அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் அதிகாரி 0 சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர் 0 விக்டோரியா கவுரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு 0 டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது மத்திய குழு 0 சென்னை உயர்நீதிமன்றம்: 5 நீதிபதிகள் பதவி ஏற்பு! 0 கர்நாடக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் களம்! 0 அதானி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் 0 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்துடன் டெல்லி புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர்! 0 கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும்: அண்ணாமலை விருப்பம் 0 சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 0 திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல: திருமாவளவன் 0 மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி 0 வாணியம்பாடி: இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு 0 பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் 0 பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -04: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   26 , 2022  08:53:12 IST


Andhimazhai Image

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ப்ளூட்டோ வளர்ந்து வர, அவனை வெளியே அழைத்துச் சென்றால் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினமாக இருந்தது. சைக்கிளின் முன் கூடையில் உட்காருவதற்கு அறவே மறுத்தான். கூடை கொள்ளாத அளவிற்கு பெரிதாகவும் ஆகிவிட்டான்.  நீ வேண்டுமானால் சைக்கிள் ஓட்டு, நான் நடந்து வருகிறேன் என்று டீல் பேசினான்.

 

சரி போனால் போகட்டும், நடந்து வருவது ஆரோக்கியத்திற்கு நல்லது தானே என்று நினைத்தேன். குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் தினமும் மாமிசம் போட்டு வளர்க்கப்பட்ட நாய் ஒன்று போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தால் மூன்று வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டது என்ற செய்தி காதில் விழுந்திருந்ததும் ஒரு காரணம்.

 

கொஞ்ச நாட்களில் நானும் சைக்கிளை விட்டுவிட்டு கால்நடையாய் ப்ளூட்டோவுடன் நடக்கத் துவங்கினேன். "நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போகும்போது, எப்பவும் நீ முன்னாடி போகணும், நாய் பின்னாடி வரணும். குறைந்தபட்சம் உன்னோட பக்கவாட்டுலயாவது நாய் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும்.. அப்பதான் நீ அதோட மாஸ்டர்னு அதுக்குத் தோணும்.. உன்னோட கமாண்டுக்கு (command) காது குடுக்கும்" என்று அடிக்கடி என் கணவர் கூறுவார்.

 

வீட்டில் ப்ளூட்டோவுக்கான கழுத்துப் பட்டையும் கயிறும் கிடந்தாலும் நாய்களைக் கட்டிப் போடும் பழக்கம் கிடையாது, எப்போதாவது தான் கட்டி வைப்போம். அதனால் சும்மாவே அழைத்துக்கொண்டு போவேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் ப்ளூட்டோவுக்கு முன்னால் நடக்க முடியாது. அவன் தான் எனக்கு முன்னால் நடப்பான். அதுவும் எனக்கு பத்து அடிகள் முன்பாகப் போய் நின்று, நான் வருகிறேன் என்று திரும்பித் திரும்பிப் பார்ப்பான். தெரு திரும்பும் இடங்களில் கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொண்டு நான் எந்தப் பக்கமாகத் திரும்பப் போகிறேன் என்று கவனித்துக் கொண்டு நிற்பான். அவன் நேராகச் சென்று நிற்க, நான் இடது புறம் திரும்பி விட்டால் அவன் சென்ற வழியே திரும்பி வந்து, என்னை முந்திக் கொள்வான். பார்ப்பவர்களுக்கு ப்ளூட்டோ தான் என்னை வழிகாட்டி நடத்திச் செல்வது போல் இருக்கும்.

 

 சில தெருக்களில் இன்னும் நாட்டாமை நாய்கள் எங்களை ஏற்காமல் குரைத்துக் கொண்டு தான் இருந்தன. ப்ளூட்டோவை விட அளவில்சிறிய நாய்கள் அவனைக் கண்டு பயப்பட ஆரம்பித்தன. இவனும் வாய்ப்புக் கிடைக்கும்போது குரைத்துத் தன் வீரத்தைக் காட்டுவான். பெரிய நாய்களிடம் பம்முவான். ஆங்காங்கே பூமியை நோக்கி தலையைத் தழைத்து மோப்பம் பிடிக்கவும் செய்வான். எதையாவது நக்கி விடுவானோ, தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் 'ப்ளூட்டோ நோ!' என்று அதட்டினால் கேட்டுக் கொள்வான்.

 

ஊருக்குள் தென்படும் நாய்களுக்கு ஏதாவது நோய் வந்தால் என் கணவர் முதலிலேயே, "ப்ளூட்டோவை வெளிய கூட்டிட்டு போகாதே.. டிஸ்டம்பர் வைரஸ் இருக்கு.. நிறைய நாய்களுக்கு சொறி இருக்கு" என்று கூறிவிடுவார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறைய நாய்களுக்கு உடலில் புண்கள் இருந்தன. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு

 ஆம்பிலாக்ஸ் (ampilox) மாத்திரையை பிரெட் அல்லது பன்னுக்குள் வைத்து எங்கள் தெருவில் உள்ள நாய்கள் அனைத்திற்கும் போட்டார்.

