சென்னையில் கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வருகின்ற 26ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விசுவநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்திருந்தனர்.
அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி அங்கு முன்னாள் அமைச்சர்கள், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கூடினர். அப்போது, அங்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமை அலுவலகத்திற்கு உள்ளே சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் உரிய கட்டணம் செலுத்தி வேட்பு மனுவை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, பின்னர் தாக்கல் செய்தார்.
வருகின்ற 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அதற்கு மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.