???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 16 - இசை என்னும் மதம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   29 , 2016  03:53:39 IST


Andhimazhai Image

அடுத்தவரின் சந்தோஷத்தையாவது துக்கத்தையாவது யாராவது பகிர்ந்து கொள்ள முடியுமா..? நிஜம் முடியாது என்றிருந்தாலும் சந்தோஷ துக்கங்களைக் கூட்டம் கூட்டமாக அணுகவே விரும்புகிறான் மனிதன். காலமாற்றங்கள் உள்ளடக்கத்தை மாற்றவியலாது சுற்றித் தருகிற பொட்டலக் காகிதத்தை மாத்திரம் மாற்றி அமைக்கின்றன. மனிதன் எதன் மீது பெரும் பிடிமானம் கொண்டிருக்கிறானோ அவற்றைக் கைவிட விரும்புவதே இல்லை.

 

நிற்க. நான் பிறந்தது சம்மந்தமூர்த்தித் தெரு. சொன்னால் தெரியும் அளவுக்கு மதுரையின் ஆகப்பரபர தெருக்களில் ஒன்று. அடுத்த நகர்தல் தைக்கால் தெரு. கல்பனா டாக்கீஸூக்கு ஐந்தாறு கதவிலக்கங்கள் முன்னே வசித்தோம். அது சிம்மக்கல். பிற்பாடு தான் புதூர் சென்றது. என் குழந்தைப்பருவம் முழுவதும் பாடல்களால் நிரம்பியதாகவே இருந்துவந்திருக்கிறது. அதுவும் கல்பனா டாக்கீஸ் அருகாமை வீடு என்றால் ஸ்டோர் எனப்படுகிற அந்தக் காலத்துத் தொகுப்பு வீடு. கதவுள் நுழைந்தால் இரண்டு புறமும் வீடுகள் நடுவே பொதுப்புழக்கத்துக்கான முற்றம் நேரே ஒரே ஒரு மாடிவீடு. சற்று ஒதுக்கினாற் போல் கிணறு. நானொரு சின்னக்குழந்தையாகத் தவழ்ந்ததும் தட்டுத் தடுமாறி எழுந்து நடந்ததும் அந்த வீட்டில் தான்.என் ஞாபகத்தில் என்னை வளர்த்த என் அம்மம்மா ஞாபகம் வரும்போதெல்லாம் சின்னக் கீற்றுப் போல் அந்த வீட்டின் நினைவும் வந்து செல்லும்.


மாடிவீட்டிற்குப் பதினாறு படிகள். என் அம்மா டீச்சர் என்பதால் முழுவதும் பாட்டியின் வளர்ப்புத் தான். வீட்டின் வாசலருகே தரையில் துணி விரித்து என்னைக் கிடத்தி இருந்த பாட்டி சின்னதோரு உபவேலைக்காக சமையல் அறைக்குள் சென்று திரும்புவதற்குள் உருண்டு படிகளெல்லாம் தாண்டித் தரையில் வந்து விழுந்து கிடந்தேனாம். அதிர்ச்சியோடு ஓடிவந்து பார்த்த பாட்டிக்கு எனக்கெந்தக் காயமும் இல்லை என்பதை அறிந்த பின்னரே உயிர் வந்ததாம். சுருட்டை கேசமும் புஷ்டியான உடம்புமாய் என்னை எப்போதும் தன் கண்ணின் மணியாகவே கவனித்த என் பாட்டி ராஜம்மாள் என் பதினாறு வயது வரை இருந்து விண்ணுலகம் ஏகினாள்.


