???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரங்கேற்றம்-நாடகக்கலைஞர் முனைவர் சி.கார்த்திகேயன் எழுதும் தொடர்- 8

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   04 , 2014  05:19:30 IST


Andhimazhai Image

 

 இந்திய மண்ணில் மூன்றாம் அரங்கு எனும்  புதிய நாடக முறையை நிலமெங்கும் பயிரிட்ட போராளி பாதல் சர்க்கார். ஏவம் இந்திரஜித் நாடகத்திற்குப் பிறகு பாதல் சர்க்காரின் நாடகப் படைப்புகளில் மிகவும் முக்கியமான நாடகப் பிரதி மிச்சில். 1974ல் வங்கத்தில் நடந்த அரச வன்முறையில் இறந்து போன ஒரு தனி மாந்தனுக்காக அவன் பலியான அதே இடத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகம்.  ஊர்வலம் எனப் பொருள் படும்.

 

பாதல் சர்க்காரின்  தமிழக வருகைக்குப் பிறகு  ஊர்வலம்  நாடகம் கோ. இராசாராம் அவர்களால் தமிழுருவம் கண்டது. தமிழக மண்ணில் பாதல் சர்க்காரின் நாடக பட்டறையில் வழியாக பல வீதி நாடகக் குழுக்கள் உருவாயின. அவர்களில் மு. இராமசாமி, ஞாநி போன்றவர்கள் முக்கியமான நாடக ஆளுமைகள் ஆவார். இதில் ஊர்வலத்தை முதலில் அரங்கேற்றியவர் ஞாநி. இந்நாடகம் பின்னாளில் பிரளயன் மற்றும் பல கலைஞர்களால் மேடையேற்றம் கண்டது.

 

போராட்டக் களத்தில் விளைந்த வீதி நாடகமான ஊர்வலம் 1999 ல் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வு கால நாடகமாகத் தயாரிக்கப்பட்டது. நாடகத்துறையின் முன்வளாகத்தில் உள்ள திறந்த வெளியில் நாடகம் அரங்கேற்றம் ஆனது. இதை இயக்கியவர் இரா. ஆனந்த வேலு.  இவர் நாடகத் துறையில் முதுகலை இறுதி ஆண்டு மாணவர். பிஎஸ்சி கணினியியல் கற்றவர். கலை ஆர்வத்தில் வீட்டாருக்கே தெரியாமல் முதுகலைப் படிப்பை  நாடகத்துறையில்   தொடங்கிய இளம் தொழிலதிபர். நல்ல தமிழ் சினிமாவின் மீது அளவில்லாது காதல் கொண்டவர். இன்று ஊடகம் மற்றும் நிகழ்கலை விமர்சகனாகவும் தொழில் அதிபராகவும் புதுச்சேரியில்  இயங்கி வருபவர்.

 

நாடகத்தின் தொடக்கமே ஒரு தேடலோடு துவங்கும். இது வாழ்வைத் தேடும் ஊர்வலம், வாழ்வின் பாதையைத் தேடும் ஊர்வலம், தொலைந்து போனவர்களின் தேடல் ஊர்வலம், பாதைகள் அறியாப்  பயணங்களின் ஊர்வலம், இது நமக்கான நமது ஊர்வலம் எனக் கூறியபடி கலைஞர்கள் அரங்கைச் சுற்றி வரத் தொடங்குவார்கள். ஊர்வலங்கள் பல வடிவ நிலைகளை அடைந்து முடிவில் ஒரு அரசியல் ஊர்வலமாக மாறுகிறது. தாத்தாவுடன் வந்த சிறுவன் ஒரு ஊர்வலக் கூட்டத்தில் காணாமல் போகிறான். காலம் கடக்கிறது . தாத்தா பேரன் தேடல் மட்டும் முடிவின்றி தொடர்கிறது. சாவும், இழப்பும், அடக்கு முறையும், அதிகார நிலைப்பாடுகளும் ஊர்வலப் பயணமெங்கும் நிறைந்திருக்கும்.

