Posted : வெள்ளிக்கிழமை, ஜுலை 15 , 2022 10:40:05 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கிய பிரதாப் போத்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 69. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்து இருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் 1978ஆம் ஆண்டு ரிலீசான ஆரவம் என்கிற மலையாள படம் மூலம் திரையுலகில் நடிகராக தனது பயணத்தை தொடங்கினார். அதேபோல் தமிழில் பாலு மகேந்திரா இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து எராளமான படங்களில் நடித்து வந்த பிரதாப் போத்தன் கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
அவர் இயக்கிய முதல் படம் மீண்டும் ஒரு காதல் கதை. இப்படத்தை ராதிகா தயாரித்திருந்தார். இதில் ராதிகாவும், பிரதாப் போத்தனும் ஜோடியாகவும் நடித்திருந்தனர். இதையடுத்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இயக்குநராகவும், நடிகராகவும் தொடர்ந்து ஜொலித்து வந்த பிரதாப் போத்தன் அடுத்தடுத்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரதாப் போத்தன், இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிரதாப் போத்தனின் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.