அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அப்பி ஒரு தலைப்பு சொல்லேன்! - மரு. அகிலாண்ட பாரதி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  16:45:22 IST


Andhimazhai Image

பெரிய்ய்ய ஊர்ல இல்லாத அப்பா.. எப்பப் பார்த்தாலும் அப்பாவைப் பத்தியே பெருமை பேசிக்கிட்டு.. என்று பள்ளிநாட்களில் நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். (அப்பாவை அப்பி என்று நாங்கள் அழைப்பதற்கும் ஒரே கேலி தான்).  ஆமா, ஊர்ல இல்லாத அப்பாதான் எனக்கு. உனக்கு என்ன வந்துச்சு? என்று நானும் சிலுப்பிக் கொள்வேன். ‘‘எங்க அப்பா சொன்னாங்க, எங்க அப்பா சொன்னாங்க'' என்று நாள்தோறும் ஏதாவது கூறுவதே எனக்கு வழக்கமாக இருந்தது.

எல்லா வீட்டிலும் பிள்ளைகளைப் பொத்திப் பாதுகாத்து வளர்த்திருப்பார்கள் என்றால், என்னையும் என் தங்கையையும் மூடி வைத்து வளர்த்தார்கள் என்றே சொல்லலாம். அவ்வளவு அதிக கவனம், அதிக பாதுகாப்பு. அது குறித்த சிறு கோபமும் எனக்கு முன்பு உண்டு. பின்னாளில் மருத்துவத் துறைக்கு வந்தபின் பெற்றோரின் கவனக் குறைவால் குழந்தைகள் விபத்துக்குள்ளா வதையும் உயிரிழப்பதையும் பார்த்தபின்அந்தக் கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை.

சிறுவயதில் அப்பா என்னும் போதே எதிர்பார்ப்பு, பதட்டம் நிறைந்த முகத்துடன் கலைந்த தலையுடன் என் பள்ளி வேன் வரும் திசையைப் பார்த்தபடியே நின்று நின்று கொண்டிருக்கும் பிம்பம் தான் நினைவுக்கு வரும். பஸ் ஸ்டாப் இருந்தாலும், பேருந்துகள் பல கடந்து சென்றாலும் பஸ் நிற்காத ஒரு கிராமம் எங்களுடையது. அதில் இருந்து கொண்டு பிள்ளையை தொலைவில் இருக்கும் ஊருக்குப் படிக்க அனுப்பும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தந்தையின் பயம் கலந்த பார்வை அது. இப்போது என் மகள்களின் பள்ளிப் பேருந்து வரத் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் என் கண்களும் அதேபோன்று பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அப்பாவின் இந்த அதீத பாதுகாப்பு உணர்வுக்கு, அவர் அதற்கு முன் கடந்துவந்த நிகழ்வுகள் தான் காரணம் என்பதை அடிக்கடி கூறுவார். எனக்கு முன் ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் இறந்ததும், எங்கள் ஊரில் அவ்வளவாக மருத்துவ வசதி இல்லாததும் அப்பாவை பயத்திலேயே வைத்திருந்தன. நானும் என் தங்கை தரணியும் ஒரு தும்மல் போட்டால்கூட, டாக்டர் இல்லாத இடத்தில் என்ற புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார் அப்பா. இது தெரிந்தோ என்னவோ என் தங்கை அப்பாவுக்குத் தெரியாத இடத்தில் போய்தான் தும்மல் போடுவாள். அந்த அறிவு கூட எனக்கு அப்போது இருந்ததில்லை.

அப்பாவைப் போலவே புத்தகங்கள் படிப்பது, கிரிக்கெட் பார்ப்பது, சில விஷயங்களில் சென்டிமென்ட் பார்ப்பது என்று பல விஷயங்களைக் காப்பியடித்த நான், ஏழாவது படிக்கும்போது அப்பாவின் கவிதை ஒன்றையும் காப்பியடிக்க, அதை என ஆசிரியை பாராட்டி வகுப்பில் எல்லாருக்கும் வாசித்துக் காட்டினார்.
மறுநாள், ஒரே ஒரு பால் தான் இருக்கு, சித்து சிக்ஸர் அடிக்கலேன்னா உனக்கு ஒரு குத்து என்பதுபோல, ஒரு நான்கைந்து கவிதைகள்(!) எழுதி அதே ஆசிரியையிடம் கொடுக்க,  அப்பா பேரைக் கெடுத்துடாதே என்ற அறிவுரையுடன் பேப்பரைச் சுருட்டிக் கையில் தந்தார். அந்தச் சுருட்டிய தாளுடன் சேர்த்து என் இலக்கியப் பணியையும் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு பூட்டிப் போட்டேன்.

