???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசைக் காப்பாற்றவே அதிமுக அவையை முடக்குகிறது: சமாஜ்வாதி கட்சி குற்றச்சாட்டு! 0 தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரத் தயார்: பாஜக பொதுச்செயலாளர்! 0 நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம்: மைத்ரேயன் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை: சிவசேனா 0 காவிரி விவகாரத்தில் மார்ச் 29- ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்: ஓ.பன்னீர்செல்வம் 0 டீகேன்னா தினேஷ் கார்த்திக்... இறுதி பந்தில் அடித்த அந்த ஆறு! 0 மீண்டும் ரஷ்யாவின் அதிபராகிறார் விளாதிமீர் புடின்! 0 இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் ரத்து : மைத்ரிபால சிறிசேனா 0 குரங்கணி தீ விபத்து: சட்டசபையில் இரங்கல் தீர்மானம்! 0 தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி: கி.வீரமணி 0 முத்தரப்பு டி20 கிரிக்கெட்: இந்தியா கோப்பையை வென்றது! 0 அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி! 0 தோல்வியடைந்தவர்களின் பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது: நிர்மலா சீதாராமன் 0 பாஜகவில் இருந்து மோடியை நீக்கிவிட்டால் பாஜக கட்சியே இருக்காது: குஷ்பு 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக உண்ணாவிரத போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அப்பாவுடன் டிஸ்கோவுக்குப் போனேன்! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   16 , 2017  11:39:22 IST


Andhimazhai Image

 

  லேடி ஆண்டாள் பள்ளியில்  தி இந்து ஆங்கில நாளிதழ் நடத்தும் இலக்கிய விழாவின் இறுதிநாள்.  அங்கே விவேகானந்தா காபி கடையில் சூப்பராக ஒரு காபி குடித்துவிட்டு அரங்கில் நுழைந்தோம். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் எழுதியிருக்கும் Standing On an Apple box நூலை ஒட்டி அவரை  இந்த இலக்கிய விழா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.(ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெயர் இருக்கிறது தெரியுமில்லே) இந்து பத்திரிகையைச் சேர்ந்த சுதிஷ் காமத் மேடையில் ஐஸ்வர்யாவுடன் சுவாரசியமாக உரையாடினார். ஆரம்பத்திலேயே சுதிஷ், இது ஐஸ்வர்யா பற்றிய நிகழ்ச்சி. அவங்க அப்பா எப்போ அரசியலுக்கு வருவார் என்று கேட்கும் கேள்விகளை தவிருங்கள். இது இலக்கிய விழா.. உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்’ என்று எச்சரிக்கை தந்து தொடங்கினார். எதிர்பார்த்திருந்ததைவிட மிக அழகாகவும் தெளிவாகவும் புத்திசாலித்தனத்துடனும் சுதிஷ் காமத்தின் கேள்விகளுக்கு ஐஸ்வர்யா பதிலளித்தார். (நிச்சயமாக ஐஸ்வர்யா  மேலும் பல உயரங்களைத் தொடுவார். அதற்கான கூறுகள் அவரிடம் உள்ளன என்பதே எமது அவதானிப்பு.) அவர் பதில்களில் தெரிந்த பணிவு தந்தையிடம் இருந்து அவருக்கு வந்திருக்கவேண்டும். சின்ன சின்ன அத்தியாயங்களாக இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு டைரி போல இந்த புத்தகம் வந்திருப்பதாகவும் உரையாடல் தொடங்கியது.

 

முதல் டிஸ்கோ:

 

பதினெட்டாவது பிறந்த நாள் வந்தபோது முதல்முதலாக டிஸ்கோ செல்ல விரும்பினாராம் ஐஸ்வர்யா. தந்தையிடம் கேட்டபோது சரி போகலாமே என்று சொல்லிவிட்டார். அவரது பிறந்த நாள் ஜனவரி 1. 31ஆம் தேதி இரவு டிஸ்கோவுக்கு குடும்பத்துடன் போனார் ஐஸ்வர்யா. அங்கே ரஜினியைக் கண்டதும் கூட்டம் அலைமோதியது. ’’டிஸ்கோவில் ஆடிக்கொண்டிருந்தவர்கள் எங்களைக் கடுமையாக திட்டியிருப்பார்கள்’’ என்ற ஐஸ்வர்யா மேலும் சொன்னது: ‘’பவுண்சர்கள் பாதுகாப்பில் ப்ளோரின் நடுவில் நாங்கள் நிற்க வைக்கப்பட்டோம். சுற்றிலும் ரிங்கா ரிங்கா ரோஸ் விளையாடுவதுபோல் பாதுகாப்பு ஆட்கள். ஐந்து நிமிடம் கழித்தவுடன், சரி போகலாம் என்றார் அப்பா. என்ன அதற்குள்…? இப்போதானே உள்ளே வந்தோம் என்றேன். நீ டிஸ்கோ போகணும் என்றாய், வந்தோம். இதோ கிளம்புகிறோம் என்றார் அப்பா. எனக்கு அழுகையே வந்துவிட்டது. காரில் ஏறி திரும்பினோம். முதல் டிஸ்கோவுக்கு அப்பாவுடன் போன ஆள் நானாகத்தான் இருப்பேன்’’.

