???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் 18 - இடமற்ற பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   20 , 2016  00:39:20 IST


Andhimazhai Image

இசையையும் மழையையும் எழுதும் போது மாத்திரம் மனது வேறொன்றாய்க் குழைகிறது. இடமற்ற பாடல்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி..? சில பாடல்களுக்கும் எனக்கும் தனித்த உறவாடல் இருக்கிறது. என் பாடல்கள் எனது சாலை என் பயணம் எனது வாழ்க்கை இந்த வாக்கியம் எல்லாருக்கும் பொதுவானது. உனக்குக் கிடைத்தவற்றை அவை கிடைக்காதவர்களது கண்களால் பார் என்று பொருள் தரக் கூடிய பொன்மொழியை அம்மா அடிக்கடி மொழிவாள். காலம் என்பது மனித மனங்களின் வழியாகத் தொடர்ந்தோடுகிற நதி என்றால் இசையும் வார்த்தைகளும் பாடல்களும் அந்த நதியின் உடலைக் கீறிப் பயணங்களைச் சாத்தியப்படுத்தும் மாலுமியின் மாயத் துடுப்புக்களாய் இருக்கக் கூடும் அல்லவா..?


இடமற்ற பாடல்களைப் பற்றிப் பேசலாம், ஒரு கேஸட் வந்ததுமே அதன் பாடல்களுக்கும் தனக்குமான உறவைத் தொடங்குகிறான் நேயன். கேஸட்டைக் கண்மூடித் திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலமாக அந்தப் படத்துடனான ஒன்று விட்ட உறவாடலைத் துவங்குகிறான் ரசிகன் தனக்குப் பிடித்த நடிகரின் படத்துக்கான பூஜை தினத்திலிருந்தே அதை எப்போதடா பார்ப்போம் என்கிற ஆவலாதி உருவாகி வலுப்பெற்று அவ்வப்போது பத்திரிகைகளில் அந்தப் படம் பற்றிய சேதிகள் படங்கள் என எத்தைக் கண்டாலும் பித்தை அதிகரித்துக் கொள்வான் அவன்.


நடிகர்களின் ரசிகன் என்பது ஒரு வினோதமான உறவு. ஏதோ அந்த நடிகரே பார்த்துப் பார்த்துத் தன்னைத் தேர்ந்தெடுத்தாற் போலத் தன் மனதினுள் ஒரு திசையை ஒரு நகர்தலை ஒரு முடிவை ஒரு பிடிவாதத்தை இன்னபிற இன்னபிறவற்றை எல்லாம் தன்னைத் தானே நியமித்துக் கொள்வான் ரசிகன். மனதுக்குப் பிடித்த நடிகரின் முந்தைய படம் ஒரு பெரு வெற்றிப் படமாக இருந்தாலும் அடுத்த படம் ஓரளவுக்கு நின்று ஆடிடவேண்டுமே என்ற கவலை வரும் ரசிகனுக்கு. இதுவே முந்தைய படம் ஓடவில்லை என்று வைத்துக் கொண்டால் அய்யய்யோ இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகவேண்டுமே என்ற கவலை இரட்டிப்பாகத் தென்படும்.


அதிலும் அடுத்து வருகிற படம் 100 ஆவது படமாகவோ அல்லது 50 ஆவது 25 ஆவது படமாக இருந்துவிட்டால் அதற்கென்று கூடுதலாக ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இத்தனை எதிர்பார்ப்பையும் இரண்டால் பெருக்குவதாகவும் வகுப்பதாகவும் அமைவது தான் ஆடியோ ரிலீஸ்.


ஐயம் ரஜினி ஃபேன். ரஜினி என் ரட்சகன். நான் அவரது தலைமை ரசிகன் என்கிற நினைப்பிலிருந்தவன். என் பால்யத்தின் நடுமையத்தில் நினைவு தெரிந்து அதிசய பிறவி , சிவா, நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற படங்கள் முழுத் திருப்தி தந்தவை அல்ல. அவற்றுக்கு அடுத்த படங்களை வெறியோடு காத்திருந்த அனுபவம் எனக்கும் உண்டு. இதுவே அப்போது கமல் படம் சரியாக ஓடாவிட்டால் ஹை சூப்பர் என்று சந்தோஷித்திருக்கிறேன்.


