அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"ஆதிச்சநல்லுாரில் ஆவிகளா? என்று செய்தி போட்டேன்!''-முத்தாலங்குறிச்சி காமராசு நேர்காணல்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  15:14:02 IST


Andhimazhai Image

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் காலம் பற்றி மத்திய அரசு சிலமாதங்களுக்கு முன்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து தமிழரின் தொன்மையை  பறைசாற்றியது. இந்த நிகழ்வுக்குப் பின் இருந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த செய்தி வெளியானது. அந்திமழைக்காக இவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

 

   "அக்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள வாய்க்காலில் விவசாயி ஒருவர் துாண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது. தங்கதேர் ஒன்று தண்ணீருக்குள் இருந்து மேலே எழுந்து வந்தது. புதையல் வரும்போது நாம் உடனே கையில் லேசாக அறுத்து ரத்தத்தை வைக்கவேண்டும் அப்போதுதான் புதையல் நிற்கும். இது ஐதீகம் ஆனால் மீன்பிடிப்பவருக்கு இதைப்பற்றி தெரியாததால் மயங்கி விழுந்துவிட்டார். சிறிதுநேரம் கழித்து அவர் எழுந்து பார்க்கும்போது தங்கதேரைக் காணவில்லை. மாயமாக மறைந்துவிட்டது.

இதேபோல் ஆதிச்சநல்லுாரைப்பற்றி பல கதைகளை எங்கள் ஊரில் சொல்லுவார்கள். எங்க பகுதி மக்கள் ஆதிச்சநல்லுாரைப் புதையல் இருக்கும் இடமாகதான் பார்ப்பாங்க அங்க ஏகப்பட்ட தங்கம் பூமிக்குள்ள புதைந்து இருக்குனுதான் நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. இதுமட்டுமில்லாம  ஆவியும் நடமாடுது என்று நான் சிறுவயதில் பிறர் சொல்ல கேள்விபட்டுயிருக்கிறேன். இந்தமாதிரியாக சின்னவயதில் அதிச்சநல்லுாரைப்பற்றி நிறைய கதைகளைக் கேட்டதால்  என் ஊரான முத்தாலங்குறச்சியில் இருந்து எட்டிவிடும் துாரத்தில் இருக்கும் அதிச்சநல்லுாரைப் பார்க்க ஆசை வந்தது'' என்று நெல்லை சந்திப்பு கையேந்தி பவனில் இட்லி சாப்பிட்டுக்கொண்டே நம்மிடம் பேசினார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ்.

 "ஒரு முறை என் தந்தையுடன் திருச்செந்தூருக்குப் பேருந்தில் போகும்போது  கூட்டநெரிசலில் நின்றுகொண்டே ஆதிச்சநல்லுாரை எட்டி பார்த்தேன் நான் குட்டையாக இருந்ததால் எனக்கு சரியாக தெரியவில்லை. அதுக்குப்பறம் படிக்கும்போது பாடப்புத்தகத்தில் ஆதிச்சநல்லுார் என்ற பெயரை பார்த்திருக்கிறேன் உடனே அந்த இடத்தைப் பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது என்னை கூட்டிட்டு போக யாருமேயில்லை. பிறகு நான் பெரிய பையனாக வளர்ந்ததும் அந்த இடத்தைபோய் பார்த்தேன். எனக்கு ”சப்பென்று“ ஆயிற்று  கோட்டை மாதிரியிருக்கும் என்று கற்பனை செய்திருந்த எனக்கு கண்ணுக்கு எட்டியவரைக்கும் (114 ஏக்கர்) வெறும் பொட்டல் காடுதான் தெரிந்தது.. ஆங்காங்கே உடைந்த பானைகள் தரையில் சிதறி கிடந்தன. சில மாடுகள் மேய்ந்துக்கொண்டிருந்தன.. இப்படிதான் எனக்கு ஆதிச்சநல்லுார் அறிமுகம் ஆயிற்று," என்று ஆதிச்சநல்லுாருககும் தனக்குமான உறவை விளக்கினார்.

