அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து ஈபிஎஸ் , ஓபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக அக்கட்சி பிரிந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீர்மானங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளருக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிமுக தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கும் என்றும், மனுத்தாக்கலுக்கு 19ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 21ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அதற்கு மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக சட்ட விதி 20அ; பிரிவு- 1, (a) (b) (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி தங்களது விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.