொண்ண பெத்துவச்சிருக்கோன்ற வெசனம் கெடையாது... எனக்கென்னன்னு பீடிய குடிச்சிட்ருந்தா எல்லாம் நடந்துருமா...'' அம்மை இப்படித்தான் பொங்கிவிடுவாள். ‘‘கடன் இல்லாம வாழ்றன்னு சந்தோஷப்படு... இப்ப என்னத்த செய்யணுங்க... என் மவளுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்...'' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார். ஒரு மூன்று நாள் வீட்டுக்கு வரவில்லை. குப்தா இரும்பு குடோனில் சம்மட்டி அடித்திருக்கிறார். வந்தவர் அம்மையிடம் ரெண்டாயிரத்தை கொடுத்து ‘‘எல்லார்க்கும் சொல்லி... சடங்கு பண்ணு... பிள்ளையளுக்கு பிடிச்ச கேசரிய பண்ணச்சொல்லு...'' என்று எங்களுக்கு ராதா பேக்கரி பூந்தியும் பக்கோடாவும், அக்காவிற்கு வழக்கம்போல பால்கோவாவும் வந்து சேர்ந்தது.

குதிரை பந்தயம் விளையாடுவதிலும், சீட்டு விளையாடுவதிலும் அப்பா மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது மாயக்குதிரையை விரட்டி விரட்டி அதில் வந்த செல்வத்தையெல்லாம் கொட்டி பேட்டையே வியந்து பார்க்கும்படிக்கு அக்காவிற்கு கல்யாணம் நடத்திவிட திட்டம் தீட்டியிருந்தார். எப்போதும் அப்பாவின் குதிரை அப்பாவை ஏமாற்ற தவறுவதேயில்லை.

அப்பாவிற்கு கடன் கொடுக்க ஏராளமானவர்களிருந்தார்கள். காரணம் அவர் யாரிடமும் கடன் பெற்று கொள்வதில்லை என்பதை அறிந்தே அவர்கள் கொடுக்க தயாராயிருந்தார்கள். அக்காவிற்கு கல்யாணத்தை ஒரு பைசா கடனில்லாமல் முடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாயிருந்தார். ஆனால் சம்மட்டியால் எவ்வளவு அடித்தாலும் இரும்பை வளைக்க முடியுமே தவிர, இந்த வாழ்வை நம் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துவிடவா முடியும். அப்பொழுதுதான் பேட்டையில் சாராய வியாபாரம் செழித்து  கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

சாராய வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செய்து அதை PnUS பார்த்து கொடுக்க ஒரு நேர்மையான ஆளை தேடியபோது அப்பாதான் அந்த அப்பாவி ஆடென்று அவர்களுக்கும் தோன்றியது போல.
அன்றிலிருந்து காலையில் நான் விழித்தாலே சில லட்சங்களை அப்பா சிரத்தையுடன் எண்ணி ரப்பர் பேண்ட் போட்டு அடுக்கி வைப்பார். எங்கள் வீட்டில் லட்சுமி மட்டுமல்ல குபேரனும் ஒரே நாளில் குடிபுகுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டனர். ஆனால் அடுப்பில் அதே கருப்பு காபிதான். இன்னமும் என் நினைவில் இருக்கும் ஒரு காட்சி ‘‘இவரு என்ன கணக்கு சொல்றாரோ... அதுதான் கணக்கு... தெனமும் ஒரு ஐயாயிரத்த ஒதுக்குனாகூட ஒண்ணும் தெரியாது... பொழக்க தெரியாத ஆளா இருக்காரும்மா உன் வூட்டுக்காரரு...'' ஒரு போலீஸ்காரர் அப்பாவை கைது செய்தபோது இப்படி சொன்னார். காலையில் போனவர் மாலையில் வீடு திரும்புவார். அவர்கள் அப்பாவிற்கு சம்பளமாக கொடுத்த காசையே வீட்டிற்கு கொடுத்தார். ‘‘என்ன நம்புனவன... நா ஏமாத்தகூடாது... இப்பவும் நா கலக்சன்தான் பண்ணுதேன்... சாராயம் ஓட்டுறதுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லன்னு... என்ன வெளிய எடுத்தான்... ஏன் தெரியுமா... நா அவன ஏமாத்த மாட்டேன்... அதான்...'' அம்மை ஏதும் பேசாமல் அப்பாவிற்கு பிடித்த சங்கரா மீன் குழம்பை கொண்டு வந்து வைத்தாள்.

பரணையிலிருந்து குதிரைபடம் போட்ட பிராந்தி புட்டியும், சொக்கலால் பீடி கட்டும் பந்தியில் சேர்ந்து கொண்டது. போத்தலை ஒரு இழு இழுத்தார். ‘‘ஏய் பாக்கியம்... என் பிள்ள கல்யாணத்த கடன் வாங்காம நடத்திருவன்னு தோணுது'' என்று சங்கராமீனை ஒரு துண்டம்  வாயில் போட்டு கொண்டு எதற்கென்றே தெரியாமல் சிரித்தார். அந்த சிரிப்பு இப்போதும் எனக்கொன்றை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. அது அப்பா யாரிடமும் கடன் படாமல் வாழ்ந்தாலே போதுமென்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றதுதான். யாரை பார்த்தும் பதட்டப்படாத ஒரு வாழ்வை வாழ்ந்த ஒரு மனிதர் என்பதுதான் அப்பாவை நினைத்திடும் போதெல்லாம் எண்ணத்தோன்றுகிறது. அவரைப்போலவே வாழ்ந்திடவும் தோன்றுகிறது.



 (அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...