???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு! 0 ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் 0 டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்! 0 ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 0 நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் 0 கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 0 உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை 0 இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 0 இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ 0 ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் 0 தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா? – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி 0 ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி 0 மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை 0 ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன்மயக்கம் - 17 - தேவதையின் தழுவல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   07 , 2016  01:39:17 IST


Andhimazhai Image

மனிதர்களுக்கும் பாடல்களுக்கும் என்ன தொடர்பு..? இதென்ன பைத்தியக்காரத் தனமான கேள்வி..? என்று படுகிறதா..? சற்றுப் பொறுமை ப்ளீஸ். பாடல்களின் உலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சொற்களுக்கான அர்த்தங்கள் வேறுபடும். அதென்ன பாடல்களின் உலகம் என்கிறீர்களா..? இது உங்கள் இடமல்ல ஸ்வாமி. ப்ளீஸ் சலோ. கெட் அவுட்.


திவ்யா என்று வைத்துக் கொள்வோம்..? அவள் படித்தது ஆர்கிடெக்சர். அவளுக்கு ஒரு செண்டிமெண்ட். தாய்மொழி தெலுங்கு எனத் தொடங்குகிற சரித்திரத்தின் நாயகியான திவ்யாவுக்கு எப்போதெல்லாம் அல்லது எங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட பாடல் கேட்கிறதோ அப்போதெல்லாம் அங்கெல்லாம் அன்றைக்கெல்லாம் அவளுக்கு அதிர்ஷ்டமான நாள் என்று ஒரு செண்டிமெண்ட். தானாகத் தேடித் தேடிப் பாடல்களைக் கேட்பது அவள் வழக்கம். பொதுவாகவே அவளொரு பாடல்விரும்பி.


            நிற்க.


அதே பாடல் எப்போதாவது டீக்கடையிலோ டீவீயிலோ பஸ் பிரயாணத்திலோ அடுத்தவர் வீட்டிலிருந்தோ இன்ன பிற வழிகளிலிருந்தோ கேட்க நேரும்போதெல்லாம் திவ்யா அற்புதமாய்த் தனக்குத் தானே மலர்வாள். அந்தப் பாடல் எல்லோருக்கும் என்னவாக ஒலித்ததோ தெரியாது. அவளுக்கு அந்தப் பாடல் அவள் உயிரின் பிரதி. இல்லையில்லை உயிரின் மூலம். அவள் வாழ்க்கையில் பார்த்திராத ஒரு ஜீவனான அவளைப் பெற்ற அன்னைக்குக் குரல் வழியே ஒரு உருவம் கொடுத்திருந்தாள் திவ்யா.


திவ்யாவைப் பெற்றவள் பிரசவத்தின் போதே மரித்துப் போனது அவள் வாழ்க்கையின் விருப்பமற்ற துவக்கம். பின் நாட்களில் வெறும் புகைப்படங்களில் மாத்திரம் காணக்கிடைத்த பெற்றவளின் திருவுருவை என்னசெய்தாவது காண மாட்டோமா என்றேங்கிய திவ்யாவுக்கு ஒரு பாடல் அவள் பார்த்திராத அன்னையைப் பார்த்த பரவசத்தை நல்கியது. அந்தப் பாடல் இடம்பெற்ற படத்தை அதன் பின் பார்க்கவே இல்லை அவள்,. என்றபோதும் திவ்யாவின் உலகத்துக்குள் அந்த ஒரு பாடல் மாத்திரம் பெண் உருக் கொண்டது. அதன் வரிகளா அதன் பின்னணி இசையா அதனைப் பாடிய குரலா என்று பிரித்துப் பார்க்க இயலாத சூட்சுமம் அவளது அறையெங்கும் அந்தப் பாடலின் துகள்கள் படர்ந்தன. ஒரு முறைக்கு மேல் கேட்கவியலாத அளவுக்குக் கண் கலங்கிக் கரைந்து உருகி வெடித்துச் சிதறி ஓங்கிச் சப்தமாக பெருங்குரலில் அழுது தீர்த்த அதே அந்த திவ்யா தான் அதே அந்தப் பாடலை இரண்டாவது முறை தேடிச் சென்றாள். தன் பலவீனம் அதுவென்று எண்ணிக் கலங்கியபடியே இன்னொரு முறை கேட்கையிலும் கரைந்தழுதாள்.

