அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
ஆலின் நிழலில்! - முனைவர் அருள் நடராஜன்
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 01 , 2021 15:36:34 IST
எங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தார் மூவருமே எங்கள் அப்பா அம்மாவின் முகச் சாயலையும், குணவியல்புகளையும், நலங்களையும் ஒரு சேரப் பெற்றவர்களாக இருக்கிறோம். அப்பாவிற்கு அகவை முதிர்ந்தாலும் பிள்ளைத் தமிழாகவே அவர் எனக்கு எப்போதும் தெரிகிறார்!
அப்பாவிடத்தில் எப்போதும் எதைச் சொல்லவும் நான் அஞ்சியதில்லை. அம்மாவைக் கேட்டுச் செய்! அவளின்றி ஓரணுவும் அசையாது! என்பதே அப்பாவின் மந்திரச் சொல்லாகும்.!
14-8-2020 அன்று திடுமென மறைந்த தெய்வம் என் அம்மா. என்னால் முடியவில்லை என்று எப்போதும் எதையும் சொல்லாதவர், என்னிடம் கடைசியாகப் பேசியது எனக்கு இன்னும் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.
‘அருள்! நீ அப்படியே உன் அப்பாவைப் போல அச்சாக உள்ளாய். அவரைப் போலவே நடப்பதும் நிற்பதும் அசைவதும் பேசுவதும் அவரைப் போலவே உள்ளது. ஆனால், அவரைப் போல உன்னால் அவ்வளவு நூல்களையும் படிக்க முடியவில்லையே! படித்தப் பாடல்களையும் நினைவுக்குக் கொண்டு வந்து சொல்ல முடியவில்லையே; நயம்பட எடுத்துச் சொல்கின்ற அந்த நளினத்தில் நீ இன்னும் வெற்றிபெறவில்லையே என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. உன்னைச் செல்லமாகவே வளர்த்தேன்.'' இனிமேல் என்னால் ஏதும் முடியவில்லை என்றார். இந்த நீதிமொழி என் நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கிறது.
அடிக்கடி நான் சொல்லுகிற பாட்டு வரி.
‘எனக்கென்ன மனக்கவலை என் தாய்க்கன்றோ தினம்தினம் என் கவலை''
என் கண்ணீர்க் கோடுகளாகவே நிலைத்துவிட்டன.
போட்டி வாழ்வாகவே அப்பா தன் வாழ்க்கையை நடத்தியவர். அவர் தமிழ் வழியிலேயே படித்து மதுரையில் தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபொழுது, மருத்துவராகிய என் அம்மாவைத் திருமணம் செய்தபிறகு, அம்மாவுடைய ஆங்கிலச் செழுமை தனக்கு இல்லையே என்ற ஏக்கத்தில் நாள்தோறும் மணிக்கணக்காக ஆங்கில நூல்களையும், ஆங்கில இதழ்களையும் ஆங்கில அறிஞர்களுடைய உரைகளையும் தலைகீழ்ப் பாடமாகப் படித்து , அம்மாவையே விஞ்சிக் காட்டுகிற அளவிற்கு ஆங்கிலத்தில் வல்லவராக மாறினார். இந்த உந்துசக்தி யாருக்கும் எளிதாக அமையாது.
எல்லாத் துறையிலும் முதலில் நிற்க வேண்டும், எவர் துணையும் இல்லாமல் இமயமாய் நிமிர வேண்டும் என்று ஓயாமல் அப்பா சொல்வார் . இன்றுவரை புகழில் நிலைக்கின்றார். அண்ணாநகரிலுள்ள வள்ளியம்மாள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவரை, என் பள்ளியின் நிறுவனர் பேராசிரியர் அ .மு. பரமசிவானந்தம் அப்பாவின் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் ஆவார்.
ஆதலால், நான் ஔவை மகன் என்றே பள்ளியில் போற்றி வளர்க்கப் பட்டேன். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் சென்னை கிறித்தவ மேநிலை ஆடவர் பள்ளியில் பயின்ற போதும், தலைமையாசிரியர் திரு. கிளமெண்ட் பிளிக்ஸ் முதல் வகுப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும், ஔவை மகன் என்று தான் என்னைத் தெரியும். அப்பா எங்களை அவரவர் போக்கில் அவரவர் வளரட்டும் என்று எப்போதும் மனத்தில் ஒரு சிந்தனைத் தனிமையில் இருப்பார்.
நான் எந்த வகுப்புப் படிக்கிறேன் என்று கூட எப்போதும் வினவ மாட்டார்.உரிமை தருவதில் அவருக்கு நிகர் அவர்தான் எல்லையில்லாத உரிமை எதிலுமுண்டு. ஒருமுறை நான் ஏழாம் வகுப்புப் பயிலும் போது, என்னுடைய தமிழாசிரியர் பெருந்தகை ஜெயராமன் தமிழைத் தேனாய்க் கற்றுதரும் உத்தியையும், கூடுதலாகவே தவறு செய்யும் மாணவர்களைத் தன்னுடைய இரும்புக் கரங்களால் அடிக்கும் வல்லமையும் கொண்டவர்.