 

இந்த நாடகத்தில் பேரனும் தாத்தாவும் மிக முக்கியமான பாத்திரங்களாகும். சிறுவனாக நானும் தாத்தாவாக வெங்கடேசனும் நடித்தோம். நடிப்பில் பெரும் பகுதி சோகமாகவே நடித்தோம். உறவைத் தேடியும் அவல குரல் எழுப்பியபடியும் தாத்தாவை தேடுவதாக என்  வசனம் அமையும். வெங்கடேசன் முழுமையும் வெண்முடி தாடி எனத் தாத்தா பாத்திரத்தில் வருவார். நான் ஏற்றிருந்த சிறுவன் பாத்திர வேடம்  சிறிய கால் டவுசர், சிறிய சட்டை, முகத்தில் மைம் நாடகத்திற்கான ஒப்பனை என்று அமையும்.

 

சிறுவனுக்கான மென்குரலோடு பயந்த பாவனைகளுடன் நாடகம் முழுக்க அலைவேன். இந்த நாடகத்தில் விளையாட்டுப் பாவனை செய்து ஊர்வலத்தை ரசிக்கும் பகுதி என் சிறார் பருவத்தை அரங்கில் கொண்டுவர உதவிற்று. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது  அரங்கப் பொருள் உருவாக்கம் எனும் பாடத்திட்டத்திற்காக,  வீதி நாடகத்தை உள்அரங்கில் நிகழ்த்தினால் எத்தகைய அரங்க வடிவமைவு தேவை  என்பதைச் செய்து  காட்டிடச் செய்முறைத் தேர்விலும் ஊர்வலம் நாடகம் உதவிற்று. 

 

ஊர்வலத்தில் பங்கு பெறும் பாத்திரங்களாக முதுகலை விளையாட்டுத் துறை மாணவர்கள் நடித்தார்கள். ஓடுவதும் குதிப்பதும் வித்தை காட்டலும் மட்டுமின்றி ஆடவும் கற்றிருந்த விளையாட்டுத் துறை நண்பர்களை ஊர்வலப் பாத்திரங்களாக இயக்குனர் தேர்வு செய்திருந்தார். இதில் தெய்வமுத்து, பன்னீர், குகன், அருணாச்சலம், இராமசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். ஊர்வலப் பாத்திரங்களின் உடை விளையாட்டு துறைக்கு என்று உள்ள பனியன், டவுசர் ஆகியவற்றைப் பயன் படுத்தி உடை அமைவை எளிமை ஆக்கியிருந்தார். தெய்வ முத்து மிக அழகிய குரலில் பாடி நடித்து பார்வையாளர்களை வசப்படுத்தியவராவார்.  நாடகத்தின் இடையே எங்கள் பேராசிரியர் கரு அழ.குணசேகரன் தான் தொகுத்த பாடல்களைத் தானே பாடி நாடகத்தை உயிரூட்டினார். ஒளியமைப்பை ஜெகன் செய்தார்.

 

இந்நாடகத்தில் நடிக்கும் தாத்தா பாத்திரம் தவிர  நாங்கள் அனைவரும்  விடுதி மாணவர்கள். இரவு உணவை முடித்து விட்டு விடுதியின் முன்புறத்தில்  ஒன்று கூட ஆரம்பிப்போம். ஒத்திகையானது இரவு 10.30 தொடங்கி 1 மணியைத் தொடும். மரங்களில் அண்டிய பறவைகள் சரசரக்க பறை அதிரத் தொடங்கும். கரு.அழ.குணசேகரன் ஐயாவின் நாட்டுப்புறப்பாடல் காற்றில் கலங்கும். எங்கள் குரலோலம் விடுதி சுவரை அசைக்கும். படிப்போரின் பார்வைகள் ஜன்னல் பகுதியில் குவியும். ஒரு நாள் இரு நாள் என்றால் சுவை தினமும் என்றால் பகை. ’டேய்  மச்சான் படிக்க விடுங்கடா’ என்ற குரலும் எழும்பும். ஆனாலும் நாடகம் முடியும் வரை எங்கள் ஓசையும் ஒலியும் ஓலமும் விடுதி வாசலில் நிற்கவேயில்லை.

(தொடரும்)
 
 
 
(கார்த்திகேயன் நாடகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த நவீன  நாடகக் கலைஞர். பல சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச் சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன. வியாழன் தோறும் இத்தொடர் வெளியாகும்)

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...