அவளுக்குக் காது கேட்காது. வாயசைவைக் கவனித்தே நம் மொழியின் உட்பொருளை உணர்வது வழக்கம். ஒரு முறை சற்றுப் பெரிய கூழாங்கல் ஒன்றை நான் விழுங்கி விட்டேனாம். அதன் பின்னர் சிம்மக்கல் பகுதியின் பிரபல குழந்தை மருத்துவர் சிவராமகிருஷ்ணன் என்பவரிடம் அழைத்துச் சென்று காண்பித்ததில் சில பல முயல்வுகளுக்கு அப்பால் நான் விழுங்கிய கல்லைப் பத்திரமாக வெளியேற்றினாராம். அதனை வெகு காலத்திற்கு இந்தக் கல்லைத் தான் தம்பி முழுங்கிட்டான் என்று உற்ற சுற்ற நண்ப அன்பர்களிடம் காட்டிக் காட்டி ஒரு தனி நபர் ஸூவாகவே என்னை வைத்து மனமகிழ் மன்றம் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். ரொம்ப பிரயத்தனத்துக்குப் பிறகு அந்தக் கல்லைத் தூக்கிப் போட்டேன். மூன்று வயதாகும் வரைக்கும் நான் பேசவே இல்லை என்பதும் என்னைப் பற்றிய ஆதிக்குறிப்புகளில் ஒன்று. இந்த மூன்று விசயங்கள் படியில் உருண்டு விழுந்தது கல்லை விழுங்கியது பேசாமல் இருந்து பேசியது இவை மூன்றும் என் ஆரம்ப ஞாபகங்களில் செல்வாக்கான சில.


அம்மா அப்பா என்ற இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றிய கலங்கலான ஞாபகங்களும் ஒழுங்கற்ற சித்திரங்களும் ததும்பினாலும் என் ஆரம்பம் எனது அம்மம்மா ராஜம்மாள் தான். அவளை நேசித்த அளவுக்கு நான் என்னையே நேசித்ததில்லை எனுமளவுக்கு.


அதே அந்த சிம்மக்கல் பகுதியில் எப்போதுமே ரேடியோ செட் கட்டிப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எதாவது ஒரு நல்ல அல்லது கெட்ட காரண நிமித்தம் பாடல்கள் ஒலிக்கும். நான்கு வகைப் பாடல்கள் ஒலிபரப்பப் படும். ஒன்று சந்தோஷமான பாடல்கள் இரண்டு துக்க வீடுகளிலிருந்து ஒலிக்கும் சோக மற்றும் தத்துவப் பாடல்கள். மூன்றாவது கட்சி சார்ந்த அரசியல் பாடல்கள் நான்காவது மதங்கள் சார்ந்த பாடல்கள். இந்த நான்கு வகைமையின் பாடல்களும் மாறி மாறி ஒலிபரப்பப் பட்டுக் கொண்டே இருக்கும் என்பதும் பாடலற்ற பொழுது வெகு அபூர்வம் என்பதும் பாடல் கேட்டாலும் வெகு இயல்பாக வேறு சம்பாஷித்துக் கொள்வது தடைப்படாது என்பதும் கூறத்தக்கவை.


சவுந்தரராஜன் பாடிய முருகன் பாடல்கள் எத்தனையோ இருந்தாலும் கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் பாடலில் வருகிற முருகா முருகா முருகா முருகா என்னும் தொடரி கேட்பவரைச் சிலிர்க்க வைக்கும். எத்தனையோ தெய்வாம்சப் பாடல்களைப் பாடி இருந்தாலும் கூட இது தான் டீஎமெஸ் பாடிய பக்தி ஸ்லாட்டில் நம்பர் ஒன்.

 

கண்ணதாசனின் விரல் நயத்தை பாலசுப்ரமணியம் குரல் நயத்தால் நிரப்பி மலர்த்திய ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ... இந்தப் பாடலுக்கு அப்பால் வெகு காலத்திற்குப் பிறகு பாலு பாடிய அரகர சிவனே அருணாச்சலனே அண்ணாமலையே போற்றி நம ஓம் நமச்சிவாய என்னும் பாடல் பல ஆம்னி பேருந்துகள் சென்னை அல்லது மதுரை அல்லது வேறூர்களில் கிளம்பும் பொழுது மிகச்சரியாக ஒலிக்கிற பாடலாக இது தான் இருந்துவந்திருக்கிறது.


ஆத்தாளே மாரியம்மா சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேணாம் தின்னுபுட்டு போடியம்மா... இந்தப் பாடலில் சின்னதொரு சகஜத் தன்மை இதன் மீதான பெரும் ஈர்ப்பாக உருவாகி பக்திப் பாடல் என்பதைத் தாண்டி எப்போதும் இதனைக் கேட்க வைத்தது.


