???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரங்கேற்றம்-நாடகக்கலைஞர் முனைவர் சி.கார்த்திகேயன் எழுதும் தொடர்- 7

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2014  04:36:27 IST


Andhimazhai Image

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வுகால நாடகத் தயாரிப்பாக உதிர்காலம் நாடகம் 1999 ல் அரங்கேற்றம் ஆனது. இதை இயக்கியவர் ஜெகன்.  இவர் நாடகத் துறையில் முதுகலை இறுதி ஆண்டு மாணவர். பாரதியார் பல்கலைக் கூடத்தில் இளங்கலை ஓவியம் படித்தவர். வேலு சரவணனின் குழுவில் முதன்மை நடிகர். தற்போது ஒசூரில் உள்ள விளையாட்டுச் சார்ந்த பள்ளியில் நாடக இயக்குனராகவும் ஆசிரியராகவும் செயலாற்றி வருபவர். கோட்டோவியப் பாணியில் இயற்கையையும் மனிதனையும் கலந்து வரையும் தூரிகைக் கலைஞர்.  ஓவியமும் நாடகமும் கலந்த வண்ணப் படைப்பாக  அரங்கியலை உயிர்ப்பித்திருந்தார்.

 

தமிழகத்தின் புகழ் பெற்ற நாவலாசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் எழுதிய இந்த நாடகத்தின் வசனப் போக்கு அவரின் சிறுகதை மொழி நடையைப் போன்றே நவீனத் தன்மையுடனும் கதை சொல்லும் பாணியிலும் அமைந்திருக்கும். பிரதியின் மையச் சுழற்சியானது இரஷ்யப் படைப்பாளிகளின் கதை உருவாக்க உத்தியைக் கொண்டிருந்தது.

 

இயற்கை சூழ்ந்த ஊரில் காரையார் குடும்பம் தனிச் சிறப்புடைய குடும்பம். திடீர் என உயிர் இழப்புகளைச் சந்திக்கிறது. உறவுகளின் இழப்புகளுக்குப் பின்னர் வீடானது பாழடைந்து புதர் மண்டிப் போகிறது. மழைக் காலத்தில் வீட்டில் மரக் காளான்கள் முளைத்துக் கிடக்கிறது. இருப்பினும்  காரையார் வீட்டில் இரு பெண்கள் வாழ்கின்றார்கள். ஒருவள் வீட்டுக்குச் சொந்தக்காரி. மற்றொருவள் வேலைக்காரி. இவ்விரு பாத்திரங்களுக்கிடையான பேச்சுக்களோடு நாடகம் நகரும்.  வேலைக்காரி பாத்திரம் சூனியக்காரி போலவும், நல்ல குடும்பப் பெண் போலவும் முரண்பட்ட இருவேறான மன நிலையில்  இருக்கும். இந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க சரியான பெண் கலைஞர்களை இயக்குனர் ஜெகன் தேட ஆரம்பித்தார்.

 

எங்கள் நாடகத் துறை மட்டுமின்றி தமிழ் துறை, பிரஞ்சுத்துறை என பல மாணவியர்களுடன் கலந்து பேசினார். ஆனாலும் அவரால் முடிவுக்கு வர முடியவில்லை. ஒத்திகையைத் தொடங்கிய நிலையில்  வேலைக்காரி பாத்திரத்துக்கான பதிலியாக நான் வசனம் பேசி நடித்து வந்தேன். நாடகம் மேடை ஏறும் காலமும் எதிர் வரத் தொடங்கிற்று. டேய் மாமு நீதான் இனி வேலைக்காரியாக நடிக்கப் போறே என்றார். ஒப்புக்குச் சப்பாணியா வந்தவனைப் பெண்ணா நடினா எப்படி மாமு என்றேன். உன் பாவனைகள் சரியா இருக்கு, நீ பொருத்தமா இருப்பேனு சொல்லி நடிக்க வெச்சுட்டார்.