 

அப்போது நான் என் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்த நேரம்; அதனால் ப்ளூட்டோவைத் தொடாதே, அதனுடன் சேர்ந்து வெளியே போகாதே என்ற விதிமுறைகள் எனக்கு விதிக்கப்பட்டிருந்தன. வேறு யாரோ கேட்டை திறக்கையில் வெளியே சென்றுவிட்டு வந்த ப்ளூட்டோவுக்கு ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு ஆரம்பித்தது. வாந்தியும் தொடர்ச்சியாக வரவும், என் கணவர், 'இது பார்வோ வைரஸ் தான்.. இது வந்தால் காப்பாற்றுவது மிகக் கடினம் என்றேனே!' என்று கூறி, என் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

 

 நான் அழவே துவங்கிவிட்டேன். "உங்க அப்பா சொல்றது கரெக்ட்டு தான்.. நாய் வளர்த்தா இந்த வியாதி எல்லாம் வரத்தான் செய்யும்.. நீ இப்படி ஃபீல் பண்ணுவேன்னு தெரிஞ்சா நானே வளர்க்க வேண்டாம்னு சொல்லியிருப்பேன்" என்றார் என் கணவர். விரைந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினேன். பக்கத்திலிருந்த எங்கள் குடும்ப நண்பரான கால்நடை மருத்துவர் டாக்டர் செல்வராஜை அழைத்து வந்தோம். அவரும் பார்வோ வைரஸ் தான் குணப்படுத்துவது கஷ்டம் இருந்தாலும் ட்ரிப்ஸ் போட்டுப் பார்ப்போம் என்றார்.

 

 காலையும் மாலையும் ட்ரிப்ஸ் போட்டு, மருந்து செலுத்தியும் வயிற்றுப்போக்கு சரியாகவில்லை. வாந்தி அவ்வப்போது இருந்தது. மூன்று நாட்கள் ட்ரிப்ஸ் போட்டதுடன் போதும் என்று மருத்துவர் சொல்லிவிட, என் கணவரை விடாமல் நச்சரித்து அவரையே மருந்து செலுத்தச் சொன்னேன். நேரம் இருந்தால் விலங்குகளுக்கான சிகிச்சையும் அற்புதமாக செய்யக்கூடியவர் தான் அவர். எங்கள் பகுதியின் பிரபல மயக்கவியல் நிபுணர். "சின்ன நாய்.. வெயின் கிடைக்குதோ என்னமோ" என்று சந்தேகத்துடனே ட்ரிப்ஸ் போட அமர்ந்தவர், ப்ளூட்டோ கொடுத்த ஒத்துழைப்பாலும், அவனது வெள்ளை நிறத்தால் நன்றாகத் தெரிந்த நரம்புகளாலும் வெற்றிகரமாக மருந்தைச் செலுத்தினார்.

 

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இரண்டு நேரமும் ஊசி போட்டோம். கடைசியில் சுத்தமாக சாப்பிடவே இல்லை என்ற நிலையில், ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இனிமே மனுஷங்க ட்ரீட்மெண்ட்டுக்குப் மாறிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து அப்போது அறிமுகமாயிருந்த ஒரு மருந்தைச் செலுத்தினோம். செலுத்தி முடித்த அடுத்த நொடி கொடூரமான நாற்றத்துடன் பச்சையும் மஞ்சளும் பச்சையுமாக மலம் கழித்தான் ப்ளூட்டோ. அந்த நாற்றம் ஏரியா முழுவதையும் கலங்கடித்தது.

 

'ஐயையோ! இத்தனை நாள் கழித்தும் இப்படியா? அவ்வளவு கிருமி வயித்துக்குள்ள இருக்கா!' என்று நான் அதிர்ச்சியடைய, அவ்வளவேதான் என்று சொல்வதைப் போல் அன்றுடன் நின்று விட்டது வயிற்றுப்போக்கு. அதன்பின் தண்ணீர் குடிக்க மறுத்தான். சிலபல வித்தைகளை எண்ண அலைகளின் சக்தியால்(!) நான் செய்து முடித்தபின்னர் ஒருவழியாக அவன் முன்னால் இருந்த பேசினில் நான் ஊற்றிய தண்ணீரைக் கடக் கடக்கென்று குடித்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அதன்பின் இளநீர், ஓஆர்எஸ் கலவை என்று தொடர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்க ஆரம்பித்து, மறுநாளில் சாப்பிட்டான். நான்காம் நாள் எழுந்து நடமாடத் துவங்கிவிட்டான். பார்வோ வைரஸ் வந்து ஒரு குட்டி நாய் உயிர் பிழைத்தது மிகவும் அதிசயம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார் கணவர். 'சும்மா இருங்க.. இதையே சொல்லாதீங்க! அதெல்லாம் என் ப்ளூட்டோவுக்கு ஒன்றுமே ஆகாது' என்றேன் நான். சரிதான் என்பது போல் தலையை ஆட்டினார் அவர்.

