காலம்காலமாக நாட்டின் முப்படைகளிலும் சேருபவர்களில் ஓரிரு ஆண்டுகள் பயிற்சியின்போதே தாக்குப்பிடிக்க முடியாமல் இடையில் ஓடிவரும் கதைகள் உண்டு. ஆனால் இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் அரசாங்கமே நான்கு ஆண்டுகளுக்கு மேல் அங்கு இருக்கவேண்டாம் எனச் சொல்லி புதிய திட்டத்தைக் கொண்டுவர...
பற்றிக்கொண்டன, 11 மாநிலங்கள்.
பீகார், உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் எனப் பரவி, தெலங்கானா, தமிழ்நாடுவரை நீண்டது. தொடக்கத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டமாகத் தொடங்கிய எதிர்ப்பு, மூன்று நாள்களாக பொதுச் சொத்துகளைத் தீ வைத்து எரிப்பது குறிப்பாக ரயில்வண்டிகளுக்கு தீவைப்பதாக மோசமாக மாறியது.
பீகாரின் பல மாவட்டங்களில் போராட்டத்தீ பற்றி எரிந்தது. அந்த மாநிலத்தில் மட்டும் முதல் நான்கு நாள்களில் இந்தப் போராட்டத்தால் 200 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பொதுச்சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் வன்முறை கட்டுக்கடங்காமல் போனது.
அரியானாவில் இணையசேவைகள் முடக்கப்பட்டன.
தெலங்கானாவில் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு வன்முறை வெடிக்காதபோதும், இன்று காலையில் அரசின் தலைமைச்செயலகம் அமைந்திருக்கும் சென்னை, கோட்டை முன்னர் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ்காரர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனங்களுக்குள் போட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
ஏன் இந்தப் போராட்டம்? அக்னிபாத் திட்டம்தான் என்ன?
நாட்டின் இராணுவத்துக்கு நான்கு ஆண்டுப் பணியாக மட்டும் தற்காலிகமாக ஆட்கள் செய்யப்படுவார்கள்; அதைத் தொடர்ந்து, இவர்களில் 25 சதவீதம் பேருக்கு முப்படைகளில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்; மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர்களுக்கு ஒரே முறை பணப்பயனாக 10 இலட்சம் ரூபாய்க்கும் மேல் வழங்கப்படும் என்பது அரசின் அறிவிப்பு.
எதிர்ப்பு ஏன்?
இதுவரை, இராணுவப் பணி என்றாலே அது இயல்பான ஓய்வுகாலம்வரைக்குமானதாக இருந்துவருகிறது. பணியில் சேர்ந்த எவரையும் ஒழுங்கீனம், குற்றம் ஆகியவற்றுக்காக தண்டிக்கப்பட்டால் தவிர வேலையிலிருந்து நீக்கமுடியாது. இப்படி எத்தனையோ ஆயிரம் இளைஞர்களின் பாதுகாப்பான வேலையாகவும் இருக்கும் இராணுவப் பணியை, தற்காலிகமானதாக மாற்றினால் தங்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்பதே பல மாநில இளைஞர்களின் கோப ஆவேசத்துக்குக் காரணம்.
பிறகு ஏன் அரசு இப்படி முடிவெடுத்தது?
இராணுவத்துக்கான வருடாந்திர நிதியான சுமார் 5 இலட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயில், பாதிக்குப்பாதி, படையினரின் ஊதியத்துக்கும் ஓய்வூதியத்துக்குமாகப் போய்விடுகிறது. ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றுவரும் நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் புதிதாகச் சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் மொத்தப் படையினரில் 10 சதவீதம் பேர், புதிய தற்காலிக வீரர்கள் இருப்பார்கள். அதன் மூலம் ஊதியச் செலவு கணிசமாக கட்டுப்படுத்தப்படும் என்கிறனர், பாதுகாப்புத் துறையினர். மேலும், இராணுவத்தை நவீனப்படுத்தவும் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் முதலிய எதிர்க்கட்சிகளும் முன்னாள் படையதிகாரிகள் பலரும் நாட்டின் பாதுகாப்பில் காசுக் கணக்கு பார்ப்பது ஆபத்து என்கின்றனர்.