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் என்பதில் தொடங்கி சீர்காழி கோவிந்த ராஜனின் குரல் எத்தனை பக்திப் பாடல்களை மலர்த்தி இருக்கிறது. என் பால்யத்தின் பற்பல தினங்களைப் பொழுதுகளைத் தன் வெண்கலக் குரலால் அழகாக்கித் தந்தவர் சீர்காழியார். பக்திக்கென்றே படைக்கப் பட்ட குரல் என்று தோன்றும்.


எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐய்யப்ப சாமி கோயிலிலே சந்தனம் மணக்குது என்ற பாடல் ஐயப்பப் பாடல்களில் பிரதானமாயிருந்தது. திரைப்பாடல்களும் பற்பல கடவுளர் பெருமை பேசின.


நான் படித்த செயின்மேரீஸ் பள்ளி அருகே அடிக்கடி கிறித்துவ பாடல்கள் ஒலிபரப்பாகும்.

தந்தானைத் துதிப்போமே என்ற பாடல் பழம்பெரும் பாடகி ஜிக்கி பாடிய கிறித்துவப் பாடல். கேட்கும் போதெல்லாம் சின்னதோர் உற்சாகம் மனதுள் பெயர்ந்து ஒட்டிக்கொள்ளும்.


சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்கார கும்மியடித்துப் படித்து
மங்காத உன் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்பணிந்திடும் 

எத்தனை அழகுத் தமிழில் அர்ச்சனை செய்கிறது இந்தப் பாடல். இதனை எழுதியவர் யார் இதற்கான இசைமெட்டு அமைத்தது யார் என்பன போன்ற விபரங்கள் தெரியவில்லை.

சீர் ஏசுநாதனுக்கு ஜெய மங்கலம் என்னும் இந்தப் பாடலைப் பாடியவர் ஏ.பி.கோமளம்.

 

நிலவோடு வான்முகில் விளையாடுதே  (ராஜராஜன்) உள்பட பல பாடல்களை தமிழ்த் திரையில் பாடியவர் ஏ.பி.கோமளம்.)

 இது சுசீலா பாடிய இன்னொரு பாடல் தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்யமதுரமாவேன்.

இயேசு இயேசு என்று அழைத்து பேசு பேசு உன் கதையை கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் எனும் பாடலும் நீலக்கடலின் ஓரத்தில் எனும் பாடலும் என் சிறுவயதின் பாதிஞாபகங்களின் பின் இசையாகவே ஒலிக்கவல்லவை.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அப்போது பிரபலமான கிறித்துவப் பாடல் ஒன்று அருட்தந்தை பெர்க்மான்ஸ் என்பவர் பாடியது அப்பா பிதாவே அப்பா என்னும் பாடலைத் தேடித் தேடிக் கேட்டிருக்கிறேன்.


சன் ம்யூசிக் சானலில் திருகிக் கொண்டே இருந்த போது திடீரென்று ஒரு நாள் அதிகாலை பக்திப் பாடல் ஒன்றின் காணொளியைப் பார்த்தேன். சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது  என்னும் பாடல் மெய் மறக்கச் செய்தது. இரண்டு பேர் சேர்ந்து பாடிய பாடல் இது.முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!


இந்த வரிகள் தெய்வத்துக்கும் மனிதனுக்குமான உறவாடலின் எல்லையற்ற இன்பத்தை வெளிப்படுத்தவல்லது. முருகனுக்கு ராஜாதிராஜன் என்றவொரு பேர் இருப்பது இந்தப் பாடலின் மூலமாய் அறிய நேர்ந்தது. தமிழ்க்கடவுள் என்று போற்றப் படுபவனின் இன்னுமொரு பேராக அதனையும் கொள்ளலாமல்லவா.?

இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே நினைவுக்கு வருபவை அண்ணல் நாகூர் ஹனிஃபா அவர்களின் ஒப்பிலாக் குரலில் அமைந்த பற்பல பாடல்கள் தான். அவற்றில் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை எனும் பாடல் கேட்டுக் கேட்டே எனக்கு மனனம் ஆயிற்று.

இன்னுமொரு பாடல். இதனை எப்போது கேட்டாலும் உள்ளம் உருகி நீர்மமாய்க் குழையும்.