ஒவ்வொரு பாடலையும் மனசுக்குள் இது எப்படியெல்லாம் வருமோ எறு கற்பனை செய்து கொள்வேன். எனக்குப் பிடித்த பாடலை என் முன் பதிவை விட அருமையாகப் படமாக்குகிற ஒவ்வொரு இயக்குனரையும் ரசித்திருக்கிறேன். சில பாடல்களை நிஜத்தை விட நானே தேவலாம் என்ற அளவில் நொந்துமிருக்கிறேன்.

தளபதி படத்தின் கேஸட்டில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல் புத்தம் புதுப் பூப்பூத்ததோ  பாடல் அத்தனை உற்சாகமான துவக்க இசை மணிச்சப்த மழையாய்த் தொடங்கும். ஆ என்று மேலேடுப்பார் ஜேசுதாஸ்...  

 

வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ கண்பேசும் வார்த்தையைத் தான் கண்ணீரும் சொன்னதோ என்னும் போது மனசு குழைந்து நடுங்கும். இந்தப் பாடலின் இடை இசையை மிக அமானுஷ்யமாக அமைத்திருப்பார் ராஜாவானவர்.


பால் நிலா தேய்கின்றதென்று பகலிரவும் என் நெஞ்சம் வழிவிடுமோ உனக்கென நான் பிறந்தேன் என்றபோது நடுங்கிய மனது உடைந்து சிதறும் பொதுவாகப் பாடலிசையின் தன்மை என்னவாக இருக்கும்..? குரல் இன்பத்தை பொழிவதாக இருந்து சிச்சுவேஷன் எனப்படுகிற சூழலும் அப்படியானதாக இருந்துவிட்டால் அப்படியான சந்தோஷத் ததும்பலை அதிகரித்துத் தருவதாகவோ அல்லது குறைப்பதாகவோ மொத்தத்தில் கட்டுப்படுத்துவதாக அத்தகைய பாடலின் மைய இசை இழையோடும்.


முரணிசை என்பது எல்லாருக்கும் எல்லாப் பாடல்களுக்கும் உகந்ததல்ல. இசைக்கேடாக முடிந்துவிடக் கூடிய அபாயம் உண்டு என்பதும் சத்தியம். பெருவாரி மனங்களால் ஏற்கப்படாமல் நிராகரிக்கப் படுகையில் முரணிசை மேதமையாக அல்லாமல் அதிகப் பிரசங்கமாக நினைக்கப்படுகிற இடரும் உண்டு. இத்தனைக்கும் மேலாக வரிகளை எழுதுகிற கவி இசையை உள்வாங்கி வாசிக்கிற கலைஞன் பாட்டைப் பாடுகிற பாடகர்கள் இந்த மூன்று கட்டுமானங்களும் ஆதாரமாய்க் கொண்டிருப்பது அந்தந்தப் பாடலை உருவாக்குகிற இசைமேதமையைத் தான். இசை அமைப்பாளன் தான் ஒரு பாடலின் மாலுமி. அவனே அந்தக் கலத்தைக் கட்டுபவனும் ஆகிறான். வென்றால் புகழப்படுவதைக் காட்டிலும் பன்மடங்கு எள்ளப்படுவதற்கான வாய்ப்பை முரணிசை கொண்டிருக்கிறது. பரீட்சார்த்தங்களுக்கான களம் சினிமா அல்ல என்பது பணம் ஊடாடுகிற தொழிலாகப் பார்க்கப்படுகிற சினிமாவின் மீது அக்கறை உள்ள பலரின் பொதுக் கூற்றுமாகிறது.
நிற்க...அத்தகைய ரிஸ்கி முரணிசையைத் தன் ஆரம்பகாலம் தொட்டு இன்று நேற்று வரை அனாயாசமாகக் கையாண்டு வரும் ஒரு மேதை வழக்கம் போல் நம் இசைஞானி இளையராஜா. மற்றவர்களும் செய்திருந்தாலும் இது ராஜாவுக்கு கண்ணை மூடிக் கொண்டு செய்துகாட்டுகிற லாவகவித்தை.