எந்த ஊருக்குப் போனாலும் அப்பா பெரும்பாலும் எங்களையும் கூட்டிக் கொண்டு தான் போவார். அப்படித்தான் தமிழில் அநேக எழுத்தாளர்-களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பலர் எங்கள் வீட்டுக்கு வருவதும், இப்போது பார்த்தாலும் பாரதி நல்லாருக்கியா? என்று கேட்பதும் இன்று வரை நடக்கிறது.

தமிழ் மட்டுமல்ல, மலையாள, கன்னட, தெலுங்கு எழுத்தாளர்கள் கூட குற்றாலத்தில் அப்பா நடத்திய ‘‘பதிவுகள்'' கூட்டங்களுக்கு வந்திருக்கிறார்கள். நான் சிறு குழந்தையாக இருந்தபோது நடந்த பதிவுகளிலிருந்து இப்போது என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கலந்து கொண்ட பதிவுகள் வரை பசுமையாக நினைவிருக்கிறது.

அப்பா அம்மாவின் அடைகாக்கும் பருவம் முடித்து, பொதுவாழ்க்கையில் நுழையும்போது அவர்கள் சந்தித்தது போலவே சில பல துன்பங்கள் துயரங்கள் எனக்கும் வந்தன.  ‘‘ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டியது வரும்&'' என்று அப்பா சொல்வதை எப்போதும் நினைவில் வைத்திருந்ததால், உண்மையை மட்டும் பிடித்துக் கொண்டு துன்பங்களை அப்படியே கடந்தேன். அப்போது அது கடினமாக இருந்தாலும் அதைத் தவிர சிறந்த வழி வேறொன்றும் இருந்திருக்க முடியாது என்றே இப்போது நிச்சயமாகத் தோன்றுகிறது. கதை என்ற பெயரில் நான் எழுதுவனவற்றைப் படிக்கும் பலர், அப்பாவை போலவே எளிய மனிதர்களை நானும் கவனிப்பதாகச் சொல்கிறார்கள். இருக்கலாம்..

உண்மையில் நான் தினம் சந்திக்கும் அந்த எளிய மனிதர்களே இந்தக் கடினமான காலகட்டத்திலும் எனக்குப் பெரும் ஆறுதலாக இருக்கின்றனர். யாரைப் பார்த்தாலும் முதல் பார்வையிலேயே எடை போட்டு விடுவார் அப்பா. அவ்வளவாக யாரையும் புகழ்ந்து பேசாத அவர் ஒரு சந்திப்பிலேயே வாய்நிறைய பாராட்டியதாலோ என்னவோ அவர், எனக்குப் பார்த்த மாப்பிள்ளைக்கு நான் பார்க்காமலே தலையாட்டிவிட்டேன். அந்த முடிவுக்கு நான் என்றும் வருந்த நேர்ந்ததே இல்லை. தினமும் அப்பா எனக்குச்சொன்ன குழந்தைக் கதைகளை இன்று நான் எல்லாருக்கும்சொல்கிறேன். இன்று வரை வங்கிப் பரிவர்த்தனைகள் முதல் வீடு கட்டுவது வரை எல்லாம் அம்மா அப்பாவிடம்ஆலோசித்து விட்டுச் செய்வது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. நான் எழுதும் கதைக்குப் பெயர் வைப்பதும் கூட அப்படித்தான். கதைகளை எழுதி முடித்துவிட்டு பெயர் வைப்பதற்கு மட்டும் அப்பாவிடம் தள்ளிவிட்டு விடுகிறேன். இப்படி எல்லா நிலைகளிலும் அப்பாவும் அம்மாவும் போட்டுக்கொடுத்த ரோட்டில் பயணிப்பதும் வரைந்து கொடுத்த வட்டத்துக்குள் வாழ்வதும் வசதியாகவே இருக்கிறது.

வாழ்நாளில் பாதிக்குமேல் கடந்து விட்டாலும் அப்பாவுக்குச் சொல்லாமல் எதையும் செய்ததில்லை இதுவரை. ஒன்றை தவிர.. இந்தக் கட்டுரை எழுதுவது தான் அந்த ஒற்றை விஷயம்.
இதை மட்டும் சர்ப்ரைஸாக எழுதச் சொல்லி ஆசிரியர் கேட்டதால். இதோ எழுதிவிட்டேன்! இதற்கு நானே தலைப்பு வைக்க வேண்டும் என்று  நினைத்தால் மட்டும் சற்றுச்சோம்பலாக இருக்கிறது.  “அப்பி! இதுக்கும் ஒரு பொருத்தமான தலைப்பு சொல்லேன்!’’

-அகிலாண்டபாரதி கவிஞர் கலாப்ரியாவின் மகள். மருத்துவராகப் பணிபுரியும் இவர் நாவலாசிரியரும் கூட.

(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)





 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...