அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 101 
|
அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் ட்ரம்ப்!- நடிகர் அர்னால்ட் ஆற்றிய உருக்கமான உரை!
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 08:50:38 IST
ஜோ பிடனை புதிய அதிபராக அறிவிப்பதை தடை செய்யும் விதமாக ட்ரம்பின் ஆதரவாளர்கள் கடந்த வாரம் அமெரிக்காவில் ரகளையில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தை உருவாக்கினர். அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட இந்த ஆபத்து பலரிடமும் கவலையை உருவாக்கியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகரும் குடியரசுக் கட்சி பிரமுகருமான அர்னால்ட் ஸ்வாஸ்னெகர், இப்பிரச்னையில் தன் சொந்த கட்சி ஆட்களையே கண்டித்து, கவலையுடன் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதன் தமிழாக்கம்:
புலம்பெயர்ந்து வந்த ஒருவன் என்கிற முறையில் என் சக அமெரிக்கர்களுக்கும், உலகில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கும் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் பற்றி சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
நான் ஆஸ்திரியாவில் வளர்ந்தவன். கிறிஸ்டால்னாட் அல்லது உடைந்த கண்ணாடிகளின் இரவு பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். 1938 இல் யூதர்களுக்கு எதிராக வன்முறை நடந்த இரவு அது. நாஜிகளுக்கு சமமானவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை. அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை நடந்ததும் உடைந்த கண்ணாடிகளின் நாள் தான். அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடத்தின் ஜன்னல்களில் உடைந்த கண்ணாடி இருந்தது. அந்த கும்பல் அக்கட்டடத்தின் ஜன்னல்களை மட்டும் உடைத்தெறிய வில்லை. நாம் அசைக்கமுடியாதவை என்று நினைத்த கொள்கைகளை அவர்கள் உடைத்துள்ளனர். அமெரிக்க ஜனநாயகத்தின் இல்லத்தை மட்டும் அவர்கள் உடைக்கவில்லை; நம் நாடு உருவாக்கப்பட்டுள்ள அடிப்படை கொள்கைகளையே காலில் போட்டு மிதித்துள்ளனர்.
ஜனநாயகத்தை இழந்து துன்புற்ற நாட்டின் இடிபாடுகளிடையே வளர்ந்தவன் நான். இரண்டாம் உலகப்போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 1947இல் நான் பிறந்தேன். வரலாற்றில் மிக மோசமான ஆட்சியில் பங்கேற்ற குற்ற உணர்ச்சியில் குடித்து அழிந்துகொண்டிருந்த மனிதர்களே என்னைச் சுற்றி இருந்தனர். அவர்களில் அனைவருமே வெறித்தனமாக யூதர்களுக்கு எதிராக இருந்தவர்களோ நாஜிகளோ அல்ல. தங்களை அறியாமல் படிபடிப்படியாக அந்த பாதையில் சென்றவர்கள். அவர்கள்தான் என்னைச் சுற்றிலும் வாழ்ந்தார்கள்.
இதை நான் வெளிப்படையாக சொன்னதே இல்லை. ஏனெனில் இது வலிதரும் நினைவு. என் அப்பா வாரத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ குடித்துவிட்டு வருவார். எங்களை அடிப்பார். அம்மாவை அச்சுறுத்துவார். நான் இதற்கு அவரை குற்றம் சொல்லமாட்டேன். எங்கள் பக்கத்துவீட்டுக்காரரும் அவரது குடும்பத்துக்கு இதைத்தான் செய்துகொண்டிருந்தார். அடுத்த வீட்டுக்காரரும் இப்படித்தான். என் காதால் கேட்டதும் கண்ணால் பார்த்ததும் இதைத்தான். அவர்கள் தங்கள் உடலில் மிஞ்சி இருந்த குண்டுத் துகள்களின் வலியால் துன்புற்றனர். அவர்கள் பார்த்தது, செய்தது ஆகியவை தந்த உணர்வு வலியை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.
