???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேடையை நோக்கிப் பாய்ந்த லாரி!!! -வேழவேந்தன், முன்னாள் அமைச்சர், திமுக.

Posted : திங்கட்கிழமை,   மே   18 , 2015  05:36:12 IST

 

 

உயர்நிலைப்பள்ளியில் கல்வி முடித்தபொழுது கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பள்ளிகளில் திருக்குறள் பற்றிப்பேசச்செல்கையில் என்னையும் அழைத்துச் செல்வார். அவர் பேசுவதற்கு முன்பாக கொஞ்ச நேரம் நானும் பேசுவேன். அப்படியொரு பயணம் மேற்கு வங்க மாநிலத்துக்கும் வாய்த்தது. அது பற்றி திரும்பிவந்தவுடன் வங்கத்தில் ஒரு வாரம் என்ற தலைப்பில் அண்ணாவின் திராவிட நாடு இதழில் எழுதினேன். அதை அண்ணா படித்திருக்கிறார். என்னை வேறொரு நிகழ்ச்சியில் பார்த்த அவர் அருகே அழைத்து, ‘மிகவும் நன்றாக எழுதியிருக்கிறாய். தொடர்ந்து எழுது’ என்றார். இப்படி உற்சாகப்படுத்துவதுதான் அண்ணா அவர்களின் அடிப்படைக்குணம். கும்மிடிபூண்டி அருகே ஆரணி ஆற்றங்கரையில் காரணி என்பது என் ஊர். அருகே சின்னம்பேடு என்ற ஊரில் அண்ணா திராவிட நாடு விடுதலை குறித்துப் பேசவந்திருந்தார். அப்போது திமுக ஏழை எளிய தாழ்த்தப்பட்டவர்கள் கட்சி. அங்கே ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியிலே பேசுகிறார். சின்ன விளக்கு பெட்ரோமேக்ஸ் விளக்கு எரிகிறது. நிலா வெளிச்சம் பட்டும் படாமலும் இருக்கிறது. நானும் சில நண்பர்களும் தூரத்தில் ஒரு வரப்பில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்கிறோம். அரையிருளில் நாங்கள் இருப்பது அவர் பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போது மேகம் விலகி நிலா காய்கிறது. எங்கள் முகங்களை அவர் மேடையில் இருந்து காண்கிறார். இந்த ஊரின் பணக்காரர்கள்தான் நம்மைக் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் நிலவு நம்மீது கருணை காட்டி ஒளியை வீசுகிறது. அதோ தொலைவில் இருக்கிறாரே மாணவர் வேழவேந்தன்.. அவரிடம் பேனாவையும் தாளையும் கொடுத்துவிட்டால் இந்த நிலவைப் பற்றி அழகான கவிதையை இப்போதே எழுதிவிடுவார்’’ என்கிறார். என் பெயரை மேடையிலே சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் இப்படிச் சொல்கிறார் என்பது புலப்படுகிறது. அவருக்குத் தெரிந்தவன் நான் ஒருவன் வந்திருக்கிறேனாம். இப்படித்தான் அவர் பல்லாயிரக்கணக்கான தம்பிகளை, ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை, பெரும் பேச்சாளர்களை திமுக என்னும் இயக்கத்துக்கு சம்பாதித்தார்.

என்னுடைய திருமணம் வடசென்னையில் அண்ணா அவர்களின் தலைமையில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. காலை பத்துமணிக்கு வரவேண்டும். தலைவர்கள் எல்லாம் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாவை மட்டும் காணவில்லை. பதினோரு மணியைத் தாண்டிவிட்டது. அப்போது மேடையை நோக்கி ஒரு லாரி பாய்ந்துவருகிறது. அச்சச்சோ என்று எல்லோரும் அதிர்ச்சி அடைகிறோம். மேடை அருகே அந்த மணல்  லாரி நிற்கிறது. கதவைத் திறந்துகொண்டு ஓர் உருவம் குதித்து துண்டால் தன்னைச் சுத்தம் செய்துகொண்டு மேடையை நோக்கி வருகிறது. அது அண்ணா! காஞ்சியிலிருந்து வரும் வழியில் கார் பழுதாகி நின்றுவிட்டது. வழியில் சென்ற லாரியை மடக்கி ஏறி வந்திருக்கிறார்! அவர் அன்புத்தம்பிக்காக கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகத்தயாராக இருந்தார்!

