???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட் 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் - ராமதாஸ்

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  04:53:52 IST


Andhimazhai Image
இந்திய பொருளாதாரத்தின் சரிவை ஒப்புக்கொண்டு, அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 
"இந்திய பொருளாதாரமும், சந்தைகளும் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றை சமாளிப்பதற்கான சில நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். மந்த நிலையை சமாளிக்க அவை ஓரளவு உதவும் என்ற போதிலும், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார சிக்கலின் தீவிரத்துடன் ஒப்பிடும் போது, இவை யானை பசிக்கு சோளப்பொறியாகும்.
 
இந்தியப் பங்கு சந்தை முதலீடுகள், பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஆண்டு வருவாய் ரூ.2 கோடி மற்றும் 5 கோடிக்கும் அதிகமாக உள்ளவர்கள் ஆகியோர் மீது  மத்திய நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள் ரத்து செய்யப்படும்; வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து வகைக் கடன்கள் மீதான வட்டியும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப உடனுக்குடன் குறைக்கப்படும்; பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் முதலீடு வழங்கப் படும்; வாகனங்களின் பயன்பாட்டு உரிமை நீட்டிக்கப்படுவதுடன், பதிவுக்கட்டண உயர்வு நடைமுறைப் படுத்தப்படுவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தில்லியில் நேற்று வெளியிட்டார்.
 
மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, அவற்றின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இருக்கும். ஆனால், மந்தநிலையிலிருந்து பொருளாதாரத்தை  மீட்க இந்த அறிவிப்புகள் போதுமானவை அல்ல. மத்திய நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன; வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைகள் நோய்க்கான மருத்துவமாக அமையாமல், நோயின் அறிகுறிகளுக்கான மருத்துவமாக அமைந்திருப்பது தான் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். 
 
இந்தியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு அவற்றில் முதலீடு செய்திருந்த ரூ.23,000 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்தது தான் காரணம் ஆகும். பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்பட்டதால் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப எடுத்ததாக நினைத்துக் கொண்டு, அந்த வரிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.  ஆனால், பங்கு சந்தைகளின் வீழ்ச்சிக்கு புதிய வரிகள் மட்டுமே காரணமல்ல. இந்தியப் பொருளாதாரம்  மந்த நிலையை அடைந்து விட்டதால், அவற்றில் செய்யப்படும் முதலீடுகள் மீது போதிய லாபம் கிடைக்காது என்பதால் தான், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குகளில் இருந்து தங்கத்திற்கு மாற்றுகின்றனர்.
 
அதேபோல், வாகன விற்பனை, வீடுகள் விற்பனை ஆகியவை மந்தமடைந்ததற்கான காரணங்களை அறியாமல், அவற்றின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக அரசுத் துறைகளுக்கு புதிய வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சிக்கலைத் தீர்க்காது.  வாகன விற்பனை குறைந்திருப்பதை தனித்த நிகழ்வாக பார்க்காமல், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ளதாக இருக்கும். வாகனங்களின் விற்பனை குறைந்ததற்கான முக்கியக் காரணம் அவற்றின் தேவை குறைந்து விட்டது தான். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இருந்தால் தான் சரக்கு வாகனங்களின் தேவையும், விற்பனையும் அதிகரிக்கும். நடுத்தர மக்களின் வருவாய் அதிகரித்து அவர்கள் கைகளில் பணம் புழங்கினால் தான் பயணிகள் வாகன விற்பனை அதிகரிக்கும். அதேபோல், மற்ற அனைத்து நிலை மக்களிடமும் வாங்கும் சக்தி அதிகரித்து, அதன் பயனாக அனைத்து வகையான பொருட்களின் நுகர்வும் அதிகரித்தால் மட்டும் தான் பணப்புழக்கமும், சந்தை வளர்ச்சியும் ஏற்படும். ஆனால், அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவிக்கவில்லை.
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதால் சிறு தொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் இதிலிருந்து மீண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியும். ஆனால், உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.20% ஆக குறைந்து  இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியும், ஏற்றுமதியும் கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட நடப்பாண்டில் குறைந்து விட்டதையோ அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இது வளர்ச்சிக்கு வழி வகுக்காது.
 
இந்தியப் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் சி.ரங்கராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுனர்களின் கருத்தும் இதையொட்டியே  உள்ளது. எனவே, இந்திய பொருளாதாரத்தின் சரிவை ஒப்புக்கொண்டு, அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சந்தைக்கு புத்துயிரூட்ட ஜி.எஸ்.டி குறைப்பு,  ஏற்றுமதிக்கான சலுகைகள், கட்டமைப்புத் திட்டங்களின் மீதான அரசின் செலவுகளை அதிகரித்தல், ஊரக சந்தைகளுக்கு புத்துயிரூட்டி, தேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
Acknowledge the economic downturn and make reforms

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...