"நான் தினகரன் செய்தித்தாளில் பகுதிநேர நிருபராக வேலையில் சேர்ந்தப்பிறகு, 2004-ல் இந்தியத் தொல்பொருள் துறையின் ஆய்வாளர் தியாக. சத்தியமூர்த்தி ஆதிச்சநல்லுாரை பார்வையிட வந்தார்.. எப்படியாவது இதை செய்தியாக்க மற்ற நாளிதழ் நிருபர்களுடன் அவரைப்பார்க்கப் போயிருந்தேன்.. அவர் ஆங்கிலத்தி்ல் ஏதோ கூறுகிறார் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை .நாங்களும் ஏதோ தட்டுதடுமாறி பேசி பார்க்கிறோம் ஆனால் அவர் ஆதிச்சநல்லுார் சம்பந்தமாக எங்களுக்கு எதுவுமே சொல்லவில்லை. சாயங்காலத்துக்குள் செய்தி அனுப்பியாகவேண்டும். என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் கூலிஆட்கள் அகழாய்வு செய்வதற்காக தோண்டும் போது அதில் ஒருவர் மயங்கிவிட்டார். என்ற தகவல் எங்களுக்கு வருகிறது.  நான் உடனே "ஆதிச்சநல்லுாரியில் ஆவியா? தொழிலாளி தப்பி ஒட்டம்" என்ற தலைப்பிட்டு அந்த தொழிலாளியின் பேட்டியும் போட்டு  செய்தி அனுப்பிவிட்டேன். மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் இந்த செய்தி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகுஒருநாள் ஆதிச்சநல்லுாரைப்பற்றி தினத்தந்தியில் விரிவான செய்தி வந்தது. சென்னையில் சத்தியமூர்த்தி ஆகழாய்வு தொடர்பாக பேட்டி கொடுத்திருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அந்த செய்திதான் ஆதிச்சநல்லுாரைப்பற்றிய என்னுடைய எண்ணத்தையே மாற்றியது.

2005-ல் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்குழுவைச் சேர்ந்த அறவாழி மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் ஆதிச்சநல்லுாருக்கு வந்தார்கள். அவர்கள் கையில் ஒரு வரைப்படம் இருந்தது. அது. 1902 அலெக்சாண்டர் ரே தயாரித்தது. அவர் மாட்டுவண்டியில் சென்று ஆதிச்சநல்லுாரைச் சுற்றி ஆகழாய்வு செய்யக்கூடிய 37 இடங்களை கண்டுபிடித்து  வரைந்த வரைப்படம்.. அதை வைத்துக்கொண்டுதான் அறவாழி, காயத்ரி ஒவ்வொரு இடமாக பார்த்து வந்தார்கள். அவர்களோடு நானும் போயிருந்தேன். ஒருநாள் ஆதிச்சநல்லுார் அருகே உள்ள நாட்டார்குளம் என்ற இடத்திற்கு கூட்டிக்கொண்டுபோனேன். ஆனால் அங்கே ஊர்மக்கள் அகழாய்வு இடத்தை ஆக்ரமிப்புசெய்து வீடுகட்டிகுடியிருந்தார்கள்.. எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அப்போது 114 ஏக்கரை அகழாய்வுக்கான கட்டுப்பாடு இடமாக கொண்டுவராததால் ஊர்மக்கள் புறம்போக்கு இடமாக நினைத்து வீடு கட்டிவிட்டார்கள். நான் உடனே ஆதிச்சநல்லுார் அகழாய்வு இ்டத்தை பாதுகாக்கவேண்டி செய்தியாக்கினேன். இந்த நேரத்தில்தான் சைவசித்தாந்த கழகம் என்னைத் தொடர்புகொண்டு ஆதிச்சநல்லுாரைப்பற்றி நுாலாக எழுதுங்கள் என்றார்கள். அதற்காக அவர்கள் சாத்தான்குளம் இராகவன் எழுதிய ”ஆதிச்சநல்லுாரும் பொருநை நதி நாகரிகமும்” என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்து அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளை எழுதுங்கள் என்றனா். நானும் உடனே குழந்தைகளுக்கு ஆதிச்சநல்லுாரைப்பற்றி அறிமுகம் செய்வதுபோல் ”ஆதிச்சநல்லுார் ஆய்வுகள்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதினே்ன். அந்த புத்தகம் எங்களுடைய வழக்குக்கும் உறுதுணையாக இருந்தது. நான் இந்த புத்தகத்தை எழுதியதால் எனக்கு நிறைய தொடர்புகள் கிடைத்தது.