மூன்று மாணவர்களை ஒருசேர அழைத்து உயிரெழுத்து எவ்வளவு என்று முதல் மாணவனைக் கேட்டார். அவன் முப்பது என்றான். அடுத்த மாணவனைப் பார்த்து மெய்எழுத்து எவ்வளவு என்று கேட்டார். அவன் மருட்சியாக நூறு என்றான். என்னைப் பார்த்துக் கேட்டார் உயிர்மெய்யெழுத்து எவ்வளவு என்று. கண்டிப்பாக முந்நூறு என்றேன். அதற்கு அவர் சொன்னார்.
முதல் மாணவனை ஒருமாதம் தொடர்ந்து அடிக்கணும். இரண்டாவது மாணவனை மூன்றுமாதம் அடிக்க வேண்டும். ஔவையின் மகன் அருளைத் தொடர்ந்து ஓராண்டு முழுவதும் அடிக்க வேண்டும் என்று வேடிக்கையாகச் சொன்னாலும், ஔவை மகனா இப்பிழையைச் செய்வது? என்று அவர் கேட்ட பொழுதுதான் என் கண்களில் நீர் முட்டியது.
எங்கு சென்றாலும், யாரைப் பார்த்துப் பேசினாலும் என்னை உடனே தொலைக்காட்சியில்
பட்டிமன்றத்தின் நடுவராய் வரும் ஔவையின் மகனா என்று கேட்டு விடுவார்கள். எனக்கு எந்த நேரத்திலும் அப்பாவின் மகன் என்ற நிழலிலிருந்து தப்பவே முடியாது என்பது கல்லூரிக் காலங்களிலேயே தெரிந்து விட்டது. மாநிலக் கல்லூரியில் நான் பயின்ற பொழுது என் நண்பர் இரவிசங்கருடன் சட்டமன்ற விடுதியில் தங்கிப் பயிலப் போகிறேன் என்றேன். அதற்கு அம்மா சரியென்று சொல்லிவிட்டார்கள்.
மறுநாள் காலை அப்பா, அம்மாவிடம் சொன்னார். அருள் சட்டமன்ற விடுதியில் தங்கிப் படிப்பது பிழையில்லை. என்னுடைய கவலையெல்லாம், என்னுடைய தம்பி அப்படிப் படிக்கச் செல்கிறேன் என்று சொல்லித்தான் வாழ்வின் பல தீமைகளுக்கு ஆட்பட்டுச் சீர்குலைந்தான். சுருக்கென்றது எனக்கு, அன்று முதல் விடுதியில் தங்குவதை அறவே நிறுத்தினேன்.
அவர் சுட்டிக் காட்டிய எந்தத் தீய பழக்க வழக்கங்களிலும் ஆட்படாமலேயே வளர்ந்தேன். ஆலமரத்து நிழலில் எந்த மரமும் வளராது என்ற நிலையிருந்தாலும். அவ்வப்பொழுது, ஒளிக் கீற்றுகள் என் மீது படர்ந்து கொண்டேயிருப்பதால் நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன்.
‘‘துன்பமெலாம் தவிர்த்து அன்பெலாம் நிரம்பி இன்பமெலாம் அளித்த என் தனித் தந்தையே''
‘‘தம்மில் தம் மக்கள் அறிவுடைமை'' என்ற திருக்குறளை அப்பா எப்போதும் சுட்டிக் காட்டுவார். ஒன்பது ஆண்டுகள் தலைமைச் செயலகத்தில் என் தந்தையார் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றினார். அதேபோல அப்பாவின் நல்லாசியால் அதே மொழிபெயர்ப் புத்துறை இயக்குநராகக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன்.
‘‘தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித் தந்தையே
உன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித் தந்தையே!''
என்று திருவருட்பா வரிகள் என் அறையில் எழுதி வைத்துள்ளேன். எந்நிலையில் எங்கிருந்தாலும் நிறைவடைவதே நிலையானது.
ஆனால் ஆர்வத்தில் கல்வியில் நிறைவே வரக்கூடாது என்ற நன்மொழியை எப்போதும் போற்றுகிறேன். தமிழ்ப் படித்தாலும் எந்தத் துறையிலும் தலை நிமிர்ந்து நிற்கத் தடையில்லை என்ற போக்கு எனக்கு இயல்பாகவே வளர்ந்தது. எனக்குள் ஏராளமான கனவுகளை வளர்த்தது. காலம் தான் விடை சொல்லும்.
(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)
|
|