அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உத்திரத்திருநாள் -கலாப்ரியா

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   16 , 2020  17:06:39 IST


Andhimazhai Image

 

 

பங்குனியின்
கோடை வெம்மை
படையல் வேகும்
உலை வெம்மை
மார்பு மொய்க்கும்
பார்வை வெம்மை
சன்னதம் கொண்ட
சாமியாடிகளின் உடல் வெம்மை
கொண்டாட்டம் கூடக்கூடப்
பொங்கி வழியும்
காம வெம்மை பார்த்து
உத்திரத் திருநாளில்
இயக்கி இல்லாத
குல சாமிகளின்
தாப வெம்மை தணிக்க
சாமக் கொடையின்
ரத்த வெம்மை 

-கலாப்ரியா 

 

அந்தமுறை சபரி மலைக்கு வழக்கம் போல பெரிய குழுவாகச் செல்லவில்லை. சில காரணங்களாமல் நான்கு பேர் காரில், சீக்கிரமே சென்று வருவது என்று சங்கர் அண்ணாச்சி சொன்னார். மாலை போட்ட பின் ’சங்கர் சாமி’ என்று சொல்ல வேண்டும். அவர் ரொம்பக் கறாரானவர். அதிலும் மாலை போட்ட பின்,செய்ய வேண்டிய நடைமுறைகளைச் சரியாகச் செய்வதில் முரட்டுப் பிடிவாத்த்துடன் இருப்பார். ஆனால் அதற்கு அவர் சொல்லும் காரணம் சரியாகவே தோன்றும்.” நல்ல படியா விரதமிருந்து, நல்லபடியா போய்ட்டு வரணும். அதுல ஒரு நிம்மதி இருக்கும். நல்லது தானாக நடக்கும்  விரதத்தில குறை வச்சிட்டோமே, தெய்வ குத்தம் வந்திருமோ, ஏதாவது கெட்டது நடக்குமோன்னு பயப்பட வேண்டிய அவசியமில்லை,” என்பார்.

 

அந்த முறை பம்பையில் இறங்கி, குளியல் எல்லாம் முடித்து இரு முடிக்கு பூசை செய்து விட்டு மலை’சவட்டலாம்’ என்று ஊதுபத்தியைப் பொருத்தினால் தீக்குச்சி அணைந்து கொண்டே இருந்தது. அப்படி காற்று எதுவும் வீசவில்லை. சங்கர் சாமி,” ஏயப்பா சாமிகளா, கட்டு கட்டும் போது எல்லாரும் அவங்கவங்க குலதெய்வ.த்தை நினைக்கவாவது செய்தீங்களா,” என்றார். எனக்கு எங்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது, எது என்றே தெரியாது. பலருக்கும் அப்படி இருக்கலாமென்று, வழக்கமாக ஒரு நாற்பது, ஐம்பது பேர் பெரிய குழுவாகப் பெருவழியில் போகும் போது ஒரு மண்டல விரத காலத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமை, பாபனாசம் சொரிமுத்தைய்யன் கோயிலுக்குப் போய் விடுவோம். ஒவ்வொருவரும் அவரவர்கள் குலதெய்வத்தை நினைத்து அங்கேயே பிரமாதமாகப் பூசையெல்லாம் செய்து கும்பிட்டுக் கொள்வோம். ஒரு வாரம் நம்பி கோயில், ஒரு வாரம் அருஞ்சுனைகாத்த சாஸ்தா கோயில் என்றும் போவோம்.

 

     மற்றவர்கள் கண்ணை மூடி எதையோ நினைத்துக் கொண்டார்கள். நான் குற்றாலம் கருப்பசாமியை நினைத்துக் கொண்டேன்.. அதற்கப்புறம், தீ அணையவில்லை. பத்தியை ஏற்ற முடிந்தது. அப்புறம் ஒவ்வொரு பங்குனி உத்திரத்திற்கும் குற்றாலம் போய் விடுவோம். மனைவியின் பெற்றோர் வீடு அங்கேதான். குலதெய்வம் என்பது அப்பா வழியில் வருவது. அம்மாக்கள் வழி குலதெய்வம், கல்யாணங்களுக்குப் பின் மாறி விடும். என் அம்மா வழியில் குல தெய்வம் என்பது அவள் வீட்டிலேயே இருக்கும் கோபாலசாமி என்பாள். நெல்லைக்கு கிழக்கே இருக்கும் ராஜவல்லிபுரத்தின் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு கோபாலசாமிதான் குலதெய்வம். அது கிருஷ்ணர் உருவம் பதிக்கப்பட்ட ஒரு அழகிய செம்பு. அம்மாவின் உறவுக்காரர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கோபாலசாமியை வைத்து வழிபட ஒரு மாடம் இருக்கும். அதற்கு ’சேர்மாடம்’ என்று பெயர்.ஒவ்வொரு விட்டிலும் திருமணம் போன்ற ஏதாவது நல்ல காரியங்கள் நடைபெறும் போது கோபாலசாமியும் அந்த வீட்டு சேர்மாடத்திற்கு வந்து விடுவார். அதனால் அவர்கள் வீட்டிலெல்லாம் கண்டிப்பாக ஒரு கோபாலகிருஷ்ணனோ, கோபாலோ, கிருஷ்ணவேணியோ இருப்பார்கள். கோபாலசாமியை வணங்கும் அந்தக் குறிப்பிட்ட இனத்தவர் எல்லோரும் பந்தல்குடி என்ற ஊரிலிருந்து ராஜவல்லிபுரம் வந்தவர்கள் என்பார்கள். சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன், அவர்கள் அப்படி இடம் பெயர்ந்து வரும் வழியில் கண்டெடுத்த அபூர்வச் செம்புதான் கோபாலசாமியாக இன்றளவும் வழிபாடு செய்ப்படுகிறது. அதற்கு வருபவர்களும் இப்போது அருகிப்போய் விட்டார்கள். அவர்கள் வேளாளத் தொழில் புரிந்து அந்த ஊரிலேயே இருக்கையில் சிறப்பாக வழிபாடு நடந்திருக்கும். இப்போதைய் பொருளாதாரச் சூழலில் கணிணிகள்ன் மாயக்கரங்கள் எல்லோரையும் எங்கெங்கோ தூக்கி வைத்து விட்டது.

