![]() |
பகாசூரன்: திரைவிமர்சனம்Posted : வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17 , 2023 12:14:13 IST
![]() பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ‘நவீன பகாசூரன்கள்’ யார் என்பதற்கான விடை சொல்லும் திரைப்படமே பகாசூரன்.
கடலூர் அருகே உள்ள கிராமத்திலிருந்து சேலத்திற்கு வந்து பரதேசியாக சுற்றித் திரியும் செல்வராகவன் தீவிரமான சிவபக்தர். அவர் மிக கொடூரமான முறையில் மூன்று பேரை அடுத்தடுத்து கொலை செய்கிறார். அதேபோல், மற்றொரு பக்கம் தன்னுடைய அண்ணன் மகளின் தற்கொலைக்கான காரணத்தை தேடிச் செல்கிறார் முன்னாள் ராணுவ மேஜரான நடராஜ். இறுதியில் இவர்கள் இருவரும் சந்திக்கும் புள்ளியே படத்தின் மீதிக் கதை.
கிரைம் த்ரில்லருக்கான பின்னணி இசையுடன் தொடங்கும் பகாசூரன், செல்வராகவனின் மிரட்டலான நடிப்பால் படம் சூடு பிடிக்கிறது. அந்த சூடு நடராஜ் வந்ததும் குறைந்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இடைவேளைக்குப் பிறகு சொல்லப்படும் செல்வராகவனின் குடும்பப் பின்னணி மனதைப் பிசைகிறது.
தெருக்கூத்து கலைஞராக வரும் பீமாராசு (செல்வராகவன்) அப்பாவி கிராமத்து அப்பாவாக வாழ்ந்துள்ளார். சாணி காகிதம் படத்தில் பார்த்த அதே செல்வராகவனை இந்தப்படத்திலும் பார்க்கலாம். க்ரைம் வீடியோக்களைப் பதிவிடும் யுடியூபராக வரும் நடராஜ் வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். செல்வராகவனின் தந்தையாக தயாரிப்பாளர் ராஜன், கல்வி தந்தையாக ராதாரவி, நாயகி ரிச்சா, கூல் ஜெயந்த், லயா என ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றனர்.
அப்பாவி பெண்கள் எப்படி பாலியல் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள்? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஏன் கண்காணிக்க வேண்டும்? என்பது பற்றி படம் பேசியிருந்தாலும், அதில் போதிய அழுத்தமும், விவரணையும் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம். செல்வராகவன் செய்யும் கொலைகளை காவல் துறை கண்டுபிடிக்காமல் இருப்பது லாஜிக் மிஸ்ஸிங். படத்தில் பாதி இடங்களில் சாம் சி.எஸ் பின்னணி இசையே தாங்கி பிடிக்கிறது.
‘சென்னை பாண்டிச்சேரிலா வேண்டாமா. அங்கலாம் வெள்ளைக்காரங்க மாதிரி ஆகிட்டாங்க. பெரம்பலூர்லன படி மா…’, “ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே” போன்ற வசனங்கள் படம் முழுவதும் இடம்பெறுவதைப் பார்க்க முடிகிறது. அயலி போன்ற திரைப்படங்கள் பெண் கல்வி குறித்த நல்லெண்ணத்தை விதைக்கும் சமயத்தில் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் பகாசூரன் வெளியாகியிருப்பது பெரும் குறையே!
|
|