 

குறிப்பிட்ட சில முறைகள் கேட்டபிற்பாடு தான் திவ்யாவுக்குப் புரிந்தது அந்தப் பாடல் அவளது பலவீனமல்ல. அந்தப் பாடல் ஒரு தேவதையின் தழுவலைப் போல வளைத் தேடி வந்து வருடியிருக்கிறது என்கிற உண்மையை உணர்ந்த திவ்யா அந்தப் பாடலைக் கண்களை மூடிப் பார்க்கத் தொடங்கினாள். மனதைத் திறந்து கேட்கத் தொடங்கினாள். அந்தப் பாடலின் ஏதோவொரு வரிக்குள் அவளைப் பெற்றவள் அதுவரைக்கும் பேசாவதனியாய் அருகியிருந்தவள் நெருங்கி வந்து தலை தடவி தோள் பற்றி இறுக அணைத்து நெக்குருகி நெற்றி வழித்துக் கூந்தல் முகர்ந்து கன்னம் முத்தித் தன்னோடணைத்துத் தாலாட்டுக்கு நிகரான தழுவலத்தனையையும் தன் மகளுக்குக் கிடைக்கச் செய்தாள்.


எல்லாவற்றையும் நிரூபிக்க முடிவதில்லை. திவ்யா உணர்ந்த எதையும் நிரூபித்துக் காண்பி என்றால் அது ஆகாவழி. ஆனால் திவ்யா தானே நிரூபணமாய் மலர்ந்தாள். அதுவரைக்கும் மனிதர்களிடமிருந்து விலகி விலகி தூரம் சென்று ஓரம் முடங்கிய அதே அவள் நடுவாந்திர நிலவானாள். எல்லாத் திசைகளும் திவ்யா திவ்யா என்று சொல்கிறாற் போல் செய்தாள். அவளொரு சகலகலாவல்லி. காலம் எதையோ ஒன்றைப் பிடுங்கிக் கொண்டு வேறு எவ்வெவற்றையெல்லாமோ தந்தும் செல்லக் கூடிய மனம் பிறழ்ந்த தேவதை தானோ...


திவ்யா தனக்கு இணக்கமான அந்த உயிரருகாமைப் பாடலைப் பற்றி எல்லாரிடமும் எப்போதும் சொல்கிறவளாயில்லை. அந்தப் பாடலைத் தனது பிரத்யேகத்தின் பெட்டி ஒன்றில் ஒளித்து வைத்தாள். தனக்கு மட்டுமான சிலவற்றில் ஒன்றாக அத்தனை பொதுவான ஒரு பாடலை மறுவுறு கொள்ளச் செய்தாள். எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது இயலாததல்லவா.? தன் ரகசிய இச்சையாக மாத்திரமல்லாது தனக்கு மாத்திரம் தெரிந்த மந்திர உச்சாடனமாகவே அந்தப் பாடலை வைத்திருந்தாள்.


இத்தனைக்கும் நடுவே அந்தப் பாடலை எங்கெல்லாம் என்றைக்கெல்லாம் யதேச்சையாகக் கேட்க நேர்ந்ததோ அந்தப் பாடலுக்குப் பின்னதான அந்த தினம் அவளுக்கு எதையாவது அள்ளித் தருவதாகவே இருந்ததைத் தனித்து நோக்கினாள். அந்தப் பாடலைப் பற்றியே தன் சக தோழிகளுக்கோ குடும்பத்தாருக்கோ அவள் சொன்னதில்லை என்பதால் அந்தப் பாடலின் அவ்வப்போதைய வருகையும் அதன் பின்னதான அதிருஷ்டத்தின் சாத்தியங்களைப் பற்றியும் யாரிடமும் சொல்லவில்லை திவ்யா. தனக்கு மட்டுமான தன்னுலகத்தில் அந்தப் பாடலுக்கென்று ஒரு ராஜமாளிகை கட்டி அதனை இருத்தினாள். அவளுக்குள் சர்வாதிகாரம் கொண்ட சர்வவல்லமை பொருந்திய மாட்சிமை மிக்க மகாகனம் அந்தப் பாடலுக்கென்று இருந்தது.வேறெதற்கும் இல்லாததும் அது.