         ஏகன் உண்மைத் தூதரே 
          யா நபியே 
          யா ரஸூலே 
          யா ஹபீப் 
          யா முஸ்தஃபா 
          எங்கள் சலாம் 
          எங்கள் அன்பின் சலாம் 


என்ற பாடலை முதல் முறை கேட்டதிலிருந்து என் மனதிற்கு நெருக்கமான பாடலாகவே இன்று வரை வைத்திருக்கிறேன்.


என் அப்பா கடுமையான திராவிட இயக்க செயல்பாட்டாளர். திமுக பிற்பாடு எம்ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவின் முழுமுதற் தொண்டர் என்றபோதும் கடவுள் நம்பிக்கை கொண்டவராகத் தான் இருந்தார். அம்மாவும் பாட்டியும் கடும் பக்திப் பரவசவாதிகள். எனக்கும் அக்காவுக்கும் சிறுவயது முதலே ஆன்மீகம் மாற்றற்ற ஒற்றையாக ஊட்டப் பட்டதன் பின்னணி இது. மதங்கள் மீதான புரிதல் என்பது வேறு. எல்லா சமயங்களைச் சேர்ந்த பாடலையும் ஒதுக்காமல் விலக்காமல் ரசிக்கிறவனாகவே ஆரம்பம் தொட்டே இருந்திருக்கிறேன். கணபதியே வருவாய் அருள்வாய் பாடலாகட்டும் இந்தப் பாடலைப் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். சீர்காழியின் குரலை எப்படி வியக்காமல் இருக்க முடியும்..? இந்தப் பாடல் இசையைத் தாண்டிய அமுதம். இதன் உட்பொருள் அன்னை சிவகாமியைப் போற்றுகிறது. என்னளவில் இதனைக் கேட்கும் போதுகளில் எல்லாம் கரைந்து போவேன். மனம் வேறொன்றாவதைத் தவிர்க்கவே முடியாமல் ததும்புவேன்.

             சின்னஞ்சிறு பெண் போலே

             சிற்றாடை இடை உடுத்தி
             சிவகங்கை குளத்தருகே 
             ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்
                     
கண்ணீருக்கு முந்தைய கணத்தைத் தன் குரலில் வார்ப்பது சீர்காழிக்கு மாத்திரமே வாய்த்தது. குரலுக்கு வணங்கும் பழகிய நாகமாய்த் தன்பாடல்களைப் படைத்தார் சீர்காழி.

   பெண்ணவளின் கண்ணழகைப் பேசிமுடியாது
   பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது


                     (சின்னஞ்சிறு பெண் போலே....)

   மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி
   செல்வமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
   எண்ணமெல்லாம் நிறைவாள் இன்பமெல்லாம் தருவாள்
   பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
   பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்
    
                               
சிந்துபைரவி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த இந்தச் சாகாவரப் பாடலை இயற்றிவர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்.


பக்தி என்பதைத் தாண்டிய பித்து நிலையின் பரவசத்தை எல்லோரும் அடைவதற்கில்லை. இசை அத்தகைய பித்தை வார்த்தெடுக்கவல்லது. போதைவஸ்துக்கள் உள்ளிட்ட லாகிரிகளின் வழியில் ஏற்படுகிற பித்தும் பரவசமும் உடலுக்கு மாத்திரமல்ல உலகுக்கும் நல்லதல்ல. அப்படி இருக்கையில் ஆன்மீகம் என்பதைத் தாண்டி மனதை சமன் செய்து அழகான வாயிற் கோலத்தின் பரவசத்தை நேர்ப்பிக்கிற எதுவும் அபூர்வம் மாத்திரமல்ல அற்புதமும் கூட. மேற் சொன்ன பாடல்களின் நாயக நாயகிகள் போற்றப் பட்ட தெய்வங்கள் சார்ந்த மதங்கள் இன்னபிற என்று எல்லாமும் வேறுபடலாம். ஆனால் உற்று நோக்கினால் மதம் எதுவானாலும் இசை பாடல் குரல் ஆகியவற்றின் தேவையும் அவற்றின் தெய்வீக அங்கீகாரமும் மறுப்பதற்காகாத உண்மைகளே. அவ்வாறு இருக்கையில் கம்பீரமாய்ச் சொல்லலாம் தானே.? இசை என்பதே என் மதம் என்பதை....

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...