???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு! 0 ’அதானிக்கு கடன் வழங்காதே’ – கிரிக்கெட் மைதானத்தில் குதித்த ஆஸ்திரேலியர்கள் 0 டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் வெற்றிமாறன்! 0 ஹரியாணா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 0 நிவர் புயலால் மழைநீரில் மூழ்கி 8,740 ஹெக்டேரில் நெற்பயிர்கள் சேதம் 0 கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: மத்திய அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 0 உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பொங்கலுக்கு விடுமுறை 0 இந்தியா -ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 0 இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ’அயலான்’ 0 ”என் ஆணவத்தின் தலையில் கொட்டினார்” - இயக்குநர் மிஷ்கின் 0 தமிழ்நாட்டில் தமிழ் கற்கக் கூடாதா? – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி 0 ’ஒரே தேசம்; ஒரே தேர்தல் இந்தியாவின் தேவை’ – பிரதமர் மோடி 0 மரடோனா மறைவிற்காக 2 நாள் துக்க அனுசரணை - கேரள விளையாட்டுத்துறை 0 ’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 13 - புத்தம் புதிய வேறொன்று - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   07 , 2016  23:57:01 IST


Andhimazhai Image

ஜாதி வெறி மதவெறி வரிசையில் வராது ஆனால் இது வேறு வெறி. இளையராஜா மீது உண்டாகிற வெறி. சாட்சாத் அந்த ராஜாவே வந்து ப்ளீஸ்.. மத்தவங்களையும் ஒத்துக்கங்க மத்த பாடல்களையும் கேளுங்க என்று கெஞ்சினால் கூட நோந்நோ என்று உக்கிரமாய்த் தலை ஆட்டும் கூட்டம் ஒன்று இரண்டல்ல பல்லாயிரம் ராஜா ரசிகர்கள். அவர்களில் ஒருவனாய்த் தான் பன்னெடுங்காலம் நானிருந்தேன். இன்றும் ராஜா ரசிகன் தான் நான். ஆனால் திரை இசையின் சதுரசெவ்வகங்களை முற்றிலுமாக உய்யடா உய் என்று எனக்கு நானே சூட்சும மாற்றம் அடைந்து நாட்களாயிற்று. நல்லது.


அதென்னவோ ரோஜா வந்த போதே ரகுமானைப் பிடிக்கவில்லை. சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை பாட்டு அதிரிபுதிரியாக ஹிட் ஆனதை வெறுத்தேன். ரகுமானுக்குக் கிடைத்த தேசியபுகழ் ஒருவர் முதல் படத்திலேயே மணிரத்ன இயக்கத்தை பாலச்சந்திர தயாரிப்பை இசைக்கக் கிட்டுகிற வாய்ப்பை கடைக்கோடி ரசிகனான நான் வெறுத்ததற்கு காரணமே இல்லை.


அதன் பின் வேண்டாவெறுப்பாக வெள்ளைக்கார மருமகளை வீட்டுக்குள் அனுமதித்து விட்டுத் தமிழில் அவளைக் கிண்டல் செய்யும் பழங்காலத்து மீசைமிராசு போலத் தான் ரகுமானின் பாடல்களை எனக்குள் அனுமதித்துக் கொண்டும் எள்ளிக் கொண்டுமென வெறுத்தபடியே சரி நீயும் ஒரு ஓரத்தில் இருந்துக்க என்று விட்டு வைத்தேன். நானாவது பரவாயில்லை. திருநகர் ஐந்தாவது ஸ்டாப்பில் சுரேஷ் ம்யூசிக்கல்ஸ் நடத்தி வந்த சுரேஷ் பிரதர்ஸ் மூவரில் யாரிடம் ரகுமானைப் பற்றிப் பேச்செடுத்தாலும் மானாங்காணியாக ரகுமான் பாடல்களைக் குறை சொல்வார்கள். அதென்னவோ வியாதி போலவே ராஜாவை விரும்புவதன் இன்னொரு அம்சமாகவே ரகுமான் மீதான வெறுப்பும் அமைந்தது.