            

திவ்யா தானாகத் தேடிச் சென்று அந்தப் பாடலைக் கேட்பதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்கு அதிகப் படுத்தினாள். ஒரு கட்டத்தில் அந்தப் பாடலை அவளாக அணுகவே இல்லை.எங்கேயாவது யதேச்சையாக கேட்டாலொழிய. அப்படியான சந்தர்ப்பங்களில் அவள் தன்னால் முடிந்த அளவுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும் முடியாத சந்தர்ப்பங்களில் தான் கரைந்து தனக்குள் ததும்புவதை வேறு வழியற்ற பிரார்த்தனையாகச் செய்துவந்தாள்.


          எல்லாம் சரி....


ஒரு பெண். அவளது சூழல் அவளை ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து விரும்புகிறவளாக ஆக்கிற்று என்று தத்துவவிசாரம் பேசலாம்.


எனது வினா என்னவென்றால்...யாரோ ஒரு திவ்யாவுக்கு ஏன் ஏதோ ஒரு பாடலாக இல்லாமல் அந்தக் குறிப்பிட்ட பாடல் ஆன்மாவுக்கு அருகாமைப் பாடலாக அத்யந்தப் பாடலாக மாறிற்று..? எல்லோரும் கேட்டு ரசித்த பெருவெற்றிப் பாடல்களில் அதுவும் ஒன்று. அப்படி இருக்க அந்தப் பாடலில் முகந்தெரியாத யாரோ ஒருத்தியின் வாழ்காலப் பற்றை எப்படி ஒரு இசையமைப்பாளனால் கொடுக்க முடிந்தது..? இது யாருடைய வேலை..? இளையராஜா என்கிற மனிதர் இசை அமைப்பாளர் தான் செய்கிற வேலைக்கு மாற்றாகப் பணம் பெற்றுக் கொண்டு இசைத்துத் தந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்றால்... இப்படியான திவ்யா எப்படி நேர்ந்தாள் இந்தப் பாடலுக்குள்..? அல்லது இப்படியான திவ்யாவுக்குள் எப்படி நேர்ந்தது இப்படி ஒரு பாடல்..?


                                     WELL...


                 திவ்யாவின் கதை இன்னும் கொஞ்சம் இருக்கிறது.


தாயை இழந்த திவ்யா.. கல்லூரிப் படிப்பின் இறுதியில் பயிற்சிக்காக மதுரையிலிருந்து தில்லி சென்று வந்தாள். வந்தவள் நேரே என்னைத் தேடி வந்தாள். கூடவே ஒரு இளைஞன்.
இந்த இடத்தில் திவ்யாவுக்கும் எனக்குமான சம்மந்தம் என்ன என்பதைச் சொல்லி வைக்கலாம். மதுரைக்குப் படிக்க வந்த திவ்யாவுக்குச் சொந்த ஊர் விழுப்புரம். அவளது தாய்மாமா கார்த்தி எங்கள் குழுவுக்கே நண்பன். அவனது சிபார்ஸில் "அக்கா பொண்ணு உங்க ஊருக்கு படிக்க வருது.. பார்த்துக்க நண்பா."  என்று வேண்டிக் கொண்டபடியால் திவ்யா மதுரையில் தங்கிப் படித்த ஐந்து வருடங்களும் நானொரு கேர்டேக்கராக இருந்தேன்.

