???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கனா மீது வருபவன் - 17-அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2014  08:28:04 IST

 

தங்கையா ராலியை தெருச்சுவரின் மீது சாய்த்து விட்டுக் குடிசைக்கு தலை குனிந்தார். வெளியேக் கூடியிருந்தவர்களில் சிலர் செம்பிவளத்தாளின் வாழ்நாள் முடிந்து போனதாக கணக்குக் குறித்துக் கொண்டு மேற்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள், புறப்பாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டியவர்கள், பலக் கட்டங்களில் எதிர்பார்ப்பினை ஏமாற்றி ‘ஜம்’ மென்று அலைகிறவர்கள், எதிர்பாராமல் சென்றுவிட்டவர்கள் என மரணவாதிகளாக உரையாடிக் கொண்டிருந்தனர். மரண வீட்டின் சில்லறைக் குறிப்புகளுக்கே அஞ்சி விடும் ராணி பீதியாகி தன்னை அழைத்து வந்திருந்த கமலத்தின் முந்தானையைப் பிடித்துக் கொண்டாள். கமலம் சட்டமிடப்பட்ட வெற்றுத் தாளைப் போல நிச்சலனமாக வீட்டினுள்ளே அடைபட்டு நின்ற இருளினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மரணம்  ஒரு விசை போல அசைந்து கொண்டு உலவுவதாக அவள் நம்பினாள். யாரோ ஒருவர் அருவமாக வீட்டின் உள்ளேயும் வெளியேயுமாக கயிற்றில் தட்டப்பட்ட பந்துபோல பரபரபரத்துக் கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டாள். கண்ணில் புலப்படும் நபர்களைப் போல புலப்படாது உலவும் அருவங்களைக் காண்பதற்கு ஆவலும் கொண்டாள்.

 

இருள் தன்னை முழுக்கப் பழகுவதற்கு அனுமதிக்காமல் கிழவியின் நிமிர்ந்த ஒரு காலையும் சரிந்த மறுகாலையும் காட்டிக் கொண்டு நின்றது. காரணம் புரியாது தனது இருகைகளையும் வணங்குவதுபோல் வயிற்றுக்கு மேலே குவித்து வைத்துக் கொண்டாள். உள்ளே போவதற்கு மனம் விரும்பியும் சரீரம் தயங்குவது உணர்ந்து நகராமல் நின்றாள். மீறும் தருணங்களில் தனது உடல் பலமிழந்து வீழ்ந்த நாட்களும் உண்டு. உள்ளே கோசலையின் குரல் தொடர்ந்து கேட்டது.

 

“யாத்தா..ஏ..ஆத்தா.. ..

 

எந்தி யாத்தா...

 

யாத்தா..யாரு வந்துருக்கேன்னு பாரேன்...”

 

கோசலையின் குரலும் பாப்பத்தையின் மவுனமும் ஒன்றாகவே இருந்தது உபயோகமில்லாமல்.

 

தங்கையா நுழையும்போது பாப்பாத்தை சொன்னாள் ”மூச்செல்லாம் இருக்கு..ஆசுத்திரிக்குக் கொண்டு போய் பாக்கலாமா?” என்று.

 

தொடர்ந்து வெளியே தொடர் பதில் கேட்டது.

 

“மூச்சு இழுக்காம் டே...கெழவி யாருக்கோ காத்துக் கெடக்கா கேட்டியா.... ”

 

“வேற யாருக்குடே..? காலனுக்குத்தான்..கயித்த அனுப்பிட்டான். ஆளு வந்து சேராண்டாமா....? மோட்டார் பைக்கா..எருமைலல்லா வரணும்...! பைய வரட்டு..”

 

இடைவிடாது குறுக்கும் நெடுக்குமாக பேசிக்கொண்டே இருந்தார்கள்.

 

தங்கையா குனிந்து பார்வதியை உற்றுப் பார்த்தார்.

 

“ஏ..புள்ள..

 

ஏ புள்ள பாருதி.....பாருதி..:”

 

என்றழைத்து நெற்றியில் கைவைத்தார்.

 

அவள் உடல் கொதித்ததா தன் கை கொதித்ததா தெரியவில்லை. சூட்டினை உணர்ந்தார்.

 

கைப்பெருவிரல் அழுத்தியிருந்த இடம் கொழகொழப்பாக உணர்த்த விரலை எடுத்துப் பார்த்தார். விரல் பிசுபிசுத்தது.