 துாத்துக்குடி மாவட்டம் உருவாகி 25 வருடம் ஆனதையொட்டி  மாவட்டம் சார்பில் வெள்ளிவிழா மலா் போட்டார்கள். அதில் நானும் எனது நணபரும் சேரந்து ஆதிச்சநல்லுார் மற்றும் கொற்கை பற்றி கட்டுரை எழுதி கொடுத்தோம் அதில் எங்களது கோரிக்கைகளான,  ”ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.  இந்த ஆய்வில்  114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏராளன பழங்கால பொருட்கள் கிடைத்தது..  இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.  இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கையை வெளியிடவும், அங்கு அருங்காட்சியகம் அமைக்கவேண்டும்  என்று எழுதியிருந்தோம் அந்த கட்டுரை அப்போதைய துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் பார்வைக்கு சென்றது. நாங்கள் அந்த கோரிக்கையை மனுவாகவும் கொடுத்தோம். . உடனே தமிழக அரசு கலெக்டா் ஆசிஸ் தலைமையில் 50 இலட்சம் செலவில் புளியங்குளம் என்ற கிராமத்தில் அருங்காட்சியகத்திற்கான கட்டிடம், ஆர்ச், சாலைவசதிகள், மற்றும் ஆற்றங்கரையில் படித்துறை ஆகிய வசதிகளை செய்துக்கொடுத்தது. போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது எல்லாமே பாழடைந்து கிடக்கிறது.

2017-ல் "ஆதிச்சநல்லுாரை புகழ்பாடிய பெருமக்கள்" என்ற தலைப்பில் பத்திரிகையாளர் அமுதன் தினத்தந்தியில் எங்களைப்பற்றி எழுதியிருந்தார்  அதேபோல தினமலரிலும் ஒரு கட்டுரை வந்தது அதைப் பார்த்துதான் மதுரை  வழக்கறிஞர்  அழகு மணி என்னைதேடி வந்தார்  ”நாம இரண்டுபேரும் சேர்ந்து ஏன் பொதுநலவழக்கு போடக்கூடாது” என்று கேட்டார்.  நான் அதற்கு நிறைய செலவு ஆகுமே என்றேன் அதற்கு அவர் உழைப்பை நீங்கள் கொடுங்கள் செலவுகளை நான் பார்ததுகொள்கிறேன் என்றார் எனக்கு இதில் உடன்பாடு இல்லை.. பகுதிநேர நிருபராக வேலைசெய்யும் எனக்கு இது சரிபட்டு வருமா என்று கேட்டேன் அவர்தான் ஆதிச்சநல்லுாரைப்பற்றி உங்களைதவிர அதிகம் தெரிந்தவர் யாருமில்லை. என்றார். பாதிமனதோடு நானும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு இதுவரை என்ன நடந்தது என்று சுருக்கமாக அவரிடம் சொன்னேன்.

1876-ல் ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் ஜாக்கோடர் முதன்முதலில் ஆதிச்சநல்லுாரில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். அங்கு கிடைத்த எலும்புகள் மற்றும் மண்டைஒடுகளை தன்னுடைய நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். . அதையடுத்து 1899 முதல் 1902-ல் பிரிட்டன் அறிஞர் அலெக்சாண்டர் ரே பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி, ”தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுதான்” எனக் குறிப்பிட்டார்.. அவரைத்தொடர்ந்து ஹெண்டர்சன் என்பவரும் அகழாய்வுகள் செய்தார்.  1920-ல் பானர்ஜி என்பவர் சிந்துவெளி நாகரிகத்தை ஆய்வுசெய்தபோது இது ஒரு சங்கலிதொடர்போல் இருக்கு இதன் தொடர்ச்சி மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம் தாமிரபரணி நதிக்கரையோரம் வரை செல்கிறது என்றார்.

