???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'அசுரன்' - தமிழ்சினிமாவில் மற்றுமொரு அபூர்வம்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   05 , 2019  02:36:42 IST


Andhimazhai Image
வெளியான முதல் நாளிலேயே மக்களிடமும், விமர்சன தளத்திலும் பெரும்பாராட்டுகளை குவித்திருக்கிறது அசுரன்.  பூமணியின் வெக்கை நாவலை வாசித்தவர்கள் அல்லது அறிந்தவர்களுக்கு அசுரன் படத்தின் கதைச் சுருக்கத்தை சொல்ல வேண்டியதில்லை. அந்நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இந்த அசுரன்.
 
 சிமண்ட் தொழிற்சாலை கட்டுவதற்காக ஏழை மக்களிடமிருந்த பஞ்சமி நிலத்தையெல்லாம் பிடுங்கிய வடக்கூரானுக்கு, நடுவில் துண்டாக இருக்கும் சிவசாமியின் (தனுஷ்) நிலம் மட்டும் வசப்படாமல் உறுத்துகிறது. அதற்காக அவன் செய்யும் அட்டூழியங்களின் முடிவில் சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்படுகிறான். மகனை பறிக்கொடுத்துவிட்டு தாய் பச்சையம்மாள் (மஞ்சு வாரியர்) படும் துயரத்தை பார்க்க முடியாத சிவசாமியின் இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), அண்ணனை அநியாயமாக கொன்றுவிட்ட வடக்கூரானை திட்டம் தீட்டி முடித்துவிடுகிறான்.
 
மூத்த மகனை துள்ளத்துடிக்க கொன்றவன் பிணமானது சிவசாமிக்கு (தனுஷ்) உள்ளூர மகிழ்ச்சிதான் என்றாலும், வாழவேண்டிய சிதம்பரத்துக்கு முன்னிருக்கும் ஆபத்துகள் சிவசாமியை அச்சுறுத்துகிறது. எஞ்சியிருக்கும் குடும்பத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மனைவி பச்சையம்மாளையும், மகளையும் மைத்துனர் பசுபதியுடன் அனுப்பிவிட்டு, மகனை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடி திரிகிறான்.  மகனையும் குடும்பத்தையும் காப்பாற்ற துடிக்கும் சிவசாமியின் போராட்டமாக அசுரன் திரையில் நீள்கிறது.
 
கதை நிகழும் நிலம், அம்மனிதர்களின் மொழி, அவர்களது வாழ்க்கையை சிதறடிக்கும் சாதிய கோரத்தை அசலாக பதிவு செய்ததில் அசுரன் தமிழ் சினிமாவில் மற்றுமொரு மிகமுக்கிய படைப்பாக சேர்ந்திருக்கிறது. ஒரு நாவலை எடுத்து திரைவடிவில் மாற்றியிருக்கும் வெற்றிமாறன், முடிந்தவரை அதன் கருப்பொருளை அசலாக உணர்த்தி வெற்றிபெற்றிருக்கிறார்.
 
குடும்பத்தை காக்க துடிக்கும் சாதாரண சம்சாரியாக இருக்கும் சிவசாமியின் முன்கதையில், வெறுமென அவனது கடந்தகாலத்தை மட்டும் சொல்லாமல், சாதிய ஆதிக்க கொடூரர்களால் அம்மக்கள் கண்ட துயரத்தை, பஞ்சமிநில மீட்பு போராட்டத்தை, இரக்கமற்ற படுகொலைகளை சொல்லி உணர்த்திய பகுதி கனமானது.
 
மகனை இழந்து கதறும் அப்பாவி தந்தையாக, சிதம்பரத்தை காப்பாற்ற களமிறங்கும் வேங்கையாக, முன்கதையில் விடலைத்தன இளைஞராக நடிப்பில் பல பரிமாணங்களை இப்படத்தில் தனுஷ் எட்டியிருக்கிறார். அவரது திரைவாழ்வில் காலம்கடந்து பெயர் சொல்லும் படமாக நிச்சயம் அசுரன் இருக்கும்.
 
கென் கருணாஸ், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி என அனைவரது பாத்திர வார்ப்புகளும் கதையின் தேவைக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. பழித்தீர்கும்போது கோபத்தையும், அதுவரை அறிந்திராத தந்தையின் வீரத்தை காணும்போது திகைப்பையும் கண்களாலேயே இயல்பாக உணர்த்தி படம் நெடுக ஆச்சரியப்படுத்தியுள்ளார் கென். வேற்றுமொழியைச் சேர்ந்தவர் என்பதற்கு தடமே இல்லாமல் மஞ்சுவாரியரின் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் கரிசல்வாசம் வீசுகிறது.
 
இருளிலும், ஒளியிலும் மாறிமாறி பயணிக்கும் திரைக்கதையில் வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை. முன்கதையில் காண்பிக்கப்படும்  காலகட்டத்தின் காட்சிகளுக்கு ஒளிப்பதிவு கூடுதலாக வலுசேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளின்போது அசுரா பாடலோடு வரும் ஜி.வி. பிரகாஷின் இசை முறுக்கேற்றுகிறது. குறிப்பாக பின்னணி இசையில் தேவையின்போது இசைத்து, மற்ற இடங்களில் காட்சியின் சப்தங்களுக்கு வழிவிட்டதில் பிரகாஷ் நிமிர்ந்து நிற்கிறார்.
 
சாதிய ஆதிக்கவாதிகளின் கொடுமைகளுக்கு இரையாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு விரட்டப்படுகிறார்கள், உயிர்பிழைத்திருக்க அவர்கள் எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்படம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது. தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கான ஆதிக்கவாதிகளின் குற்றச்செயல்களையும், தம்மையும் தமது குடும்பத்தையும் பாதுகாக்க உழைக்கும் மக்கள் ஆயுதம் ஏந்துவதையும் காவல், நீதி அமைப்புகள் பாகுபாட்டுடன் அனுகுவதை அசுரன் தோலுரிக்கிறது. நாவலை கொண்டு உருவாக்கியதில், கதைக்களம் – உள்ளடக்கத்தில், படைக்கப்பட்ட விதத்தில் என அனைத்துவகையிலும் தமிழ்சினிமாவில் அசுரன் ஒரு அபூர்வம். 
 
நாயக பிம்பத்தை முன்னிறுத்தும் இன்னொரு சினிமாதான் என்றாலும் கூட கதையாலும் சாதியப் பின்னணியாலும் இதை அபூர்வம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது.
 
-வசந்தன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...