 

 ப்ளூட்டோஒருவழியாக ப்ளூட்டோ என்னுடைய நாய்தான்; அவருடையது இல்லை என்று அவர் ஒத்துக் கொண்டதாக அந்தத் தலையாட்டலை நான் அர்த்தப் படுத்திக் கொண்டேன். 'உனக்கு ஒரு நாய் இருக்கு.. அப்போ எனக்கு?' என்று அவர் மனதில் நினைத்தாரோ என்னமோ அடுத்த நாயை வாங்குவதற்கான முனைப்பில் இறங்கியிருந்தார். லாப்ரடாருக்கு அடுத்தபடியாக அவருக்கு பிடித்தது டாபர்மேன் இன நாயாம். இதற்கு முன்பிருந்த ப்ளூட்டோ டாபர்மேன் தான். அத்துடன் சரியாக நேரம் செலவழிக்க முடியவில்லை என்று அவருக்கு ஒரு வருத்தம் இருந்திருக்கிறது. எங்கள் ஊரிலேயே ஒருவர் வீட்டில் ஒரு பெண் டாபர்மேன் ஆறு குட்டிகளை ஈன்று இருப்பதை அறிந்தோம். (அந்த தகவலைச் சொன்னதும் எலக்ட்ரிஷியன் கோபால் தான்.)

 

அந்தக் குட்டிகள் பிறந்த மூன்று வாரங்களில், நான் அவற்றைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பினார். அவருடன் சேர்ந்து நானும் போனேன். நானே போய் செலக்ட் பண்ணுவேன் என்றதனால், எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் உடன் சென்றேன். அங்கு போய் வெகுநேரம் மண்டியிட்டு அந்தக் குட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் அருகில் நின்றேன்.

 

 எனக்கு பொதுவாகவே காத்திருக்கும் திறன் ரொம்பவே கம்மி. அதனால் கால் மாற்றி கால் நின்றுகொண்டு, "இன்னும் எவ்வளவு நேரம்? இது ஓகேவா, அது ஓகேவா?" என்று கேட்டேன். "எது முதல்ல அதுவா என்கிட்ட நடந்து வருதோ, அதுதான் நமக்கு. என்னோட கெஸ் கரெக்ட்னா முதல்ல பிறந்த ஆண் குட்டி என்னைப் பார்த்து இப்ப எந்திரிச்சு வரும்" என்று கூறியபடியே ஒரு குட்டியை சுட்டிக்காட்டினார். நானும் ஆர்வமுடன் காத்திருந்தேன்.

 

சில நிமிடங்களிலேயே அவர் சுட்டிக் காட்டிய குட்டி அவரை நோக்கி வந்தது. அதை எடுத்துக் கொஞ்சினார். என் பங்குக்கு நானும் அதன் தலையைத் தடவிக் கொடுத்தேன். "இன்னும் கொஞ்சம் மதர் ஃபீட் எடுக்கட்டும், ரெண்டு வாரம் கழிச்சு வந்து வாங்கிக்கிறேன்" என்று கூறிவிட்டு விடைபெற்றோம். என் புகுந்த வீட்டு சாகசங்களை அவ்வப்போது பிறந்த வீட்டில் ஒலிபரப்பி வரும் நான், மகிழ்வுடன் ஃபோனில் என் தங்கையிடம், "நாங்க இன்னொரு நாய் வாங்கப் போறோம்.. அதுக்கு நான் இப்பவே பேர் வச்சுட்டேன். என்ன பேரு சொல்லு?" என்றேன்.

 

 ஒரு நிமிடம் யோசித்தவள், "ஜுபிடரா?" என்றாள். "அட, ஆமா! உனக்கு எப்படித் தெரியும்?" என்று நான் கேட்க, "உன்னைப் பத்தித் தெரியாதா.. சூரியக் குடும்பத்தில் ப்ளூட்டோவுக்கு அடுத்தபடியா நாய்க்கு வைக்கிற மாதிரி பொருத்தமா இருக்குற பேர் ஜூபிட்டர் தானே.. அதைத் தான் வைப்பேன்னு தெரியும்!" என்றாள்.

 

அடுத்த வாரம்.. ஜீபிட்டரின் வருகையும், ப்ளூட்டோவின் பரிணாம வளர்ச்சியும்!

 

(மருத்துவர் அகிலாண்டபாரதி எழுதும் இந்த தொடர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும்)

 

முந்தைய  பகுதிகள்

 

ப்ளுட்டோ முதல் ப்ளூட்டி வரை -01
 

ப்ளுட்டோ முதல் ப்ளூட்டி வரை -02

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை-03
 

 

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...