 இத்தகைய அறிஞர்களால் ஆராயப்பட்ட ஒர் இனத்தின் தொன்மையை நுாறு ஆண்டுகளுக்குப்பின் அங்கு மீண்டும் 2004- 2006 வரை. இந்தியத் தொல்பொருள் துறையின் ஆய்வாளர் தியாக. சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். கிட்டத்தட்ட, ஒராண்டுக்கு அவரது தலைமையில் ஆராய்ச்சி நடைபெற்றது. அப்போது சுமார் 150க்கும் மேற்பட்ட பெரிய ஈமத்தாழிகளும்  சின்னச் சின்னப்பொருள்களும் அதிகளவில் கிடைத்தன.. ஆனால் அதற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்காமலேயே சத்தியமூர்த்தி பணி ஓய்வில் சென்றார். அதன்பிறகு அந்த பதவிக்கு டெல்லியிலிருந்து சத்யபாமா வருகிறார்.. ஆனால் ஆய்வறிக்கை தயாரிக்க அவருக்கு உரிய வசதிகள் எதையும் இந்தியத் தொல்பொருள் துறை செய்து கொடுக்கவில்லை.என்று கூறப்படுகிறது. இதுதான் ஆதிச்சநல்லுாரின் தற்போதைய நிலை என்று கூறி என்னிடம் உள்ள எல்லா தரவுகளையும் அவரிடம் கொடுத்தேன். என்னை மனுதாராக கொண்டு ஆதிச்சநல்லுாரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்தவேண்டும் என்றும் ஆராய்ச்சியின்போது எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே வைக்க ஏற்பாடு  முக்கியமாக 2004-ல் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிடவே்ண்டும் என்றும் வழக்கறிஞர் அழகுமணி 2017-ல் பொதுநலவழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார்.

 மனு தாக்கல் செய்தபிறகு அரசு சார்பில் பதில் சொல்லுவதற்காக இரண்டுமுறை வாய்தா கேட்கப்பட்டது. அப்போது நான் மதுரை போகவில்லை. வழக்கறிஞரே பார்த்துக்கொண்டார். இதனை தொடர்ந்து  கடந்த  2018-ல் மார்ச் 9ந் தேதி  நீதிபதிகள் கிருபாகரன், தாரணி  ஆகியோர்  முன்  விசாரணைக்கு வந்த பிறகுதான் வழக்கு வேகம் எடுக்க ஆரம்பித்தது.  அதன்படி  முள் வேலி அமைக்கும் பணி  துவங்கியது. இதற்கிடையில் கடந்த மாதம்  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  இந்த முறை  கிருபாகரன், சுந்தர்  நீதிபதிகளின் முன் அமர்வு  விசாரணையில் கூடிய சீக்கிரம் அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் அது இந்தியாவிற்குதானே பெருமை என்று கூறினர். மேலும் கொஞ்சம் கடுமையாக இந்தியாவிற்குள்தான் தமிழகம் இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பினர்.. இதில் மத்திய அரசு  காலம் தாழ்த்துவது ஏற்க முடியாது எனவும் கடிந்து கொண்டனர்.

பிப்ரவரி 19ம் தேதி.விசாரணையின்போது  மத்திய தொல்லியல் துறையின்  துணை கண்காணிப்பாளர்  சுப்பிரமணியன்  நேரில்  ஆஜரானார்.   நீதிபதிகள்  ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அதன் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் அனுப்பப்பட்டதா என்று  கேள்வி  எழுப்பினர் . இதற்கு தொல்லியல் துறை சார்பில் அனுப்பப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் அறிவிக்கப்படாதது, பொருட்களை கார்பன் டேட்டிங் செய்ய அனுப்பாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்தனர். இதையடுத்து ஓய்வுபெற்ற தொல்லியல் அலுவலர்கள் சத்தியமூர்த்தி, தொல்லியல் அலுவலர் சத்தியபாமா ஆகியோர் வருகின்ற பிப்25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், பிப் 22ம் தேதிக்குள் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை கார்பன் டேட்டிங் செய்ய அமெரிக்காவின் புளோரிடா ஆய்வகத்திற்கும் , டெல்லிக்கும்  அனுப்ப  வேண்டும்  என்றும், அதற்கான ஆவணங்களை  வருகின்ற 25ம் தேதி நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்க வேண்டும்  என்றும் இந்தியாவில் எத்தனை இடங்களில் அகழாய்வு நடக்கிறது. எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு துளைத்து எடுத்துவிட்டனர். உடனே எனக்கு அத்தனைக்கும் ஒருவாரத்திற்குள் பதில்சொல்லவேண்டும் என்றும் கிடுக்குபிடிபோட்டார். பிள்ளையார் பிடிக்கப்போய் பூதம் கிளம்பிய கதையாக இந்த வழக்கு மூலமாக அகழாய்வில் இருக்கும் அத்தனை பிரச்சனையும் வெளியே வந்துவிட்டது.