எப்போதெனத் தெரியாமல் நெகிழ்ந்து நெக்குருகி ரஹ்மானின் இசையில் மெல்லக் கரைந்து சிலிர்த்தது பின்னால் நடந்தது. நானா... இது நானா என்று பல நாட்கள் வியந்திருக்கிறேன். எத்தனையோ பாடல்களை மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டே ரசித்திருந்தாலும் கூட ரஹ்மான் பாடல் என்று தெரிந்தே மயங்கிய முதல் பாடல் ரங்கீலா படத்தின் க்யா கரே கயனா கரே பாடல் தான். அதென்னவோ அந்தப் பாடல் ஆன்மாவுக்கு அடுத்த ஸீட்டில் சப்பக் என்று அமர்ந்து கொண்டது.


               

நிற்க..


ரஹ்மான் இசை அமைத்த பல படங்களுக்கு பின்னணி இசையை அமைக்கவில்லை. உலக அளவில் பின் இசையும் பாடல்களுக்கான இசை அமைப்பும் வேறு வேறு பணிகளாகவே பார்க்கப் பட்டாலும் கூட இந்திய குறிப்பாகத் தென் நிலத்தில் ஒருவர் கராத்தே போட்டுக் கொண்டே புல்லாங்குழல் வாசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் சினிமாவில் சகஜம். அதிலும் இளையராஜா பின்னணி இசையில் எத்தனை தூரம் சமர்த்தர் என்பது சொல்லவேண்டியதில்லை என்பதால் ரஹ்மான் என்ற பேச்சு வந்தாலே அவரது பின்னணி இசை குறித்த பேச்சாக அதனை மாற்றி இன்புற்றுக் கொண்டிருக்கிறேன்.


அடுத்தது ரஹ்மான் மொத்தமே இருநூறு படங்களுக்குள் தான் இசை அமைத்திருக்கிறார். கடந்த இருபத்தி மூன்று வருடங்களில். இசை என்றில்லை எத்திறனுக்கும் எண்ணிக்கைக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை என்றாலும் கூட எண்ணிக்கை என்பதிலும் ராஜா 1000 படங்களைக் கடந்திருப்பதையும் தூக்கி வைத்துப் பேசுவதில் இன்னோர் அலாதி எனக்கு.


மூன்றாவதாக கிராமத்து இசை... கிழக்குச் சீமையிலே உழவன் எனச் சொற்பமான கிராமம் சார் முயல்வுகளையே ரஹ்மான் முனைந்திருக்கிறார். அவற்றிலும் பெரிய சோபனம் இருந்ததில்லை என்பது அடியேனின் தாழ்மையான அபிப்ராயம். போதாதா..? இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டி எங்க ராஜா தான் டாப்பு என்று காலர் உயர்த்திக் கொள்வதில் அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு இருந்திருந்தது.


அபிப்ராயம் என்பது மாறுவதும் மாற்றம் கொள்வதும் மாற்றிக் கொள்வதும் மாற்றுவதும் இவை அனைத்தும் அடங்கியது தானே..?


ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்து ஆஸ்கார் வென்று.. அவற்றை எல்லாம் விட ஆஸ்கரின் மேடையில் அவர் நிகழ்த்திய உரை என்னைக் கரைத்து அவரது ரசிகனாக ஆக்கியது. இசைக்கல்ல. ரஹ்மான் என்னும் மனிதனுக்கு அந்த இடத்தில் ரசிகனானேன். நீல்சன் சொல்வார் நீ தெரிஞ்சுக்காத ஒருத்தரை கொஞ்சம் கூட வெறுக்க முடியாது. நெறையத் தெரிஞ்சுக்கிறது தான் வெறுக்குறதோட ஆரம்பப் புள்ளி என்று. அது தான் உண்மை. நான் ரஹ்மானை வெறுத்ததாக எண்ணிக் கொண்டேன். உண்மையில் அவரது புத்திசையை விரும்பிக் கொண்டே நுகர்ந்து கொண்டே பயணித்துக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தேன் என்பதே மெய்.என்னளவில் ஏகாந்தத்தினை பறை சாற்றும் பெண்குரல் பாடல்களின் டாப் டென் என இவற்றைச் சொல்வேன்.