அது அனைத்துமே பொய்கள், பொய்கள், பொய்களாலும் சகிப்பின்மையாலும் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் வாழ்ந்த அனுபவத்தால் கட்டுப்பாட்டை மீறி சூழல் எப்படிச் செல்லும் என்பதை நேரடியாகக் கண்டுள்ளேன்.
அதுபோல் ஒன்று இங்கே நடக்கும் என நாட்டிலும் உலகிலும் அச்சம் இருப்பதை அறிவேன். அப்படி நடக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் சுயநலம் வெறுப்பு ஆகியவற்றின் மோசமான விளைவை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
நேர்மையான தேர்தலின் முடிவை மாற்ற அதிபர் ட்ரம்ப் முயற்சி செய்தார். பொய்களால் மக்களை திசை திருப்பி ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். என் தந்தையும் அண்டை வீட்டாரும்கூட பொய்களால்தான் திசை திருப்பப்பட்டனர். இந்த பொய்கள் எங்கே கொண்டு செல்லும் என எனக்குத் தெரியும். அதிபர் ட்ரம்ப், தோல்வியுற்ற ஒரு தலைவர். மிக மோசமான அதிபராக அவர் வரலாற்றில் இடம்பெறுவார். பழைய ட்வீட் போல பொருட்படுத்தபடாத ஆளாக அவர் ஆவார் என்பதே ஒரு நல்ல விஷயம்.
ஆனால் அவரது பொய்களை, துரோகத்தை சாத்தியப்படுத்திய இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை என்ன செய்வது? அவர்களுக்கு டெட்டி ரூஸ்வெல்ட் சொன்னதை நினைவூட்டுகிறேன்: “தேசப்பற்று என்றால் நாட்டை ஆதரிப்பது. நாட்டின் அதிபரை ஆதரிப்பது அல்ல.’’
’துணிச்சலான முகங்கள்’ என்ற புத்தகத்தை ஜான் எப் கென்னடி எழுதினார். என்னுடைய சொந்த கட்சியைச் சேர்ந்த பலர் தங்கள் முதுகெலும்பின்மையால் அதுபோன்ற ஒரு நூலில் எப்போதும் இடம்பெறவே மாட்டார்கள். நிச்சயமாக.
நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை இவர்கள் தூண்டி விட்டுள்ளனர். ஆனால் நினைத்தது நடக்கவில்லை. நமது ஜனநாயகம் உறுதியாக நின்றது. சில மணிநேரங்களிலேயே செனட் அவையும் பிரதிநிதிகள் அவையும் மக்கள் பணி ஆற்றத் தொடங்கின. பிடன் அவர்களை புதிய அதிபராக உறுதிப்படுத்தி அறிவித்தன. மாண்புமிக்க ஜனநாயகக் காட்சி இது!
நான் கத்தோலிக்கனாக வளர்ந்தவன். சர்ச்சுக்குப் போனேன், கத்தோலிக்க பள்ளியில் பயின்றேன். பைபிள், சமயவினாவிடை போன்றவற்றைக் கற்றேன். அப்போது கற்ற ஒன்று இப்போதும் பொருத்தமாக உள்ளது. ஊழியனின் இதயம்! உங்களை விட பெரிய ஒன்றுக்காக சேவை செய்வதாகும். பொது ஊழியரின் இதயமே நம்முடைய தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் இப்போது நாம் கோருவது. தங்கள் சொந்த அதிகாரம், சொந்த கட்சி ஆகியவற்றை விட பெரிய ஒன்றுக்காக அவர்கள் ஊழியம் செய்யவேண்டும். உயர்ந்த லட்சியங்களுக்காக, நாடு அமைந்திருக்கும் அடிப்படை கொள்கைகளுக்காக, பிற நாடுகள் எதிர்நோக்கும் கொள்கைகளுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகள் நமக்குத் தேவை.