அமைச்சராக இருக்கும் வி.கே. சிங் போன்ற மைய அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் முன்னாள் படையதிகாரிகளும், வெளியில் உள்ள பல படையதிகாரிகளும் அரசின் இந்தத் திட்டத்தை அவரவர் நோக்கில் ஆதரிக்கிறார்கள். மீதமாகும் பணம் இராணுவத்தை நவீனப்படுத்தப் பயன்படும் என விளக்கமும் அளிக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற படைத் தளபதி மேஜர் ஜெனரல் சினோனன் சிங், “ அரசின் இந்த முடிவு முட்டாள்தனமானது. சிக்கன நடவடிக்கையை பாதுகாப்புப் படையின் செலவில் காட்டக்கூடாது.” என காட்டமாகக் கூறியுள்ளார்.
ஆனால், செலவுக்குறைப்புக்காகவும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது என அரசுத் தரப்பில் வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை.
வயதுவரம்பை அரசு உயர்த்தி உள்ளதே?
இராணுவத்தில் சேர்வதற்கான வயதை 2022ஆம் ஆண்டில் மட்டும் 23 வயதாக அதிகரித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். அவர்களின் தெளிவான பதில், வாழ்க்கை முழுவதுமான வேலை உறுதியைப் பறிப்பதா என்பதுதான்.
அக்னிபாத் திட்டப்படி 21 வயதில் நான்கு ஆண்டுகள் தற்காலிக இராணுவப் பணியை முடித்துவிட்டு வெளியில் வரும், 10/ 12 வகுப்பு மட்டுமே படித்த இளைஞர்கள், அவர்களைவிட இளைஞர்களுடன் சேர்ந்து போட்டியிட வேண்டிய நிலை. இராணுவம் தவிர்த்த மற்ற பணிகளிலும் இந்த வயதுப் போட்டி ஏற்பட்டு, தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும் என்பது எதிர்ப்பாளர்களின் அச்சத்துக்குக் காரணம்.
பாதியில் தேர்வு நிலுவை உள்ளவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சென்னைக்கு வந்த போராடியவர்களோ குறிப்பிட்ட ஒரு காரணத்தை முன்வைத்து போராடுவதாகக் கூறியுள்ளனர். முந்தைய ஆட்சேர்ப்புத் திட்டப்படி, கொரோனாவுக்கு முன்னர் ஒரு சுற்றுத் தேர்வை முடித்து, அடுத்தகட்டமாக எழுத்துத் தேர்வும் அறிவிக்கப்பட்டு, அதற்காக நாடு முழுவதும் பல இலட்சக்கணக்கானவர்கள் தயாராகி இருந்தனர். சரியாக, தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் அந்தத் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது. அதை மீண்டும் நடத்தி பழைய முறைப்படி தங்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதே சென்னையில் போராட்டம் நடத்தியவர்களின் குறிப்பான கோரிக்கை.
கடைசியாக, துணை இராணுவப்படையில் 10 சதவீதம் ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளதே?
ஆம், இளைஞர்களின் போராட்டம் தீவிரமாவதுடன், காங்கிரஸ் கட்சியும் ஜூன் 19 அன்று போராட்டம் என அறிவித்துள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பை பா.ஜ.க. மைய அரசு பறிக்கிறது என பிரச்சாரம் வலுவாகிவிட்டது. இந்த நிலையில், நான்கு ஆண்டு பயிற்சிபெறும் அக்னிபாத் வீரர்களுக்கு, பல்வேறு துணை இராணுவப் படைப் பிரிவுகளில் அசாம் ரைபிள் படையிலும் 10 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கப்படும் என மைய அரசு அறிவித்துள்ளது.
- இர. இரா. தமிழ்க்கனல்