 

“பாவி கீழ விழுந்துட்டா போல இருக்கே..” என்றவர் தலையைப் பிடித்துத் தூக்க தலை ஒதுங்கியது.

 

“கரண்டு..கிரண்டு ஏற்பாடு பண்ணக்கூடாதா..இருட்டால்லா இருக்கு..”

 

பாப்பாத்தை கேட்க , இருந்த இடத்திலிருந்தே எக்கி தீப்பெட்டி எடுத்து சிம்னி விளக்கைப் பற்ற வைத்தார் தங்கையா.

 

கிடங்கின் உட்புறம் போல அறை தோற்றமளித்தது. பார்வதியின் நெற்றியிலிருந்து ரத்தம் வந்து உறைந்து அதன் மீதே மேலும் கசிந்து கொண்டிருந்தது.

 

அசோகன் இசக்கியப்பனுடன் தலைப்பாகையோடு வந்தான். பின்தொடர்ந்து ஹோட்டல் பாண்டியனும் வந்தான்.

 

“ஏ.....ஆத்தா..” என்று பாண்டியன் வழக்கம் போல மார்பில் அடிக்க –

 

“ஏட்டி...இப்ப வாய மூடுதியா இல்லியா மூதேவி ?” என்றான் அசோகன்.

 

பாண்டியனுக்கு கோபம் வந்துவிட்டது. சற்று தாமதித்திருந்தாலும் கூட பாண்டியனின் வரவு என்பது ஸ்பீக்கரின் வரவு தான்.

 

எப்போது சத்தமிடுவானென்று கணிக்க முடியாது. மணவீடு, மரணவீடு, காதுகுத்துவீடு, நோயாளிவீடு என எந்த வீட்டில் ஒரு சம்பவம் என்று அறிந்தாலும் பாண்டியன் முதலில் ஆஜர். அந்த வீட்டு ஆள் போல விழுந்து விழுந்து வேலை பார்ப்பான். செத்துப்போனது யாரென்று தெரியாமலேயே மாரடித்து அழுவான். அழுகைக்கு இடையில் கிடைக்கும் இடைவெளியில் விபரங்களை விசாரித்து அறிந்து கொள்வான். அடுத்த சுற்றில் விபரம் சொல்லி நெஞ்சில் அடித்தழுவான்.

 

சற்று பெண்ணியல்பு உள்ள பாண்டியனை அசோகன் போல நேரடியாக  தாக்குபவர்களும் உண்டு. இசக்கியப்பனைப் போல குணமறிந்து தாக்குபவர்களும் உண்டு.

 

“பாத்தியால. என்னைய ஏட்டீன்னு கூப்புடுதான்.....கொழுப்பு தானே? அவனுக்க மாமன் வயசு எனக்கு. மாமான்னு கூப்புடாலாமுல்லா..? தலதெறிச்சு போவ... நா என்ன பொம்பளையால....?ரெண்டு புள்ள பெத்துருக்கேன். மூணாவது உண்டாயிருக்கா.. இன்னும் ரெண்டு மூணுக்கு பிரசவ செலவுக்கு வேற பைசா சேத்துட்டு வாரேன்.. என்னையப் பாத்து இப்படிச் சொல்லுதான்..” என்று புலம்பினான்.

 

கமலம் ஆர்வம் காட்டாமல் நாடியில் கைவைத்துக் கொண்டாள்.

 

ஏமாற்றத்தை தவிர்க்க விரும்பி பாண்டியன் ராணியிடம் திரும்பினான்.

 

“ஏ..புள்ள ..ஒனக்குத் தெரியாதா.அண்ணனப் பத்தி..”

 

என்று அவள் கையைப் பிடித்துக் கொள்ள அவள் பயத்தில் உதறிய உதறலில் தடுமாறிக் கீழே விழுந்த பாண்டியன் வாயைப் பொத்திக் கொண்டு அழுதான்.

 

“ஏ..ஆத்தா..செம்பிவளத்தா..” என்று.

 

இசக்கியப்பன் கிழவியின் தலையைப் பிடித்து உதறினான்.

 

“தண்ணிக் கொண்டாரும் ஒய்” என்றான்.

 

“தொளிச்சாச்சுல்லா” என்றாள் பாப்பாத்தை.

 

“எடும் ஓய்” என்றான் சத்தமாக.

