அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"இது தமிழ் இலக்கியத்துக்குச் செய்யும் துரோகம்" - அமேசான் போட்டி சர்ச்சை

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   06 , 2019  19:33:29 IST


Andhimazhai Image
ஒரு புறாவுக்கு இப்படி ஒரு அக்கப்போரா? என்று கேட்கத் தோன்றுகிறது. அதாவது ஒரு இலக்கியப் போட்டி இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தமுடியுமா? ஆசான் ஜெயமோகன் முதல் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் வரை இந்த போட்டியை பற்றி கருத்து சொல்லி கலகலப்பை ஏற்படுத்தி  இருக்கிறார்கள்.
 
அமேசான் அறிவித்திருக்கும் பென் டு பப்ளீஷ் (Pen To Publish - 2019) போட்டிக்கு வருகின்ற டிசம்பர் 14-ஆம் தேதி வரை நூல்களை பதிவேற்றலாம். சுமார் 10,000 சொற்களுக்கு மேல் உள்ள நூல்களுக்கான பிரிவில் முதல் பரிசாக ரூ 5 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்த பிரிவாக  பத்தாயிரம் சொற்களுக்கு மிகாமல் இருக்கும் நூலுக்கு ரூ 50,000 பரிசு. பங்கேற்கும் நூல்களில், அதிகமாக விற்பனையாகும் நூல்களிலிருந்து இறுதிப்பட்டியல் செய்து வெற்றிபெறும் நூல் அறிவிக்கப்படுகிறது. பலரும் பரபரப்பாக தமது நூல்களை பதிவேற்றிவரும் சூழலில், இந்த போட்டி பல விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன், அமேசான் கிண்டில் போட்டியில் பங்குபெறும் நூல்கள் குப்பை எனும் விதத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். மறுபுறம் கிண்டில் போட்டியில் திமுக அணியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், குழு அமைத்து அவர்கள் தரப்பு நூல்களை அவர்களாகவே அதிகம் தரவிறக்கம் செய்துகொள்கிறார்கள் எனும் விமர்சனம் வலுக்கிறது.
 
 
கிண்டில் போட்டியை பலருக்கும் அறிமுகம் செய்து, இதுதொடர்பில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுதிவருபவர் ரவிசங்கர் அய்யாக்கண்ணு. அவர் இதுகுறித்து கூறுகையில், “அமேசான் கிண்டில் மூலம் உலகில் எங்கு இருந்தும் நாம் விரும்பும் புத்தகங்களை பெற முடிகிறது. குறிப்பாக சொந்த மண்ணிலிருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கிண்டில் பெரிதும் பயனளிக்கிறது. கிண்டில் டைரக்ட் பப்ளீஷிங்கை இந்த நிறுவனம் வணிக நோக்கத்துடன் தான் செய்கிறது என்றாலும், நம்மால் இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். கிண்டில் போட்டியில் வெற்றிபெறும் புத்தகத்துக்கு ரூ 5 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சென் பாலன் எழுதிய 'பரங்கிமலை ரயில் நிலையம்' புத்தகம் இந்த பரிசை வென்றது.
 
இந்த போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்கலாம். இலக்கியங்கள், புனைவு மட்டுமின்றி அனைத்துவகை நூல்களையும் இதில் இடம்பெறச்செய்யலாம். நடுவர்களின் மூலம் 5 நூல்கள் இறுதி பட்டியலுக்கு வரும். பின்பு அதிலிருந்து ஒருநூல் தேர்ந்தெடுக்கப்படும். நூல் விற்பனை மட்டுமின்றி, உள்ளடக்கத்தை வைத்துதான் பரிசுக்கான இறுதி புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். பல்வேறு எழுத்தாளர்கள் இதில் கலந்துகொண்டாலும், வழக்கமான இலக்கியவாதிகள் பெரிதாக இப்போட்டியில் கவனம் செலுத்தவில்லை. இந்த ஆண்டு வரும் டிசம்பர் 14 வரை புத்தங்களை அனுப்பலாம்,” என்றார். அவரிடம் திமுக வினர் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது பற்றிக் கேட்டோம்.
 
அதற்கு அவர் ”திமுக அணியினர் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. ஆதரவாளர்களை திரட்டியெல்லாம் புத்தகங்களை வாங்க செய்ய முடியாது. சொல்லப்போனால் வெற்றிபெற்ற புத்தகமே ஏறக்குறைய 1000 பிரதிகள் என்ற அளவில்தான் விற்பனையாகும். அதில், இவர்கள் சொல்வதைப்போல் குழு அமைத்து விற்பனை செய்வதெல்லாம் சாத்தியமற்ற காரியம். கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தமாட்டார்கள். ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். திராவிட எழுத்தாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர ஆதிக்கம் செலுத்தவில்லை. திமுக எதிர்ப்பாளர்கள், இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று கூறினார்.
 
ரூஹ் நாவலை வெளியிட்டு கிண்டில் போட்டியில் பங்குபெற்றிருக்கும் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அமேசான் கிண்டில் போட்டியில் திமுகவினர் குழு அமைத்து குறிப்பிட்ட நூலை அதிகமாக தரவிறக்கம் செய்து வெற்றிபெறச் செய்கின்றனர் என்று நேரடியாக குற்றம் சாட்டுகிறார். அவரிடம் பேசினோம்.
 
“அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டிருக்கும் என்னுடைய ரூஹ் நாவலுக்கு உரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக  ஜெயமோகன் கூறியிருப்பதாக சொல்லப்படுவது அவரது கருத்து மட்டும்தான். அவர் அப்படி கூறிவிட்டார் என்பதால் எல்லோருடைய பார்வையும் அப்படியே இருக்க வேண்டுமென்பது இல்லை.
 
 
இந்தியாவில் தமிழ், பெங்காலி, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி நூல்கள் மட்டுமே அமேசான் கிண்டிலில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அப்படியென்றால் தமிழ் மொழியின் எழுத்துகளை பரப்ப இது நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு. இதில் புதிய, எளிய வாசகர்களுக்கான குடும்ப கதைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட நூல்கள் வரவேற்பை பெறுகின்றன. காலப்போக்கில் இந்த வாசகர்களிடமே தீவிர இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கம் உருவாகலாம். அதேபோல், தமிழ் இலக்கிய சூழல் எப்படி இருக்கிறதென்று வெளியுலகுக்கு தெரியும். இதன்மூலம் விவாதங்கள் ஏற்பட்டு மாற்றம் வரும்.
 
அமேசான் கிண்டில் போட்டியில் திமுகவினர் குழு அமைத்து குறிப்பிட்ட நூலை அதிகமாக தரவிறக்கம் செய்து வெற்றிபெறச் செய்கின்றனர். இப்போது இந்த போட்டியில், நூலின் விற்பனையை வைத்து சிறந்த நூலை மதிப்பிடுகிறார்கள். இதுவே, நூலின் தரத்தை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டால், இவ்வாறு தந்திரத்தில் ஈடுபடுபவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள். இம்மாதிரியான தந்திரங்களை, தமிழ் இலக்கியத்துக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் பார்க்க வேண்டும்” என்கிறார்.
 
கடந்த ஆண்டு கிண்டில் போட்டியில் 'பரங்கிமலை ரயில் நிலையம்' புத்தகத்துக்காக முதல் பரிசுபெற்றவர் சென் பாலன். இதுகுறித்து அவரிடம் கேட்டோம். “கடந்த முறை அமேசான் நடத்திய போட்டியில் இத்தனை பரபரப்பில்லை. கடைசி மாதத்தில் தான் எனது நாவலை பதிப்பித்தேன். அதைப் போலவே பலரும் கடைசி நேரத்தில் தான் போட்டியில் கலந்து கொண்டனர். அதை ஒரு சோதனை முயற்சியாகத் தான் அணுகினோம்.
 
 
இப்படி ஒரு வெளிப்படையான போட்டியை இதுவரை நான் கண்டதில்லை என்று தான் கூறவேண்டும். விதிமுறைகளை தெளிவாக அறிவித்து சரியாகப் பின்பற்றி நடத்துகிறார்கள். இதுவரை இருந்து வந்த “தனது இலக்கிய மடத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் தாங்கள் தரும் விருது” எனும் கருத்தாக்கம் உடைந்துள்ளது. வாசகர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைத்துள்ளது. அமேசான் உலகம் முழுவதும் இம்முறையை சோதித்து மேம்படுத்தியுள்ளதால் தேர்வுமுறை சிறப்பாக அமைந்துள்ளது.
 
நான் போட்டியில் பங்கேற்கிறேன் என்றால், எனது சமூக ஊடக நண்பர்களிடம் புத்தகம் பற்றி பேசுவேன். இங்கு சமூக வலைதள நண்பர்கள் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் ஒன்று சேர்கின்றனர்.  எனவே ஒத்த கருத்துடைய நண்பர்கள் தான் பட்டியலில் இருப்பார்கள். அவர்கள் தான் என் புத்தகத்தைப் பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு புத்தகம் பதிப்பிக்கும் முறையை சொல்லித் தருகிறோம். இதை திமுக அணி என்று சொல்வது எதன் அடிப்படையில் என்று புரியவில்லை. திராவிடச் சிந்தனை உடைய நான் வலதுசாரிகளிடமா ஆதரவு கேட்கமுடியும்? ஒத்த சிந்தனை உடையவர்களிடம் ஆதரவு கேட்கிறேன், அவர்கள் தருகிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வாறு ஆதரவு கிடைப்பதில் குறைபாடு இருப்பதற்கு எங்கள் மீது குற்றம் சொல்வது தவறு.  "என்னதான் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இருந்தாலும் நல்ல புத்தகம்தான் விற்கும். மிக நியாயமான களம் சோஷியல் மீடியாதான்” என்கிறார் சென் பாலன்.
 
இந்த ஆண்டு கிண்டில் போட்டியில் லஷ்மி சரவணகுமார் எழுதிய 'ரூஹ்', எஸ்.எஸ். சிவசங்கர் எழுதிய 'தோழர் சோழன்', அருணா ராஜ் எழுதிய 'அருணா இன் வியன்னா', டான் அசோக் எழுதிய 'R.சோமசுந்தரத்தின் காதல் கதை', சென் பாலன் எழுதிய 'மாயப் பெருநிலம்' உள்ளிட்ட பலர் நூல்கள் பங்குபெறுகின்றன. 5 லட்சம் பரிசு பிரிவில் சுமார் 125 நூல்களும், 50,000 பரிசு பிரிவில் சுமார் 166 நூல்களும் போட்டியிடுகின்றன. இதுவரைக்குமான எண்ணிக்கை இது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...