![]() |
பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்துடன் டெல்லி புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர்!Posted : திங்கட்கிழமை, பிப்ரவரி 06 , 2023 09:57:19 IST
பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி புறப்பட்டார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு தரப்பில் இருந்தும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அதேவேளை ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்து உள்ளார். இப்படி இரு தரப்பும் தனித்தனியே வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசை முறைப்படி பூர்த்தி செய்து நேற்று இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார்.
அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் 'நோட்டரி பப்ளிக்' சான்றுடன் இணைத்து, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் உறுப்பினராக இருக்கும் நான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக 4-2-23 தேதியில் அவைத்தலைவர் நோட்டீசினை பெற்றேன். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக என்னுடைய வாக்கினை செலுத்துகிறேன்.
அதற்காக நோட்டீசில் குறிப்பிட்டப்படி வாக்குப்படிவத்தை அவைத்தலைவருக்கு அனுப்புகிறேன். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, பொதுக்குழுவுக்கு அதிகாரம் வழங்கியும், அவை தலைவருக்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நான் வரவேற்கிறேன். இந்த 'அஃபிடவிட்'டை எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தாக்கல் செய்கிறேன். மேலும் இதனை அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஏறக்குறைய 85% பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழ் மகன் உசேன் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பித்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அந்த கடித்தத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க இன்று டெல்லி புறப்பட்டார்.
|
|