 

கஷ்டங்கள்

தனுஷின் அண்ணன் செல்வராகவன் ஐஸ்வர்யா கஷ்டங்களையே அனுபவித்திராத பெண் என்று சொன்னதுபற்றி கேட்கப்பட்டது. ‘’கஷ்டம் என்றால் அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நான் ஒரு பிரபலத்தின் மகளாக எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது.  அதுவும் எதையும் எதிர்பார்க்காமல் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட மக்கள், எங்கள் குடும்பத்தின் மீது அன்பு செலுத்துகிறார்கள். மிகவும் சரியான நபராக நான் இருக்கவேண்டி இருக்கிறது. என்னிடம் எல்லாம் இருக்கிறது என்று மற்றவர்கள் நினைக்கலாம். என்னவெல்லாம் இல்லை என்று எனக்குத்தான் தெரியும். செல்வாவின் பின்னணியில் இருந்து பார்க்கும்போது அவர் சொன்னது சரியே.. ஆனால் நான் எதிர்கொண்ட கஷ்டங்கள் என் உலகைச் சார்ந்தவை.’’ என்றார் ஐஸ்வர்யா.

நூலின் பெயர்க்காரணம்:

’’ஆப்பிள் பாக்ஸ் என்று பெயர் வைக்கக் காரணம் இறக்குமதியாக ஆப்பிள்கள் வரும் பெட்டியை பல விஷயங்களுக்குப் பயன்படுத்துவோம். திரை உலகில் படப்பிடிப்பின் போது அது ஏராளமான விஷயங்களுக்குப் பயன்படும். நடிகர்களை உயரமாகக் காட்ட, பொருட்களை வைக்க.. இப்படி...நான்  முதல்முதலில் திரை உலகில் நுழைந்தபோது பார்த்தபொருள் ஆப்பிள் பாக்ஸ். எவ்வளவோ பிரச்னைகள், காலங்கள் ஆனாலும் இன்றுவரைக்கும் மாறாமல் இருக்கும் ஒரே பொருள் ஆப்பிள் பாக்ஸ்தான். அதனால்தான் அந்த பெயரை வைத்தேன்’’

 

’’என் இதயத்தில் இருந்து எழுதிய விஷயங்கள்தான் ஆப்பிள் பாக்ஸ் புத்தகத்தில் உள்ளன. எனக்கு மொழி தெரியுமா? பொருள்தெரியுமா? எழுத்துத் திறமை உள்ளதா என்றெல்லாம் பார்க்கவில்லை’’ என்ற ஐஸ்வர்யாவிடம் ஒரு பெண் புதிதாக எழுதத்தொடங்குபவர்களுக்கு உங்கள் டிப்ஸ் என்ன என்று  கேட்டார்.

 

‘’நானே ஒரு புதிதாக எழுத வந்தவள்தான் என்னிடம் கேட்டால் எப்படி?’’ என்ற ஐஸ்வர்யா மேலும் அந்த பெண் வற்புறுத்தியதால்,’’ இதயபூர்வமாக விருப்பத்துடன் எழுதுங்கள்’’ என்று பதில்தந்தார். சுதிஷ் காமத் சில சடார் சடார் கேள்விகளையும் கேட்டார். அதில் நினைவில் நின்றவை:

 

பிடித்த ரஜினி படம்: தில்லுமுல்லு

சிறந்த தனுஷ்படம்: புதுப்பேட்டை

சிறந்த செல்வராகவன் படம்: புதுப்பேட்டை

சிறந்த ஐஸ்வர்யா தனுஷ் படம்: இன்னும் எடுக்கவில்லை

 

நீங்க அழகாக இருக்கிறீர்களே, நடிக்கலாமே? என்று ஒருவர் கேட்டார்:

 

‘’நடிப்பா? எப்போதும் மேக் அப் போட்டு அழகாகவே இருக்கவேண்டும். நடிகைகள் எல்லாம் எப்படி சிரமப்படுகிறார்கள் என்று அறிவேன். என்னால் முடியவே முடியாது’’

 

ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் யாரை ரஜினி பாத்திரம் செய்ய வைப்பீர்கள்?

 

‘’நான் எடுக்கவே மாட்டேன். ரஜினி  பாத்திரத்தில் வேறு யாரையும் சிந்திக்கமுடியாது. ஏனெனில் அவர் என் தந்தை. எனக்கு அவர் சூப்பர்ஸ்டார் இல்லை’’

 

கடைசியாக ஒருவர் நீங்கள் எடுத்த கோச்சடையான் படம் என்று ஆரம்பித்தார். ’’கோச்சடையான் என்னுடைய படம் இல்லை’’ என்று ஒரே வரியில்  சொல்லிவிட்டார். 

 

அப்ப்புறம் அந்த கேள்வி வந்தே விட்டது. ரஜினி காந்த் அரசியலுக்கு
வருவது பற்றி? என்றார் ஒருவர்.

 

சுதீஷ் காமத்’’ வாங்க சார் வாங்க.. உங்களைத்தான் எதிர்பார்த்தேன். உங்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி’’ என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

 

-நமது சிறப்புச் செய்தியாளர்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...