  
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பாக்யலட்சுமி 


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..  புதிய பறவை


நானே நானா யாரோ தானா.. மெல்ல மெல்ல மாறினேனா..?  அழகே உன்னை ஆராதிக்கிறேன்


பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்..  இன்று நீ நாளை நான்


என்னுள்ளில் எங்கோ ஏங்கும் நெஞ்சம் ஏன் கேட்கிறது  ரோசாப்பூ ரவிக்கைக்காரி


மாலையில் யாரோ மனதோடு பேச            சத்ரியன்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..வள்ளி


தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை  மிஸ்டர் ரோமியோ


மஞ்சள் முகமே மங்கல விளக்கே வருக வருக வருகவே... ஏபீசீடி


பேசுகிறேன் பேசுகிறேன் என் இதயம் பேசுகிறேன்  சத்தம் போடாதே


இந்தப் பத்துப் பாடல்களுக்கு முன்னும் பின்னுமாய் பற்பல தனிப்பாடல்கள் வந்தவண்ணமிருப்பது தான் தமிழிசை. ஆனாலும் ஏன் எதற்கு எங்கனம் என்பதற்கெல்லாம் பல நூறு காரணங்களை நிறுவமுடியும் என்னால். இந்தப் பட்டியலில் இருக்கும் எந்தப் பாடலை எத்தனை பாடல்களுக்கு அப்புறமாய் எப்போது வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். இதில் எந்த ஒரு பாடலையும் தாண்டி இன்னொரு பாடலுக்குள் செல்லவே முடியாது. அப்படியான ஒரு தேம்புதலை நிறுவக் கூடிய வல்லமை இவற்றுக்கு உண்டு.ரஹ்மான் இசை அமைத்த பாடல்களில் முன்பே வா என் அன்பே வா பாடல் ஒரு சாகாவரம். உண்மையில் மழையின் தாரைகளை சப்திக்கச் செய்தாற்போன்ற ஜலதரங்க இசையின் கோர்வை மிகுந்து கொண்டே போய் மெல்லிய வயலின் இழைதலில் நிறைந்து பாடல்வரிகளும் குரலுமாய்ப் பெருகும் இதன் ஆரம்பமே அற்புதம்.


முன்பே வா என் அன்பே வா... பாடலின் பலம் ஆழத்திலேயே இயங்கி முடிகிற பின்னணி இசை. குரலையும் வரிகளையும் நீக்கி விட்டு வெறும் பின் இசையைப் பிரித்து நோக்கினால் அதன் துல்லியத்தை உணரலாம். இன்னொன்று ரஹ்மான் பாடல்களில் வழமையான ஸ்டைலில் அல்லாது வேறொரு புதிய ஸ்டைலை முயன்று அமைத்திருக்கும் உடனொலி குரல்களின் பங்கேற்றல் (CHORUS PARTICIPATION) மூன்றாவது வித்யாசம் பாடல்முழுவதும் நிரம்பித் தொடரும் இசையின் பின் ஆழத்தில் உணரவல்ல நீர்மை. சின்னதொரு தூறல்பொழிவை உணர்த்தியபடியே நகர்ந்து முடியும் பாடல். மிச்சமேதுமின்றி முழுவதுமாக உருக்கி விடும்.


