அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அவென்சர்ஸ்: முடியாத போர்!

Posted : புதன்கிழமை,   மே   02 , 2018  14:02:40 IST

 

 

பொறுப்புத் துறப்பு: மன்னிக்கவும். Avengers Infinity war  படத்தைப் பார்க்காதவர்கள் இதை வாசித்தால் கொஞ்சம் குழம்பிப் போகலாம். பார்த்தவர்களுக்குப் புரியும்.

 
இன்பினிட்டி வார் என்கிற பெயரைப் பார்த்தவுடனே இது ஒரே படத்தில் முடிகிற கதை இல்லை என்பதை யூகித்திருக்கவேண்டும். ஆனால் தவறு செய்துவிட்டேன். கடைசியில் வில்லன் தானோஸ் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் எல்லா ரத்தினக்கற்களையும் அடைந்துவிடுகிறான். ஒரு விரலைச் சுண்டி பெரும்பாலான சூப்பர் ஹீரோக்களை அழித்துவிடுகிறான். எனக்குப் பிரியமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் துகள்களாக மாறி அழிகிறார்.  ஸ்பைடர் மேன், ஸ்டார் லார்ட், ப்ளாக் பேந்தர், நிக் ப்யூரி, டீனேஜ் க்ரூட்.. வில்லனின் விரல் அசைப்பில் இவர்களெல்லாம் கரைந்துவிட, படம் அடுத்த பாகம் எப்போது வரும் என்று காத்திருக்க வைப்பதுடன் முடிகிறது.

 

 

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் பாத்திரங்கள் எல்லாவற்றையும் கலந்து கட்டி அட்டகாசமான ஒரு பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் தோர், லோக்கி, கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸி படத்தில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அதகளம் செய்ய, இன்னொரு பக்கம் அயர்ன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன்  மூவர் கூட்டணி வில்லனை எதிர்கொள்கிறார்கள். மூன்றாவது முனையில் ப்ளாக் விடோ, கேப்டன் அமெரிக்கா, ப்ளாக் பேந்தர், விஷன், வாண்டா மேக்ஸிமாப், ஃபால்கன் என்றொரு குரூப், வகாண்டா தேசத்துக்குச் சென்று அங்கே ஊடுருவும் வில்லன் ஆட்களை எதிர்த்துப் போராடுகிறது. திகட்டத் திகட்ட சாகசங்களை அள்ளித் தொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட சோர்வே ஏற்படாமல் பறக்கிறது படம்.

 

படம் வெளியாகி ஆறு நாட்களாகியும் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களின் வசூலைத் தகர்த்துவிட்டது! தோர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறார். மின்னல் கடவுளான தோர் தன் கிரகமான அஸ்கார்ட் அழிந்தபின் விண்கப்பலில் ஏறி தன் மக்களுடன் தப்பிச் செல்வதை கடந்த மார்வல் படமான ரக்னோராக்கில் பார்த்தோம். அந்த விண்கப்பலை அழித்து வில்லனான தானோஸ் லோக்கியைக் கொல்கிறான். தோரை அடித்து வெளுத்து, அந்த விண்கலத்தையும் நொறுக்க, தோர் கதை முடிந்தது என்று நினைக்கிறோம். சொய்ங்க் என்று அங்கே வரும் கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி டீம். தோரைக் காப்பாற்றுகிறது. அவருடைய பலம் வாய்ந்த சுத்தியலை( செமயான ஆயுதம்! எந்த அவெஞ்சராலும் தூக்கவே முடியாத எடை கொண்டது!) ரக்னராக் படத்தில் தோரின் அக்கா ஹெலா உடைத்துவிடுகிறாள். வில்லனால தானோஸை அழிக்க ஆயுதம் வேண்டும். எனவே அதைச் செய்யும் பட்டறையான ஒரு கிரகத்துக்குச் சென்று அங்கே ஒரு கோடரி செய்கிறார். அணைந்துபோன நட்சத்திரத்தை எரியவைத்து அந்த கோடரி செய்யப்படும் காட்சியே தோரை மிக உச்சகட்டமான சூப்பர் ஹீரோ ஆக்குகிறது! தோர் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க, அந்த கோடரியை இணைக்க ஒரு கைப்பிடி தேவை. அதுவரை வீடீயோ கேம் ஆடிக்கொண்டிருக்கும் டீனேஜ் குரூட், தன் மரக்கரங்களை நீட்டி கைப்பிடி செய்து கொடுக்கும் காட்சியில் எல்லோரும் சீட் நுனிக்கு வந்தோம். அங்கே வகாண்டாவில் வில்லனுடைய கொடூரமான ஆட்களுடன் நம் சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் முக்கி முனகி திணறிக்கொண்டிருக்க அவர்கள் நடுவே நம் மின்னல் கடவுள் தோர் குதித்து கோடரியை சுழற்றும் காட்சி நிஜமாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது. எங்கேடா இருக்கான் தேனோஸ்? என்று கர்ஜித்து தன் மீள்வருகையை தோர் அறிவிக்கிறார்.