 

போணியில் தண்ணீர் வந்தது.

 

அவன் தெளித்துவிட்டு ”ஏ ..கெழவி..கண்ணத் தொர..தொறந்து பாரு...யாரு வந்திருக்கேன்..ஒம் மூத்த மவன்...” என்றவன் திரும்பி “மூத்த மவனுக்கு பேரு என்னது?”

 

என்று கேட்க ”குமாரு..குமாரு” என்றார் தங்கையா.

 

“இந்தா பாரு குமாரு வந்திருக்கேன். குமாரு..குமாரு..ஒம்மவன்..” என்று உணர்த்த முயற்சித்தான். கிழவியிடம் அசைவில்லை. தங்கையாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது என்று மட்டுமே நினைக்க முடிந்தது.

 

“தூக்குத் தூக்கு”

 

என்று சத்தமிட்டுக் கொண்டே இசக்கியப்பனும் , அசோகனும் கிழவியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

 

“ஓய்..ஆட்டோ புடியும். பாலசுந்தரத்துக் கிட்ட கொண்டு போவோம்” என்றான் இசக்கியப்பன்.

 

பச்சை சிலருடன் சேர்ந்து மறுக்க வந்தார்.

 

அசோகன் “பு...” என்று ஆரம்பிக்கவும் உடனே பின்வாங்கினார்.

 

இளைஞர்களாக ஆக இருந்த சில சிறுசுகள் வெகுவேகமாக தெருமுனையிலேயே ஆட்டோவைப் பிடித்து வந்தார்கள்.

 

பாலசுந்தரத்திடம் போவதற்குள் மீனாட்சியை கடக்க இருந்த நேரத்தில் இசக்கியப்பனின் ‘புது ஆஸ்பத்திரி” என்ற அறிவுரையால் மீனாட்சியிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.

 

போன நேரம் டாக்டர் இருந்தார். விபரம் கேட்டுவிட்டு அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார் அவரது முன்னனுபவம் காரணமாக.

 

மருத்துவமனையின் முன்பு சிறியதாகக் கூட்டம் சேர்ந்தது. தங்கையா டாக்டரின் வாயைப் பார்த்து நின்றார். அவர் திரும்பும் போது அவர் வாய் திரும்பிய திசைக்கெல்லாம் தங்கையாவும் திரும்பினார். டாக்டருக்கு அசோகனை சுத்தமாய் பிடிக்கவில்லை என்பதை அவர் நடத்திய விதத்தில் இசக்கியப்பன் புரிந்து கொண்டான்.

 

“ரவுடிகள்லாம் நிக்கக்கூடாது அண்டர்ஸ்டாண்ட்..”

 

“நான்சென்ஸ். கெட் லாஸ்ட்”

 

“சத்திரமா கூட்டம் போட” என்று அப்போதைக்கப்போது வந்து மற்றவர்களை திட்டுவது போல் திட்டிவிட்டு கடைசியாக ஒருதடவை அசோகன் எங்கே நிற்கிறான் என்று தேடித் பார்த்து ஒரு தடவை முறைத்துவிட்டுச் சென்றார்.

 

ஒருவேளை முறைப்பதற்காகவே வருகிறாரோ என்று கூட இசக்கியப்பன் நினைத்தான். அசோகன் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

 

“சவம், சாவாதுலே. பாரு இங்கக் கெடக்க கொஞ்சம் பேர நாறக் கிழிகிழிச்சு அதுகள எல்லாம் அனுப்பிவெச்சுட்டுத் தான் போகும்..”

 

“பாவம்லே..தெருவுக்கு ஒரு தொணையா கெடக்காலா..”என்றான் அசோகன்.

 

“அது கெடக்கட்டும். இந்த டாக்டரு ஒனக்கு சொக்காரன் போல இருக்கு..ஒன்னக் கண்டாலே ஓடிவந்து கொஞ்சுதான்...? கொஞ்சதுக்கே..ஓடி ஓடி வாரான்..என்னடேக் காரியம் வசமா சிக்கிக்கிட்டானா ?”