ரஹ்மான் பாடல்களில் எத்தனையோ கேட்டு பிடித்து இருந்தாலும் என் விருப்பப் பட்டியலில் சொற்பப் பாடல்களையே சுட்டிட விருப்பம். காரணம் இளையராஜாவின் காலம் வேறு. அதன் மத்திமத்தில் ரஹ்மான் தோன்றும் போதே இருக்கிற இசை அமைப்பை முற்றிலுமாக நிராகரித்து விட்டுப் புதிய பாதை ஒன்றைத் தேர்வெடுத்தார். ரஹ்மான் மாற்றங்களை உருவாக்கவில்லை. மாறாகப் புதிய வேறொன்றாய் மலர்ந்தார். இசைக்கருவிகள் இசையின் கட்டுமானம் குரல்கள் இடை இசை தொடர்பிசை இசையிடை மௌனம் தொகையறா பல்லவியின் நீளம் சரணங்களின் சேர்மானம் என எல்லாவற்றையும் தனக்கென்று மாற்றிக் கொண்டது யதேச்சையானதல்ல. இத்தனை புகழுச்சிக்கு மாற்றாக முற்றிலுமாக நிராகரிக்கப் படுவதற்கான இடர் ஏற்பின் நிர்ப்பந்தங்களினூடே தான் ரஹ்மானின் ஒவ்வொரு பாடலுமே வெளியாகின. பாடல்களுக்கு ரஹ்மான் எடுத்துக் கொண்ட காலமும் இவற்றின் உபவிளைவாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ரஹ்மான் தன் பாடல்களுக்காகக் காத்திருப்பவர்களின் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு காலத்தை அதிகரித்துக் கொண்டது அவரது பாடல்களுக்கான வருகைக்கு முந்தைய எதிர்பார்ப்பாக உருவெடுத்ததை இங்கே புரிந்துகொள்ள முடிகிறது.


இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி இசையை எங்கனம் ஒப்பிட்டுப் பார்க்க இயலாதோ அல்லது ஒப்பிடுவது கடினமோ அதே தான் ராஜா மற்றும் ரஹ்மானுக்கும் என்பேன். ரஹ்மான் காலமாற்றம். இளையராஜா பெருந்தொடக்கம். இவ்விரண்டுமே இரண்டு வெவ்வேறுகள் என்பதே நான் கண்ட ஞானம்.


ரஹ்மானை விட தேவா வித்யாசாகர் பரத்வாஜ் யுவன்ஷங்கர் ராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய அனைவருமே எண்ணிக்கை அளவில் சற்று அதிகமான பாடல்களை ஹிட்களை கொடுத்தபோதும் உச்சத்தில் நிற்கிற மகா பெரிய ஹிட்களை பெரும்பெரிய படங்களை ரஹ்மான் கைக் கொண்டதும் அப்படியான படங்கள் அவருக்கே வழங்கப் பட்டதும் ஒருவிதத்தில் ரஹ்மானின் ஆரம்பகாலத்தில் அவரது விரைவான உச்சந்தொடலுக்கு மறைமுக காரணிகளாகின.


என்னளவில் ரஹ்மான் இசை அமைத்த படங்களில் மிக முக்கியமான படங்கள் தமிழில் இருவர் திருடா திருடா மேமாதம் கன்னத்தில் முத்தமிட்டால் ஆயுத எழுத்து சிவாஜி ராவணன். இவற்றைத் தவிர மின்சாரக்கனவு ரோஜா அலைபாயுதே இந்தியன் ஜெண்டில்மேன் காதலன் புதியமுகம் ஆகியவை மீதும் எனக்குப் ப்ரியம் உண்டு. மற்றவை பாடல்கள் சார்ந்த பட்டியலே.