 

 

ஆனால் அந்தோ பரிதாபம்! சனிக்கிரகத்தின் நிலாக்களில் மிகப்பெரியது டைட்டன். அங்கிருந்துதான் வில்லன் தேனோஸ் வருகிறான். அவனை அங்கேயே வைத்து அழிக்க முயலும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அயர்ன்மேன், ஸ்பைடர் மேன் கூட்டணி ஒரு கட்டத்தில் அவனை அமுக்கிப் பிடித்து, அவன் கையில் இருக்கும் சக்திவாய்ந்த கவசத்தையும் கழற்றுவதில் வெற்றி பெறப்போகும் நிலையில் உணர்ச்சிவசப்படும் ஸ்டார்லார்ட், காரியத்தைக் கெடுத்துவிட.. தேனோஸ் எல்லோரையும் துவம்சம் செய்துவிடுகிறான்.

 

இப்படியாகச் செல்லும் படம் கடைசியில் தேனோஸ் டைட்டனில் அமர்ந்து தொடுவானைப் பார்க்கும் காட்சியுடன் முடிவடைகிறது. பார்க்கும் நமக்கு இவ்வளவு சக்திவாய்ந்த வில்லனின் கதையை முடிக்காமல் பாதியில் தொங்கவிட்டுவிட்டார்களே.. அடுத்த பாகத்தை எப்போ ரிலீஸ் செய்வார்களோ என்று தோன்றுகிறது முகமெல்லாம் சுருக்கத்துடன்( விதைப்பையின் சுருக்கங்கள் கொண்ட முகம் என்று ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் குறிப்பிடுகிறார்கள்) கையில் அணிந்த உறையில் இப்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ரத்தினக்கற்களை அணிந்து, இதுவரை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கும் எல்லா வில்லன்களையும் விட ஆகச்சக்தி வாய்ந்த வில்லனாக இருக்கும் தேனாஸுக்கு ஓர் அகச்சிக்கல் இருக்கிறது. அவன் ஆன்மா கல்லைப் பெறுவதற்கு அவன் விரும்பும் ஓர் உயிரை பலியாகக் கொடுக்கவேண்டும் அவன் வளர்ப்பு மகள் கமோராவை அங்கே கூட்டி வந்திருக்கிறான்.

 

“ உனக்கு நன்றாக வேண்டும். உலகில் நீ நேசிக்கும் யாருமே இல்லையே…” என்கிறாள் கமோரா. ஒரு துளி கண்ணீருடன் அவளைப் பார்க்கிறான் தேனாஸ். அவன் நேசிப்பது கமோராவைத்தான். கணமும் தயங்காமல் அவளைத்தூக்கி பள்ளத்தாக்கில் எறிந்து, ரத்தினக்கல்லைப் பெறுகிறான். பிரபஞ்சத்தின் ஆதாரங்கள் குறையக்கூடியவை. மக்கள் தொகை அதிகரித்தால் அவை குறைந்து பசி பட்டினியால் அவர்கள் வாடுவார்கள். அதற்கு ஒரே வழி, அதில் பாதிப்பேரைக் கொன்றுவிடுவதே. இதற்காக கிரகம் விட்டு கிரகம் சென்று கொலை செய்கிறான் தானோஸ். இப்போது அவனுடைய விரல் சொடுக்கில் பாதிப்பேரை அழித்துவிடலாம்.