 

     பொதுவாகவே மக்கள் பிழைப்புத் தேடி ஒவ்வொரு ஊராக இடம் பெயர்ந்து ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒரு ஊரில் தங்கி விடுகிறார்கள். அவர்கள் ஆதியில் புறப்பட்ட இடத்தில்  அவர்கள் வழி பட்ட தெய்வமே ’குலதெய்வம்’ என்று கொண்டாடப்படுகிறது. ஒன்று பட்ட நெல்லை மாவட்டத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும். சுடலைமாடனும், கருப்பசாமியும வெவ்வேறு பெயர்களில், குலதெய்வங்களாக இருக்கிறார்கள். இந்தப் பெயர்களே சுவாரசியமானவை. பல ஆட்டோக்களிலும் லாரிகளிலும் முன்புறம் எழுதி வைத்திருப்பதைப் படித்தாலே போதும். அவர்களின் பயணம் செய்து கொண்டே இருக்கிற தொழிலுக்கு இவர்களையே பெரும் வழித்துணையாக நம்புகிறார்கள் என்று புரியும். கிளிக்கூட்டு கருப்பசாமி , மொட்டையடி சாமி , தூசிமாடசாமி, பட்டவராயன், கரடிமாடசாமி, பன்றி மாடசாமி, பூதத்தான், சட்டநாதன், கேத்திர பாலன், சொரிமுத்தையனார், புனைமாலை சாஸ்தா, பலவேசக்காரன், சிவனணைந்த பெருமாள், காளை மாடன் துணமாடன், குற்றால மாடசாமி, என்று வண்டி வண்டியாகப் பெயர்கள் உள்ளன.இதில் துரை மாடனுக்கு பிஸ்கட், புறா, பிராந்தி சிகரெட் வைத்து வணக்குகிறார்கள். குற்றால மாடசாமிக்கு, புளியாத தோசைதான் பிரியம்.

 

     ஒவ்வொரு பங்குனிமாதம் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்கிற நாளன்று, குலதெய்வம் கோயிலுக்கு கண்டிப்பாகப் போய் விடுவார்கள். சிலர் சிவராத்திரிக்குப் போவார்கள். அப்போதெல்லாம், உத்திரம் என்றால் குலதெய்வம் கோயிலுக்கு, ஒரு நாள் முன்னதாகவே வண்டி கட்டிக் கொண்டு, பாத்திர பண்டங்கள், மசாலாச் சாமான்களோடு மொத்தக் குடும்பத்தோடு போவார்கள். வண்டியோடு கட்டப்பட்ட ஒரு ஆடும் கூடவே நடந்து வரும். திரும்பும் போது அது பலி கொடுக்கப்பட்டு சமைத்துச் சாப்பிட்டது போக உப்புக்கண்டமாக வண்டியின் ஓரங்களில், கயிற்றில் கோர்க்கப்பட்டு காய்ந்து தொங்கும். போகும் போது வண்டி மாடுகளி நடையிலும் மனுஷர்களிலும் மகிழ்ச்சி கொப்பளிக்கும். திரும்பும்போது மாடுகளுடன் எல்லாமே தளர் நடை போடும்.