 

தில்லை வில்லாளன், அரங்கண்ணல், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, உ.பில்லப்பன்.... ஏன ஏகப்பட்ட பேர் ஆங்காங்கே உருவாக்கி வைத்திருந்தார்.

ஒரு பேச்சாளர் தமிழ்நாடு முழுக்க பேசப்போனார். பேசிவிட்டு வந்து அண்ணாவை சந்தித்தார். ‘ எல்லா இடங்களிலும் கட்சி சிறப்பாக உள்ளது. ஆனால் ஒரு ஆபத்து. அங்கு எங்கும் நீங்கள் இல்லை. மதுரை என்றால் முத்து.. திருச்சி என்றால் அன்பில்... அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.. குட்டி சாம்ராஜ்யங்கள் உருவாகின்றன.’ என்றார். அண்ணா கண்டும் காணாமலும் இருந்தார். மீண்டும் அந்த பேச்சாளர் இதை வலியுறுத்தவே அண்ணா சொன்னார்: ‘ ஆட்டின் கால் கொழுத்தாலும் கழுத்து கொழுத்தாலும் கசாப்புக் கடைக்காரனுக்கு லாபம். அன்பில் வளர்ந்தாலும் முத்து வளர்ந்தாலும் அது எனக்குத்தான் லாபம்’. கேட்டவர்  வாயடைத்துப் போய்விட்டார். இதுதான் வெற்றிகரமான ஒரு தலைவனின் குணாதிசயம். அண்ணா தன் உயரத்தைப் பற்றியும் தன் தகுதியைப் பற்றியும் சுயநம்பிக்கை உடையவர். அதனால்தான் அவர் ஆலமரம்போல் பலருக்கு நிழல்தந்தார். சூரியன் போல் பலருக்கு ஒளிதந்தார். யாரையும் ஒழித்துவிடவும் அழித்துவிடவும் காய் நகர்த்தவில்லை!

பழவேற்காட்டில் சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டம். அண்ணாவின் சம்மதம் நான் தான் வாங்கிக்கொடுத்தேன். ஊர் முகப்பிலேயே அவருக்கு வரவேற்பு ஊர்வலம். வழியெங்கும் கோல் விளையாட்டு, தீ விளையாட்டு. ஊர்வலம் நகரவே இல்லை. சிவிஎம் அண்ணாமலை மெல்லபோய், ‘சீக்கிரம் முடிங்கய்யா. அண்ணா பேச வேண்டும் தாமதமாகிறதே’ என்று அவர்களிடம் கூறுகிறார். இதை அண்ணா கவனித்துவிட்டார். ‘உனக்கு கோல் விளையாடத் தெரியுமா? என்று சிவிஎம்மிடம் கேட்டார். அவர் தெரியாது என்றார். என்னிடம் திரும்பி உனக்கு? என்றார். நானும் தெரியாது என்றேன். ‘அதோ ஆடிக்கொண்டிருக்கிறானே.. அவனுக்கு கோல் விளையாட மட்டும்தான் தெரியும். ஆடட்டும். தன் வித்தையெல்லாம் இந்த கூட்டத்தில் காட்ட நினைக்கிறான். ஒரு கால்மணி நேரம் தாமதமானாலும் பரவாயில்லை’ என்றார். இதுதான் எளிய மனிதனின் அபிலாஷைகளையும் புரிந்துகொள்ளும் பண்பு.

67’ல் திமுக வென்றபின்னர் கோட்டையில் செய்தியாளர்கள் வெற்றிக்கான காரணத்தைக்கேட்டபோது அண்ணா சொன்னார்: வாய்மை! இதற்கு விளக்கம் கேட்டபோது.. வாயும் மையும் தான் காரணம். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் ஊர் ஊராகப் போய் வாய் வலிக்கப் பேசினார்கள்; எல்லோரும் பத்திரிகைகளில் மை தீர எழுதினோம். இந்த வாயும் மையும் சேர்ந்துதான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன என்றார்.