"ரவீ அங்கிள்... இவன் பேர் ரிஷி. கோயமுத்தூர்ல ஆர்க் படிச்சி முடிச்சிருக்கான். வீ ஆர் இன் லவ். அப்பா ஓகே சொல்லிட்டாரு. பீஜீ பண்ணிட்டு மேரேஜ்.." என்று அடுக்கிக் கொண்டே போனாள்.


இரண்டு பேர்க்கும் கரம் குலுக்கினேன். ஆரோக்கியமான புன்னகையுடன் சிரித்துப் பேசிவிட்டு ரிஷியும் அவளும் திருநகர் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார்கள். அன்றைக்கு அத்தோடு முடிந்தது. இன்னொரு நாள் அவளாக வந்தாள்.
 

"என்ன திவ்யா திடீர்னு லவ்.. அதும் ரிஷியை சமீபத்ல தானே தெரியும்னு சொல்றே..?" என்றேன்.


       கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டவள் 


"அங்கிள்... உங்களுக்கே தெரியும் நான் கொஞ்சமில்ல ரொம்பவே ரிசர்வ் டைப்னு.. ட்ரெய்னிங் போனனா டெல்லிக்கு..இவனும் இன்னொரு பொண்ணும் மாத்ரம் தான் தமிழ். அந்தப் பொண்ணு பயங்கர ஜெலஸ் அண்ட் காஸிப்ஸ்.. வேற வழியே இல்லாம ஸெட் ஆயிட்டம் ரெண்டு பேரும். நம்ப மாட்டீங்க.. மொத்தம் ஒரு மாசத்ல பதினைஞ்சு நாள் எதுமே பேசிக்கக் கூட இல்லை ஜஸ்ட் புன்னகைச்சிக்கிட்டோம்.


ஒரு நாள் அவன் ரூமுக்குப் போனேன். அவன் குளிச்சிட்டு இருக்கான்னு ரூம்மேட் சொன்னான். சரின்னு உக்காந்துட்டிருந்தப்ப அவனுக்குக் கால் வந்தது. ரிங் டோனா என்னோட அந்தப் பாட்டை வச்சிருக்கான். இத்தனைக்கும் எனக்கும் அவனுக்கும் எங்களோட பேர்கள் தெரியும் எந்த ஊர்னு தெரியுமே தவிர வேறெந்த தகவலும் தெரியாது. பட் என்னோட அந்தப் பாட்டு.ரொம்ப நாள் கழிச்சி ஒலிக்கிது. அதும் அத்தனை தூர டெல்லில அவன் செல்லில இருந்து.. அவன் ஏன் அந்தப் பாட்டை அவ்ளோ அக்யூரேட்டா வச்சிருக்கணும்..? எனக்குன்னு ஏதோ ஒரு செய்தி இருக்கறதா நான் ரொம்ப நாளா நம்பிட்டிருந்த ஒரு விஷயம் அங்கே யதேச்சையா நடக்குது. அதும் அங்கே அவ்ளோ தூரத்ல அதெப்படி கரெக்டா அன்னிக்கு நடக்கணும்..? எனக்கு எதுமே புரியலை. பட் என் லைஃப் அந்தப் பாட்டோட முழுசா பல இடங்கள்ல பல விதங்கள்ல கனெக்ட் ஆயிருக்குறதா நம்புறேன். எனக்கு சாட்சியே வேணாம். கண்ணை மூடிட்டு நம்புவேன் நான். இன்னிக்கு வரைக்கும் எனக்கும் அந்தப் பாட்டுக்கும் இடையிலான பந்தம் கொஞ்சம் கூடப் பிசிறடிக்காமப் போயிட்டிருக்கு.