 

ஒவ்வொருவரின் குலதெய்வங்களும் ஏதாவது காட்டுப்பகுதியில் இருக்கும். அதை வணங்குகிற ஒரே இனத்தாரின் சமூகக் கூடுகையாக உத்திரத்திருநாள் அமையும். பழைய சொந்த பந்தங்களையும் சந்தித்து உறவுகளையும் நினைவுகளையும் மீட்டெடுக்கும் நாளாக அமையும் எல்லோரும் அன்றைக்கு அங்கே கூடுவதே பெரிய கொண்டாட்டம். அவரவர் காட்டுக்குள் நல்ல இடமாகப் பிடித்து, வண்டியை அவிழ்த்துப் போட்டு,  சேலைகளை  மறைப்பாகக் கட்டி, அடுப்புக்கு கூட்டி கொண்டு வந்த பண்ட பாத்திரங்களைக் கடை பரப்பி, காட்டுச் சமையல் ஆரம்பமாகும். பெரும்பாலும் ஆடு கோழி பலியிடப்பட்டு பெரும் படைப்பாகப் போட்டு,அள்ளி அள்ளித் தின்பதும்,நடக்கும். ஆணோ பெண்ணோ விடலைக் கொண்டாட்டங்களுக்கும் குறைவிருக்காது.  

 

அதிகம் பேர் கூடுகிற பாபனாசம் சொரிமுத்தையனார் கோயிலில் உத்திரத்திருநாளுக்கு ஆயிரக் கணக்கிலும் ஆடி அமாவாசைக்கு லட்சக் கணக்கிலும் திரளுவார்கள். சங்கிலிபூதத்தான், மகாலிங்கசாமி, சொரி முத்தையனார், பட்டவராயன், தூசிமாடன்,சின்னத்தம்பி, என்று பல பீடங்கள் உண்டு. பூடம் என்று பேச்சு வழக்கில் அழைப்பார்கள். அவரவர்கள் ஆந்தந்தப் பீடத்தின் முன் சாமியாடுவார்கள். அவர்களை, சாமியாடி, சாமி கொண்டாடி, கோமரத்தாடி என்று அழைப்பார்கள். ஒரு சாமிக்குரியவர் அடுத்த சாமி முன்னால் ஆட மாட்டார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துடி இருக்கும். அப்படி மாறி ஆடினால்,அங்கே போலே என்று சொல்லி விடுவார்கள். “பூடம் தெரியாம சாமியாடுதியா,” என்று சொலவடை கூட உண்டு. சாதாரண காலத்தில்  இதற்கு, ’என் பலம் தெரியாம என்னிடம் மல்லுக்கு வாரியா” என்ற அர்த்தமும் உண்டு.

 

குலதெய்வ வழிபாடு சாஸ்தா வழிபாட்டோடு இணைத்துப் பார்க்கப் படுகிறது. பல இடங்களிலும் சுடலைமாடன் நாலு, ஐந்தடி உயரத்தில், இருப்பார். அடியில் பெரிதான சதுரமாகாவும், உயரமாக உயரமாக குறைந்து கொண்டே வருகிற சதுரமான  அமைப்பில் இருப்பார். சிலர் லிங்க வழிபாட்டு இதிலிருந்து தொடங்கியதாகச் சொல்லுவார்கள். சுடலையைச் சிவன் மகன் என்றே நாட்டுப்புற இலக்கியங்கள் கூறும். கருப்பசாமி, திருகிய மீசையும் , மிரட்டி உருட்டுகிற கண்களோடும் இருப்பார். சுடலைமாடனுக்கு இணையாக இசக்கி என்று மருவி விட்ட இயக்கி துணைத் தெய்வம். சாஸ்தாவுக்கு பூரணா புஷ்கலா என்ற இருவர் துணைவியர். சாஸ்தா வழிபாடு சமண பவுத்த தொடர்புடையவை என்பவர்களும் உள்ளனர்.

 

பொதுவாக இந்த உக்கிரம் நிறைந்த, ஆபத்தில் உதவிக்கு வருகிற வீரத்தெய்வங்களுக்குப் பூசை செய்பவர்கள், அந்தந்த இனம் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். இதற்கு பட்டர்களோ அய்யர்களோ வருவதில்லை. சமீபமாக அவர்கள் இதற்கும் வருகிறார்கள். திராவிடப் பண்பாட்டுடன் இணைந்த நாட்டுப்புறத் தெய்வங்களின் சமூக மானுட அமைப்பைச் சிதைத்து இதையும் வைதீகத்திற்குள் கொண்டு வரும் அரசியல் முயற்சிகள் நடக்கின்றன. ஆனாலும் கணியான்கள் கைவெட்டி பலிச்சோறு  படைப்பதும், சங்கிலி பூதத்தானின் கோமரத்தாடிகள்  மார்பில் சங்கிலியால் அறைந்து கொள்வதும் போன்ற உச்ச வழிபாடுகளை வேறு யாராலும் செய்ய முடியாது. வேறு யாருக்கும் இந்தத் தெய்வங்கள் அப்படி அருள் பாலிக்கவும் செய்யாது.

 

(அந்திமழை ஏப்ரல் 2020 இதழில் வெளியான கட்டுரை)

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...