இந்தப் பாடலான புத்தம் புதுப் பூப் பூத்ததோ பாடலின் இடை இசையினை உற்று நோக்கினால் சந்தோஷமாய்ப் பொங்கித் துவங்குகிறது. உடனே ஆழமான துக்கத்தின் இருளில் பாய்ச்சுகிறது. ஜேசுதாஸின் குரல் மற்றொரு வாதையைப் பதிவுசெய்வதாக இருக்கிறது. வந்து கலக்கிற ஜானகியின் ஐஸ்க்ரீம் ததும்பல் கேட்பவரைக் கரைத்துத் தானும் கரைகிறது. இத்தனைக்கும் மேலாக இந்தப் பாட்டின் இடை இசை முதல்முறை பல்லவிக்கும் முதல் சரணத்துக்கும் இடையே இரண்டு சரணங்களுக்கு இடையே இரண்டாவது சரணம் முடிந்து கடைசிமுறை பல்லவிக்கு இடையே பாடலின் முடிவில் என எங்கே நோக்கினாலும் சந்தோஷமும் துக்கமும் வென்னீரும் தண்ணீரும் போலக் கலப்பதை நன்றாக உணரலாம். உண்மையில் அது வென்னீரும் தண்ணீரும் அல்ல என்பது தான் அந்தந்த இசைக்கோர்வைகளுக்கு இடையே இருக்கக் கூடிய முரண். கருவிகள் குரல்கள் இவற்றை வைத்துக் கொண்டு இளையராஜா செய்துகாட்டிய பற்பல சித்துவிளையாடல்களில் இப்பாடலும் ஒன்று.


மதுரை மதி தியேட்டருக்கென்று ஒரு வரலாறு உண்டு. தொண்ணூறுகளில் அழகான தியேட்டர்களில் ஒன்று. இன்றைக்கும் இயக்கத்தில் இருப்பது தான். இந்தத் தியேட்டரில் பெரும்பாலான கமல் படங்கள் ரிலீஸ் ஆகும். சோலமலை மற்றும் அம்பிகா அல்லது சோலமலை நடனா அல்லது சோலமலை சினிப்ரியா என்றெல்லாம் ரஜினி படங்கள் அல்லது கமல் படங்கள் வந்தாலும் ஒன்றிரண்டு ரஜினி படங்கள் தவிர பெரும்பாலும் தொண்ணூறுகளில் எல்லாக் கமல் படங்களும் மதி தியேட்டரில் தான் வெளியாகும். அது என்னவோ மதியில் கமல் படங்கள் அதிகபட்சம் 85 நாட்கள் கூட ஓடினவே தவிர 100 நாட்கள் ஓடியது இல்லை. கமலின் படங்கள் மதுரையின் பல வேறு தியேட்டர்களில் வெள்ளி விழாவெல்லாம் கண்டன. என் பதின் பருவத்தின் கதை என்னவென்றால் மதியில் வெளியான கமல் படங்கள் 100 நாட்கள் தாண்டவில்லை. பிற்பாடு இந்தியன் 200 நாளும் தெனாலி 225 நாளும் ஓடின. அது வேறு கதை.


அப்படியான மதி தியேட்டரில் ரிலீஸ் ஆன சத்யராஜ் படமான அமைதிப்படை தமிழின் அரசியல் அங்கதத் திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று என இன்றளவும் ரசிக்கப் பட்டுவருவது. இயக்குனர் மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் இருவருடைய இணையில் அதுவரை கண்டிராத அளவில் இந்தப் படத்தின் வசனங்களும் காட்சிகளும் புகழப்பட்டன.