நான் அப்டியே உக்காந்திருந்தேன். குளிச்சிட்டு வந்தவன் ட்ரெஸ் மாத்திட்டு தலை சீவிட்டு கோயிலுக்குப் போவமான்னு கூப்டான். சரின்னு போனோம். ரெண்டு பேரும் எதுவுமே பேசிக்கலை. கோயில்லேருந்து திரும்புறப்ப பிரகாரம் தாண்டி வெளில வந்ததுமே என்னைப் பார்த்து தன்னோட காதலைத் தெரியப்படுத்தினான் ரிஷி. என்னால மறுக்க முடியலை.
நான் என்ன சொல்லணும்கிற சமிஞை அந்தப் பாட்டின் மூலமா அதுக்கு ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே எனக்குள்ளே ஒலிச்சிடுச்சின்னு புரிஞ்சிச்சி. எதையும் தடுக்கிறதோ மாத்துறதோ வேற.. எதையும் தடுக்காம மாத்தாம இருந்தாத் தானே அது நமக்கானதா இருக்க முடியும்..? தீர்க்கமா துல்லியமா ஒரு முடிவை எடுத்தேன். நானும் ரிஷியை விரும்புறதா சொன்னேன். இன்னிக்கு வரைக்கும் எனக்கு அந்தப் பாட்டு எவ்ளோ பிடிக்கும்குறதையோ அதைக் கேட்டதால ரிஷி கேட்டதுமே நான் சம்மதிச்சேன்னோ அவன் கிட்டே சொல்லலை. எனக்கு என் நம்பிக்கை முக்கியம். ஆனா அது எனக்குள்ளே மட்டும் இருந்தா போதும். ஒருவேளை நாளைக்கு ரிஷி வேற பாட்டை ரிங்டோனா மாத்திட்டா நான் வருத்தமே படமாட்டேன்.. காதல் பூத்த காலத்துல மிகச்சரியா முதல் வாசல் கதவைத் திறந்து தந்தது அந்தப் பாட்டுத் தான். அது போதாதா..?.."


நான் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். தராசின் ஒரு தட்டில் ஒரு பாடல் வைக்கப்படுவதையும் இன்னொரு பக்கம் அவள் அமர்ந்துகொண்டிருப்பதையும் துலாபாரக் காட்சியாக என் மனத்திரையில் விரிந்தது. நான் ம்ம்ம் என்று மட்டும் சொல்லி அதுவரைக்குமான கதைக்கான என் ஒப்பத்தை அளித்தேன்.


அவள் தொடர்ந்தாள்.


அங்கிள்... நல்லா யோசிச்சிப் பார்த்தா ஏதோ ஒரு நாள் நான் அழுது வீங்கின கண்ணோட வந்தப்போ நீங்க என்னகாரணம்னு கேட்டீங்க.. நான் எதையாச்சும் அப்போதைக்கு சொல்லிக் கடந்து போயிருக்கலாம். ஆனா நீங்க கேட்டதும் நான் எனக்கான பாடலைத் தாங்கமுடியாம அழுதேன்னு உங்க கிட்ட சொன்னேன். இந்த இத்தனை வர்ஷங்கள்ல எனக்கும் அந்தப் பாட்டுக்குமான பந்தத்தை நாலைஞ்சு பேர்கிட்ட தான் சொல்லியிருப்பேன். அன்னிக்கு உங்க கிட்ட சொன்னது கூட இன்னிக்கு என் வாழ்க்கையோட முக்கிய முடிவு ஒண்ணை எடுக்க அதே பாட்டு எப்படிக்காரணமாச்சுன்னு நான் சொல்லிப் பகிர்ந்துக்கத் தானோ என்னவோ..?" என்றவள் சிரித்துவிட்டுக் கிளம்புவதாக சைகை காட்டினாள்.


நான் அவள் தலையை வருடி கன்னத்தைத் தட்டி ஆல் தி பெஸ்ட் திவ்யா.. அந்தப் பாட்டு உன்னைப் பொறுத்தவரைக்கும் வெறும்பாட்டில்லை.. அது வேறேதோ என்றேன். சிரித்தவள் அது என்னோட அம்மா என்றவாறே படியிறங்கி  நடந்து தெருத்திரும்பிக் காணாமற் போனாள்.


எனக்குள் திவ்யாவின் அதே அந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...