நாவலர், மதியழகன், கலைஞர், சம்பத், பேராசிரியர், சிற்றரசு என்றும் ஏகப்பட்ட தலைவர்கள் ஊர் ஊராகப் போய் பேசினர். அத்துடன் ஒவ்வொருவரும் பத்திரிகை நடத்தினர். என்விஎன்- திராவிடன், போர்வாள்- காஞ்சி மணிமொழியார், கலைஞர்- முரசொலி, முத்தாரம், நாவலர் -மன்றம் நடத்தினார். மதியழகன் தென்னகம் நடத்தினார். க.ராஜாராம் திருவிளக்கு நடத்தினார். இதுபோன்ற பத்திரிகைகளும் பேருதவி செய்தன.

1956 மாநாட்டில் அன்பில் வரவேற்புக் குழு தலைவராக இருந்து நடத்திய மாநாடு மிகமுக்கியமானது. அதில்தான் திமுக அரசியலில் இறங்குவதா வேண்டாமா என்று வாக்கெடுக்கப் பட்டது. அம்மாநாட்டில் நெடுஞ்செழியன் தான் தலைவர். தம்பி வா, தலைமை ஏற்க வா! என்று சொன்னதோடு நில்லாமல் உன் ஆணைக்கு அடிபணிந்து  நடக்கிறோம் என்று சொன்னார். இதுபோல எந்த தலைவரும் சொல்லியதே இல்லை. அத்துடன் அந்த மாநாட்டில் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று வாக்களித்தவர்களைக் குறித்து அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். அவர்களின் எண்ணங்களை மதிப்பதாகச் சொன்னார். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் அரவணைத்து, ஏற்றுக்கொள்ள வைத்து அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் ஏராளமான தலைவர்களுக்கு வழிகாட்டியாக

அவரை உருவாக்கியது.

 

காஞ்சிபுரம் அருகே அண்ணாவுக்காக ஒரு தேர்தல் கூட்டம். அண்ணாவுக்கு வாக்கு சேகரிக்க கவிஞர் பொன்னிவளவன் பேசுகிறார். அதற்காக ஒட்டிய சுவரொட்டியில்

பொன்னிவளவன் பெயர் சிறிதாகவும் அண்ணா பெயர் பெரிதாகவும் போடப்பட்டது. இதைக் கண்ட அண்ணா அந்த பகுதியின் செயலாளரை அழைத்து நான் அந்தக் கூட்டத்துக்கு வராத நிலையில் அங்கு பேசுபவரின் பெயரைத்தானே பெரிதாகப் போடவேண்டும் என்று கடிந்துகொண்டார்.

இன்னொரு நிகழ்ச்சியையும் உதாரணமாகச் சொல்லவிரும்புகிறேன். ஒரு குக்கிராமத்தில் கூட்டம். அவ்வளவாக வசதி இல்லாத நிலையிலும் அப்பகுதி தோழர் முடிந்த அளவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணா பேசி முடித்தார். இரவு உணவுக்கு தோழர் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே மண்ணெண்ணெய் விளக்கொளியில் தோழரின் மனைவி மீன் குழம்பு செய்திருந்தார். அதில் மண்ணெண்ணெய் தெரியாமல் கலந்துவிட்டிருக்கிறது. அண்ணாவுடன் சாப்பிட்டவர்கள் முகம் சுளிக்கிறார்கள். அண்ணாவோ விரும்பி சுவைத்து சாப்பிட்டுவிட்டு அந்த கட்சித் தோழனை அழைத்து மிக நன்றாக இருந்தது உணவு என்று தட்டிக்கொடுத்துவிட்டு வருகிறார். திரும்பிவருகையில் அண்ணாவுடன் வந்தவர்கள் கேட்கிறார்கள். ‘ ஏண்ணா? புளுகுறதுக்கும் ஒரு எல்லை வேண்டாமா? மண்ணெண்ணெய் நாற்றம் அல்லவா அடித்தது?’ என்று.

அண்ணா.. ‘ இருக்கட்டும்யா.. அந்த தம்பதியின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி.. நான் அதைக் கெடுக்கக்கூடாது.. உண்மையைச் சொன்னால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பான்...?’ இந்த பெரும் குணம்தான் அவருக்கு ஏராளமான தம்பிகளைப் பெற்றுத்தந்தது.

 

(அந்திமழை மார்ச் 2014 இதழில் வெளியான கட்டுரை. நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...