![]() |
அண்ணாத்த திரை விமர்சனம்: சிவா ஏமாற்றவில்லை!Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 05 , 2021 11:43:34 IST
![]() டிரெய்லர் வெளியானதுமே ‘என்னப்பா விஸ்வாசம், வீரம்லாம் கலந்து கட்ன மாதிரி இருக்கு’ என்ற விமர்சனங்கள். ‘என்ன… விஸ்வாசத்துல அப்பா மகள், இதுல அண்ணன் தங்கையா?; ‘அதுல பம்பாய், இதுல கொல்கத்தாவா?’ என்றெல்லாம் நக்கல்கள், கேலிகள்.
எதற்கும் கலங்கவில்லை எங்கள் ‘சிறுத்தை’ சிவா. படத்தில் அனைத்து விமர்சனங்களுக்கும் ‘ஆமாண்டா அப்டித்தாண்டா!’ என்று பதில் சொல்லியிருக்கிறார். ரசிகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதானே ஓர் இயக்குநருக்கு அழகு? ‘இதான் இருக்கும்னு நீங்க சொன்னதெல்லாமே இந்தா இருக்கு’ என்று எடுத்து சீனுக்கு சீன் வைக்கிறார்.
தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம். 10 வயதுப் பையன்கூட ‘இப்ப கால்ல விழுவாரு..’ , ‘இப்ப அழுவாரு’, ‘இப்ப அடி வாங்குவாரு’ என்று சீனுக்கு சீன் கணித்துச் சொல்கிறான். ஆஹா.. இதுவல்லவோ ஒரு ரசிகனுக்கு இயக்குநர் செய்ய வேண்டியது!
ஓருயிர் ஈருடலான அண்ணன் தங்கை. ஒரு கட்டத்தில் பிரிய நேர்கிறது. அதன்பிறகு துன்பத்தில் உழலும் தங்கைக்கு எல்லைச் சாமியாய் கண்ணுக்குத் தெரியாமலிருந்து காக்கும் அண்ணன்.
ஒன் லைனாக ஓகே. பிரமாதமான மாஸ்ஹீரோ கதை பண்ணுவதற்கான வாய்ப்புகள் உடைய லைன் தான்… ஆனால் ரஜினி எனும் all time saleable பெயரை, இந்த ஜெனரேஷனுக்குக் கடத்த வேண்டாமா? இன்னுமா இந்த அழுவாச்சி காட்சிகள்? சீரியலிலேயே ‘இதெல்லாம் சீரியல்தனம்’ என்று ஒதுக்கப்படும் காட்சிகளெல்லாம் இதில் வரிசை கட்டி வருகின்றன. கதை டிஸ்கஷனில் ‘இதெல்லாம் காமெடியா பாப்பாங்க சார்’ என்று துணிந்து பேச ஒரு உதவி இயக்குநர்கூடவா இருக்கவில்லை?
இத்தனை காஸ்டிங் வேறு. எல்லாமே வீணாகத்தான் தெரிகிறது. வசனங்கள் ஆங்காங்கே ஓகே. கலை இயக்குநர் நிறைய உழைப்பைக் கொடுத்திருக்கிறார். ரஜினி - பிரகாஷ்ராஜ் காட்சிகள் தேவலாம். மற்றபடி படம் பூந்தியாகத்தான் இருக்கிறது. லட்டுவாக வரவே இல்லை.
|
|