 

நாடகத்தில் பெண் வேடங்கட்டுவதால் மீசை மழிக்க வேண்டும். மீசை எடுப்பதில் எனக்கு ஒரு சிக்கல் இருந்தது. நாடகம் முடிந்து மூன்று நாள் கழிந்து தங்கை ஒருவர் மண விழாவுக்காக நான் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்க ஊரில் (காங்கயம் –முத்தூர்) மீசையை முழுக்க மழிப்பது ஒரு துயரச் சம்பவம் நடந்து முடிந்த செயல்பாட்டைக் குறிக்கும். இன்று மாறிப்போய்விட்டது. என்னப்பா கார்த்தி மீசை எடுத்து இருக்கே  எனக் கேட்பார்கள். பலருக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.  இந்த சூழலை நினைந்து பெண் பாத்திரமேற்க இயலாது எனக் கூறினேன். இறைவனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என நாயன்மார்கள் போற்றுவதைப் போல என்னை ஜெகன் விடுவதாய் இல்லை.  காலப்பட்டு மதுக்கடை ஒன்றில் வெங்கடேசன், ஆனந்த வேலு, ஜெகன் ஆகியோர் முன்னிலையில் நடிக்கும் ஒப்பந்தம் உறுதியானது. வீட்டுக்காரியாக அனிதாவும் காரையாராக வெங்கடேசனும் நடித்தார்கள். இருவரும் நாடகத் துறையின் முதுகலை இறுதி ஆண்டு மாணவர்களாவர்.

 

வேலைக்காரி பாத்திரத்திற்காக இனிமையான குரல், கரகரப்பான குரல் என இரு வகையான குரல் மற்றும் பாவ வேறுபாடுகளை நவீனப் போக்குடன் காட்டி நடிக்கும் பயிற்சியை மேற்கொண்டேன்.   நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. இந்த நாடகத்தின் ஒப்பனைப் பொறுப்பை வெங்கடேசன் ஏற்றிருந்தார். என் முகத்தை இடம் வலமாகப் பிரித்து ஒரு புறம் வேலைக்காரியாகவும் மற்றொரு பாகம் சூனியக்காரியாகவும் வேடப்புனைவினைச் செய்தார். இருபுறமும் முகத்தில் உள்ள ஒப்பனைக்கு ஏற்ப சேலையால் முகத்தை   மறைத்தும்  காட்டியும்  பாத்திர குணத்தை வெளிக்காட்டி நடிக்க வேண்டியிருந்தது. ஒப்பனையை வெங்கடேசன் மிக நுணுக்கமாக என் முகத்தில் தீட்டினார். நாடகம் சிறப்புடன் அரங்கில் விளைந்தது.

 

நாடகம் முடிந்ததும் ஆரோவில் பகுதியைச் சார்ந்த திருநங்கை ஒருவர் என்னிடம் வந்து நீங்கள் எங்கள் சமூகமா என்றார். ஆமாம் தமிழ் சமுகம் என்றேன். அன்பு பொங்க முகத்தில் கிள்ளியவர் உங்களிடம் பெண்மை நிறைகுடமாக இருக்கிறது என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார். அவரை ஏய்த்த பெண் வேடம் பற்றி நானே சிரித்துக் கொண்டேன்.  ஆண் பெண்ணில் பாதி தானே. இந்த நாடகம் காணப் புறத் தேர்வாளராக வந்திருந்த பேராசிரியர் இராமானுசம்  ஐயாவின் பாராட்டு மிக முக்கியமானது. அடுத்த நாள் காலையில் பேராசிரியர் ஆறுமுகம் சார் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். அங்கு  இராமானுசம் ஐயா அமர்ந்திருந்தார். நீ தான் வேலைக்காரியாக நடித்த பையனா ? என்றார். ஆமாங்கையா என்றேன். நல்லா நடிச்சீங்க தம்பி என்றார். நன்றி ஐயா என்றபடி உளம் பூரித்து நின்றேன். இந்த நாடகம் எனக்கு நல்ல நடிகன் என்ற  பெயரை வாங்கித்தந்தது. தூங்கிகள் நாடகம் போலவே… 

 

(தொடரும்)
 
 
 
(கார்த்திகேயன் நாடகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த நவீன  நாடகக் கலைஞர். பல சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்ணாமலை தொலைக்காட்சி தொடரில் சூதாடிச் சித்தன் என்கிற இவரது பாத்திரம் அனைவருக்கும் நினைவிருக்கும். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவரது மேடை அனுபவங்கள் இத்தொடரில் வெளியாக உள்ளன. வியாழன் தோறும் இத்தொடர் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...