ஒரு மாதம் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது எங்களது வழக்குக்காக டெல்லியிருந்து  சத்தியமூர்த்தியும் சென்னையில் இருந்து சத்தியபாமாவும் விமானத்தில் மதுரை  நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்கள் அன்றைக்கு ஏகப்பட்ட வழக்கு விசாரணைக்கு இருந்தது. நீதிமன்றத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நீதிபதி மதியம் சாப்பிட கிளம்பும் சூழல் இருந்தபோது அதற்குள் இவங்க இரண்டுபேரையும் அவரிடம் கொண்டு காட்டவேண்டும் அதற்காக எங்களுடைய எதிர் மனுதாரராக இருந்தாலும் நான் அவர்கள் இருவரையும் நீதிபதி அருகில் அழைத்து கொண்டுபோய் அவர் பார்வையில் படுவதுபோல் நிற்கவைத்தேன். அவர் தற்சமயமாக எங்களை பார்த்தபோது நான் ”ஆதிச்சநல்லுார்” என்றேன். மதியம் உணவு இடைவேளைக்கு கிளம்பவேண்டியவர் எங்களைபார்த்து என்னாச்சு கார்பன் பரிசோதனை வந்துவிட்டதா என்று கேட்டார். உடனே அதற்கான அறிக்கையை இருவரும் கொடுத்தனர். அந்த கார்பன் பரிசோதனை அறிக்கையில்  2 பொருளின் வயது கிமு 905 மற்றும்  கிமு 791 என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவலைக் கேட்டவுடன் நான் என் குலதெய்வத்தை நினைத்துக்கொண்டேன்.

இந்த வழக்குக்கு மதுரை உயர்நீதிமன்றம் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தது.  ஒன்றரை வருடத்தில் வழக்கு முக்கியமான இடத்திற்கு வந்ததற்கு நீதிமன்றமும் ஒரு காரணமாக இருந்தது. எதற்காக இதைச்சொல்லுகிறேன் என்றால் நான் ஆரம்பத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லாமல்தான் இருந்தேன். ஆனால் நடக்கிற விசயத்தைப்பார்க்கும் போது எனக்கு பலமடங்கு நம்பிக்கையாக இருந்தது. இந்த உற்சாகத்தில்தான் நாங்கள் சிவகளை இடத்தையும் அகழாய்வு பண்ண வேண்டும் என்று பொதுநலவழக்கு போட்டிருக்கிறோம். அதேபோல் தாமிரபரணி நதியில் சாக்கடை கலப்பதையும், ஆற்றங்கரையோரமாக உடைந்த மண்டபங்களை சீரமைக்க வலியுறுத்தியும் பொதுநலவழக்கு பதிவு செய்திருக்கிறோம்.  

நம்முடைய பண்பாட்டையும், வரலாற்றையும் நீதிமன்றத்தில் படியேறிதான் தெரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு.  இந்த நடைமுறைதான் என் மனதிற்கு குற்றவுணர்ச்சியாகப்படுகிறது," என்று தயங்கியபடி சொல்லி முடித்தார்  எழுத்தாளர் காமராஜ்.

 - மா.கண்ணன்

 

 


English Summary
Adhichanallur case no 13096 / 2017

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...