நெஞ்சமெல்லாம் காதல் பாடலைப் பார்க்கலாம்.. சங்கர் கணேஷின் சூப்பர் ஹிட்டான பௌர்ணமி நேரம் பாவையொருத்தி மின்னல் போலே முன்னால் போனாள் பாடலின் ஆரம்பவரிகளை இசைப்படுத்தினால் நெஞ்சமெல்லாம் காதல் நேசமெல்லாம் காமம் என்று அழகாக டெம்போ மாற்றம் செய்ததை உணரலாம். இது யதேச்சையான ஒற்றுமையே. இரண்டு பாடல்களையும் சமப் படுத்தவில்லை. அந்தப் பாடலின் பல்லவி முடிந்த இடையிசையை உற்று நோக்கினால் இரண்டுக்குமான தொடர்பு இன்னமும் விரிவாய்ப் புலப்படும். 

 

நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா..? காதல் கொஞ்சம் கம்மி காமம் கொஞ்சம் தூக்கல் உண்மை சொன்னால் என்னை மன்னிப்பாயா..?


இந்தப் பாடலில் இடைவரியான பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் என்கிற இரண்டு வரிகள் காலகால அதிர்வை எனக்குள் நேர்த்தின. இன்றைக்கும் இந்தப் பாடலைக் கடந்து வர வழியின்றி அதற்கே என் தினங்களைத் தின்னக் கொடுத்து விட்டுத் திரும்பத் திரும்பத் தோற்கிறேன்.


நீதானே மழை மேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு பாசாங்கு இனி நமக்கெதற்கு யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு..?


வைரமுத்துவின் அதிரிபுதிரி வரிகளும் பாடிய குரல்களின் ததும்பித் தீராத பியர்வெள்ள உற்சாகமும் இடையிசையின் உக்கிரமும் ரஹ்மானின் மாயமந்திரஜாலம். இரண்டு சரணங்களின் இடையே வரக் கூடிய தொகுப்பிசை வெள்ளமாய்ப் பெருகும். தீராத் தீ மூட்டும்.


பழனிபாரதி எழுதிய நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப் போனேண்டி பாடல் இன்னுமொரு அற்புதம். அந்தப் பாடலைக் கேட்டால் அந்த தினத்தின் மிச்சத்தை அதற்கே வழங்கியாகவேண்டும். ஒரு பிடிவாதக் காதலியின் பொய்க்கோபம் போல மனசைப் பிசைந்து கசக்கி எறியும் ஷோக்கான பாடல் அது.


தங்கத் தாமரை மகளே பாடல் எஸ்.பீ.பாலசுப்ரமணியத்தின் தேசியவிருது பெற்ற பாடல்களில் ஒன்று. அந்தப் பாடலில் ரஹ்மான் பேண்ட் இசையில் ஜாலமழை பொழிந்திருப்பார். இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை தீர்க்க என்ற வரியில் தொலைந்து திரும்பாதவர்கள் மானுடவகையறாவாக இருக்கமுடியாது.


கண்விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே என்ற மறக்கமுடியாத வரிகள் மேமாதம் படத்தின் மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே எனும் பாடல் சோகப்பாடல்களின் சக்கரவர்த்தி என்பேன். அதே படத்தின் என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்னொரு சுகபோதை.


வாலி எழுதிய டாக்ஸி டாக்ஸி மற்றும் முஸ்தபா முஸ்தபா இரண்டுமே இரண்டு உபதேசிய கீதங்கள். காரணம் சொல்லத் தேவையற்ற அலங்கார இசையூர்வலம் அவை.
         

    தீ தீ தித்திக்கும் தீ..தீண்டத் தீண்டச் சிவக்கும் 


பலமான இசைக்குறிப்புக்களின் தொடர்ச்சியில் மிக மென்மையான குரலுடனான மெலடியை அனாயாசமாக முயன்றிருப்பார் ரஹ்மான். இதன் உடனொலிகளும் கூட மிகக் காத்திரகனத்தோடு இருப்பதும் பாடலின் மையக் குரலும் தொனியும் மாத்திரம் குழந்தைக் குழைவுடன் இருப்பதையும் இணைப்பிசை மட்டும் மிக மென்மையான வேறொன்றாக இருப்பதையும் சொற்களால் விவரிப்பது கடினம். முற்றிலுமாக இசையின் மூலமாக அதுவரை சாத்தியப்படாத மாற்றின்பத்தை நேர்த்திவிடுகிற எத்தனத்தில் முழுவதுமாக வென்றிருப்பார் ரஹ்மான். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாடலில் குழலிசை வனமெலாம் அலையும் தாகவெறி கொண்ட பாம்பைப் போல விரைந்து சிதறும் இடம் சர்க்கரைமழையாய்த் தூவும்.