          அந்தப் படத்தில் சின்ன சத்யராஜூக்கு ரஞ்சிதா ஜோடி..


             சொல்லி விடு வெள்ளி நிலவே...சொல்லுகின்ற சேதிகளையே... 

 

இந்தப் பாடல் ஒரு பரிபூரணம். இந்தப் படத்தில் இந்தப் பாடலுக்கான துவக்க இசையெல்லாம் கூட ஒலிக்கும்.பாட்டு வராது. படமோ பெரும் வெற்றிப் படம். படத்தில் இப்பாடல் இடம்பெறவில்லை. வேறு படத்திலாவது வைத்திருக்கலாம் என்று ஏங்கியிருக்கிறேன்.

ஸ்வர்ணலதா சீக்கிரமே விடைபெற்றுக் கொண்ட தாரகை அவரது குரலில் உச்சபட்ச பரிமாணம் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம். மனோவும் ஸ்வர்ணாலதாவும் பாடும் இப்பாடலின் முழுமுதல் சிறப்பு இந்தப் பாடல் முழுவதும் குழலிசையின் ஆதிக்கம் இருக்கும். இன்னொன்று இப்பாடலில் குறைவான இசைக்கருவிகளே பயன்படுத்தி இருப்பார் ராஜா. ஒன்று இசையும் போழ்து மற்றவை ஓய்வெடுக்கும் ஃப்யூஷன் ஜூகல் பந்தி இப்பாடல்.


மறக்கவே முடியாத இப்பாடலை என் மனதின் திரைகளில் பல்வேறு முறைகள் படமாக்கி இருக்கிறேன் நான். நாடோடித் தென்றல் படத்தில் வருகிற ஒருகணம் ஒருயுகமாக ஏன் தோன்றவேண்டுமோ பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவில்லை. முதல் நாள் முதல் ஷோ முடிகையில் அந்தப் படம் எனக்குள் நேர்த்திய போதாமைக்கு அப்பாடலின் ஆப்சென்ஸூம் ஒரு காரணமானது. 

தாலி என்னும் வேலி எனத் தொடங்குகிற இந்தப் பாடலைக் கேளுங்களென்...கேட்டறியாத வலியைச் சொல்லியிருப்பார் ராஜா.

 

படம் அதன் கதை சிச்சுவேஷன் அதில் பங்குபெறும் கலைஞர்கள் என எல்லா முகாந்திரங்களையும் மீறி வெளியேறுவதில் தான் எந்த ஒரு பாடலின் நிரந்தரித்தலும் அடங்கி இருக்கிறது. இன்னும் சொல்வதானால் முதல் ஓட்டம் என்பது தாற்காலிகமே. அதனைத் தாண்டும் போது அந்தப் பாடலின் மீது காலகால மழை பொழிகிறது. அந்தப் பாடலின் மேனி மீது படிந்திருக்கக் கூடிய வணிகச் சேறு கழுவப்பட்டுப் புத்தம் வெளிச்சத்தோடு தன்னைப் புனரமைத்துக் கொள்கிறது. இப்படியான பாடல்கள் முன்பே திட்டமிடப் படுவதில்லை என்பது ஒருபுறம் எந்த ஒரு பாடலையும் உருவாக்கும் பொழுது அவற்றை வெறுமனே கேள்வியின்பத்துக்கான ஒலிப்பறவைகளாக உருவாக்க முடியாது என்பதால் பிற்பாடு படத்தின் காட்சிநகர்தலினின்றும் விலக்கம் கொள்கிற பாடல்களைத் தேடித் தேடித் தொகுத்தால் அப்படியான பாடல்களுக்கென்று தனித்த வெண் சிறகுகள் இருப்பது புரிந்துகொள்ள முடியாத சூட்சுமமாகவே இருக்கிறது.

           


கவிதை மலர் உறவுகள் உள்ளிட்ட படங்கள் வெளியாகாமலே அவற்றின் பாடல்கள் மறக்க முடியாத வைடூர்யக்குமிழிகளாக விருப்பமான நெஞ்சங்களின் வானத்தில் அலைகின்றன என்பது மெய்தானே..?