கடந்த சில நாட்களாக பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள் என்னை அழைத்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் நிலைமை குறித்து உண்மையில் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினர். ஒரு பெண் அமெரிக்காவிற்காக கண்ணீர் வடித்தார். அமெரிக்கா என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய இலட்சியவாதத்தின் அற்புதமான கண்ணீர் அது. அந்த கண்ணீர் உலகத்தில் அமெரிக்கா என்னவாக இருக்க வேண்டும் என நமக்கு நினைவூட்டுகிறது.
அமெரிக்காவின் சமகால நிகழ்வுகளால் மனமுடைந்து என்னிடம் பேசியவர்களிடம் நான் ஒன்றை உறுதியாக கூறினேன். இந்த இருண்ட காலத்தில் இருந்து அமெரிக்க மீண்டெழுந்து வந்து மீண்டும் பிரகாசமாக ஒளிரும் என்று!
நீங்கள் இப்போது பார்க்கும் இந்த வாள், கொனான் வாள். இந்த வாள் பற்றிய செய்தியை கேளுங்கள். இதன் மீது நீங்கள் எவ்வளவு அழுத்தம் செலுத்தி பதப்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு இந்த வாள் வலிமை அடையும். இதனை பெரிய சுத்தியால் அடித்து, நெருப்பில் சூடேற்றி பின்னர் தண்ணீரில் ஆற்றினால் இதன் வலிமை அதிகரிக்கும். அதேபோல செய்யச் செய்ய வாளின் வலிமை மேலும் கூடும். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் ஒரு நேர்த்தியான வாளை உருவாக்குபவராக மாற வேண்டுமென நான் எண்ணுகிறேன். ஏனெனில் நமது ஜனநாயகம் அந்த வாளுக்கான எஃகு உலோகத்தை போன்றது. அதை நாம் மேலும் பதப்படுத்துகையில் அதன் வலிமை இன்னும் கூடும். நமது ஜனநாயகம் போர்கள், அநீதிகள் மற்றும் கிளர்ச்சிகளால் பதப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் நாம் சந்தித்த தடுமாற்றம் நம்மை இன்னும் வலிமை ஆக்கும் என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் இப்போது எதை இழந்திருக்கிறோமென நாம் புரிந்துகொண்டோம். இது மீண்டும் நடைபெறாமல் தடுக்க நமக்கு நிச்சயமாக மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. மன்னிக்க முடியாத இந்த நிலைக்கு நம்மை கொண்டு வந்த நபர்களை நாம் இதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும். நமது கட்சி, கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றைத தாண்டி, ஜனநாயகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இப்போது நடந்துள்ள விபத்தில் இருந்து விடுபட்டு நாம் குணமடையவேண்டும், குடியரசு கட்சியினராகவோ, ஜனநாயக கட்சியினராகவோ அல்ல, அமெரிக்கர்களாக நாம் குணமடையவேண்டும்.
இந்த செயல்முறையை தொடங்க, உங்களது அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் என்னோடு இணைந்து இதை அதிபர் ஜோ பிடனுக்கான சொல்லுங்கள்: “அதிபராக தேர்வாகிய பிடன் அவர்களே, அதிபராக சிறப்புடன் செயல்பட உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் வெற்றி பெற்றால், நமது தேசம் வெற்றி பெறும். மனதார நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம், நீங்கள் எங்களை ஒன்றிணைக்கிறீர்கள். அமெரிக்க அரசியல் சாசனத்தை கவிழ்த்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருப்பவர்களே தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒருபோதும் ஜெயிக்க மாட்டீர்கள். ஜோ பிடன் அவர்களே, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் தருபவர்களிடமிருந்து காக்க உங்களோடு நாங்கள் இன்றும், நாளையும், எப்போதும் இருப்போம்.”
கடவுள் உங்கள் அனைவரையும், அமெரிக்காவையும் ஆசீர்வதிக்கட்டும்!
|
|