 

 

இந்த மார்வல் படங்களில் கடைசியில் பெயர்கள் போட்டு முடிந்தவுடன் அடுத்த படத்தில் என்ன வரும் என்பதற்கான காட்சியைக் காண்பிப்பார்கள். இதில் அவெஞ்சர் குழுவின் தலைவரான ப்யூரி( சாமுவேல் ஜாக்சன்) விசயத்தைப் புரிந்துகொண்டு ஒரு கருவியை எடுத்து யாருக்கோ தகவல் அனுப்புகிறார். அதை அனுப்பும்போதே அவரும் துகள்துகளாக மாறி அழிகிறார். அந்த தகவல் சென்றடைந்துவிடுகிறது என்பதற்கு அடையாளமாக இதுவரை மார்வல் படங்களில் தோன்றாத இன்னொரு சூப்பர் ஹீரோவான கார்னல் டென்னர்ஸ் என்கிற பெண் சாகச நாயகியின் குறியீடு அந்த கருவியில் தோன்றுகிறது. பிரபஞ்ச வெளியில் பயணம் செய்யும் அந்த நாயகிக்கு அடுத்த படத்தில் நிறைய வேலை இருக்கும் போலிருக்கிறது.

 

எல்லாம் சரி, காலத்தை இனி சரிசெய்தால்தான் இறந்தவர்களை மீட்க முடியும். காலத்தைக் கட்டுப்படுத்தும் கல்லும் தானோஸ் வசம் போய்விட்டது. ( இந்த கற்களைப் பற்றிப் பேசும்போது சுட்டி டிவியில் வரும் ஜாக்கிசான் சீரீஸ் மாதிரியே இருக்கே..). காலத்தைச் வளைக்கும் அல்லது முன்பின்னாக மாற்றி அமைக்கும் சக்தி படைத்த டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் அழிந்துவிட்டார். ஆனால் அவர் காலக்கல்லை தானோஸிடம் கொடுத்து அயர்ன்மேனின் உயிரை மீட்டுவிட்டுத்தான் சாகிறார். அப்படியானால் அயர்ன்மேனுக்கு தானோஸை அழிப்பதில் முக்கிய ரோல் இருக்கிறதா? டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், முன்னதாக எதிர்காலத்தைச் சென்று பார்க்கிறார். அதில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பார்த்ததாகவும் அதில் ஒன்றே ஒன்றில் நாம் வெல்வதாகவும் சொல்கிறார். தானோஸ் அழிவது உறுதி. ஆனால் அதை யார் செய்ய முடியும்? ஒருவேளை டாக்டர் ஸ்ட்ரேஞ்சுடன் இருப்பவரான இன்னொரு மந்திரவாதி வாங்? அவரால் காலத்தை சரிசெய்து இறந்துபோன சூப்பர் ஹீரோக்களைத் திரும்பக் கொண்டுவர முடியுமா?

 

படத்தின் ஆரம்பத்தில் தோன்றும் ஹல்க், தானோஸிடம் அடி வாங்கி டெலிபோர்ட் ஆகி, டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் வந்து விழுந்து தானோஸின் வருகையை அறிவிக்கிறார். அதன் பின்னர் ப்ரூஸ் பேனராகவே இருக்கும் அவரால் எவ்வளவு முயற்சி செய்தும் படத்தின் இறுதிவரை ஹல்க் ஆக மாறவே முடிவதில்லை. சக்திவாய்ந்த கேப்டன் அமெரிக்கா, ப்ளாக் விடோ ஆகியோருக்கு பெரிதாக சாகசம் செய்யும் வாய்ப்பு இல்லைதான்! அடுத்த பாகத்தில் இவர்கள் மீண்டு வந்து பின்னி பெடல் எடுத்தால்தான் உண்டு! ஆனால் இவர்கள் எல்லாம் எப்படி உயிர் பெறுவார்கள் என்கிற சஸ்பென்ஸ் உடைக்கப்படவில்லை!

 

ஆனால் மார்வெல் சீரீஸ் படங்கள் அனைத்தையும் பார்த்து கரைத்துக் குடித்த ரசிகனால் மட்டுமே இந்தப் படத்தில் வரும் அத்தனை சூப்பர்ஹீரோக்களையும் அவர்கள் பேசும் பொருள் பொதிந்த வசனங்களையும் ரசிக்க முடியும். பெரியவர்கள் இப்படத்தைப் பார்க்கும்போது சின்னப் பயலுகளை அழைத்துச் சென்று, யார் யார் என்ன ஏது... என்று கேட்டுத் தெரிந்துகொள்வது நன்று.!

 

-மிலிந்த்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...