 

“ஒண்ணும் இல்லடே..ஒரு நாளைக்கு வீட்டுல பல்பு பீசாயிருச்சி...கையில நயா பைசாக் கூட இல்ல. எங்கையா வாங்கத் தந்த பைசாவையும் செலவழிச்சிட்டேன்..யோசனையா இந்தப் பக்கமா வந்திட்டிருந்தனா.... ஆசுத்திரி போர்டுல பெருசா வெள்ளையா ரெண்டு மாட்டிருந்தான். கழத்திட்டுப் போயிட்டேன். போறவன் சும்மா போயிருக்க மாட்டனா....உள்ள கம்பி அத்திருச்சா... நல்லாருக்கான்னு..ஆளு தெரியாம வீட்டுக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்த டாக்டருக்கிட்டேயே கேட்டுத் தொலைச்சிட்டேன்”

 

“டாக்டரு சும்மா விட்டுட்டாரா?”

 

“விடுவானா....இவம் போட்ட சத்தத்துல வீட்டுக்குள்ளருந்து அவன் தம்பி ஓடிவந்தான்..அவன் மண்டை வேற பெருசாப் பாக்கப் பானை மாதிரி இருந்துதா.. ஆசையில ஒரு முட்டுனேன்..பொறவு விட்டுட்டான்” என்றான் அசோகன். அழுவதாக இருந்த பாண்டியன் அசோகனுக்குப் பயந்து அடக்கிக் கொண்டான்.

 

‘’ அது தீந்த கேசு. இப்படித் தெருவழியா வாரவோப் போறவளோ வாயில வரதவச்சி ஏசுனா எவனாம் பொறுப்பானா? இவ ஏச்சயும் பேச்சையும் கேக்காம போறதுக்கு கேக்கவன் காதுல அவயானா அடைச்சிருக்கு..? அதான் கையிலக் கெடச்சத தூக்கி எறிஞ்சிருப்பானுவோ!. அப்பா..இனியாவது  செவிக்கேட்டு இருக்கலாம்லா..” என்று பச்சைக் கூறவும் அப்பு அங்கு வந்தான். பச்சை அவனைப் பார்த்துக் கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்தார். அப்புவுக்குக் சம்பவம் பெரிதாகிக் கொண்டிருக்கும் பயம் ஒருபக்கம். இன்னொரு பக்கம்  தன்னை பச்சைக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்பது வேறு. அழுத்தம் தாங்காமல் தெரு முனையில் நின்று கொண்டிருந்த எம்ஜியார் கட்சி கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பார்த்தான்.

 

பச்சை மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டார்.

 

பச்சைக்கும் தங்கையாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு பலகாலமாகிறது.

 

பச்சையின் மனைவி கோலம்மையும் தங்கையாவும் உடன்பிறந்தவர்கள். இருவருக்கும் பாகம் விதிக்கப்பட்டு அவரவர் நிலத்தில் தான் இருவரும் வசித்து வருகிறார்கள்.

 

தங்கையா தனது இடத்தை சகோதரிக்குக் கொடுத்துவிட்டு மனைவியுடன் செம்பிகுளம் சென்று அந்த பூமியில் வசிக்க வேண்டும் என்பது பச்சையின் தீர்மானம். தனது சொந்த பூமியை விட்டுவிட்டு வேறு எங்கும் வசிக்க முடியாது என்பது தங்கையாவின் பிடிமானம். தங்கையாவின் மகளின் தேவைக்காக செம்பிகுளம் இடத்தை விற்றபோது வெகுவாக ஆத்திரமடைந்தது பச்சை தான். அதன் பிறகு தங்கையாவை இந்த இடத்தை விட்டு கடத்துவதற்கு பல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தும் முடியாமல் தற்போது அவற்றைத் தாமே உருவாக்கிக் கொள்வது  என்ற முடிவிற்கே வந்துவிட்டார். கிடைத்த சில்லறை வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றில் ஒரு திரியைப் பற்ற வைத்து அது எரிந்துப் படர்ந்தால் காரியம் கனியலாம்.

 

ஒரு தடவை தங்கையாவின் வீட்டினுள் வெட்டப்பட்ட எலுமிச்சை பழங்களை குங்குமத்தில் முக்கி பூச்சுற்றி எறிந்து பார்த்தார்.

