![]() |
அல் காய்தா ‘டாக்டர்’ ஜாவாஹிரி: கொல்லப்பட்டது எப்படி?Posted : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 02 , 2022 16:15:21 IST
![]() ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் எப்போதுமே அமெரிக்காவின் வான்வழிக்கண்காணிப்பில் இருக்கும் நகரம். தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர் மேலும் கூர்மையாக வான் விழிகள் விழித்திருந்தன. கடந்த ஞாயிறு காலை ஆப்கானிஸ்தானில் காலை 6.18. விண்ணில் பறந்த ட்ரோன் ஒன்றில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் இரு ஏவுகணைகள் பறந்து அங்கிருந்த வீடொன்றைத் தாக்கின. ஆனால் வீட்டைத் தாக்கி அழிக்கும் வெடிமருந்துகள் நிறைந்த ஏவுகணைகள் அல்ல. அந்த வீட்டின் பால்கனியில் இருந்த ஒரே மனிதர்தான் அவற்றின் இலக்கு. அதன் கத்திபோன்ற அமைப்புகள் குறிவைக்கப்பட்ட மனிதரைத் துல்லியமாகக் கொல்லவல்லவை. அருகில் இருப்பவர்களுக்கு சேதம் ஏற்படாது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பவர் என அமெரிக்கா அறிவித்தருக்கும் பெயர் அய்மான் அல் ஜவாஹிரி. ஒசாமா பின் லேடனுக்குப் பின்னால் அல்காய்தா அமைப்புக்குத் தலைவரான ஜவாஹிரியின் தலைக்கு 25 மில்லியன் டாலர்கள் பரிசு அறிவித்திருந்தது அமெரிக்கா. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்கா மீது அல்காய்தா நடத்திய தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் பட்டியலில் ஜவாஹிரியும் ஒருவர் என அந்நாடு தேடிவந்தது. தாலிபானின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்தபின்னர் அல்காய்தா சற்று நிம்மதியாக காபூலில் செட்டில் ஆகி இருந்தார்கள். அமெரிக்கா காரர்கள் இரண்டு மாதங்கள் முன்பே ஜவாஹிரி இருந்த மறைவான வீட்டைக் கண்டு பிடித்து, துல்லியமாக திட்டம் தீட்டி, எப்படி ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் அழித்தார்களோ அதேபோல ஜவாஹிரியையும் கொலை செய்துள்ளனர். பாகிஸ்தானில் அமெரிக்க படைவீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றார்கள். ஜவாஹிரிக்கு ட்ரோன்களே சென்றுள்ளன. 71 வயதாகும் ஜவாஹிரி எகிப்தைச் சேர்ந்தவர். அந்நாட்டு ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர். இவரைப் பற்றி உலகம் கேள்விப்பட்டது 1981-இல் எகிப்து அதிபர் அன்வர் அல் சதத் கொலைக்குற்றத்துக்காகப் பிடிபட்டு நீதிமன்றத்தில் நின்றபோதுதான். ஆனால் முதன்மைக் குற்றம் நிரூபிக்கப்படாமல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்று விடுதலை ஆனார். அப்புறம் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கே சோவியத்துடன் மோதி, காயமடைந்த ஆப்கன் முஜாகிதீன்களுக்கு சிகிச்சை செய்துவந்தார். அப்போது கிடைத்ததுதான் பின்லேடனின் அறிமுகம். பிறகு எகிப்தில் இஸ்லாமிக் ஜிஹாத் என்ற அமைப்புக்குத் தலைமையேற்று அங்கே அரசை தூக்கி எறிய முயற்சி. அதிபர் ஹோஸ்னி முபாரக்கை கொலை செய்ய முயற்சி. இதைத் தொடர்ந்து எகிப்தியர்கள் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பை வேட்டையாடினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் இருந்த எகிப்துதூதரகத்தை தாக்கச் செய்தார் ஜவாஹிரி. இரண்டு கார்கள் முழுமையாக வெடிமருந்துகளுடன் தூதரகத்தின் வாயிலில் மோதி வெடித்தன. 16 பேர் செத்தனர். 1999-இல் எகிப்திய ராணுவ நீதிமன்றம், ஜவாஹிரிக்கு மரணதண்டனை அறிவித்தது. ஆனால் அவரோ பின்லேடனின் தளபதிகளில் ஒருவராகி தலைமறைவாகி இருந்தார். ‘டாக்டர்’ என்று அச்சத்துடன் உச்சரிக்கப்படும் ஜவாஹிரியை கொலை செய்து பழிதீர்த்துள்ளது அமெரிக்கா. -முல்லைக்கொடியான்
|
|