மேற் சொன்ன பாடலுக்கு எந்தவிதத்திலும் குறைவற்ற இன்னொரு ரஹ்மான் பாடல் தான் தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை பாடலும். சிந்ததைஸரின் அலட்சியமான குழலிசைப் பெருகும் இதன் துவக்கமும் குரலில் நிறைந்து வழியும் அன்பின் அலட்சியமும் வரிகளும் உற்சாகமும் என இந்தப் பாடல் இன்னொரு மறக்கமுடியாத மந்திர உச்சாடனம். இசையில் பொருந்தியும் தாவியும் இதன் வரிகளும் வார்த்தைகளும் முயல் கூட்டத்தின் உற்சாக ஓட்டத்தைப் போல விரிந்தடங்கக் கூடியது.

 

ரஹ்மான் காலேத் டாக்டர் ஆல்பன் நுஸ்ரத் ஃபதே அலிகான் உள்பட சிலபலரது இசை ஆதிக்கத்தில் சில பாடல்களை உண்டுபண்ணினார்.என்னளவில் ரஹ்மான் ஒரு சுயம்பு. மேலும் அவரது இசை உலகம் மிகவும் தனிமை நிரம்பியது. அவரது பாடல்களில் உற்சாகமூட்டும் துள்ளல்தனம் மற்ற எல்லாரையும் விட தூக்கலாகவே இருந்தது எனலாம். இந்தியில் நேரடியாக ரஹ்மான் இசைத்த அனேகமாய் முதல் படமான ரங்கீலா ஒரு உதாரணம். அதன் அத்தனை பாடல்களுமே புத்திசை. ரேகாவையும் ஹேமமாலினியையும்  ஸ்ரீதேவியையும் அபகரித்தவர்கள் இளையராஜாவையும் பாலச்சந்தரையும் கமல் ரஜினியையுமே ஒரு அளவுக்கு மேல் அங்கீகரிக்க மனமற்றவர்களாகவே இந்தித் திரையுலகத்தினருக்கும் நமக்குமான பந்தம் இருந்தது. இவ்வளவு ஏன் பத்மினி தொடங்கி பிரகாஷ்ராஜ் வரைக்கும் தமிழில் பட்டையைக் கிளப்பிய பலரையும் ஜஸ்ட் லைக் தட் கொஞ்சூண்டு யூஸ் செய்து கொள்வார்களே தவிர முழுவரவேற்பெதுவும் அளித்ததே இல்லை. ஜேசுதாஸ் எஸ்.பிபாலசுப்ரமணியம் ஆகியோருக்கும் இந்தக் கதைதான்.


ஆனால்..ஆனால்...ரஹ்மான் மொத்தமாய் இந்தித் திரை உலகைச் சாய்த்தார் என்பது தான் நிஜம். முன் முயல்வாளர்கள் அத்தனை பேருக்கும் சேர்த்து ரஹ்மானைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டாடுகிறது இந்தி திரை உலகம். இனியும் கொண்டாடும் என்பதும் நிஜவருங்காலம்.


ரஹ்மான் இசையில் இளையராஜா பாடுவது போல கற்பனை செய்து பார்த்தேன். அல்லது ராஜா இசையில் ரஹ்மான் பாடுவது போல... அமைந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும்..? ஹூம்..? ஊஹூம்!

 

( ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...