 

சிவப்பாக இருந்த பழங்களைக் கண் தெரியாத கிழவி வெளியே ஒவ்வொருவரிடமும் காட்டி விசாரித்தபோது அதனைக் கண்டவர்கள் பிடரியடிக்க ஓடினார்கள். ‘’செம்பிவளத்தா செய்வினக்காரி...’’ என்கிற அளவுக்குப் பேசிக் கொண்டார்கள். அவள் எதிரில் வெளியேப் போக நேர்ந்தால் காறித் துப்பினார்கள். கைகளில் செபிக்கப்பட்டக் கயிறுகளைக் கட்டிக்கொண்டார்கள். வயது வந்தவர்கள் அவளைக் காணக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டார்கள். குறிப்பாகப் பெண்பிள்ளைகள் கருக்கலுக்குள் வீடு அடையும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தெருவில் யாராவது வாயால் வயிற்றால் போனால் செம்பிவளத்தாளின் துர்க்குணம் தொற்றிவிட்டது என்று அச்சப் பட்டார்கள். அக்காலத்தில் செம்பிவளத்தாளின் ஏச்சும் எலுமிச்சம்பழத்தின் நிமித்தம் அகோரமாக இருந்தது. தொண்டைக் கட்டாது மிகமிக மோசமான வார்த்தைகளால் சபித்துக் கொண்டே இருந்தாள். ஊர்க்காரர்கள் நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்கள். தங்கையா சாமியாடியாக இருப்பதும் அவரை விட்டால் சாமியாட வேறு ஆள் இல்லாததுமே அவரைக் காப்பாற்றியது.

 

தங்கையா சுடலையிடம் போய் மன்றாடினார். தான் கோமரத்தாடியாக இருந்து சாமியாடுவது இந்தத் தொல்லைகளை அனுபவிக்கத்தானா என்று கதறியழுது முறையிட்டார். மரித்துப் போய்விட்ட தன் தாய் தந்தையரை நினைத்துக் கூட அழுதார். கேட்டுவிட்டு மனம் வெதும்ப வீட்டுக்கு வந்த போது “நீ கள்ளச் சாமி தானே ஆடுதே..?” என்று கேட்டாள் கிழவி தங்கையாவிடம்.

 

தங்கையா அதிர்ந்தே போனார்.

 

“என்ன இப்படிக் கேட்டுட்டே. ஒன வாயிலப் போயி இப்படியெல்லாம் வரலாமா? ஒனக்கு சொடல சாமி மேல நம்பிக்கை இல்லியா?” என்று தங்கையாத் திருப்பிக் கேட்டபோது அவள் சொன்னாள்,

 

“நல்ல சாமியா இருந்தா இந்த உபத்திரவம் நடக்கும்போது பாத்துகிட்டு இருப்பாரா? அதான் கள்ளச் சாமியானு சந்தேகம் வந்துது..” என்றாள்.

 

எலுமிச்சை சிறிய கலக்கத்தை உருவாக்கியதே தவிர பச்சையின் எதிர்பார்ப்பில் பெருமளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

 

‘’ ரோட்டு சைடு எடம் ...இதுபோல ஒண்ணுக் கெடக்காது... அவன் புள்ளையக் கெட்டிக் குடுத்துட்டான்...நமக்கு ஒரு புள்ள காத்துக்கிட்டு இருக்கா...அவளக் கெட்டிக் குடுக்கனும்னா சாதாரணக் காரியமா? எங்கிட்டே என்ன இருக்குக் கெட்டிக் குடுக்க? அவன் மவளும் மருமவனும் வசதியாத் தானே இருக்காவோ...போயித் தொலைய வேண்டீது தானே? வயாசானக் காலத்துல இங்கக் கெடந்து உசுர வாங்குதுவோ சள்ளையோ...தெருவுக்குள்ள எவந்தான் எந்த நெலத்த நியாயமா வாங்கிருக்கான்...தட்டியெறிஞ்சாத்தான் இனி செரியாவும்...’’  பச்சை இனிமேல் விடுவதில்லை என்பதில் குறியாக இருந்தார். இப்போது தங்கையாவின் நிலம் பாதித் தன் பக்கம் திரும்பியிருக்கிறது.

 

இன்னும் நிறைய வேலை செய்யவேண்டும்.

 

மருத்துவமனையில் டாக்டர் தங்கையாவைத் தனியாக அழைத்துக் கொண்டு போனார்.

 

(கனா தொடரும்)

 

 

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக் கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது. செவ்வாய்தோறும் இது வெளியாகும்.  உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்)

 

 

கனா மீது வருபவன் - 14

கனா மீது வருபவன் - 15

கனா மீது வருபவன் - 16

 

 

 

 

 

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...