என்னைத் தூங்க விடாமற் செய்த பாடல்களில் கீழ்க்காணும் பாடலும் ஒன்று. என்றைக்கு முதல்தடவை கேட்டேனோ இன்று வரை கேட்கிற தினங்களையெல்லாம் தன் கணக்கிற்கு மாற்றிக் கொள்கிற வல்ல வல்லமை இந்தப் பாடலுக்கு உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் ஏன் வெளியாகவில்லை என்பததைத் தாண்டி இதனை காட்சிப் படுத்துவதை விட காற்றுக்கு ஒப்புக்கொடுத்ததே சாலச்சரி என்று கேவுகிற மனக்குரலும் எழாமலில்லை.


இதனை எழுதிய வாசன் தமிழ்த் திரை உலகில் பாதியில் உதிர்ந்த நட்சத்திரங்களில் ஒருவர். பரணி இசையில் ஹரிஹரன் பாடிய இந்தப் பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழும் என்பது என் நம்பகம் மாத்திரமல்ல. இப்பாடலின் ஆன்மபலம். வாழ்க வாசனின் வைரவரிகள்.

 

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ளே உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா
இதயம் என்ன புத்தகமா படித்து விட்டுத் தந்துவிட
காதல் என்ன கட்டிடமா இடித்து அதைக் கட்டிவிட
வெண்ணிலவே வெண்ணிலவே
பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா மரமா
கண்ணே உன் கையில் நான் விரலா நகமா
நகமாய்க் களைந்தாயே இது உனக்கே தகுமா
இன்னொரு ஜென்மத்தில் பெண்ணே நீ என்னைப் போல் ஆணாகப் பிறந்து வருவாய்
என்போலப் பெண்ணே நீ அப்போது நேசித்து நான் படும் வேதனை
உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை ஏன் இன்னும் சொல்லவில்லை
காதல் பாடலின் அத்தனை வரிகளிலும் கற்கண்டாவது கண்ணீராவது காதலாவது காத்திருத்தலாவது தொனித்தாக வேண்டுமல்லவா..?

இதன் இரண்டாவது சரண முடிவில்


உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில் கொலுசொலி வருதே அந்தத் துன்பம் இன்பமடி உயிர் தேடும் உந்தன் மடி...

இந்த வரியின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் ஏழேழு ஜென்மமானாலும் வெளியேற முடியாது என்றே நினைக்கிறேன்.

இளையராஜாவின் புத்தம் புதுக்காலை என்ற அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம்பெறாத அந்தப் பாடல் பின்னாளில் வேறொரு படத்தில்  இடம்பெற்றது. என்றாலும் தன்னோடு தன்பழைய காலத்தையும் சேர்த்தணைத்தபடியே அந்தப் பாடல் இருந்தது. இதே பாடலின் சாயலின் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான தலைவாசல் படத்தில் பாலபாரதி இசையில் அதிகாலை காற்றே நில்லு  என்ற பாடலை அதே ஜானகி பாடியது ரசம்.எல்லாப் படங்களும் திட்டமிட்டபடி எடுத்து முடித்து வெளியாகி வென்று விடுவதில்லை. இது சினிமாவின் சூத்திரம். ஆனாலும் நினைவின் அடுக்குகளுக்குள் இத்தகைய  இடமற்ற பாடல்களுக்கென்று தனித்த இடம் இருக்கத் தான் செய்கிறது. அவற்றைக் கண்களை மூடி ரசிக்க முடிகிறது. இன்னும் சாய்ந்தமர்ந்து கொண்டு கைகளைத் தலைக்குப் பின்னே வைத்துக் கொண்டபடி தன்னிஷ்டக் கேமிராவை மனசுமுழுவதும் நகர்த்திப் படமாக்கிக் கொள்ள ஏலுகிறது.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...